பரப்புரைப் பெரும் பயணம் ஏன்? - 12 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 21, 2022

பரப்புரைப் பெரும் பயணம் ஏன்? - 12

மக்கள் சிந்தனைக்கு...

'நீட்' தொடர்பான தமிழ்நாடு அரசின் உயர்நிலை குழுவுக்கு 

திராவிடர் கழகத்தின் சார்பில் 21.6.2021 அன்று அளிக்கப்பட்ட கருத்துரு

9. 'நீட்'டால் ஏற்படும் - 
ஏற்பட்ட இழப்புகள் யாவை? 

2016-2017இல் +2 தேர்வு அடிப்படையில் நீட் தேர்வின்றி தேர்வு பெற்ற மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள் 3546.

2017-2018இல் 'நீட்' தேர்வு - மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் பெற்ற இடங்கள் 2314; கடந்த ஆண்டைவிட இழப்பு 1232 இடங்கள்.

2016-2017 இல் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் +2 அடிப்படையில் படித்தவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 62 (நீட் இல்லாதபோது)

2017-2018இல் 'நீட்' தேர்வு காரணமாக சி.பி.எஸ்.இ.யில் படித்தவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 1220. "நீட்'டில் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கூடுதலாகப் பெற்ற இடங்கள் 1158.

2016-2017 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோருக்கு (+2 அடிப்படையில்) கிடைத்த இடங்கள் 1781)

2017-2018ஆம் ஆண்டு 'நீட்' தேர்வின் காரணமாக பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைத்த இடங்கள் 1501 இழப்பு 280,

2017-2018இல் இடம் கிடைக்கப் பெற்றவர்களில் 1004 பேர் முந்தைய ஆண்டுகளில் +2 தேர்வில் வெற்றி பெற்று பல லட்சம் ரூபாய் செலவு செய்து தனிப்பயிற்சி  (Coaching Centres)  பெற்றவர்கள் - இதில் 250 பேர் உயர்ஜாதியினர்,

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 

2016 - 2017 இல் (+2 அடிப்படையில்) - 854 

2017-2018 (‘நீட்' காரணமாக) - 621 

தாழ்த்தப்பட்டோர் 

2016-2017 இல் (+2 அடிப்படையில்) -572 

2017-2018இல் (‘நீட்' காரணமாக) - 557

அரசு மேனிலைப் பள்ளியில் 

2016 -2017இல் (+2 தேர்வு அடிப்படையில்) - 30 

2017-2018இல் ('நீட்' தேர்வு அடிப்படையில்) - 5 

இந்தியாவின் சமமற்ற பிராந்திய சூழல்(Regional imbalance),  வேறுபட்ட பண்பாடு (CulturalDiversity), பல மொழிகளில் பயிலும் மாணவர்கள் (Linguistic Diversity)  இவற்றைக் கருத்தில் கொண்டு, ஒரே வகையான முறையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' அறவே நீக்கப்பட வேண்டியது அவசியமாகும். 

இந்தச் சூழலில் 2017-2018ஆம் ஆண்டுக்கான 'நீட்' அறிவிப்பு வெளிவந்துவிட்டது. 

இதுகுறித்து கடந்த 18.1.2018 அன்று ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஒரு தகவலைத் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கன மனதிற்கொண்டு மாநிலப் பாடத் திட்டத்திலிருந்து 'நீட்' தேர்வு கேள்வித்தாள்களை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

இந்த அறிவிப்பிற்கு முற்றிலும் மாறாக 21.1.2018 அன்று ஓர் அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

மருத்துவப் படிப்பில் சேர நாடு முழுவதும் நடத்தப்படும் 'நீட்' தேர்வில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின்படியே கேள்வித்தாள் தயாரிக்கப்படும் என்று அதே மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார் என்றால் - இது எவ்வளவுப் பெரிய கொடுமை! இடையில் மூன்று நாட்களில் என்ன நடந்தது? ஆதிக்க சக்திகளின் மிகப் பெரிய அழுத்தமே இதற்குக் காரணமாக இருக்க முடியும்!

