பாலர் பண்பு பயிற்சி முகாமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 25, 2022

பாலர் பண்பு பயிற்சி முகாமா?

2025இல் ஆர்.எஸ்.எஸின் நூற்றாண்டையொட்டி தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸை வளர்க்கப் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளனர். கிராமங்கள் தோறும் சமய வகுப்புகள் நடத்துதல், பயிற்சிகள் நடத்துதல் என்பவை அவர்களின் திட்டங்களில் ஒன்றிரண்டாகும்.

அவற்றை இப்பொழுதே அவர்கள் துவக்கி விட்டார்கள் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

"ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் 

தேனி ஜில்லா - பாலர் பண்பு பயிற்சி முகாம்

அன்புடையோருக்கு வணக்கம்,

ஒழுக்கம், தேசபக்தி,  சுயகட்டுப்பாடு, தலைமைப் பண்பு ஆகியவற்றை சிறு வயதிலேயே கற்றுக்கொள்ளும் நோக்கில் 11 வயது முதல் 14 வயது வரையிலான பாலர்களுக்கு ஒரு நாள் பண்பு பயிற்சி முகாமானது நம் ஜில்லா அளவில் கீழ்க் கண்டவாறு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள து.

நாள் : ஸ்ரீ பிலவ ஆண்டு பங்குனி மாதம் 20-ம் நாள்

03-04-2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி வரை)

{02-04-2022 சனிக்கிழமை இரவு உணவு முடித்து விட்டு வரவேண்டும்.)

இடம் : விகாசா மெட்ரிக் பள்ளி, எரசை ரோடு - சின்னமனூர்.

தேவையான பொருட்கள்..

பயிற்சிக்கு உண்டான அரை டவுசர் இருக்கவேண்டும்.

தட்டு, டம்ளர், போர்வை, துண்டு மற்றும் ஒரு நாளுக்கு

தேவையான பொருட்கள்,

குறிப்பு:- விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் மொபைல் போன்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை

வர்க கட்டணம் :- ரூ.20/- மட்டும்."

மற்றொரு செயல்பாடு: ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக தென் தமிழ்நாடு; 'கோடை காலப் பண்பாட்டு வகுப்பு ஆலோசனைக் கூட்டம். இடம்: சித்தநாதன் திருமண மண்டபம், அடிவாரம் பழனி. நாள் மார்ச் 24 - காலை சிற்றுண்டிக்குவந்து சேர வேண்டும்.

மேற்கண்ட இரு நடவடிக்கைகளும் எதைக் காட்டுகின்றன?

ஆர்.எஸ்.எஸ். தன் வேலையைத் தொடங்கி விட்டது. "பாலர் பண்பு பயிற்சி முகாமாம்". அதில் ஒழுக்கம், தேச பக்தி, சுய கட்டுப்பாடு, தலைமைப் பண்புகளைப் போதிப்பார்களாம்.

அரைக்கால் சட்டை போட்டுக் கொண்டு வர வேண்டுமாம். இப்பொழுது புரிந்திருக்க வேண்டுமே - இதன் பின்னணி என்ன என்பது!

பச்சையாக ஆர்.எஸ்.எஸ். பயிற்சிதான் - அதில் எள்ளளவும் அய்யப்பாட்டுக்கு இடமேயில்லை. ஒழுக்கத்தைப் பற்றிச் சொல்லிக் கொடுப்பார்களாம். அவர்கள் சொல்லிக் கொடுக்கும் ஒழுக்கம் எத்தகையது?

மகாபாரதத்தைச் சொல்லிக் கொடுப்பார்கள், இராமாயணத்தை கதை கதையாக சுவையாக சொல்லுவார்கள். கீதையைப் பற்றி கீதமாகக் கதைப்பார்கள்.

'இந்து' ஏட்டில் ஆசிரியர் கடிதம் (17.12.1988) மகாபாரதம்பற்றிச் சொல்லும்போது "Adults Only" என்று போட்டு இரவு நேரத்தில் ஒளிபரப்ப வேண்டும் என்பதுதான் அந்தச் செய்தி.

இந்து மத்தின் இரு கண்களான இதிகாசங்கள் மகாபாரதம் - இராமாயணம் என்பார்கள். இதில் மகாபாரதத்தின் யோக்கியதை எத்தகையது என்பதை 'இந்து' ஏடே எடுத்துக்காட்டி விட்டது.

அடுத்து என்ன சொல்லிக் கொடுப்பார்கள்? கீதையைப் பற்றியும், கிருஷ்ண பகவான் லீலைகள் பற்றியும் சொல்லிக் கொடுப்பார்கள்.

சிறு வயதில் வெண்ணெய்யைத் திருடி, வாலிப வயதில் பெண்களைத் திருடுபவன் நமது பகவான் என்று பாலர்களுக்கு சொல்லிக் கொடுக்கப் போகிறார்களா?

இவர்கள் கூறும் ஹிந்து மதத்தில் ஒழுக்கம் உள்ள ஒரே ஒரு கடவுளைக் காட்ட முடியுமா - கற்பிக்க முடியுமா?

லிங்க புராணத்தையும் சொல்லிக் கொடுக்க முடியுமா? லிங்கம் என்றால் என்ன என்று விவரித்தால் பாலர்களின் நிலை என்னாவது!

பக்தி தனிச் சொத்து, ஒழுக்கம் பொதுச் சொத்து என்றார் தந்தை பெரியார் (சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 24.11.1964)

மறைந்த மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன சொல்லுகிறார்?

"நல்ல ஒழுக்கம் இருந்தால் போதுமென்றும், கடவுள் அவசியம் இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர். இது தவறான கருத்து. கடவுள் அருள் இல்லையானால் ஒரு தனி நபருக்கோ நாட்டுக்கோ விமோசனம் ஏற்பட முடியாது" (கல்கி 8.4.1958).

அறிவிலும், ஒழுக்கத்திலும் நம்பிக்கையுள்ள எவராக இருந் தாலும் தந்தை பெரியார் கூற்றையும், சங்கராச்சாரியார் கூற்றையும் சீர் தூக்கிப் பார்க்கட்டும்!

யார் சொல்லுவது உண்மையானது - அவசியமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம். ஒழுக்கத்தைப் புறந்தள்ளி பக்தியைப் பாலர்களிடம் திணிப்பது எவ்வளவுப் பெரிய ஆபத்து!

ஆர்.எஸ்.எஸ். இப்படித்தான் பாலர்களை தயார் செய்யப் போகிறது - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

வேறு எதை எதையோ காட்டி நம் வீட்டுப் பிள்ளைகளை அழைப்பார்கள். அவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பிப் பிள்ளைகளை அனுப்பி வைப்பது ஆபத்தானது.

வன்முறைப் பயிற்சிகளைச் சொல்லிக் கொடுப்பார்கள். மதங்களைக் கடந்து சகோதரத்துவத்துடன் பழகும் பெரியார் மண்ணை நாசகார காவி மண்ணாக மாற்றிடத் திட்டமிடுகிறார்கள். இவற்றை முறியடிக்க வேண்டியது நாட்டின்மீது அக்கறையும், கவலையும் கொண்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய கடமையாகும். இதைத்தான் திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டமும் (19.3.2022) எச்சரித்தது.

எச்சரிக்கை!! எச்சரிக்கை!!

 

No comments:

Post a Comment