அந்த ஒரு நாள் 'விடுதலை' இதழ்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 4, 2022

அந்த ஒரு நாள் 'விடுதலை' இதழ்!

2.2.2022 'விடுதலை' நாள் இதழைப் படித்தேன். பக்கத்துக்குப் பக்கம் தேனாகச் சுவைத்தேன்.

தலைவர் ஆசிரியர் அவர்களின் முதல் பக்க அறிக்கை இந்திய ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) பற்றியது அது -  "கேட்டது ரொட்டி - கிடைத்தது கல்!" என்ற நறுக்குத் தெறிப்பு.

ஒரு கருத்து எனக்குள் உதயம். தலைப்புகள் அதிக வரிகள் இல்லாமல் இருந்தால் எழிலாக - அறிவாக எடுப்பாக இருக்குமோ  என்ற எண்ணம்தான் இது. (பல நாட்களாக நமது பொதுச் செயலாளர் மானமிகு

வீ. அன்புராஜ் கூறி வந்ததை அசைப் போட்டேன்!)

குருமூர்த்தி அய்யருக்கு சோ அய்யரின் மண்டை ()டி- என்ற 1ஆம் பக்கப் பெட்டிச் செய்தி.

தன்னைப் பெரிய அறிவாளி என்னும் மண்டைக் கொழுப்பில் தறிகெட்டு ஆடும் குருமூர்த்தி இதற்கு என்ன விடை சொல்லப் போகிறார்?

இலவசம் ஆரம்பம் கோயில் என்கிறார் சோ - தி.மு..தான் .ஆரம்பம் என்கிறார் குருமூர்த்தி - குருவுக்கும் - சோவுக்கும் ஏன் இந்த முரண்பாடு? குருநாதர் சோவையும் விஞ்சி தி.மு..மீது அப்படியொரு வெறி பிடித்த புத்தி! இதனை எந்த நோக்கத்தில் புரிந்து கொள்வது - புரிந்துகொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டு செயல்படட்டும்!

குடித்துக் கொண்டு வந்தவரை செருப்பால் அடிக்க வேண்டும் என்றால் கொண்டு வந்தவர்களை எதனால் அடிப்பது என்கிற அளவுக்குக் குருமூர்த்திகளால் எழுத முடிகிறது? தி.மு..  .தி.மு.. சிந்திக்க வேண்டிய செயல்பட வேண்டிய இடம் இது.

முதல் பக்கத்தில் மற்றுமொரு முக்கிய செய்தி ஒன்று.

"இளைஞர்களே வருக! வருக!!" என்ற தலைவர் ஆசிரியரின் சிற்றறிக்கை. விழுப்புரம் மாவட்டம் கப்பூரில் "புதிய சிறகுகள்" என்ற பெயரில் இயங்கும் அமைப்பின் கீழ் பெரியாரிஸ்ட் தோழர் மானமிகு சிவராஜின் சீரிய ஆக்கப்பூர்வமான முயற்சி! - கிராமப்பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு குடிமைப் பயிற்சி அளித்து வருகிறார். இதில் பயின்ற பல மாணவர்கள் அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர் என்பதைவிட மகிழ்ச்சிக்குளியல் வேறு ஏது?

தேன் குளத்தில் சர்க்கரை மழை பொழிந்தது - என்ன தெரியுமா? அந்தக் கிராமப் பகுதி இருபால் மாண வர்களைப் பெரியார் கொள்கைவழி வார்த்து எடுத்தது தான்!

கடந்த முதல் தேதி நமது தலைவர் ஆசிரியர் பேசிய காணொலி நிகழ்ச்சியின்போது "புதிய சிறகுகள்" சிறகடித்துப் பறந்து வந்து, அந்த நிகழ்ச்சியில் கருப்புடையுடன் பங்குகொண்டதும், தந்தை பெரியார் தம் பொன்மொழிகளை உதிர்த்ததும், நமது உதிரத்தை எல்லாம் உற்சாகப்படுத்தி மகிழ்ச்சி முத்தத்தை மாறி மாறிக் கொடுத்தது போலிருந்தது!

இளைஞர்கள் இயக்கம் நோக்கி வரும் நிலை நமது தலைவரின் 89ஆம் வயதை 28ஆகக் குறைத்திருக்கும்.

அவரின் உடல் உறுப்புகள் பல அறுவைச் சிகிச்சை வெட்டுகளைச் சந்தித்தவை. அவரை இளமையாக்கினராக மாற்றும் ஆற்றல் இது போன்ற நிகழ்ச்சிகள்தானே.