'நீட்' தேர்விலும் மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறான தேர்வுத் தாள்கள் தயாரிக்கப்பட்டு சமப் போட்டி என்ற இலக்கணமும் தகர்க்கப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கும், தனிச்சட்டம் இயற்றப்படாமலும் தன்னிச்சையாக வெளிநாட்டுக்காரர்களும் மருத்துவக் கல்லூரிகளில் சேர வழி செய்யப்பட்டது. (Global Entrance)  பிற மாநிலத்தவர்கள் இரட்டை இருப்பிடச் சான்று பெற்று தமிழ்நாட்டில் இடம் பிடித்துள்ளனர்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 25 அரசு மருத்துவக் கல்லூரிகள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளோர் பயனடையும் வண்ணம் இயங்கிவருகின்றன. 24 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த அரிய வாய்ப்பு!

'நீட்' எனும் அகில இந்திய நுழைவுத் தேர்வின் காரணமாக இவை அனைத்தும் புறந்தள்ளப்பட்டு, அனைத்து மாநிலங்களின் வேட்டைக்காடாகத் தமிழ்நாடு மாற்றப்பட்டு விட்டது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இருந்துவந்த வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்பட்டு விட்டன.

2017-2018இல் தமிழ்நாட்டில் இடம் கிடைக்கப் பெற்றவர்களும் 45 சதவீதத்தினர் ஓராண்டுக்கு மேலாக தனிப்பயிற்சி நிறுவனங்களில் பல லட்சம் ரூபாய் செலவிட்டு பயிற்சி பெற்றவர்கள் ஆவார்கள். இந்த வாய்ப்பு ஏழை எளிய, கிராமப்புற மாணவர்களுக்கு கிடைத்திட வாய்ப்பில்லை என்பது வெளிப்படை.

இதில் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது - தமிழ்நாட்டுக்கு 'நீட்' தேர்வு தேவையில்லை - விதிவிலக்குத் தேவை என்று மசோதாக்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றுத் தரப்படவில்லை.

தற்போது நடைமுறையில் உள்ள இந்திய மெடிக்கல் கவுன்சிலைக் கலைத்துவிட்டு அதற்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

5 ஆண்டுகள் மருத்துவப் படிப்பிற்குப் பிறகு  Licentile Exam - Exit  என்று தனியே தேர்வு நடத்தி அதில் வெற்றி பெற்றால்தான் மருத்துவராகப் பதிவு செய்ய முடியும் என்பது தேவையில்லாத பெரும் சுமையாகும்.

10. தி.மு.க. அரசின் செயல்பாடு என்ன? 

'நீட்'டை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்தபோது அந்த ஆட்சியில் அங்கம் வகித்த திமுகவின் செயல்பாடுகள் என்ன. எனவே நீட்டுக்கு ஆதரவாக தி.மு.க. இருந்தது. நீட்டை எதிர்த்து தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை என்பதுதான் முக்கிய குற்றச்சாற்றுகள். 

21.12.2010இல் அப்பொழுது மத்தியில் இருந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்டது.

திமுக, அரசு என்ன செய்தது. ஒன்றிய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முதல் அமைச்சர் கலைஞர் கடிதம் எழுதியதோடு நிற்கவில்லை - சென்னை உயர்நீதிமன்றத்தில் நீட்டுக்கு எதிராக தி.மு.க.வால் வழக்குத் தொடுக்கப்பட்டது. நீதிபதி ஜோதிமணி நீட்டுக்குத் தடையும் விதித்தார்.

நீட்டை எதிர்த்துப் பல தரப்பினராலும் போடப்பட்ட வழக்குகளை ஒன்றிணைத்து உச்சநீதிமன்றம் விசாரித்தது. 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையில் நீதிபதிகள் விக்கிரமத் சென், ஏ.ஆர் தவே ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. 

இந்திய அரசமைப்புச் சட்டம் 19, 25, 26, 29, 30 பிரிவுகளின்படி 'நீட்' தேர்வை நடத்தும் உரிமை மருத்துவக் கவுன்சிலுக்குக் கிடையாது என்று தீர்ப்பு வழங்கியது. இதில் நீதிபதி ஏஆர் தவே மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார் (18.7.2013)

இதோடு நீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 

இந்தத் தீர்ப்பின்மீது மறு சீராய்வு மனுவினை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது யார்?

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி  (UPA)  அரசல்ல, தாக்கல் செய்தது யார் என்றால் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA)  ஆட்சிதான்.

இதில் என்ன வேடிக்கை என்றால் நீட் வழக்குத் தீர்ப்பில் மாறுபட்ட தீர்ப்பைப் பதிவு செய்த நீதிபதி ஏ.ஆர்.தவேதான், இந்த அமர்வுக்குத் தலைமை தாங்கி, மீண்டும் வழங்கியதே நீட் செல்லும் (16.3.2016) என்ற தீர்ப்பாகும் என்பது சட்ட வரலாறு.

11. அன்றைய குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியின் நிலைப்பாடு என்ன? 

நீட் தேர்வை ஒன்றிய அய்க்கிய முற்போக்குக் கூட்ட அரசு கொண்டு வந்த போது - இன்றைய பிரதமரும், அன்றைய குஜராத் மாநில முதலமைச்சருமான நரேந்திர மோடியின் நிலைப்பாடு என்ன?

குஜராத் அரசு இந்திய மருத்துவக் கழகத்திற்கு எழுதிய கடிதத்தில் நாங்கள் "நீட்"தேர்வை எதிர்க்கிறோம், எங்கள் மாநிலத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என்று கூறியுள்ளது.

இது தொடர்பாக குஜராத் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளதாவது, “எங்கள் மாநிலத்தில் அதிகமான மாணவர்கள் மருத்துவர்களாக வரவேண்டும் என்பது எங்கள் மாநில உரிமை ஆகும். இந்திய மருத்துவக் கழகம் எங்களை "நீட்"டிற்காகத் தயாராகும்படி கூறியிருந்தது. ஆனால் எங்களால் நீட் தேர்வை ஏற்கமுடியாது, எங்கள் மாநிலத்திற்கு என்று சிறந்த கல்வி அமைப்பு உள்ளது. இதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் எங்கள் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

நாங்கள் ‘நீட்' பற்றி ஒரு குழு அமைத்து ஆலோசனை செய்தோம். அந்தக் குழு மாநில அரசின் பாடத்திட்டத்தின்படி படிக்கும் மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு சுமையை ஏற்படுத்தும் என்று அறிக்கையில் கூறியுள்ளது, ஆகவே நாங்கள் 'நீட்'டை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜெயநாராயணன் வியாஸ் கூறினார்.

Gujarat Govt not to accept NEET for MBBS admission Gandhinagar, 11 August, 2011

Gujarat government on Wednesday declared that the state will not accept the National Eligibility cum Entrance Test (NEET) for admission in MBBS courses,

“We have decided not to accept NEET. We have informed this to the Union government." Gujarat Health Minister Jaynarayan Vyas said.

NEET is an all India common entrance test for entry to medical colleges of the country proposed to be introduced in the year 2012-13 by the Medical Council of India (MCI).

The MCI had asked for the opinion of different states regarding the NEET.

Gujarat government had formed a three member task force to give suggestions on how NEET Will affect students of Gujarat who want to opt for medical education, Vyas said.

