ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 12, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: சென்னையில் அண்ணா, கலைஞர் ஆகியோர் நினைவாக வளைவுகள் இருப்பது போல சென்னை பெரியார் திடல் அமைந்துள்ள ஈ.வெ.கி. சம்பத் சாலை தொடங்கும் இடத்தில் தந்தை பெரியார் வளைவு என்று அமைத்தால் அது பெரியார் நினை விடம், பெரியார் அருங்காட்சியகம், பெரியார் நூல கம் ஆகியவற்றை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும் அல்லவா?

- பா.கண்மணி, சென்னை -14

பதில்: நமது பெரியார் திடலில் உள்ள பெரியார் - பகுத்தறிவு ஆய்வு நூலகம் மிகப்பெரிய அளவில் உள்ளே நுழைந்தவுடன் பயன்படும் பெரும் நூலக மாக, ஆய்வகமாகப் பயன்பட புதிய கட்டடங்கள் கட்டப்படவுள்ளதற்கே முன்னுரிமை,

மேலும் 'பெரியார் உலகம்' என்ற 'மெகா' திட்டமும் விரைவில் துவங்கவிருக்கிறது.

நம் கவனம் வேறு திசையில் திரும்புவது விரும்பத்தக்கதல்ல; பயன்கருதி இவ்விரண்டுக்கே - நமது நிதிநிலைப்படி முன்னுரிமை. உங்கள் யோசனைக்கு நன்றி.

- - - - -

கேள்வி 2: கோயில்களில் பல்லாயிரக் கணக்கில் மக்கள் பங்கேற்கும் திருவிழாக்களுக்கு கரோனா கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்தியுள்ளனர். ஆனால் நம் போன்ற சமூக இயக்கங்கள் பிரச்சாரம் செய்ய மட்டும் அனுமதி மறுக்கிறார்களே?

- ம.மணி, செங்கல்பட்டு

பதில்: நிலவரம் விரைவில் மாறும். 'நம்ம அரசு'க்கு நாம் துணையாக இருப்பதுதானே முக்கியம். விரிவான பிரச்சார விடியல் விரைந்து வரட்டும். 'நீட்' தேர்வு மக்களாதரவு திரட்டும் போராட்டம் - ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல கட்சி சார்பற்ற பெருந்திரளாக நடத்துவதே முதல் திட்டமாக அப்போது மலரும்!

- - - - -

கேள்வி 3: கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ‘ஹிதாப்' அணிவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்து மாணவர்கள் நடந்துகொண்டுள்ள - மிகப்பெரிய ஆபத்தை எப்படி இந்த நாடு எதிர்கொள்ளப் போகிறது?

- கிருபாகரன், சென்னை

பதில்: 9.2.2022 'விடுதலை' அறிக்கையே இதற் கான விடையைத் தருகிறது. காண்க - கற்க.

- - - - -

கேள்வி 4: தமிழ்நாட்டின் சைவ மடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்.எஸ்.எஸ். அருகில் போவது போல் தெரிகின்றதே?

- திராவிட விஷ்ணு, வீராக்கன்

பதில்: பிறகு அவைகள் காவிமயமாகி காணாமற் போகும் - “வாதாபி ஜீரணாபி” புராணக்கதை போல! 

- - - - -

கேள்வி 5: பெரியாரை மத அழைப்பாளர் போல் சிலர் சித்தரிக்க முயல்கிறார்களே- இது சரியா?

- சங்கர் அப்பாசாமி, திருமுடிவாக்கம்

பதில்: தவறான பிரச்சாரம். பெண்ணியப் போராளி நமது ஓவியா அவர்கள் எழுதிய சிறு நூல் பெரு விளக்கம் - அதனைப் பரப்புங்கள்.

- - - - -

கேள்வி 6: சமூக நீதிக் கொள்கைகளை பேசி வளர்ந்த கட்சிகள் சில தற்போது புராணப் பெருமை களை இளைஞர்களிடம் பரப்பி போலி தற் பெருமையை ஏற்படுத்துகின்றனவே - அப்பாவி இளைஞர்களை மீட்க என்ன செய்வது?

- செ.பகுத்தறிவு, கோபி

பதில்: நமது பகுத்தறிவுப் பிரச்சாரத்தை தீவிரமாக முடுக்குங்கள் - சரியான பதிலடி அதுவே அதற்கு.

- - - - -

கேள்வி 7: சொந்தப் பகையில் அல்லது தொழில் போட்டியில் கொல்லப்பட்டாலும் அதற்கு மதச்சாயம் பூசிக்கலவரம் நடத்திய காவிகள், அப்படி கொலை களே நடக்காவிட்டாலும் கட்டாய மதமாற்றம் என்ற பெயரில் கலவரத்தைத் தூண்டுகிறார்களே- தடுக்க அரசு என்ன செய்ய வேண்டும்?

- அ. ஆரோக்கிய சேவியர், செங்கோட்டை

பதில்: தமிழ்நாட்டில் குறுக்கு வழியில் “கோலோச் சும்” கற்பனையில் மத வெறி பிரச்சாரத்தின் மூலம், கலவரத்தை நடத்த நினைக்கிறார்கள்.  அனைத்து முற்போக்கு இயக்கங்களும் உயிர்ப்போடு காவி எதிர்ப்பு பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட வேண் டும். தமிழ்நாட்டில் நகராட்சி தேர்தலில் நோட்டாவை விடக் குறைந்த ஓட்டு வாங்கி ‘டெப்பாசிட்’ இழக்கும் வகையில் ஓரிரு இடங்களில் கூட வர இயலாத வகையில், கடுமையாக எதிர்க்க வேண்டும்.

- - - - -

கேள்வி 8: மதவிடுமுறைகளை தவிர்த்து தாங்கள் விரும்பும் நாட்களில் விடுமுறை எடுப்பதுபோல் இருந்தால் பகுத்தறிவாளர்களுக்கு, மதச்சார்பற்றவர் களுக்கு பயன் தருமல்லவா?

- கா.பெரியார் செல்வன், ஜெயங்கொண்டம்

பதில்: நாம் நமது முதல் அமைச்சரிடம் வேண்டு கோளாக வைக்க வேண்டும். அவர் உரிய முறையில் பரிசீலித்து நல்ல முடிவை அறிவிப்பார்.

- - - - -

கேள்வி 9: கிராமங்களில் மீண்டும் ஜாதி ஆதிக்கம் தலைதூக்கி முடிவெட்டுதலில் கூட வேறுபாடுகள் காட்டுவதுபோல் செய்திகள் வருகின்றனவே - இதற்கு என்ன செய்வது?

- அம்பேத்கர், புதுக்கோட்டை

பதில்: நமது ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் மேலும் தீவிரமாக வேண்டும். சட்டப்படியும் ஜாதியைக் காப்பாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment