துபாய் மற்றும் அபுதாபி பயணம் முடிந்து திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 29, 2022

துபாய் மற்றும் அபுதாபி பயணம் முடிந்து திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஆறு நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள்மூலம் 14,700 பேருக்கு வேலை வாய்ப்பு

சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் பேட்டி

சென்னை, மார்ச் 29- துபாய் மற்றும் அபுதாபி பயணம் முடிந்து திரும்பினார் முதலமைச்சர் மு..ஸ்டாலின்!  ஆறு நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள்மூலம் 14,700 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகப்போகிறது என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் துபாய் மற்றும் அபுதாபி பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (29.3.2022) அதிகாலை சென்னை வந்தடைந்தார். துரைமுருகன், முனைவர் .பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள்  வரவேற்பளித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை முதலமைச்சர் மு..ஸ்டாலின் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதற்குப் பிறகு, முதல்முறையாக வெளிநாட்டுப் பயணமாக துபாய், அபுதாபி போன்ற நாடுகளுக்குச் சென்று விட்டு வந்திருக்கிறேன்.  என்னுடைய பயணம் வெற்றிகரமாக, மகிழ்ச்சிகரமான பயணமாக அமைந்தது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எப்படி துபாய் ஒரு நாடாக உருவாகியிருக்கிறதோ, அதுபோன்று என்னுடைய பயணமும் மிகப் பிரமாண்டமான வகையில் அமைந்தது என்பதை மகிழ்ச்சியுடன் நான் உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆறு மிக முக்கியமான தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) போடப்பட்டிருக்கின்றன. இரும்பு தளவாடங்கள் துறையில் இருக்கக்கூடிய நோபல் ஸ்டீல்ஸ் துறையோடு 1000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. ஜவுளித் துறையைச் சார்ந்த White House நிறுவனத்துடன்  500  கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. உணவுத் துறையைச் சார்ந்த Transworld குழுமத்தோடு 100 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. மருத்துவத் துறையைச் சார்ந்த  Aster DM Healthcare  நிறுவனத்தோடு 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. சரக்கு போக்குவரத்து துறையைச் சார்ந்த Sharaf நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. உணவு பதப்படுத்தும் தொழில் மற்றும் கட்டுமானத் துறையைச் சார்ந்த Lulu நிறுவனத்தோடு 3,500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.

இந்த ஆறு நிறுவனங்களுடன் 6,100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. இந்த ஒப்பந்தங்கள் போடப்பட்டிருப்பதன் மூலமாக 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகப் போகிறது. ஆகவே, இந்தப் பயணம் ஒரு மகத்தான பயணமாக, வெற்றிப் பயணமாக அமைந்திருக்கிறது என்பதை நான் மகிழ்ச்சியுடன் உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

கேள்வி: துபாயில் உள்ள தொழிலதிபர்களுக்கு இங்கு வந்து தொழில் தொடங்குவதற்கு எந்த அளவு எதிர்பார்ப்பு இருக்கிறது? இங்கு வந்து தொழில் தொடங்குவதற்கு அவர்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறீர்கள்?

முதலமைச்சர்: ஒப்பந்தம் நேரடியாக கையெழுத் திட்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் தொடங்கினீர்கள் என்றால் எல்லா விதமான சலுகைகளும்  தந்து, முறையான வகையில் தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலையையும் நிச்சயமாக உருவாக்கித் தருகிறோம் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறோம்.  அவர்களும் அந்த நம்பிக்கையுடன் தான் இருக்கிறார்கள்.

கேள்வி: இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் தொழில் வடிவம் எத்தனை மாதங்களில் வரும்?

முதலமைச்சர்: ஒரு குறிப்பிட்ட காலத்தை நிர்ணயித்து ஒப்பந்தம் கையெழுத்திட்டிருக்கிறோம். அதுதான் சொன்னேன், நாங்கள் ஒப்பந்தம்  போட்டிருக்கிற தேதிக்கு முன்பே அந்தத் தொழில்களைத் தமிழ் நாட்டிற்கு கொண்டுவந்து வேலைவாய்ப்பை நிச்சயமாக உருவாக்கித் தருவோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

கேள்வி: உங்களுடைய பயணம் குறித்து எதிர்க் கட்சிகள் எல்லாம் பல குற்றச்சாட்டுகள் வைக்கிறார்கள், அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

முதலமைச்சர்: அவர்கள் எதிர்க் கட்சி, அப்படித் தான் சொல்வார்கள். நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவது கிடையாது.

கேள்வி: தொடர்ச்சியாக இப்பொழுது அய்க்கிய அரபு நாடுகளுக்குச் சென்றது போல, வேறு நாடு களுக்குச் சென்று, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான  வாய்ப்பு எப்படி இருக்கிறது?

முதலமைச்சர்: தொழில் தொடங்கக்கூடிய சூழ்நிலையில், வேலைவாய்ப்பு ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நிச்சயமாக அப்படி ஒரு சூழ்நிலை வருகிற போது நான் நிச்சயமாக பயன்படுத்துவேன், அதில் எந்த சந்தேகமும் இல்லை.

-இவ்வாறு முதலமைச்சர் மு..ஸ்டாலின் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment