மக்கள் முன்னேற்றத்தை மதம் தடை செய்தால், எந்த மதமாயினும் ஒழித்துத்தான் ஆகவேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 5, 2022

மக்கள் முன்னேற்றத்தை மதம் தடை செய்தால், எந்த மதமாயினும் ஒழித்துத்தான் ஆகவேண்டும்!

ஒவ்வொருவரும் நமக்கென்ன, நம் ஜீவனத்துக்கு வழியைப் பார்ப்போமென்று இழிவுக்கு இடங்கொடுத்துக் கொண்டு போகும்வரை சமூகம் ஒரு காலத்திலும் முன்னேறாது. ஜாதிக் கொடுமைகள் ஒரு போதும் ஒழிய மார்க்க மேற்படாது என்பது திண்ணம். கேளுங்கள் (கைதட்டல்), ஜாதிக் கொடுமைகளை ஒழித்துச் சமத்துவத்தை நிலைநாட்டும் பொருட்டுத்தான் தென்னாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றியது (கைதட்டல்)

சுயமரியாதை இயக்கத்தைக் குறித்து நமது விரோதிகள் என்ன சொல்லுகின்றார்கள் என்பதைக் குறித்து நமது நண்பர் பாலகுருசிவம் சிறிது நேரத்திற்கு முன் தெளிவாய் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

அவர் இவ்வியக்கத்தினால் மக்களுக்கு யோசித்துப் பார்க்கும் தன்மை வந்திருக்கின்றதெனக் கூறியது முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. சுயமரியாதைக்கார்கள் கோயில், குளம், சாமி இல்லை என்கிறார்கள். இவர்கள் நாஸ்திகர்கள், இவர்களால் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்ற கட்டுப்பாடு போய்விடும் போலிருக்கின்றது.

சுவாமி போய்விடும் போலிருக்கின்றது என்று பலவாறு நம் விரோதிகள் அலறிக் கூச்சலிடுகின்றார்கள்.

பலர் கிளம்பி கூலிகளுக்கும், காலிகளுக்கும் பணம் கொடுத்தும் நமக்கு விரோதமாய் விஷமப்பிரசாரம் செய்வதற்காகத் தூண்டிவிட்டுமிருக்கிறார்கள். அவர்கள் சூழ்ச்சிகளையும், கூலிப்பிரச்சார மோசத்தையும் உணர்ந்து அவர்களது பிதற்றல்களை நம்பி, நமது பாமர மக்கள் ஏமாறி,  அவர்கள் சொல்வது போல சிலர் சுயமரியாதை இயக்கம் கடவுள் இல்லை என்னும் இயக்கமெனவும் சொல்லுகிறார்கள். சுயமரியாதை இயக்கம் நாஸ்திகர்கள் இயக்கம் என்று சொல்வது அற்பத்தனமான செய்கை என்பதை அறிவுறுத்துகின்றேன். உண்மையில் ஆஸ்திகம், நாஸ்திகம் என்பவற்றைப்பற்றி நாம் கவலைப்படுவதில்லை. உலகத்தில் இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன் என்று பந்தயம் போட்டுக் கொண்டு ஜாதி வித்தியாசக் கொடுமைகளை நிலைநாட்டி, சமூக முன்னேற்றத்திற்கும் விடுதலைக்கும் தடையாயிருக்கும் எந்தச் சாஸ்திர - புராணங்களையும் சுட்டெரிக்கச் சுயமரியாதைக்காரர்களாகிய நாங்கள் தயா£யிருக்கின்றோம். (கைதட்டல்)

கடவுள் உன்னைப் பறையனாய்ப் படைத்தார், சுவாமி என்னைச் சூத்திரனாய்ப் படைத்தார், அவனைப் பார்ப்பானாய்ப் படைத்தார் என்று கடவுள் மேல் பழிபோட்டுக் கொடுமைகள் நிலைக்கச் செய்வதைவிட்டுக் கொடுத்துக்கொண்டு, அக்கொடுமைகளுக்கு ஆதரவாயும், அக்கிரமங்களுக்கு அனுகூலமுமாயிருக்கும் கடவுளைத்தான் ஒழிக்க வேண்டுமென்கின்றோம். சும்மா கிடக்கும் கடவுளையும், மதத்தையும், சாஸ்திரத்தையும் நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை (பலத்த கைதட்டல்)

கொடுமை செய்யும் மதத்தையும், சாஸ்திரத்தையும், கடவுளையும் ஒழிப்பதற்குப் பயந்தோமானால் நாம் நிரந்தரமாகப் பறையனாகவும், சூத்திரனாகவும், தாழ்ந்தவனாகவும் பல கொடுமைகளுக்கு உட்பட்டுக் கேவலமாகத்தானிருக்க வேண்டும். நம்மை அத்தகைய கேவலமான நிலைமைக்குக் கொண்டுவந்த கடவுளும் மதமும் போக வேண்டியதுதான். இதை ஒழித்துப் பேசுவதில் பயனில்லை (கை தட்டல்)

3.8.1929 அன்று சென்னை ராயபுரத்தில் நடந்த கண்ணப்பர் வாசக சாலைத்திறப்பு விழாவின் போது தந்தை பெரியார் அவர்கள் பேசியது (‘திராவிடன்’: 5,8,1929)

பெரியார் களஞ்சியம் - தொகுதி: 27, : 52

தகவல்:- .பழநிசாமி

தெ.புதுப்பட்டி .

No comments:

Post a Comment