நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தல் வெற்றிகள் தொடரட்டும்! சூரியன் உதிக்கட்டும் - காரிருள் மறையட்டும்! வெற்றி விழாவிலும் பங்கேற்று மகிழ்வேன்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 18, 2022

நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தல் வெற்றிகள் தொடரட்டும்! சூரியன் உதிக்கட்டும் - காரிருள் மறையட்டும்! வெற்றி விழாவிலும் பங்கேற்று மகிழ்வேன்!

தஞ்சை மாநகராட்சியில் 28 பெண்கள்; 23 ஆண்கள் வேட்பாளர்களாக தி.மு.. கூட்டணியில் போட்டி

தந்தை பெரியார், திராவிடர் இயக்கம் வலியுறுத்திய கொள்கைக்கான வெற்றி அடையாளம் இது!

விவசாயத்துக்காக தனி பட்ஜெட் போட்டது தி.மு..; சொன்னதைச் செய்ததும் - செய்வதைச் சொல்வதும் தி.மு..வே!

தமிழர் தலைவர் ஆசிரியர் வெற்றி முரசம்!

தஞ்சை, பிப்.18   தஞ்சையில் போட்டியிடும் 51 வேட் பாளர்களுள் 28 பேர் பெண்கள் - பெரியார் காண விரும்பிய இலட்சியம் நிறைவேறுகிறது. சொன்னதைச் செய்ததும், செய்வதைச் சொல்வதும் தி.மு..வே. தி.மு..வையும், கூட்டணி கட்சிகளையும் வெற்றி பெறச் செய்வீர்! சூரியன் உதிக்கட்டும், காரிருள் மறை யட்டும், வெற்றி விழாக் கூட்டத்திலும் உறுதியாகப் பங்கேற்பன் என்றார்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை

தஞ்சாவூரில்  தந்தை பெரியார், அறிஞர் அண்ணா சிலைகளுக்கு அருகில் நேற்று (17.2.2022) மாலை  திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பரப்பரையாற்றினார்.

அவரது தேர்தல் பரப்புரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடும், மிகுந்த மகிழ்ச்சியோடும் நடைபெறக்கூடிய தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிக்கு வருகை தந்து, சிறப்பான வகையில் எனக்கு முன் ஒரு நீண்ட உரையாற்றிய கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களே, பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களே, மாநில அமைப்பாளர் குணசேகரன் அவர்களே, மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் அவர்களே, மண்டலக் கழகத் தலைவர் அய்யனார் அவர்களே, அருணகிரி அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாள ரும், சீரிய கொள்கை வீரருமான அன்பிற்குரிய அருமைச் சகோதரர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.., அவர்களே, மேனாள் அமைச்சரும், சிறந்த இலக்கிய வாதியுமான அருமைத் தோழர் அய்யா எஸ்.என்.எம்.உபயதுல்லா அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறப்புமிக்க, ஆற்றல்மிக்க  மாநகர செய லாளராக இருந்து, வரலாற்றில் பல புதிய ஏடுகளை இணைத்துக் கொண்டிருக்கக்கூடிய அருமைச் சகோதரர் டி.கே.ஜி.நீலமேகம் அவர்களே,

காங்கிரஸ் கட்சியின் மாநகர மாவட்டத் தலை வரும், முற்போக்குச் சிந்தனையாருமான  அருமை நண்பர் பி.ஜி.ராஜேந்திரன் அவர்களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலளர் தோழர் வி.தமிழ்ச்செல்வம் அவர்களே,

இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப் பினர் தோழர் கோ.நீலமேகம் அவர்களே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் முத்து.உத்திராபதி  அவர்களே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சொக்கா.ரவி அவர்களே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்சின் மாவட்ட செயலாளர் ஜெயினுல்லாபுதீன் அவர்களே,

எனது அருமைச் சகோதரர் தமிழ்ச் சுற்றுப் பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி, இந்த தள்ளாத வயதிலே கூட மிகப்பெரிய தமிழ்ப் பணியைத் தொடர்ந்து 30 ஆண்டுகளாக ஆற்றி வரக்கூடிய அருமை நண்பர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களே, இயக்கத்தினுடைய முக்கிய பொறுப்பாளர்களே,

வேட்பாளர்களாக இங்கு நின்று கொண்டிருக்கக் கூடிய நம்முடைய அருமை சகோதரிகளே, சகோ தரர்களே, அவர்களை ஆதரித்து, வெற்றிக்காக இங்கு உழைக்க வந்திருக்கக்கூடிய அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே, அனைத்து இயக்கங்களைச் சார்ந்த பெருமக்களே, உங்கள் அனைவருக்கும் பணிவன் பான வணக்கம்.

அருமைத் தோழர் எஸ்.என்.உபயதுல்லா அவர் கள், நான் இங்கே தேர்தல் பரப்புரைக்காக வருகிறேன் என்று சொன்னவுடனே, என்னோடு சண்டை போட்டார்.

உரிமையோடும், உறவோடும்...

நீங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டியவர் எங் களுக்கு -  நீங்கள் இப்படி கூட்டத்தில் பங்கேற்று, உங்கள் உடல் பாதிக்கப்பட்டால் என்னாவது? இன் றைக்கு சமூகநீதிக்காக நீங்கள் மிகப்பெரிய அளவிற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் இன்றைய ஆட்சி - அது இந்தியா முழுவதும் எதிரொலிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று உரிமையோடும், உறவோடும் என்னிடம் கேட்டார்.

கழகத் தோழர்கள் கூட வேண்டாம் என்றுதான் சொன்னார்கள்;  ஆனால், அவரிடத்திலே நான் சொன்னேன், இல்லை, இல்லை தஞ்சையில் நான் பங்கேற்கும் தேர்தல் பிரச்சார கடைசி கூட்டம் நிச்சயமாக நடைபெறும் என்றேன்.

பெரியார் சிலைக்குப் பக்கத்தில், இதோ  என்னு டைய அருமை வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு இருக்கக்கூடிய  கூட்டணித் தோழர்கள் - இயக்கத் தோழர்கள் - தாய்மார்கள் - சகோதரிகளைப் பார்க்கும்பொழுது ஒரு புதிய உற்சாகத்தைப் பெறுகிறேன். இதைவிட பெரிய மாமருந்து எங்களுக்கு வேறு கிடையாது.

51 வேட்பாளர்களில்

28 பெண் வேட்பாளர்கள்!

இங்கே ஓட்டுக் கேட்டு வருகின்ற பி.ஜே.பி., கட்சியைச் சார்ந்தவர்கள், மோடி ஆட்சியில், மூன்றில் ஒரு பங்குகூட பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றாத நிலையில், 51 வேட்பாளர்கள் என்று சொன்னால், அதில் 28 பெண் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறார் தளபதி மு..ஸ்டாலின் அவர்கள்.

இதற்குப் பெயர்தான் திராவிடம்.

இதற்குப் பெயர்தான் திராவிட ஆட்சி.

இதற்குப் பெயர்தான் பெரியாருடைய சமூகநீதி

பாலியல் நீதி கலந்த சமூகநீதி.

எனவேதான், தஞ்சைக்கு வந்து, இவர்கள் எல்லாம் இங்கே இருக்கும் இந்தக் காட்சியைப் பார்க்கின்ற பொழுது, தேர்தல் முடிந்து முடிவுகள் வந்த பிறகு, இவர்கள் அத்தனைப் பேரும் மாநகராட்சிக்குள் இருப் பார்கள் என்கின்ற அந்த நிலையை நீங்கள் உருவாக்கவேண்டும்.

இங்கே மட்டுமல்ல தோழர்களே, தமிழ்நாடு முழுக்க நடைபெறவிருக்கக்கூடிய தேர்தலில், மிகப் பெரிய வெற்றியைக் கொடுப்பதற்கு தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் ஆயத்தமாகி இருக்கிறார்கள்.

