'ஏழுமலையான் ஒரு தரம்!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 29, 2022

'ஏழுமலையான் ஒரு தரம்!'

 "சென்னைத் தீவுத்திடலில் வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பரின் திருக் கல்யாண நிகழ்ச்சிகளை வெகு பிரம்மாண்டமான முறையில் நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.

இதனையொட்டி, நேற்று தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி, தமிழ்நாடு தேவஸ்தான கோயில்களின் தலைவர் சேகர்ரெட்டி, அறங் காவலர் குழு உறுப்பினர் டாக் டர். சங்கர் உட்பட தேவஸ்தான உயரதிகாரிகள் குழு தீவுத் திடலில் ஆய்வு செய்தது.

மேலும், சென்னை ஜி.என். செட்டி தெருவில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிதாக கட்டப்படும் பத்மாவதி தாயார் கோயில் பணிகளையும் இக்குழு ஆய்வு செய்தது.

அதன் பின்னர்,இது  தொடர்பாக அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்ரீநிவாசர் திருக்கல்யாணம், வரும் ஏப் ரல் மாதம் 16 ஆம் தேதி சென் னைத் தீவுத்திடலில் வெகு விமரிசையாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அடுத்த வாரம் தலைமை செயலாளர், மருத் துவம் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர், போலீஸ் துறை, மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அரசு உயரதி காரிகளுடன் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும்.

பரந்த மேடையில் சுவாமி திருக்கல்யாணம் வெகு வைபோ கமாக நடத்த தீர்மானிக்கப்பட் டுள்ளது. இதில் தமிழ்நாடு பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு தர்மா ரெட்டி கூறினார்.

('இந்து தமிழ் திசை'

28.3.2022 - பக்கம் 8)

கோயில் என்பது பக்தியை வளர்க்கிறதா? ஜாதியை வளர்க்கிறதா? பணத்தைச் சுரண்டும் கூடாரமாக விளங்குகிறதா? பார்ப்பன ஆதிக்க ஜாதி உணர்வை கெட்டிப்படுத்துகிறதா? என்கிற கேள்விகள் அடுக்கடுக்காகக் கிளம்புவது ஒருபுறம் இருக் கட்டும்!

"எனது குருநாதர், எனது குருநாதர்" என்று அடிக்கு ஒரு தடவை அட்சரம் பிறழாமல் அர்ச்சனை செய்யும் 'துக்ளக்'கை அபகரித்துள்ள திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் சொல்லுகிறாரே, எழுதுகிறாரே அந்த சோ ராமசாமி அய்யர் என்ன எழுதி இருக்கிறார்?

இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் 16 ஆண்டு கள் பின்னோக்கிப் பயணித்தாக வேண்டும்.

கேள்வி: சென்னை தீவுத் திடலில் திருப்பதி - ஏழுமலை யான் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது பற்றியும், அதில் லட்சக்கணக்கான பக்தர் கள் பங்கேற்பது பற்றியும் தங்கள் கருத்து....

சோவின் பதில்: 'இவ்வளவு கட்டணம் கொடுத்தால் வெங்க டேஸ்வரப் பெருமாளை உங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்து ஒரு நாள் தங்க வைக்கிறோம்' என்று ஒரு புதிய திட்டம் வராதது ஒன்றுதான் குறை.

('துக்ளக்' 23.4.2006 பக்கம் 17)

'காசேதான் கடவுளடா!' என்பதும், கையில் 'காசில் லாதவன் கடவுளே ஆனாலும் கதவைச் சாத்தடி!" என்றெல்லாம் கேள்விப்பட்டுள்ளோம்.

திருப்பதி ஏழுமலையானே காசுக்காக அலைந்து திரிகிறார் என்று நாம் சொன்னால் கோபம் பொத்துக் கொண்டு வரும் - சோ ராமசாமி சொன்னால்?

என்ன குருமூர்த்தி அய்யரே, மூக்குப் புடைக்கிறதா?

-  மயிலாடன்

 

No comments:

Post a Comment