ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 19, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: எல்லோரும் இந்துக்கள் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கும்போதே, சிதம்பரத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைச் சிற்றம்பல மேடையில் அனுமதிக்காது தடுக்கிறார்களே- இந்த அகம்பாவத்திற்கு முடிவே இல்லையா?

- மதியழகன், மறவனூர்

பதில்: சிதம்பரம் தீட்சதர்களின் இந்த ஜாதி வெறியாட்டத்தைக் கண்டித்தும், அவர்கள் சட்டத்தை மதிக்காமல் தொடர்ந்து நடந்து வருவதையும் கண்டித்து, விரைவில், கழக பொதுச்செயலாளர் துரை.சந்திர சேகரன் அவர்கள் தலைமையில் அனைத்துத் தோழ மைக் கட்சியினரையும் சிதம்பரத்தில் திரட்டி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதோடு, சட்டப்படி, பின்வாங் காமல் காவல்துறை கடமையாற்றிடவும் வற்புறுத்திட உள்ளோம்.


கேள்வி: 44ஆவது இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு வழங்கிய கருத்துரையில் அன்னை மணியம்மையார் குறிப்பிட்டிருந்த பொதுசிவில் சட்டத் திற்கும், இன்று இந்துத்துவக்  கும்பல் வலியுறுத்தும் பொது சிவில் சட்டத்திற்கும் என்ன வேறுபாடு?

- அந்தோணி ராஜ், தென்காசி

பதில்: பா.ஜ.க.வின் பொது சிவில் சட்டம் வெறும் இஸ்லாமியர்களை - சிறுபான்மையினரைக் குறி வைத்தது; ஹிந்து மதம் - மனுதர்மச் சட்டங்கள்பற்றி மவுனம் சாதிக்கும் உள்நோக்கம் கொண்டது. கழகம் முன்வைப்பது பொதுவான அனைவருக்குமாக இணைத்தும் எந்த உள்நோக்கமும் இல்லாமலும், சமூக மாற்றத்தினைக் கருத்தில் கொண்டு கூறுவதாகும். சூத்திரப் பட்டமும் ஒழியவேண்டும் என்பதை முதன்மையாகக் கொண்டதாகும்.


கேள்வி: முதலமைச்சர் வீட்டை அருகில் போய் முற்றுகையிடும் அளவிற்குக் காவிக் கும்பல் ஆட்டம் அதிகமாகியுள்ளதே - நம் இளைஞர்களுக்கு தாங்கள் சொல்லும் அறிவுரை என்ன?

- அன்புமணி, காட்டுமன்னார்கோயில்

பதில்: காவல்துறை கடமையாற்றும். கவலை வேண்டாம்; ஆனால், தி.க., தி.மு.க., முற்போக்கு அமைப்புகள் காவிகளுக்கு எதிரான பிரச்சாரத்தைக் கட்டுக்கோப்பாக நின்று தொடர்ந்து செய்யத் தவறக் கூடாது.


கேள்வி: நிலுவையில் உள்ள பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்போம் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தாவை ஆளுநர் அழைத்துள்ளாரே - உங்கள் கருத்து என்ன?

- தமிழ் மைந்தன், சைதாப்பேட்டை

பதில்: சமூகநீதி, மாநில உரிமை, அரசமைப்புச் சட்டத்தை மதிக்காமல் செயல்படும் ஒன்றிய அரசின் முகமை அமைப்புகள்பற்றி ஓர் அணி உருவாவது காலத்தின் கட்டாயம்.


கேள்வி: தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வாய்கிழியப் பேசும் பொருளாதாரப் புலிகள், தேசியப் பங்குச் சந்தையின் தலைமை அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணன் பற்றித்  தங்கள் வாயையேத் திறக்கவில்லையே - ஏன்?

- திராவிட விஷ்ணு, வீராக்கன்

பதில்: அவாளின் ‘தகுதி திறமை’ சாயம் வெளுக்கிறது. உப்புக்கண்டம் பறிகொடுத்த (பழைய) பாப்பாத்தி நிலை அவாளுக்கு ஏற்பட்டுள்ளது இன்று!


கேள்வி: தேர்தல் பிரச்சாரத்தில், ‘இன்னும் 27 அமாவாசைக்குள் சட்டமன்றத்திற்குத் தேர்தல் வரும்’ என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது எதன் அடிப்படையில்?

- சங்கர் அப்பாசாமி, திருமுடிவாக்கம்

பதில்: தோல்வி ஜன்னியின் உச்சக்கட்டம் என்பதால், இப்படிப்பட்ட அமாவாசை உளறல்கள் - உதறல்கள் காரணமாக!


கேள்வி: பணம், பரிசுப் பொருள்கள் என ஏதோ பெரு வியாபாரத்திற்கான முதலீட்டைப் போல, ஊரக, நகராட்சித் தேர்தல்களை அரசியல் கட்சிகள் கையாளும் அணுகுமுறைகள் பற்றிய தங்கள் பார்வை?

- சா.புகழ்மணி, விக்கிரமங்கலம்

பதில்: உண்மை ஜனநாயகம் என்பது மேற்கண்டவை இல்லாத தேர்தல் மூலமே இதற்குச் சாத்தியம்! வேட்பாளர்கள் ஆங்காங்கே கூட்டுவதும், தோசை சுடுவதும், வடை சுடுவதும் போன்ற பல பணிகளைச் செய்வது கேலிக் கூத்து. அவர்களை ஏன் இப்படி வாக்காளர்கள் வேலை வாங்குகிறார்கள் என்பது புரியவே இல்லை!


கேள்வி: சிறுபான்மையினர் உரிமைக்கான போராட் டங்களில் அவர்களை நாத்திகர்கள் ஆதரிக்கும்போது, அந்தப் போராட்டங்களில் கடவுள் சார்ந்த ஆதரவு முழக்கங்களை அவர்கள் எழுப்புவது சரியா?

- அ.தமிழ்குமரன், ஈரோடு

பதில்: கூடுமானவரை இரு சாராருமே பொதுப் பிரச்சினைகளில் மட்டும் அத்தகைய மேடைகளில் கவனஞ் செலுத்துவது  நல்லது. விரும்பத்தக்கதும்கூட!


கேள்வி: ‘குடிஅரசு’ ஏடு தொடங்கிய காலகட்டங் களில் பொப்பிலி அரசர்தான் அந்த ஏடு தொடர்ந்து பீடு நடைபோட நன்கொடை அளித்தாரென்றும், ஏடு வளர்ச்சியடைந்த பின்பு பொப்பிலி அரசர் தொடர்ந்து நன்கொடை தர முயற்சித்த போதும் கூட பெரியார் வேண்டாமென்று சொன்னாரென்றும் சொல்கிறார் களே, உண்மையா?

- சு.கிருஷ்ணமூர்த்தி, திருத்துறைப்பூண்டி.

பதில்: விடுதலைக்குத்தான் பொப்லி அரசரின் நன்கொடை உதவி சில காலம் கிடைத்தது; 'திராவிடன்', 'குடிஅரசு'க்கு அல்ல.


No comments:

Post a Comment