"The task force was formed after parents associations protested on the NEET issue," he said adding, "The task force has given its report and on the basis of that we have decided that Gujarat will not join NEET." Gujarat already has a system of centralised admission for MBBS, wherein the result of class and GUJCET test are taken into account, Vyas said. deshgujarat.com/2011/08/11/ gujarat-govt-not-to-accept-neet-for-mbbs-admission/

12. நீட்டால் யாருக்குப் பயன் 

1. மொத்த மருத்துவக் கல்லூரி விண்ணப்பம் 

2015இல் - 32525, 2014இல் -27539, 2013இல்- 29569

2. தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் கீழ் விண்ணப் பித்தவர்களின் எண்ணிக்கை  2015- 30249, 2014-  26629, 2013 - 28311

3. மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த தமிழ்நாடு மாணவர் களின் எண்ணிக்கை 

அரசு கல்லூரி 2015 - 2327, 2014 - 2245, 

2013- 2267

தனியார் கல்லூரி 2015 - 669, 2014 - 895, 2013 - 984

4. ஒன்றிய அரசு கல்வித் திட்டத்தின் கீழ் (சிபிஎஸ்இ) விண்ணப்பித்தவர்கள் 2015- 1276, 2014 - 789,  2013 -1642

5. தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் தேர்வானவர்கள் (சிபிஎஸ்இ) 2015 - 0, 2014 - 0, 2013 - 0

6. தனியார் கல்லூரிகளில் தேர்வானவர்கள் (சிபிஎஸ்.இ) 2015 -2,  2014 - 2, 2013- 2

(2016 ஆம் ஆண்டு தகவல்  அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கிடைத்த அட்டவணையின்படி தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒன்றிய அரசு கல்வி திட்டத்தின் கீழ் பயின்ற ஒருவர் கூட (சிபிஎஸ்இ) தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் தேர்வாகவில்லை. அத்தகைய சிறுபான்மை எண்ணிக்கையினர் பெரும் அளவு பயன்பெறவே இந்த நீட் தேர்வு.

மருத்துவக் கல்வி, மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுகளின் நிதியில் அவர்களின் கீழ் செயல்படும் நிலையில் மாநில நலனைக் கருத்தில் கொண்டு, மாநில அரசுகளே வழிமுறைகளை பின்பற்றும் உரிமையைப் பெற வேண்டும் என்பதே நியாயமான அணுகுமுறையாகும்.

தமிழ்நாடு சட்டப்பேரவை நீட்டுக்கு விதிவிலக்கு மசோதாவை ஒரு மனதாக நிறைவேற்றிய நிலையில், ஒன்றிய அரசு நிராகரிப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதே திராவிடர் கழகத்தின் திட்டவட்டமான தெளிவான நிலைப்பாடு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒன்றிய அரசுக்கோ, மருத்துவக் கவுன்சிலுக்கோ 
'நீட்' தேர்வு நடந்த சட்டப்படி அதிகாரமில்லை

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றால்தான் சேர முடியும் என்பதற்கான மெடிக்கல் கவுன்சில் சட்டத்தில், ஒரு அவசர சட்டத்திருத்தமாக, 24 மே 2016இல் செக்சன் பிரிவு (10D) என்பது உள்ளே நுழைக்கப்பட்டது. அதோடு 33ஆவது பிரிவில் (ma)  என்பதுடன் புதிதாக (mb) என்ற பிரிவும் கூடுதலாக நுழைக்கப்பட்டது

இந்த சட்டத் திருத்தத்தால் 'நீட்' தேர்வு என்பது இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், ஒன்றிய அரசின் மருத்துவப் பல்கலைக்கழகங்களான எய்ம்ஸ், ஜிப்மர் (AIIMS, IIPMLK)  போன்ற மருத்துவக் கல்லூரி களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது

மேற்படி அவசரச் சட்டம்  (Ordinance) 5.8.2016 இல் திருத்தச் சட்டமாக ஒன்றிய அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டது

இது சட்ட வலிமை பெற்ற சட்டத் திருத்தமா? 