சமூகநீதிக்கான சரித்திர நாயகர்அவருடைய ஆட்சியினுடைய பிரதிபலிப்பு

22 ஆம் தேதி தேர்தல் முடிவு வரும்பொழுது, தமிழ்நாட்டிலே மீண்டும் உள்ளாட்சியில் திராவிடர் ஆட்சிதான் - தளபதி மு..ஸ்டாலின் அவர்கள்  - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் - அவருடைய ஆட்சி யினுடைய பிரதிபலிப்பு நல்லாட்சியாக அமைந்தது மட்டுமல்ல - உள்ளாட்சியிலும் அதுதான் வரப் போகிறது என்பதற்கு அடையாளமே இந்தத் தேர்த லில் நாம் பெறப் போகின்ற வெற்றி!

இந்தத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று வந்திருக்கிறேன்.  எனக்குக் கரோனா தொற்று இரண்டு முறை வந்ததாகச் சொன் னார்கள் - இன்னும் எத்தனை முறை வந்தாலும்கூட, இந்த  உயிர் முக்கியமல்ல - லட்சியம் முக்கியம் - பெரியாருடைய கொள்கை முக்கியம். திராவிடம் வெல்லும் என்று சொன்னோம் - நடத்திக் காட்டினோம்.

நாளைய வரலாறு இதைச் சொல்லும் என்று சொன் னோம் - சொன்னோம் - அதை நடத்திக் காட்டியிருக் கிறோம்.

நாடாளுமன்ற உறுப்பினராக இன்று  இருக்கின்ற நம்முடைய பழனி.மாணிக்கம் அவர்கள், இதே இடத்தில்தான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் கூடிய அருமைச் சகோதரர் டி.கே.ஜி.நீலமேகம் அவர்கள், அதேபோலத்தான் இங்கே நின்று கொண்டிருக்கின்ற நீங்களும் நாளைக்கு மாநகராட்சி உறுப்பினர்களுக்கு மேலாகவும் பெரிய பெரிய பொறுப்புகளில் போகக் கூடியவர்களாக இருப்பீர்கள்.

என்னுடைய விருப்பம் அல்ல;

வாக்காளர்களுடைய தீர்ப்பு

இந்த விருப்பம் என்னுடைய விருப்பம் அல்ல. வாக்காளர்களுடைய தீர்ப்பு. ஏனென்றால், அவர் களுக்குத் தெரியும், யாரை, எங்கே அமர்த்தவேண்டும் என்று.

முன்புகூட சில பேர் கணக்குப் போட்டார்கள்; தமிழ்நாடு வெற்றிடமாக இருக்கிறது என்று. கலைஞர் இல்லை, காக்கா தூக்கிக் கொண்டு போவதுபோல, வெற்றியை நாங்கள் பெற்றுவிடுவோம் என்றெல்லாம் கணக்குப் போட்டார்கள்.

 தமிழ்நாடு ஒருபோதும் வெற்றிடமாக இருக்காது என்று தாய்க் கழகமான திராவிடர் கழகம் சொல்லிற்று!

 அப்போது நாங்கள் தெளிவாக சொன்னோம்; தாய்க்கழகம் சொல்லிற்று - தமிழ்நாடு ஒரு போதும் வெற்றிடமாக இருக்காது என்று.

நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்; காரணம், ஸ்டாலினுடைய ஆற்றல் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்; இந்தியா விற்கே கற்றிடமாக தமிழ்நாடு இருக்கிறது என்பதுதான்  இன்றைய வரலாறு. வெற்றிடமல்ல - கற்றிடம்.

இங்கே நான் வருவதற்கு என்ன அடிப்படைக் காரணம்  என்று சொன்னால் நண்பர்களே, திராவிடர் கழகம் - தாய்க்கழகம் - இந்த வீடு தாய்வீடு - தஞ்சை மண் எங்களுடைய தாய் மண் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, உணர்ச்சியோடு இருக்கிறபொழுது, இங்கே நாம் உரிமையோடும், உறவோடும்  அதில் பங்களிக்கவேண்டும் என்பதற்காகத்தான் இங்கே வந்திருக்கின்றோம்.

அதேபோல, முடிவுகள் தெளிவாக இருக்கும்; அதில் யாருக்கும் அய்யம் வரவேண்டிய அவசியமே கிடையாது.

சொன்னதையும் செய்திருக்கிறார்கள்; சொல்லாததையும் செய்திருக்கிறார்கள்!

இவர்களுடைய சாதனையைச் சொல்லி வாக்குக் கேட்கிறார்கள். இதுவரையில் சொன்னதைச் செய் வோம் - செய்வதைச் சொல்வோம் என்று  சொன்னது மட்டுமல்லாமல் - சொல்வதை - அண்ணா காலத்தி லிருந்து, கலைஞர் காலத்திலிருந்து சொல்லாததையும் செய்திருக்கிறார்கள். இதுதான் திராவிடம் - இதுதான் அதனுடைய அடிப்படை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

தெளிவாக சொல்லவேண்டும் என்றால், செய்த சாதனைகளைச் சொல்லித்தான் வாக்குக் கேட் கிறார்கள்.

என்னென்ன சாதனை?

தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தது சாதாரண மானதல்ல.

2 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர் அனைவருக்கும் 4 ஆயிரம் ரூபாய் என்றால், சாதாரணமா?

ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு.

ஆவின்பால் துறை பொறுப்பில் இருந்தவர்கள் ஊழல் செய்து இன்றைக்கு நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டு இருக்கிறார்கள்.

மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம்.

மக்களின் மனுக்கள் மீது தீர்வுகாண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் எத்தனை ஆயிரக்கணக்கான மனுக்கள் வந்தாலும், அதற்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது.

தனியார் மருத்துவமனைகளில்கூட கரோனா சிகிச்சைக்கான செலவுகளை அரசாங்கம் ஏற்றது.

விவசாயத்திற்கு தனியே பட்ஜெட் போட்டதுண்டா? அந்த வரலாற்றை ஏற்படுத்தியவர், நம்முடைய முதலமைச்சர்!

இது விவசாய பூமி -  காவிரி டெல்டா பகுதி - இந்தப் பகுதியில் - இதுவரை தமிழ்நாட்டு வரலாற்றில், ஏன் பல மாநிலங்கள் வரலாற் றில்கூட, ஒன்றிய அரசின் வரலாற்றில்கூட, எங்கேயாவது விவசாயத்திற்கு தனியே பட்ஜெட் போட்டதுண்டா? அந்த வரலாற்றை ஏற்படுத் தியவர், நம்முடைய முதலமைச்சர் மு..ஸ்டா லின் அவர்கள்,  வேளாண்மைக்கென்று ஒரு தனி பட்ஜெட் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒப்பற்ற சாதனையாகும்.

அதேநேரத்தில், விவசாயிகளை ஒன்றிய அரசு எப்படி நடத்தியது?

விவசாயிகளுக்கு விரோதமாக மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது ஒன்றிய அரசு. ஓராண்டிற்கு மேலாக பஞ்சாப் விவசாயிகள் சாத்வீக முறையில், அறப்போராட் டம் நடத்தியதினுடைய விளைவு - இன்றைக்கு அய்ந்து மாநில தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே - அந்தத் தேர்தலில்கூட வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தவர் களை தலை எடுக்கவிடக் கூடாது என்று முடிவெடுத்து அம்மக்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2 ஆயிரத்து 756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது.

கஜானவை காலியாக வைத்துவிட்டுப் போனார்கள் கடந்த ஆட்சியினர் - கடனை ஏராளமாக வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். தாராளமாகத் திட்டம் போடுவதற்கு வசதியே இல்லை.

நகைக்கடன்களில்கூட மிகப்பெரிய அளவிற்கு ஊழல் செய்திருக்கிறார்கள் முந்தைய ஆட்சியினர்!

