இவர்தான் அன்னை மணியம்மையார்! (3) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 19, 2022

இவர்தான் அன்னை மணியம்மையார்! (3)

"ஆமாம் டாக்டர், வீரமணி எல்லாம் செய்பவர் தான். ஆனால் என் கவலை எல்லாம் அவனுக்கு (உரிமையோடு சிற்சில நேரங்களில் அய்யாவும் சரி, அம்மாவும் சரி ஒருமையில் விளித்துப் பேசுவது உண்டு - அவர்களிடையே நெருக்கத்தின் அடை யாளமாக தனியே பேசும்போது - மற்றவர்கள் முன்னி லையில் அப்படி இராது) சரியா 'செக்' எழுதிக்கூட பழக்கம் இல்லீங்க டாக்டர்; அதுதான் எங் கவலை. எப்படி இவன் பிறகு எல்லாவற்றையும் செய்வான் என்கிறதுதான்" என்றார்!

அது அப்பட்டமான உண்மை. காரணம், அப்படி 'செக்' எழுதுவதில்  சரியான Spelling  உடன் எழுதிட வேண்டும். எனவே ஒருவகை தயக்கம் காரணமாக  அப்போது என்னால் அது முடிவதில்லை.

நான் வளர்ந்த விதம் Cheque  எழுதிட வாய்ப் பற்ற சூழ்நிலைதானே, அதனால் அப்படி. அம்மா குறிப்பிட்டதில் தவறே இல்லை. அப்பட்டமான உண்மை. அய்யா எழுதச் சொல்லி நான் தவறாக எழுதியதை அம்மா அறிந்திருந்ததால்தான் அப்படி சொல்லியிருப்பார். இப்படிப்பட்ட ஒருவன் நமக்குப் பிறகு எப்படி அமைப்பினை நடத்திடுவான் என்று கவலை நிறைந்த சந்தேகம் அவர்களுக்கு வந்ததில் வியப்பே இல்லை.

ஆனால்  பிறகு நிலைமைக்கேற்ப, எனக்கு வாய்ப்புகள் நிரம்ப வந்த காரணத்தால் நிறுவனத்தின் நிர்வாகம் நன்கு பழக்கமாகி விட்டது.

அய்.ஏ.எஸ். தேர்வுகளில் - கிராமத்து மாணவனைப் பார்த்து "உனது விமானப் பயணம் பற்றி சுருக்கமாக 100 வார்த்தைகளில் ஒரு குறிப்பு எழுதுக!" என்று கேட்டால், அவன் எப்படி சரியாக எழுத முடியும்? காரணம் அவன் ஒருமுறைகூட விமானத்தில் பயணம் செய்தவன் அல்லவே. அதுபோலத்தான்.

ஆனால், வாய்ப்புகள் பெருக, அவசியம் உந்தித் 'தள்ளும் போது தானே எதையும் கற்றுக் கொள்ள முடிகிறது. அப்படிக் கவலைப்பட்டவர் அம்மா? அது எதனால் என்று எனக்கு அப்போது புரியவில்லை.

மூத்த வழக்குரைஞர்கள், சட்ட நிபுணர்க¬ ளயெல்லாம் மருத்துவமனைக்கு வந்து தன்னை சந்திக்க ஏற்பாடு செய்யச் சொல்லி அம்மா அவர்கள் என்னிடம் கூறினார். நான் ஏற்பாடு செய்துவிட்டு, அவர்கள் பேசும் போது, நான் உடன் இருப்பது முறை யல்ல என்று கருதி வெளியே வந்து காத்திருப்பேன்; அல்லது 'விடுதலை' அலுவலகம் வந்து விட்டு சில பணிகளை - எழுத்துப் பணிகளை முடித்துத் திரும்பி, அவர்களை மருத்துவமனையில் வழியனுப்புவேன்.

அதுபோலவே ஒருமுறை நமது டிரஸ்டு நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் - டிரஸ்டிகளை வரவழைக்கும் படியாக என்னிடம் அம்மா கூறினார். அதன்படி அனைவரும் அழைக்கப்பட்டனர். எனக்கு வெளியே ஒரு வேலை கொடுத்து அனுப்பி விட்டார்.

எதற்காக அவர்களை அழைத்தார்? என்ற ஆவல் (Curiosity) எனக்கு வரவே இல்லை.  அவர் பலருடைய ஆலோசனையை பல செய்திகளில் கேட்கிறார்;  அவர் நமது தலைவர். அவற்றை அறிய வேண்டியது நமது பணி அல்ல என்ற சிந்தனை என்னை அப்படி நடக்கச் செய்தது! அம்மா மறைவுக்குப் பின்னர்தான் அந்த குறிப்பிட்ட நாளில் அம்மா அனைவரையும் அழைத்தது ஏன் என்பது விளங்கிற்று!

என்னை தனக்குப் பிறகு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளைக்குச் செயலாளராக 'நாமினேட்' செய்து எழுதியதோடு, அதற்கு அத் துணை டிரஸ்டிகளையும் சாட்சிகளாக கையொப்ப மிடச் செய்து அந்தக் கடிதத்தினை சீலிட்டு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகி திரு. ஏ. நமசிவாயத்தை ஒரு நாள் தனியே அழைத்து, அந்தக் கடிதத்தினைக் கொடுத்து, அதனைப் பாதுகாப்புடன் வைத்து, தனது மறைவுக்குப் பின்னரே அதை பலர் முன்னிலையில் திறக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்.

அப்படி டிரஸ்டிகள் அக்கடிதத்தில் சாட்சி கையெழுத்து இட்டபோது டாக்டர் செந்தில்நாதன் அவர்கள், அருகில் வந்து அம்மாவிடம் "உங்கள் டிரஸ்டிகளை எனக்கு அறிமுகம் செய்யவில்லையே அம்மா" என்று கேட்டவுடன், ஒவ்வொருவரையும் தனித்தனியே பெயர், ஊர் எல்லாம் சொல்லி அம்மா அறிமுகப்படுத்தினார்.

நமது தலைவர் பொத்தனூர் க. சண்முகம் (வரும் ஜூலையில் 100ஆவது ஆண்டு பிறக்கிறது அவருக்கு) அவர்களிடம் பிறகு டாக்டர் எஸ். செந்தில் நாதன் அவர்கள் "அந்த அம்மா நல்ல சுயநினை வுடனேதான்  தான் எழுதிய கடிதத்தில் கையொப்ப மிட்டார். சாட்சிகள் அறிய வேண்டும் என்பதற்காகவே  நான் அவரிடம் கேள்வி கேட்டு அறிமுகப்படுத்தச் சொன்னேன்" என்று கூறியது கேட்டு வியந்தார். அப்படி எதையும் அய்யா மாதிரியே ஆழ்ந்து சிந்தித்து முறையான ஆலோசனைகளைப் பெற்று தீர்க்கமாகச் செய்பவர் அம்மா.

நான் சுற்றுப் பயணத்தில் இருந்தேன். அம்மா பெரிய மருத்துவமனையில் திடீர் என்று சேர்க்கப்பட்ட செய்தி கடலூர் கூட்டத்திலிருந்த எனக்குக் கிடைத்தது. உடனே தொலைபேசி மூலம் வருகிறேன் என்றேன். "இல்லை, இல்லை கூட்டத்தை முடித்து விட்டே மறுநாள் காலை வா!" என்று பதில் அளித்தார் ஒரு செவிலியர் மூலம்.

அன்று ஒரு முக்கிய பிரமுகரை  மருத்துவமனைக்கு அழைத்து வர, திடலில் பணியாற்றிய ஒரு நண்பரிடம் அம்மா கேட்டுக் கொண்டார்.

அந்தப் பிரமுகர் ஒரு பெரிய அதிகாரி. அம்மா விடம் உடனே வந்தார்; அம்மாவிடம் பேச மருத்துவ மனை அறைக்கு அவர் வந்து அமர்ந்தவுடன், அழைத்து வந்த திடல் நண்பர் வெளியே வராமல் பக்கத்தில் நின்றவுடன் அம்மா அவர் பெயரை விளித்து "சற்று வெளியே இருங்கள்" என்று கூறி பிறகு சுமார் 20 நிமிடம் வந்த பிரமுகரிடம் உரையாடி அனுப்பிவைத்து விட்டார். அவரை அழைத்து வர அம்மா ஆணையிட்டு,  அழைத்து வந்தவர் அந்தப் பிரமுகர் வந்த பிறகு, இங்கிதம் புரிந்து வெளியே வந்திருக்க வேண்டும். வராததால் அவரை வெளியே இருங்கள் என்று சொல்ல வேண்டி வந்தது. இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், 'என்னையே வெளியே நிறுத்தி விட்டாரே' என்று அவர்  அங்கலாய்த்தார். அதன் பிறகு அவரது போக்கு மாறியது. அம்மா அதைப் புரிந்து கொண்டார். எவரையும் எடை போடுவது அவருக்கு அத்துப்படி. தாட்சண்யம் பாராது கண்டிப்புடன் நடப்பதும் அவரது இயல்பான  தனித் தன்மையாகும்.

(தொடரும்)


No comments:

Post a Comment