ஒன்றிய அரசு இயற்றிய சட்டம், இந்திய அரசியல் சட்டம் அளித்துள்ள வலிமையையும், அதிகாரத்தையும் பெற்ற ஒன்று அல்ல, (suffers from the vice of legislative competency)  எனவே, இந்த சட்டப் பிரிவின் நுணுக்கங்களையும், அரசியல் சட்ட விதிகளுக்கு இது முரணாக உள்ளது என்பதையும் நீதிமன்றங்களுக்குச் சென்று சரியான முறையில் எடுத்து வைத்து விளக்கி வாதாடினால், புதிதாக நுழைக்கப்பட்ட பிரிவுகளான 10D செக்சன் 33இல்  (mb) என்ற பிரிவு அரசியல் சட்ட விதிகளுக்கு முரணாக உள்ளதால், செல்லாது என்று தீர்ப்பளிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது

அந்த அடிப்படையில், பல்வேறு அரசியல் சட்டப் பிரிவுகளையும் எடுத்துக்காட்டி, இப்படி ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர, ஒன்றிய அரசுக்கோ அல்லது மெடிக்கல் கவுன்சில் - டெண்டல், (பல்) கவுன்சில் ஆகியவற்றுக்கோ தேர்வைநடத்த அதிகாரம் இல்லை.

பல்கலைக் கழகத்திற்கே உள்ள தனி உரிமை!

மாணவர்கள் சேர்க்கை விதிகள் குறித்துத் தீர்மானிக்கும் மற்றும் தேர்வு நடத்திடும் உரிமை பல்கலைக் கழகங்களுக்கு மட்டுமே உள்ள உரிமையாகும். அந்த உரிமையை ஒன்றிய அரசோ அல்லது மருத்துவக் கவுன்சிலோ, பல் மருத்துவக் கவுன்சிலோ பறித்துக்கொள்வது அரசியல் சட்டத்தின் மற்றப் பிரிவுகளுக்கு முரணான, உரிமைப் பறிப்பு ஆகும். அதுவே, அரசியல் சட்ட விதிகளின்படி நுணுக்க விளக்கமாகும்.

எப்படியென்றால் இந்திய அரசியல் சட்டம் அளித்துள்ள அதிகாரப் பகுப்புப்படி ஒரு பல்கலைக் கழகத்தை உருவாக்கும் (Incoporting/Establishing)  மற்றும் ஒழுங்குபடுத்தும் (Regulating) அதிகாரம், மாநிலங்களுக்குள்ள தனித்த அதிகாரமாகும். எனவே, அதில் மாணவர் சேர்க்கை எப்படி அமையவேண்டும்; எந்த அடிப்படையில் எத்தகைய தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யும் கடமை, உரிமை, அதிகாரம், பல்கலைக் கழகங்களின் தனித்த உரிமையாகும். ஒன்றிய அரசுக்கு எந்தப் பல்கலைக் கழகத்தையும் நேரிடையாக நிறுவும் / ஒழுங்குப்படுத்தும், அதிகாரம் இல்லாததால் அது பல்கலைக் கழக அதிகாரங்களில் நுழைந்து பறிக்கும் உரிமையும் கிடையாது என்பதே இந்திய அரசியல் சட்டத்தின் நிலைப்பாடு.

ஒவ்வொரு பல்கலைக் கழகச் சட்டமும் குறிப்பிட்ட பட்டப் படிப்புகளை உருவாக்கி, மாணவர்களை எப்படிப்பட்ட தகுதிகளின்படி தேர்வு செய்வது என்பது பல்கலைக் கழகங்களின் தனி அதிகாரம் ஆகும்.

சட்டம் இயற்றும் உரிமை 

அரசியல் சட்ட ஏழாவது அட்டவணையில் (VII Schedule)  இரண்டாவது பட்டியலில்  (List II)  மாநிலப்பட்டியல் (State List) 32ஆவது  (Entry 32) பிரிவில்/எண்ணில் மாநிலங்களின் உரிமை எனக் கூறப்பட்டுள்ளது என்ன?

"32. Incorporation, regulation and winding up of corporation other than those specified in List I and universities, unincorporated trading, literary, scientific, religious and other societies and associations: co-operative societies."

இதன் தமிழாக்கம்: 

"பட்டியல் 1 இல் குறிப்பிடப்பட்டுள்ளவை நீங்க லான மற்ற வணிக நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களைப் பதிவு செய்வது, கட்டுப்பாடு செலுத் துவது, பதிவை ரத்து செய்வது மற்றும் கூட்டுறவு சங்கங்கள் உட்பட, வணிக, கல்வி, அறிவியல், மத மற்றும் இதர சங்கங்கள்" ஆகியவை மீது சட்டமியற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கானது என்பதாகும்.

அதாவது அரசியலமைப்பில் மாநில பட்டியலில் எண் 32 இன்படி, பல்கலைக்கழகங்களை நிறுவவும், நிர்வகிக்கவும் மாநிலங்களுக்கு மட்டுமே அதிகாரம் தரப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை தொடர்பாக மருத்துவக் கவுன்சில் உத்தரவு பிறப்பித்தால் அது மாநில உரிமையில் தலையிடுவதாக அமையும்,

அதே ஏழாவது அட்டவணையில், ஒன்றிய அரசின் தனித்த சட்டமியற்றும் அதிகாரம், பட்டியல் ஒன்றில்  (List I) குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் 44ஆவது எண்  (Entry 44)  கீழ்க்கண்டவாறு உள்ளது.

"44. Incorporation, regulation and winding up of corporations, whether trading or not, with objects not confined to one State, but not including universities.”

இதன் தமிழாக்கம்: 

“பல்கலைக்கழகங்கள் நீங்கலான, ஒரு மாநிலத்திற்குள் மட்டுமே செயல்படும் நோக்கம் கொண்டிராத, வணிக நிறுவனம் அல்லது வேறு நிறுவனம் ஆகிய வற்றைப் பதிவு செய்வது, கட்டுப்படுத்துவது, பதிவை ரத்து செய்வது."

எனவே, மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள இந்த இரண்டு விதிகளும் (அதாவது மாநிலப் பட்டியலில் 32 ஆவது மற்றும் மத்தியப் பட்டியல் 44 ஆவது பதிவுகள் தெளிவாகக் கூறுவது என்னவென்றால் பல்கலைக்கழகங்களை உருவாக்குதோ அமைப்பதோ, ஒழுங்குபடுத்துவதோ, மாநில அரசுகளுக்கு மட்டுமே உள்ள அதிகாரம் அதை மற்ற அமைப்புகள் பறிக்க முடியாது. பட்டியல் 1 இல் எண் 44 இல், அதாவது மத்தியப்பட்டியல் பல்கலைக் கழகங்களை அமைக்கும் அதிகாரம் விலக்கப்பட்டிருக்கிறது  (specifically excluded).

நாம் மேலே சுட்டிக்காட்டியது, இந்தியாவின் இதர மாநிலங்களுக்குப் பொதுவாக உள்ள சட்ட நுணுக்கம்.

மேற்சொன்ன சட்ட விதிகளை அடிப்படையாகக் கொண்டு உயர்நீதிமன்றங்களிலோ, உச்சநீதிமன்றத் திலோ வாதாடி 'நீட்' தேர்வு சட்டம் அரசியல் சட்ட விதிகளுக்குப் புறம்பாக உள்ளதால் செல்லாது என்று நீதிபதிகளுக்கு விளங்கும்படி வாதங்களை எடுத்து வைத்து வழக்குத் தொடுத்தால், சட்டப்படி, நியாயப்படி வழக்குத் தொடுப்பவர்கள் வெற்றி பெற்றே ஆகவேண்டும் காரணம், சட்ட விதிகளின்படி ஆராய்ந்து தீர்ப்பளிக்க வேண்டிய கடமை உயர்நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் உரியதல்லவா? பொதுவான சட்ட நிலைப்பாடு - சட்ட முரண்கள் - இந்தியாவின் மற்ற அனைத்து மாநிலங்களும் - 'நீட்' தேர்வை எதிர்த்து இந்த நிலைப்பாட்டை - சட்ட நுணுக்கத்தை அடிப்படைவாதங்களாக வைத்து வாதாடலாம்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில்... 