அப்படி இருந்தும்கூட, அவருடைய சாமர்த்தியத் தினால், ஆற்றல் வாய்ந்த நிதியமைச்சர் மற்றும் மற்றவர்களால், அருமையான ஓர் ஆட்சியைத் திறம்பட நடத்திக் கொண்டிருப்பதினுடைய விளைவு தான், தொடக்க  வேளாண்மைக் கூட்டுறவு சங்கங் களின்மூலமாக நகைக்கடன் தள்ளுபடி.

அந்த நகைக்கடன்களில்கூட மிகப்பெரிய அள விற்கு ஊழல் செய்திருக்கிறார்கள்.

நகைக்கடன் தள்ளுபடியை இன்றைய அரசினால் விரைவாக செய்ய முடியவில்லை என்று சொன்னால், அருமைத் தோழர்களே நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் - அதிலும் ஏமாற்று வேலையை செய்தி ருக்கிறார்கள். அப்பொழுது இருந்த ஆளுங்கட்சித் தோழர்கள், அவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் நகைக்கடனில் மிகப்பெரிய தவறுகளைச் செய்திருக் கிறார்கள். அன்றாடம் தோண்டத் தோண்ட வெளியில் வரக்கூடியதாக இருக்கிறது.

எனவேதான், அந்த சிக்கலைத் தீர்த்து, உடனடியாக செய்யவேண்டிய நிலை இல்லாமல் இருந்தாலும், தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள்.

நெருக்கடி நிலையில்கூட பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது.

அய்ந்து மாநில தேர்தல்களின் முடிவிற்குப் பின்னர் பெட்ரோல்- டீசல் விலையை ஏற்றுவார்கள்!

உங்களுக்கெல்லாம் ஓர் அதிசயமான செய்தி - கடந்த 100 நாள்களுக்கும் மேலாக  அய்ந்து மாநில தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பிறகு பெட்ரோல், டீசல் விலை ஏறாமல் இருக்கிறதே என்ற செய்திதான் அது.

ஆம், மார்ச் 10 ஆம் தேதிக்குப் பிறகு, அய்ந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவார்கள்.  விலையை ஏன் உயர்த்தவில்லை என்றால், தேர்தலுக்காகத்தான்.

தமிழ்நாட்டில், ஊரகப் பகுதிகளில், வளர்ச்சிப் பணிக்கு 1500 கோடி ரூபாய் ஒதுக்கீடு - அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்துவது போன்ற திட்டங்களை ஏராளமாக வைத்திருக்கிறார்கள்.

இதுவரையில் என்னென்ன சொன்னார்களோ, அத்தனையும் வரிசையாக செய்துகொண்டிருக்கிறார் நம்முடைய முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள்.

27 அமாவாசைக்குச் சொந்தக்காரர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடியவர்!

நம்முடைய திருவாளர் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், 27 அமாவாசைக்குச் சொந்தக்காரராக இருக்கக்கூடியவர் - தமிழ்நாட்டு முன்னாள் முதல மைச்சராக இருந்தவர்கள் வரிசையில் - இந்த அள விற்கு அனாவசியமாக, மோசமாகப் பேசக்கூடியவர் வேறு யாரும் கிடையாது - கண்டதும் இல்லை.

அதிலும் குறிப்பாக, நான் அதிகமாக வெட்கப் படுவதற்குக் காரணம், அவர்கள் கட்சியின் பெயரில் அண்ணா இருக்கிறார்; திராவிடம் இருக்கிறது. அதுதான் வேதனையாக இருக்கிறது.

அவர் என்ன சொல்கிறார், வாக்குறுதிகளைக் கொடுத்தாரே, ஸ்டாலின், அதனை செயல்படுத்தி னாரா? என்று கேட்கிறார்.

நீங்கள் காண முயன்று, உங்கள் கண்களை விழித் துப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். ஏழை, எளிய வர்கள் அதனைப் புரிந்துகொண்டிருக்கிறார்களே, அவர்களுக்கு அது தெளிவாகத் தெரிகிறது.

இன்றைக்கு மகிழ்ச்சி இருக்கிறது; குடிசைகளில் மகிழ்ச்சி இருக்கிறது; விவசாயிகளிடம் மகிழ்ச்சி இருக்கிறது; ஏழை, எளியவர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆயிரம் ரூபாய் பெண்களுக்குத் தருவேன் என்று சொன்னாரே, அதனை செய்தாரா? என்று கேட்கிறார், எதிர்க்கட்சித் தலைவர்.

அதற்கும் பதிலளித்திருக்கிறார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்; தேர்தல் முடியட்டும் என்று.

அதற்கும் உங்களுக்குத் தெளிவான பதில் கிடைக்கும். வருகிற பட்ஜெட் இருக்கிறதே - தமிழ்நாடு பட்ஜெட் - மிகப்பெரிய அளவிற்கு வாய்ப்புகளை உருவாக்கக் கூடிய அளவில் இருக்கும்.

ஏனென்றால், ஒரு பக்கம் கடன் -  இன்னொரு பக்கம் ஊழல் - இதை அவர்கள் தோண்டித் தோண்டி எடுத்துக் கொண்டிருக்கக்கூடிய சூழல். இந்த சூழலில்தான், ஒரு சிறந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பது என்பது சாதாரணமானதல்ல.

தாய்மார்களுக்குத் தெரியும், சமையலறையில் சமையலுக்குத் தேவையான பொருள்கள்  இருந்தால், நீங்கள் எளிதில் சமையல் செய்துவிடுவீர்கள். ஆனால், எதை எடுத்தாலும், இந்தப் பொருள் இல்லை, அந்தப் பொருள் இல்லை, அடுப்பு எரியவில்லை என்றால்,  எப்படி சமைக்க முடியும்?

சமைத்து விட்டாயா? என்று அவசர அவசரமாகக் கேட்பவர்களை எப்படிப் பார்ப்பார்கள்?

அப்படிப்பட்ட சூழல்தான் இன்று. அதிலும் சாமர்த்தியமாக தன்னுடைய பணியை, தொண்டை மிகச் சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார் இன்றைய முதலமைச்சர்.

பணத்தை வைத்துக்கொண்டு, 

தமிழ்நாட்டு வாக்காளர்களை

வாங்கலாம் என்று நினைக்கிறார்கள்

இன்னொரு  பக்கத்தில் பா... - தமிழ்

நாட்டில்  அவர்களுக்கு வாய்ப்புகள் கிடையாது - பார்க்கத்தான் போகிறோம்.

ஆனால், வடக்கே இருந்து ஏராளமான பணம்  இங்கே வந்துவிளையாடுகிறது. அதன் காரணமாகத்தான், பணத்தை வைத்துக் கொண்டு,  தமிழ்நாட்டு வாக்காளர்களை வாங்க லாம் என்று நினைக்கிறார்கள். அவர்களுடைய கனவு ஒருபோதும் பலிக்காது.

காவி மண்ணாக தமிழ்நாட்டு மண்ணை மாற் றுவதற்கு எங்கள் வாக்காளர்கள் ஒருபோதும் இடங்கொடுக்க மாட்டார்கள்.

அண்ணாமலைகளின் வரலாறுஇந்த அண்ணாமலைக்குத் தெரியாது

இதற்கு முன் உங்களுடைய முகவரியே எப்படி என்று சொன்னால், மிகப்பெரிய அளவில் மிஸ்டு கால் கொடுப்பதுதான். மிஸ்டு கால் கொடுத்தே நாங்கள் வளருவோம் என்று சொன்னீர்கள்; சொந்தக்காலிலே இதுவரை நீங்கள் நிற்கவில்லை. இப்பொழுதுதான் நாங்கள் சொந்தக்காலில் நிற்கிறோம் என்று  பா... வினுடைய தலைவர் அண்ணாமலை ஆரோகணம் செய்கிறார். அவருக்குத் தெளிவாகச் சொல்கிறோம், ஆயிரம் அண்ணாமலையைப் பார்த்தவர்கள் - பெரிய அண்ணாமலையிலிருந்து, சிறிய அண்ணா மலையிலிருந்து எல்லா அண்ணாமலைகளும் தி.மு..வின் மேடைக்கே வரவேண்டிய அளவிற்கு இருந்தது பழைய வரலாறு. அந்த அண்ணாமலைகளின் வரலாறு, இந்த அண்ணாமலைக்குத் தெரியாது.

அவர் போலீஸ் அதிகாரியாக இருந்து, திடீரென்று இங்கே வந்து ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், ஒன்றை உங்களிடம் கேட்கிறோம் - இதோ எங்கள் தோழர்கள் இருக் கிறார்கள் -  தளபதி அவர்கள் இத்தனைப் பேரை நிறுத் தியிருக்கிறார்கள் என்று சொன்னால் நண்பர்களே,

நாடாளுமன்றத் தேர்தலில் அமைந்த கூட்டணிஅதே கூட்டணி இன்றும் தொடர்கிறது தி.மு.. கூட்டணியில்!

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.. எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்தார்களோ,

அதற்கடுத்து, மிகப்பெரிய அளவிற்கு சட்டப் பேரவை தேர்தலில் அதே கட்சிகளுடன் கூட்டணி.

அதற்குப் பிறகு, ஊராட்சி மன்றத் தேர்தல் - உச்சநீதிமன்றம் தலையில் குட்டி, காதைத் திருகிய தினால், வேறு வழியில்லாமல் இப்பொழுது தேர்தல்.

இன்றைக்கு மாநகராட்சி, நகராட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தொடக்கத்தில் எந்தெந்த கட்சிகளோடு தி.மு.. கூட்டணி வைத்திருந்தார்களோ, அத்தனைக் கட்சி களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றி இருக் கிறார்கள்.

இதுதானே ஒரு தலைமை, ஓர் ஆளுமையினுடைய சிறப்பு. அனைவருக்கும் அனைத்தும் என்பதுதானே முக்கியம்.

.தி.மு..வை எடுத்துக்கொண்டால்,  2019 இல் எத்தனைக் கட்சிகளோடு கூட்டணி வைத்திருந் தார்கள்?

அடுத்த தேர்தலில் எத்தனைக் கட்சிகள் கூட்டணி யில் இருந்தன?

இன்றைக்கு எத்தனைக் கட்சிகள் அவர்களுடைய கூட்டணியில் இருக்கின்றன?

இந்தத் தேர்தலில் அவர்கள் தனித்தனி கடையை விரித்திருக்கிறார்கள்.

இதற்குப் பதில் சொல்ல வேண்டாமா?

இந்தியாவிற்கே சமூகநீதிப் பாடம்

சமூகநீதியை முன்னெடுத்துச் செல்வோம் என்று இந்தியாவிற்கே சமூகநீதிப் பாடத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகத் தினுடைய ஆட்சித் தலைமை.

இந்த அளவிற்கு வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறார் என்றால், அவரைப் பார்த்து, என்ன செய்துவிட்டார்? தினமும் ஏதேதோ பேசுகிறார், நாடகம் போடுகிறார், என்றெல்லாம் பேசுகிறீர்களே,

இந்தியாவிலுள்ள பல மாநில முதலமைச்சர்கள், தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள்; தமிழ்நாட்டு முதல மைச்சரைப் பார்த்து, எங்களுக்கு நீங்கள் மாடலாக இருங்கள்; எங்களுக்கு வழிகாட்டியாக இருங்கள் என்று சொல்கிறார்கள் என்றால், இதைவிடப் பெருமை  வேறு என்ன இந்த இயக்கத்திற்கு? இந்த நாட்டிற்கு இதைவிடப் பெருமை வேறு என்ன இருக்க முடியும்?

ஆகவேதான் இன்றைக்கு திராவிடர் கொள்கை ரீதியாக இருக்கக்கூடிய உணர்வு இங்கே தெளிவாக இருக்கிறது. நம்முடைய முதலமைச்சர் அவர்கள், சட்டப்பேரவையில் என்ன சொன்னார்?

தேர்தல் வாக்குறுதிகள் என்றால்,  அய்ந்து ஆண்டுகளுக்குத்தான் அந்தத் தேர்தல் வாக்குறுதிகள் - அய்ந்தாண்டுகளில் எப்பொழுது வேண்டுமானாலும் நிறைவேற்றுவோம் என்று சொல்வது அது உங் களுக்குப் பொருந்தாதா? நீங்கள் சொன்னதை, நீங்கள் மறந்துவிட்டீர்கள். அதனை நாங்கள் உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.

வாக்குறுதியை நிறைவேற்றினீர்களா? என்று உங்களைப் பார்த்து கேட்கிறோம்,

ஓராண்டிற்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவோம் என்று சொன்னார்களே, செய்தார்களா?

2014 இல் வேலை இல்லாத் திண்டாட்டம் உச்சக் கட்டம் இருந்த நேரத்தில், விலைவாசி ஏற்றம் இருந்த நேரத்திலே, மோடி பிரதமர் வேட்பாளராக நின்ற நேரத்திலே என்ன சொன்னார்?

ஓராண்டிற்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவோம் என்று சொன்னாரே, அதை செய்தாரா?

கடந்த 7 ஆண்டுகால ஒன்றிய ஆட்சியில்,  14 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித் திருக்கவேண்டுமே, அப்படிச் செய்தனரா?

'சப்கா சாத், சப்கா விகாஸ்' என்றெல்லாம் வேக வேகமாக பேசினாரே மோடி -  ஆனால், எங்கே விகாஸ் இருக்கிறது? எங்கே வளர்ச்சி இருக்கிறது? என்று சொல்லவேண்டாமா?

அதைவிட இன்னொரு வேடிக்கையான செய்தி என்னவென்றால், ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் பொத்தென்று விழும் என்று சொன்னாரே, 15 ரூபாய்கூட விழவில்லையே! பைசா விழுந்ததா?

கரோனா காலகட்டத்தில், சிறு குறு தொழிற் சாலைகள் எல்லாம் மூடப்பட்டன; வேலை வாய்ப் புகள் இல்லை. தொழிலாளிகள் புலம்பெயர்ந்தனர். அந்தப் புலம் பெயர்ந்து  சொந்த ஊருக்குப் போகக் கூடிய தொழிலாளர்களைக்கூட ரயிலில் அனுப்பு வதற்கு ஒன்றிய அரசு மறுத்துவிட்டது.

கரோனா தொற்றின்போது கும்பமேளாக்களை நடத்தியது யார்?

காங்கிரஸ் பேரியக்கம், டில்லியில், ரயிலுக் குரிய டிக்கெட்டை நாங்கள் வாங்கிக் கொடுக் கிறோம் என்று சொன்னவுடனே, அதை குறை சொல்லும்விதமாக, அவர்கள் டிக்கெட் வாங்கிக் கொடுத்ததினால்தான் கரோனா பரவியது என்றார்கள்.

டிக்கெட் வாங்கிக் கொடுத்தினால் கரோனா தொற்று பரவியதா? அல்லது நீங்கள் பெரிய பெரிய கோவில் திருவிழக்களை நடத்தினீர்களே, வடநாட்டில் கும்பமேளாக்களை நடத்தினீர்களே - ஆயிரம் ஆயிரம் சாமியார்களை அந்தக் கும்பமேளாக்களில் பங்கேற்கச் செய்தீர்களே - அதனால் கரோனா தொற்று பரவியதே என்று உச்சநீதிமன்றமே அதுகுறித்து கேள்வி எழுப் பியதே!

இந்தக் கேள்விகளைக் கேட்டால், உங்களுக்கு தர்ம சங்கடமாகிவிடும்.

நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பியதைக்கூட மறைத்தது யார்?

நீட் தேர்வு விலக்கு என்னாயிற்று? என்று கேட் கிறார்கள்.

நீட் தேர்வு விலக்கிற்கு, வெறும் மாநில அரசு மட்டுமே தீர்மானமாகப் போட்டு, செய்யக்கூடிய அளவிற்கு வாய்ப்புகள் இருக்குமேயானால்,  இந் நேரம் நீட் தேர்வு ஒழிந்திருக்கும்.

ஆனால், அப்படி செய்வதற்கு வாய்ப்பில்லையே!

நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்களும் தீர்மானம் போட்டுத்தானே அனுப்பினீர்கள். அந்தத் தீர் மானத்தை திருப்பி அனுப்பியதைக்கூட வெளியே சொல்லாமல், நீங்கள் மறைத்தீர்கள். நீதிமன்றத்தின் மூலமாக அந்தச் செய்தி வெளியில் வந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் ரங்க ராஜன் முயற்சியால்தான்  அந்தச் செய்தியே வெளியில் வந்தது.

அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக தமிழ்நாட்டு ஆளுநரைப் பயன்படுத்தினார்கள்

ஆனால், இப்பொழுது முறைப்படி, தெளி வாக, சொன்ன வாக்குறுதியை நிறைவேற்று வதற்காக நம்முடைய முதலமைச்சர் மு..ஸ்டா லின் என்ன செய்தார் என்றால், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி டாக்டர் .கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்து, அந்தக் குழுவில் மருத்துவர்களையெல்லாம் நியமித்து -  அந்தக் குழு மக்கள் கருத்தைக் கேட்டு, ஓர் அறிக்கை கொடுத்தார்கள். அந்த அறிக்கை யின்படி, நீட் தேர்வு தேவையில்லை; தமிழ் நாட்டிற்கு விதிவிலக்குக் கொடுங்கள் என்று அரசமைப்புச் சட்டப்படி ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினார்கள்.

அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக தமிழ்நாட்டு ஆளுநரைப் பயன்படுத்தி அந்த மசோதாவை திருப்பி அனுப்பியது ஒன்றிய அரசு.

அனைத்துக் கட்சி சட்டப்பேரவைக் கூட்டம்அடுத்த சில நாள்களில்

சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்

அப்பொழுதுகூட நம்முடைய முதலமைச்சர் தளபதி மு..ஸ்டாலின் அவர்கள், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் பதற்றப்படவில்லை. அமைதியாக அந்தப் பிரச்சினையை, அரசமைப்புச் சட்டப்படியே சந்திப்போம் என்று சொல்லி, குறுகிய நாளில், அனைத்துக் கட்சி சட்டப்பேரவைக் கூட்டம் - அடுத்த சில நாள்களில் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, மீண்டும் ஒரு மசோதாவை நிறைவேற்றி, ஆளுநருக்கே  அனுப்பிய சக்தியும், தெம்பும் யாருக்கு உண்டென்று சொன்னால், முழுக்க முழுக்க அது எங்கள் தளபதிக்கு உண்டு. திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு.

ஒருபக்கம் நாங்களும் நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்று வேஷம் போடுகிறீர்கள், நீட் தேர்வு விலக் கிற்காக என்ன செய்தீர்கள் என்று கேட்கிறீர்களே, நீங்கள் நீட் தேர்வை ஒப்புக்கொள்ளவில்லை என்றால்,  வந்திருக்குமா? கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எப்படி ஓராண்டு நீட் தேர்விற்கு விலக்குக் கிடைத்தது?

அதற்கு முன்பு கலைஞர் அவர்கள் சட்டம் போட்டு, அந்த சட்டத்தால் நுழைவுத் தேர்வு ஒழிக்கப் பட்டதே!

நீட் தேர்வு எத்தனை பிள்ளைகளுடைய உயிரைப் பலிவாங்கியிருக்கிறது.

தமிழ்நாட்டைப் பின்பற்றுங்கள் என்கிறார் தோரட்!

யு.ஜி.சி. என்று சொல்லக்கூடிய யுனிவர்சிட்டி கிராண்ட் கமிசன் - கல்வித் துறையில் மிகப்பெரிய செல்வந்தராக இருந்தவர் தோரட்.

அவர் சொல்லுகிறார், மற்ற மாநிலங்களைப் பார்த்துச் சொல்கிறார், தமிழ்நாட்டைப் பின் பற்றுங்கள்; தமிழ்நாடு என்ன நிலை எடுக்கிறதோ, அதைப் பின்பற்றுங்கள் என்று.

அந்த அளவிற்குக்  கல்வி அறிஞர்கள்  தமிழ் நாட்டைத்தான் பின்பற்றுகிறார்கள்.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் சொல்லுகிறார்கள், சிறப்பாக ஆட்சியை நடத்துகிறார்; சிறப்பாக செயல்படுகிறார் நம்முடைய முதலமைச்சர் என்று சொல்கிறார்கள்.

சட்டப்பேரவையை முடக்குவார்களாம்!

ஆகவே, உங்களுக்கு அதனை ஒப்புக்கொள்ள மனம் இல்லாவிட்டாலும்கூட, இந்தத் தோல்வியைக் கண்டு மிகப்பெரிய அளவிற்கு ஜன்னி பிடித்தவர்களாக இருக்கிறீர்கள் என்பதற்கு அடையாளம் என்னவென் றால்,

சட்டப்பேரவையை முடக்குவோம் என்று சொல்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.

இன்று காலையில்கூட செய்தியாளர்கள் என்னிடம் கேள்வி கேட்டார்கள்.

சட்டப்பேரவையை 27 அமாவாசைக்குள் முடக்கு வோம் என்று தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் சொல்லியிருக்கிறாரே என்று.

எதிர்க்கட்சித் தலைவருக்கு முடக்குவாதம் வரக்கூடாது, அதுதான் மிகவும் முக்கியம். நாங்கள் தனிப்பட்ட முறையில் சொல்லவில்லை - நீண்ட காலம் அவர் நல்ல உடல்நலத்தோடு இருக்கவேண்டும்.

ஆனால், அவருடைய வாதம் இருக்கிறதே, அந்த முடக்குவாதம் இருக்கிறதே, அது ஒருபோதும் செல்லாது.

ஏனென்றால், அரசமைப்புச் சட்டத்தில், அவர் சொல்வதுபோன்று முடக்குவது போன்றதற்கு வழி கிடையாது.

அரசமைப்புச் சட்டத்தின்படியே

காய் நகர்த்துகிறார் நம்முடைய முதலமைச்சர்!

நீட் தேர்வு விலக்கு மசோதாவை முன்பு திருப்பி அனுப்பிய ஆளுநர் - இப்பொழுது நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட  மசோதாவையும்  திருப்பி அனுப்ப முடியுமா?

காரணம் என்ன?

அரசமைப்புச் சட்டத்தின்படியே காய் நகர்த்து கிறார்; ராஜதந்திரத்திற்குப் பெயர்போன எங்களு டைய தளபதி முதலமைச்சர் அவர்கள்.

அவருக்குத் தெரியும், எதை, எப்படி, எப்போது செய்யவேண்டும் என்பது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஈரோட்டுப் பயிற்சி பெற்றவர். அவரிடத்தில் எங்கள் தளபதிக்குப் பயிற்சி. இன்னுங்கேட்டால், எங்களைப் போன்ற வர்கள் எப்போதுமே மிகப்பெரிய பாதுகாப்பு அரண் போன்று இருக்கின்ற நிலையில்,

சட்டப்பேரவையை முடக்குவோம் என்று சொல் கிறீர்களே, வெட்கமாக இல்லையா? இன்னுங்கேட் டால், நீங்கள் ஒரு விபத்து காரணமாக முதலமைச்சராக வந்தீர்கள். மக்கள் வாக்களித்து நீங்கள் முதலமைச்ச ராகவில்லை.

அவர் சொல்லுகிறார் இப்படி -  திராவிட இயக்கம் என்று பெயர் வைத்துக்கொண்டிருக்கிறீர்களே, ஜன நாயகத்தைப்பற்றி பேசியவர் அண்ணா அவர்கள். அதைப்பற்றிகூட உங்களுக்குக் கவலையில்லை.

சட்டப்பேரவையை முடக்குவோம் என்று சொல்கிறீர்களே, எப்படி முடக்குவீர்கள்?

