மே தினக் கொண்டாட்டம் - ஈ.வெ.இராமசாமி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 30, 2022

மே தினக் கொண்டாட்டம் - ஈ.வெ.இராமசாமி

சர்வ தேசங்களிலுமுள்ள தொழிலா ளர்கள், ஆண்களும், பெண்களும் மே மாதம் 1 ஆம் தேதியைத் “தொழிலாளர் தினமாக"க் கொண்டாடி வருகிறார்கள்.

ரஷ்ய சமதர்ம தொழிலாளர்கள், தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதின் சந்தோஷத்தையும், பூரிப்பையும், அதன் பலனையும் எடுத்துக் காட்டுகிற தோரணையில் மே தினத்தை ரஷ்யாவில் கொண்டாடு கிறார்கள்.

பிறதேசங்களில், தொழிலாளர்களின் குறைபாடுகளைப் பகிரங்கப்படுத்தி, பரிகாரம் வேண்டுகிற - முறையிலும், தொழிலாளர்களின் சுபிட்ச வாழ்க்கை , சமதர்ம முறையாலும், தொழில் நாயக அரசாலும் (Ergatocracy) அதாவது தொழிலாளர் குடியரசாலுமே (Proletarian democracy ) சித்திக்குமெனத் தீர்மானிக்கும் முறையி லும் மே தினம் கொண் டாடப்படுகிறது.

இந்தியாவிலும், சில வரு ஷங்களாக மே தினம் இங்கொரு இடத்தில், அங்கொரு இடத்திலுமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்ற வருஷத்தில், இந்தியாவில் பல இடங் களில் கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழ் நாட்டிலோ, இவ்விழா மே மாதம் முதல் தேதி கொண்டாடப்பட்டது. பின் நமது பிரத்யேக வேண்டுகோளின்படி மே மாதம் 21ஆம் தேதி தமிழ் நாடெங்கணும் கொண் டாடப்பட்டது.

சுயமரியாதை வீரர் களே! சமதர்மிகளே! தொழிலாளர்களே! தொழி லாளிகளின் தோழர்களே! இந்த வரு ஷத்தில் மே தினத்தை மேமாதம் முதல் தேதியில் தமிழ்நாட்டில் உள்ள நகரங்கள் தோறும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைத் திரட்டி, வெகு விமரி சையாகக் கொண்டாட வேண்டுகிறேன். 

தேசம், மதம், ஜாதி என்கின்ற தேசிய உணர்ச்சிகளை மறந்து உலகத் தொழிலாளர் எல்லாம் ஒரே சமுகமாய் ஒன்றுபட்டு எல்லாத் தேச, மத, ஜாதி மக்களுக்கும் வாழ்க்கையில் சம உரிமையும், சம சந்தர்ப்பமும் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்றும், தொழிலாளர் சம தர்ம ராஜ்ஜியம் ஏற்பட வேண்டும் என்னும் ஒரே அபிப்பிராயம் ஏற்படும்படி, தொழிலாளர்களிடையில் பிரச்சாரம் செய்யவும், வேறு சாதகங்கள் பெறவும், இம்முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

 ‘குடிஅரசு’ -  28.04.1935


No comments:

Post a Comment