எது எப்படி இருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 'நீட்' தேர்வு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது. மற்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டின் நிலை வேறுபட்டதாகும். தமிழ்நாடு சட்டமன்றத்தால் 2007ஆம் ஆண்டு, கலைஞர் தலைமையில் இருந்த திமுக ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட தொழிற் கல்லூரிகளில் சேருவதற்கு தனித்த நுழைவுத் தேர்வு தேவையில்லை என்ற சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டு அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. அது நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஒன்றிய அரசின் சட்டத்திற்கு ஒப்பானதாகும்.

மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு 'நீட்' தேர்வு கட்டாயம் என்பது ஒன்றிய அரசின் அறிவிக்கை (Notification)  கீழ்தான் வெளியிடப்பட்டுள்ளது. 2016 திருத்தச் சட்டத்தின் மூலம் அல்ல.

குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு, தமிழ்நாடு அரசு சட்டமன்றம் 2007இல் கொள்கை முடிவாக எடுத்து இயற்றிய சட்டம், கடந்த 9 ஆண்டுகளாக நுழைவுத் தேர்வு முறைக்கு எதிரான அதன் வலிமை பறிக்கப்பட முடியாத ஒன்று.

மேற்கண்ட திருத்த சட்டத்தின் மூலம் புதிதாக சேர்க்கப்பட்ட IOD  பிரிவு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டங்களுக்கு முரணாக உள்ளது என்பது சட்டப்படி சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்று  - தமிழ்நாடு M.G.R. பல்கலைக்கழக சட்ட மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான விதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அச்சட்டம் Entry 32, List-II இன் கீழ் இயற்றப்பட்டதாகும். அந்த அதிகாரம் ஒன்றிய அரசுக்குத் தரப்படவில்லை.

சட்டப் போராட்டத்தை வலிமையுடன் நடத்தவேண்டும்! 

"10D. There shall be conducted a uniform entrance examination to all medical educational utions at the undergraduate level and post-graduate level through such designated authority in Hindi, English and such other languages and in such manner as may be prescribed and the desig authority shall ensure the conduct of uniform entrance examination in the aforesaid manner" என்பதாகும்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள மருத்துவக் கல்லூரிகளில் (Affiliated Colleges)மாணவர்களின் சேர்க்கையானது அப்பல்கலைக்கழகச் சட்ட விதிகளின்படியே இருக்க வேண்டும். அதனைக் கட்டுப்படுத்த (To regulate) ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இல்லை.

இன்னும்பலப்பலசட்ட அதிகாரங்களுக்குமுரண் பட்டே 'நீட்' தேர்வு முறை மாநிலங்கள் மீது திணிக்கப் பட்டிருப்பதால் இதனைப் பற்பல கோணங்களிலும் எடுத்து வைத்து முழுமையாக வாதாட வேண்டும்.

இதனை ஒத்தக்கருத்துள்ளவர்கள் நீதிமன்றங்களுக்குச் சென்று வழக்குகள் தொடுப்பதன்மூலம் நீதி கிடைக்கப் போராட வேண்டியது அவசரக் கடமை யாகும்

இது அரசியல் சட்டப்படி மாநிலங்களுக்குள்ள உரிமையாகும். ஒன்றிய அரசு விலக்குத் தருவது கருணையோ, சலுகையோ, பிச்சையோ ஆகாது.

எனவே, மாநில அரசுகள் குறிப்பாக தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டத்தை வலிமையுடன் திறமை மிக்க, மூத்த வழக்குரைஞர்கள் மூலம் வாதாட முன் வரவேண்டியது அவசர, அவசியமாகும்.

 (கி.வீரமணி)

தலைவர், திராவிடர் கழகம்


No comments:

Post a Comment