ஜன்னி பிடித்து உளறுகிறார் எதிர்க்கட்சித் தலைவர்!

தேர்தலில் தோற்றுப் போவோம் என்பதி னால், அவருக்கு ஜன்னிப் பிடித்துவிட்டது. ஜன்னியில் உளறினால் என்ன உளறுகிறோம் என்று அவருக்கே தெரியாது.

அதுபோன்று, முடக்குவோம், முடக்குவோம் என்று சொல்கிறாரே, யாரை முடக்குவீர்கள்? இதுவரையில் இரட்டை இலையைத்தான் முடக்கியிருக்கிறார்கள், பல தடவை. 

இதுவரையில் உதயசூரியனை யாராவது தொட்டுப் பார்த்திருக்கிறார்களா? சூரியன் பக்கம் நெருங்கியிருக்கிறார்களா?

பழைய வரலாற்றை சொல்கிறோம்; உங்க ளுடைய வரலாற்றை சொல்கிறோம். எங்களைப் போன்றவர்கள் இன்னும் உயிரோடு இருக்கி றோம் என்பதை மறந்துவிடாதீர்கள். பழைய வரலாற்றை மக்களுக்கு ஞாபகப்படுத்துவதற் காகவே நாங்கள் இருக்கிறோம்.

இருட்டை அகற்றுவதுதான் சூரியனுடைய வேலை!

27 அமாவாசைக்குப் பிறகு ஸ்டாலின் ஆட்சி இருக்காது என்று ஆரூடம் சொல்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.

அது என்ன 27 அமாவாசை?

அமாவாசையை விட்டுவிட்டு, பவுர்ணமியை யாவது சொல்லியிருக்கவேண்டாமா?

ஏனென்றால், அவர்கள் இருட்டிலேயே வாழக் கூடியவர்கள்.

அந்த இருட்டை ஒழிப்பதுதான் சூரியனுடைய வேலை - இருட்டை அகற்றுவதுதான் சூரியனுடைய வேலை.

இன்னொருவர் இருக்கிறார், துணிவானவர், கனிவானவர் என்று  அவரை பலபட பிரித்திருக் கிறார்கள்.  அவர் என்ன சொல்லுகிறார் என்றால், இரண்டு ஆண்டுகளில் தேர்தல் வரப் போகிறது என்று.

அய்ந்து ஆண்டுகள் ஆளச் சொல்லி மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். இவர்  சொல்வது போன்று இரண்டு ஆண்டுகளில் தேர்தல் வந்தால் என்னாகும்?

மோடியா? லேடியா? என்று கேட்டவர் ஜெயலலிதா!

அம்மா, அம்மா என்று மூச்சுக்கு முன்னூறு முறை நாடகம் ஆடுகிறீர்களே, அந்த அம்மா என்ன சொன்னார்?

மோடியா? லேடியா? என்று கேட்டார். அந்த அம்மாவிற்கு இருந்த சிந்தனைகூட உங்களுக்கு இல்லையே!

இன்றைக்கு மோடியின் காலைப் பிடித்துக்கொண்டு, இரண்டு ஆண்டுகளில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று சொல்லி, ஒரே தேர்தலைக் கொண்டு வர முடியுமா? கொண்டு வந்தால், ஜனநாயகமாக இருக்க முடியுமா? அரசமைப்புச் சட்டத்தில் அதற்கு இடம் உண்டா?

.பி.எஸ்., .பி.எஸ். எல்லா எஸ்சுக்கும் சேர்த்து சொல்கிறோம் - எதற்கெடுத்தாலும் எஸ்தான் அவர் களுக்கு.

அப்படிப்பட்ட அந்த சகோதரர்களுக்குச் சொல் கிறோம், உரிமையோடு அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறோம் -அவர்கள் சொல்வதுபோன்று, அரசமைப்புச் சட்டத்தில் வாய்ப்பே கிடையாது.

தி.மு..விற்கு நட்டம் ஏற்படாது!

மோடி நினைத்ததை முடிப்பார்; நாங்கள் எல்லாம் மோடிக்குக் காவடி  எடுப்போம்; அண்ணாமலை துணையாக இருப்பார். நாங்கள் வெளியில் வேஷம் போடுவோம்; .உள்ளே கூட்டணி வைத்திருப்போம் என்று நீங்கள் இருந்தால், என்னாகும் தெரியுமா?

தி.மு..விற்கு நட்டம் ஏற்படாது தோழர்களே, 27 அமாவாசை ஆனாலும் சரி - அல்லது இரண்டு ஆண்டுகளில் தேர்தல் நடைபெறும் என்று நீங்கள் சொன்னாலும், இழப்பது தி.மு.. அல்ல - இதைவிட கூடுதலான இடங்களைப் பெறும் தி.மு.. - 234 இடங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி பெறும். நீங்கள் காணாமல் போய்விடுவீர்கள்.

இருப்பதை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், அய்ந்தாண்டுகள் நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமரவேண்டும் என்றால், தயவு செய்து உங்களுக்கு முடக்குவாதம், இடக்கு வாதம் போன்றவை - அர்த்தமற்ற பேச்சுகள் இருக்கக்கூடாது.

பா...வினரிடம் சரக்கு இல்லை!

அதேபோன்று பா...வைப் பொறுத்தவரையில் அவர்களிடம் சரக்கு இல்லை.

ஏதாவது ஒரு பள்ளிக்கூடம் கிடைக்காதா? அங்கே ஏதாவது வித்தைகள் செய்ய முடியாதா? என்று தங் களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி, அது நீதிமன்ற மாக இருந்தாலும், அல்லது வேறு மன்றமாக இருந்தாலும், நாங்கள் ஒருகை பார்ப்போம் என்று சொல்கிறார்கள்.

இறையாண்மை என்பது மக்கள்தான்

ஆனால், எல்லா  மன்றங்களும் ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் திராவிட இயக்கத்தவர்கள் நம்புவது முழுக்க முழுக்க மக்கள் மன்றத்தைத்தான். மக்கள் மன்றம்தான் இறுதி யானது.  அரசமைப்புச் சட்டத்தில் இறையாண்மை என்பது யார்? என்று சொன்னால், இறையாண்மை என்பது மக்கள்தான்.

அரசமைப்புச் சட்டத்தினுடைய முகவுரையி லேயே சொல்லப்பட்டு இருக்கிறது. நமக்கு நாமே வழங்கிக் கொண்டது.

எனவே, இந்தப் பூச்சாண்டி, மிரட்டல் எல்லாம் எங்களிடம் வேண்டாம். நீங்கள் நடத்துவது கேலிக் கூத்தாட்டம்.

கடந்த ஆட்சி காலத்தில் போட்ட சாலைகளின் தரத்தைப் பாருங்கள் எப்படி இருக்கிறது என்பதை -  குடிசை மாற்று வாரியத்தில் கட்டிய தரமற்ற புதிய வீடுகளை இப்பொழுது இடித்துக்கொண்டிருக் கிறார்கள்.

எங்கள் வேட்பாளர்கள்எங்கள் கொள்கைத் தங்கங்கள்!

இன்றைய முதலமைச்சர், புதிதாகப் போடப்படு கின்ற சாலைகளை ஆய்வு செய்து, அதனுடைய தரத்தைப் பரிசோதிக்கிறார்.

இங்கே நிற்கிறார்களே, எங்கள் வேட்பாளர்கள் - எங்கள் கொள்கைத் தங்கங்கள் - திராவிட முன் னேற்றக் கழகக் கூட்டணியைச் சார்ந்த வேட்பாளர்கள் அத்தனைப் பேரும் வெற்றி பெற்று  உள்ளேபோனால், இவர்கள் தோண்டித் தோண்டித் துருவி துருவிப் பார்ப்பார்கள்.

தஞ்சையைப் பொறுத்தவரையில் இருந்த களை நீங்கியது - எப்பொழுது? நாடாளுமன்றத் தேர்தலில் தோழர் பழனி.மாணிக்கம் அவர்கள் வெற்றி பெற்ற வுடனே! அங்கே உதயசூரியன் வெற்றி பெற்றவுடன்.

