அயோக்கியத்தனம் எது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 12, 2022

அயோக்கியத்தனம் எது?

28.10.1944 - குடிஅரசிலிருந்து.... 

நன்றாய் கொழுக்கட்டை போலும், மணலில் பிடுங்கிய கிழங்கு போலும் இருந்துகொண்டு, அய்யா, மூன்று நாளாக கஞ்சியே காணவில்லை; காலணா தருமம் கொடுங்கோ என்று கேட்பது அயோக்கியத்தனம். 

ஆனால், அது போலவே இருந்துகொண்டு யாதொரு விதமான பாடும் படாமல் தன் பெரியோர்கள் சம்பாதித்து வைத்துவிட்டுப் போனார்கள் என்றோ, பரம்பரை சொத்து பத்தியத்தில் கிடைத்தது என்றோ பெரும் செல்வத்தைவைத்துக் கொண்டு சுகபோகமாய் இருப்பதாக கருதிக் கொண்டு சோம்பேறியாய் இருந்து வாழ்ந்து கொண்டு இருப்பது அதைவிட அயோக்கியத்தனம். பிந்தியவன் பாடுபடாமல் ஏராளமான சொத்தை வைத்துக்கொண்டு அனுபவித்துக்கொண்டு இருக்கும் போது, முந்தியவன் பாடுபடாமல் பிச்சை கேட்பதில் தப்பு என்ன இருக்கிறது?

தொல்லை எது?

பிச்சைக்காரன் பிச்சை கேட்பது பெரும் தொல்லையாகவும், மனதிற்குச் சங்கடமாகவும் இருக்கிறது. அதுபோலவேதான் பணக்காரன் (தனது தேவைக்கு மேல் வைத்திருப்பவன்) பணத்தை வைத்துக்கொண்டு கோவில், மடம்  கட்டிக்கொண்டு கும்பாபிஷேகம், உற்சவம், பிராமண சமார்த்தனை முதலிய செய்துகொண்டு இருப்பதும் பெரும் தொல்லையாகவும் மனதிற்குச் சங்கடமாகவும் நாட்டுக்குக் கேடாகவும் இருக்கிறது.

கடவுள்

பணக்காரனுக்குப் பணம் கடவுள் கொடுத்தார்; ஏழைக்குத் தரித்திரம் கடவுள் கொடுத்தார். அப்படி இருக்க இது இரண்டையும் சமமாக்க வேண்டும் என்று சொல்லுகிறவன் நாஸ்திகனாகத்தானே இருக்க முடியும்? அல்லது அவன் நாஸ்திகனாக இருந்தால்தானே கடவுள் செயலுக்கு விரோதமாக சமமாக்க முடியும்? ஆதலால் மக்களை எல்லாம் நாஸ்திகர்களாக ஆக்கிவிட்டால் பணக்காரனும் தரித்திரனும் தானாகவே மறைந்து போவார்களா - மாட்டார்களா?


No comments:

Post a Comment