அதேபோன்று, சட்டப்பேரவைத் தேர்தலில் சகோதரர் நீலமேகம் அவர்கள் வெற்றி பெற்றவுடன், அந்தக் களங்கம் அடங்கியது.

அந்தக் களங்கத்திலே ஒரே ஒரு பகுதி இருக்கிறது நண்பர்களே - அந்தக் களங்கத்தைத் துடைத்தெறிவ தற்காகத்தான்  உங்களுக்கு ஒரு  வாய்ப்பு -அதுதான் 19 ஆம் தேதியன்று நடைபெறக்கூடிய உள்ளாட்சித் தேர்தல்.

மு..ஸ்டாலின் ஆட்சி என்ன செய்தது என்றால், பெண்களுக்குப்  பெரும்பான்மை கிடைக்கச் செய்திருக்கிறது!

51 வார்டுகளில் போட்டியிடக் கூடிய நம்முடைய நண்பர்கள் இவர்கள். எனக்கு என்ன ஒரு மகிழ்ச்சி என்றால், தந்தை பெரியார் சிலைக்குப் பக்கத்தில் அவர்கள் வரிசையாக நிற்கிறார்கள் பாருங்கள், இதுவரையில் ஆண் கள்தான் பெரும்பான்மை, பெரும்பான்மை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்; இந்த ஸ்டாலின் ஆட்சி என்ன செய்தது என்றால், பெண்களுக்குப்  பெரும்பான்மை கிடைக்கச் செய்திருக்கிறது.

28 பெண் வேட்பாளர்கள் - அதுவும் பொதுத் தேர்தல்களில் பெண் வேட்பாளர்கள். அதற்கு முன்பு பார்த்தீர்களேயானால், எங்கோ ஊருக்கு ஒன்றுதான் இருப்பார்கள்.

ஆனால், இப்பொழுது அப்படியில்லை; வீட்டில் மட்டும் எங்கள் ஆட்சியில்லை; நாட்டி லும் எங்கள் ஆட்சிதான் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மகளிருக்கு அந்த வாய்ப்புகளைக் கொடுத்திருக்கிறார்.

பாலின வேற்றுமை ஒழிப்பு

பெரியார் சொன்னார்,

ஜாதி ஒழிப்பு எனக்கு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் பெண்ணடிமை ஒழிப்பு - அவ்வளவு முக்கியம் இந்தப் பாலின வேற்றுமை ஒழிப்பு - சமத்துவம், சமூகநீதியைப்பற்றி சொன்னார்.

இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய அளவிற்கு நம்முடைய  முதலமைச்சர் சொன்னார், 'திராவிட மாடல்' என்று எல்லா மாநில இளைஞர்களும் இங்கே வருவதற்குக் காரணம் என்னவென்று சொன்னால், அவர் சொன்னார்,

பொருளாதார நீதி நிறைந்த சமூகநீதி

அனைவருக்கும் அனைத்தும் -

சமூகநீதி - பொருளாதார நீதி நிறைந்த சமூகநீதி.

இந்த ஆட்சி ஏழை, எளியவர்களுக்கான ஆட்சி யாகும்.

ஒன்றை நன்றாக நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - இவ்வளவு பணம் பா...விற்கு எப்படி வருகிறது?

அம்பானி, அதானி என்று சொல்லக்கூடியவர்கள் எவ்வளவு சம்பாதித்திருக்கிறார்கள் என்று சொன்னால்,

ஒரு நாளைக்கு அம்பானிக்கு லாபம் ஆயிரம் கோடி ரூபாய்.

தமிழ்நாட்டில், அம்பானி, அதானிகளுக்கு

கதவை திறந்துவிட்ட .தி.மு.. ஆட்சி!

இருக்கின்ற தொழிற்சாலைகளையெல்லாம் மூடி விட்டுப் போய்விட்டார்கள்; அதற்கு முன்பு, அம்பானி, அதானி யார் என்று தெரியாத இருந்த தமிழ்நாட்டில், அவர்களுக்குக் கதவைத் திறந்துவிட்டார்கள் கடந்த ஆட்சியினர்.

அதனைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் ஒரே ஒரு இயக்கத்திற்குத்தான் உண்டு. அதுதான் திராவிட முன்னேற்றக் கழகமும், அதனுடைய கூட்டணிக் கட்சிகளாக இருக்கக்கூடிய  இயக்கங்களும்தான்.

எனவேதான் தோழர்களே, உள்ளாட்சியிலும் நல்லாட்சி வரவேண்டும்.

அந்த நல்லாட்சி, சிறப்பான வகையில் பணியாற்ற வேண்டும் என்று சொன்னால், நீங்கள் அருள்கூர்ந்து ஏமாந்துவிடாதீர்கள்.  பயமுறுத்துகிறார்கள்; சில பேர் ஜாதியைச் சொல்கிறார்கள். நம் ஜாதி என்று சொல் வார்கள் - எதுவரையில் தெரியுமா? 19 ஆம் தேதி மாலை 5 மணிவரையில். அதற்குப் பிறகு, இவனுக்கும், ஜாதிக்கும் சம்பந்தமில்லை.

எனவேதான், ஜாதியைக் கண்டோ, மதத்தைக் கண்டோ இந்தக் கூட்டணி கிடையாது.

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி

முழுக்க முழுக்க மதச்சார்பின்மைக் கூட்டணி

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி என்பது, முழுக்க முழுக்க மதச்சார்பின்மைக் கூட்டணி - முற்போக்குக் கூட்டணியாகும்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் தஞ்சைக்கு ஒரு பெரிய பெருமை உண்டு. இங்கே எந்த மதம்? எந்த ஜாதி? என்று பார்த்திருக்கிறார்களா?

காரணம் யார்?

மனிதம்தான் முக்கியம்

பன்னீர்செல்வம் - 'திராவிட லெனின்' என்று சொல்லப்பட்ட பன்னீர்செல்வம்.  காங்கிரஸ் பேரியக்கத்தைச் சார்ந்த .ஒய்.எஸ்.பரிசுத்தம். இங்கே மதங்கள் ஆட்சி செய்ததில்லை. அவற்றைக் கொண்டு உள்ளாட்சித் தேர்தல் வந்ததில்லை.

மனிதர்கள், மனிதர்கள், மனிதர்கள் - மனிதம்தான் முக்கியம் என்று காட்டியிருக்கிறார்கள்.

எனவே, அருமைப் பெரியோர்களே, தாய்மார் களே - எங்கள் தாய்மார்கள் கரண்டியையும் பிடிப் பார்கள்; கரண்டி பிடித்த கரங்கள் இப்பொழுது பேனாவைப் பிடிக்கும் - உத்தரவு போடும்.

அந்த வாய்ப்புகளை உருவாக்கி, அவர்கள் எல்லாம் ஆமைகள் அல்ல -  சுண்டெலிகள் அல்ல.

ஆண்கள் மைனாரிட்டி,

பெண்கள் மெஜாரிட்டி!

அச்சமும்,  மடமையும் இல்லாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள் என்று சொன்னார்கள். அவர் களும் உறுதுணையாக இன்றைக்கு இருக்கிறார்கள். ஆண்கள் மைனாரிட்டி, பெண்கள் மெஜாரிட்டி இங்கு!

இந்த மைனாரிட்டியும், மெஜாரிட்டியும் கலந்து தான் உள்ளாட்சி; இங்கே பிரிவிற்கோ, பேதத்திற்கோ இடமில்லை. இன்க்ளூசிவ் குரோத் என்று சொல் லக்கூடிய எல்லோரையும் ஒருங்கிணைக்கக்கூடியது; அனைவருக்கும் அனைத்தும் என்று சொல்லக் கூடியது.

ஆகவே நண்பர்களே, தஞ்சாவூர் மாநகராட்சி, மாநகர மாமன்ற உறுப்பினர் பொறுப்பிற்கு, 51 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களில், 28 பெண் வேட்பாளர்கள் - 23 ஆண் வேட்பாளர்கள்.

28 பெண் வேட்பாளர்கள் என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன். இதுபோன்ற ஒரு காலம் வருவதை நாங்கள் பார்த்துவிட்டோம். அதுவும் பெரியார் சிலைக்குப் பக்கத்தில் நிற்கிறார்கள்.

பெண்களுக்கு எவ்வளவு உரிமை வேண்டும்?

1929 இல் பெண்ணுரிமை வேண்டும் என்று பெரியார் தீர்மானம் போட்டபொழுது, செய்தியா ளர்கள் பெரியாரைப் பார்த்து கிண்டலாகக் கேட் டார்கள்,

பெண்களுக்கு உரிமை வேண்டும் என்று சொல் கிறீர்களே,  எவ்வளவு உரிமை கொடுக்கவேண்டும் என்று.

பெரியார் அதைவிடக் கிண்டலாகப் பதில் சொன் னார் - ஆண்களுக்கு என்னென்ன உரிமை இருக் கிறதோ, அவற்றைக் கொடுத்தால் போதும் என்று.

எனவே,

சின்னங்கள் வேறாக இருந்தாலும்,

எண்ணங்கள் ஒன்றுதான்!

திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் வேட்பா ளர்களாக இருக்கக்கூடிய வேட்பாளர்களாக இருக்கக்கூடிய அருமை வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும்,

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களாக இருக்கக்கூடிய தோழர்களுக்குக் கை சின்னத் திலும்,

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களுக்கு அரிவாள் சுத்தியல் சின் னத்திலும்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் களுக்கு கதிர் அரிவாள் சின்னத்திலும்,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட் பாளர்களுக்கு குலைதள்ளிய தென்னைமரம் சின்னத்திலும்,

அதேபோன்று மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகத்திற்கு உதயசூரியன் சின்னத் திலும் வாக்களியுங்கள்!

சின்னங்கள் வேறாக இருந்தாலும், எண் ணங்கள் ஒன்று என்று சொல்லக்கூடிய அள விற்கு ஒன்றுபட்டு நிற்கிறோம் - வெற்றி பெறுவோம்!

தஞ்சையை மாற்றுவோம்!

தஞ்சையின் வரலாற்றில் ஏற்பட்ட களங் கத்தைத் துடைப்போம்!

உண்மையான திராவிடம் வெல்லும் -

நாளைய வரலாறு இதைச் சொல்லும், சொல்லும், சொல்லும்!

ஏமாந்துவிடாதீர்கள்!

நாங்கள் கையில் காசில்லாதவர்கள்ஆனால், நெஞ்சில் மாசில்லாதவர்கள்

பணம் வரும் - அது எங்கேயிருந்து வருகிறது? எப்படி வருகிறது? என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

அண்ணா அவர்கள் சொன்னார்,

பணம் அங்கே - குணம் இங்கே என்று.

நாங்கள் கையில் காசில்லாதவர்கள் - ஆனால், நெஞ்சில் மாசில்லாதவர்கள் என்று சொன்னார்.

இந்த நெஞ்சில் மாசில்லாதவர்களுக்கு வாக்களி யுங்கள்.

அதுதான் மிக முக்கியம்.

எனவே, இந்த நகரம், இந்த மாநகரம் மிகப்பெரிய அளவிற்கு வளர்ச்சியைப் பெறவேண்டுமானால், அதற்கு சிறப்பானவர்களைத் தேர்வு செய்யவேண்டும்.

வெற்றி விழா பாராட்டுக் கூட்டத்திலும்

பங்கேற்று உரையாற்றுவேன்

எனவே மறந்துவிடாதீர்கள் தோழர்களே, எப்படி இங்கே நிற்கின்ற 51 வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்து உரையாற்றுகின்றேனோ - அதேபோல, இவர்களுடைய வெற்றி விழா பாராட்டுக் கூட்டத்திற்கும் வந்து உரையாற்றுவேன் - உங்களுடைய ஒத்துழைப்பினாலே - உங்களுடைய நல்ல தீர்ப்பினாலே என்று சொல்லி,

இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த தோழர் களுக்கு என்னுடைய இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உதயசூரியன் சின்னமாக இருந்தாலும் சரி,

கை சின்னமாக இருந்தாலும் சரி,

அரிவாள் சுத்தியல் சின்னமாக இருந்தாலும் சரி,

கதிர் அரிவாள் சின்னமாக இருந்தாலும் சரி,

குலைதள்ளிய தென்னைமரம் சின்னமாக இருந் தாலும் சரி

அத்தனை சின்னங்களும் நமது சின்னங்கள்.

வாக்காளர்களே, ஏமாந்துவிடாதீர்கள்!

சின்னத்தில் வேறுபாடு இருந்தாலும், எண் ணத்தில் ஒன்றுபட்டு இருக்கிறோம் என்று காட்டுங்கள்.

வாக்காளர்களே, ஏமாந்துவிடாதீர்கள்-

எங்களுக்காக கேட்கவில்லை, உங்களுக்காக!

எங்களுக்காக நாங்கள் எந்தப் பதவியையும் விரும்பாதவர்கள் - உங்களுடைய பிள்ளை களுடைய எதிர்காலத்திற்காக -

உங்கள் தெருக்களில் நல்ல வெளிச்சம் இருக்கவேண்டும் -

நாம் நல்ல சாலைகளில் நடக்கவேண்டும் - சிறப்பாக இருக்கவேண்டும் என்று சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வேட்பாளர்களைத் தேர்வு செய்யுங்கள் என்று கேட்டு, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

சட்டத்திற்கு உட்பட்டு அய்ந்து நிமிடம் முன்பாகவே என்னுரையை முடித்திருக்கிறேன். ஏனென்றால், 6 மணிக்குத் தேர்தல் பரப்புரையை முடிக்கவேண்டும்.

நான் எப்பொழுதும் அய்ந்து நிமிடம் முன் பாகவே தேர்தல் பரப்புரையை  முடித்துக் கொள்வேன். காரணம், இரண்டு கடிகாரங்கள் ஒத்துப் போவதில்லை.

தேர்தல் ஆணைய அதிகாரிகளின் கடி காரமும், நம்முடைய கடிகாரமும் மாறுபட்டு இருக்கக்கூடாது என்பதற்காகத்தான்.

வெற்றி நமதே! விரைவில் சந்திப்போம்!

நீங்கள் முடிவு செய்திருப்பீர்கள்; இருந்தாலும், நாங்கள் தாய் வீட்டிற்கு வந்து உரிமையோடு கேட்க வேண்டும் என்பதற்காக வந்திருக்கின்றோம்.

நன்றி! நன்றி!! நன்றி!!

வெற்றி நமதே! விரைவில் சந்திப்போம்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர்  கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தேர்தல் பரப்புரையாற்றினார்.

முக்கிய பொறுப்பாளர்கள் உரை

முன்னதாக, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பெரியார், அண்ணா சிலை முன்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தி.மு.. மத்திய மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.., தி.மு.. முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா, தி.மு.. தஞ்சை மாநகர செயலாளர் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.., காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்டத் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் வி.தமிழ்ச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் கோ.நீலமேகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, விசிக மாவட்டச் செயலாளர் சொக்கா ரவி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஜெயினுல்லாபுதீன், முன்னாள் எம்பி பரசுராமன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அருணகிரி, மண்டல தலைவர் அய்யனார் உள்ளிட்டோர் பேசினர்.

அதைத் தொடர்ந்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் பேசினார். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட் பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து உரையாற்றினார்.

தஞ்சை மாநகரில் மொத்தமுள்ள 51 வார்டுகளில் 28 பெண்களுக்கும், 23 ஆண்களுக்கும் என்பது குறிப் பிடத்தக்கது.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் வாக்கு சேகரித்து உரையாற்றினார்.

No comments:

Post a Comment