'பெரியாருக்குப் பிறகு இயக்கம் என்ன ஆகும்' என்று நல்லெண்ணத்தில் நினைத்தவர்களுக்கு நிழற் குடையாகவும் - அவ்வளவுதான் உடைந்து சிதைந்து போகும் என்று நினைத்த உள்ளங்களை உளி கொண்டு தாக்குவதாகவும் இது போன்ற நிகழ்ச்சிகள் அமைகின்றன. நமது பொதுச் செயலாளர் தோழர் டாக்டர் துரை. சந்திரசேகரன் பாலமாக இருந்து இத்தகையவர்களை ஒருங்கிணைத்து இயக்கத்தின் பால் ஆற்றுப்படுத்துவது பாராட்டத்தக்கது - மற்றவர்களும் பின்பற்றத் தக்கதாகும்.

4ஆம் பக்கம் நமது தலைவர் ஆசிரியர் உரை - சமூகநீதி என்பதை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்ற மண் - பெரியார் மண் என்ற அந்தப் பேச்சின் கருத்தின் வீச்சை சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களும் இந்திய அளவில் சமூகநீதியாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் எதிரொலிப்பதைக் கண்டு - இரட்டைக் குழல் துப்பாக்கி  என்னும் உண்மைச் செயல்பாட்டை நுகர்ந்து மகிழ்வோம்!

"இனி வரும் உலகம் பெரியார் மாட்டே!" என்பதில் துளியளவேனும் அய்யமும் உண்டோ!

விடுதலை 6ஆம் பக்கத்தில் வெளிவந்த ஒளிப்படங்கள்.

குடியரசு நாள் விழா அணிவகுப்பில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துமாறு நமது தலைவர் பிறப்பித்த ஆணை ஆயிரங்கால் சிங்கமாக - இந்தமுடிவு தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளில் எல்லாம் பாய்ந்திருப்பது- கடந்த ஈராண்டு கரோனா நெருக்கடியிலும் கழகம் எத்தகு உயிர்த் துடிப்புடன் இயங்குகிறது என்பதற்கான சான்று இது.

புதிய புதிய இடங்களில்  குலு  குலு  குக்கிராமங்களில் கூட நம் கழகத் தோழர்கள் தோள் தூக்கி எழுந்துள்ளனர் - சிறப்பு - மிகச் சிறப்பு!

கரோனா என்னும் கொடுந்தொற்று மக்கள் சந்திப்பு நீரோட்டத்தைத் தடுத்த கால கட்டத்திலும் நமது கழகத்தை நமது தலைவர் இயக்கிய முறையும் - கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் தேனீக்களாகப் பறந்த பரந்து பட்ட நிகழ்வுகளும் கழக வரலாற்றை மேலும் தொடர்ந்து எழுதும்போது கண்டிப்பாக இடம் பெற்றே தீர வேண்டிய, கண்களில் ஒத்திக் கொள்ளும் காண்டம் இந்தக் கால கட்டம் ஆகும்.

(இடத்தை அடைத்துக் கொள்கிறது என்று கருதாமல்  போராட்டப் படங்கள் தொடரட்டும்! தொடரட்டும்!!)

அலைகள் ஓய்வதில்லை அடுத்த 5ஆம் தேதி ஆர்ப்பாட்டம் 8ஆம் பக்கத்தில்!

காந்தியாரைச் சுட்டுக் கொன்ற கொலையாளிகளுக்குப் 'பாரத ரத்னா!' பட்டமாம். பாரத ரத்னா பட்டத்தின் தரம் பலே! பலே!

இந்த சட்ட விரோத நடவடிக்கைக் கும்பல்மீது சட்டப்படியாக மயிலிறகு வருடல் என்கிற அளவுக்குக்கூட இல்லாமல் ஆர்.எஸ்.எஸின் அச்சான பா... அரசு வெட்கமின்றி உலா வருகின்றது. இதனைக் கண்டிக்கும் கழகப் போராட்டம்தான் வரும் 5ஆம் தேதி ஆர்ப்பாட்டம்.

எட்டாம் பக்கத்திலோ தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் தோழர் முத்தையன் மற்றும் பொறுப்பாளர்களின் முயற்சியால் புதிய ரத்தங்கள் கழகத்தில் இணைந்தனர் - பிரிந்தவர்களும் பிரியமுடன் நெருங்குகின்றனர். மாற்றம்தானே மாறாதது!

இப்படி எட்டுப் பக்கங்களும் ஒரு நாள் "விடுதலை" இதழில் (2.2.2022) பொங்கி வழியும் கொள்கை அலைகளைக் கண்டு மனத்தில் மகிழ்ச்சித் தேன் அலைகள் அலை பாய்கின்றன.

பட்டினப்பிரவேசங்களின் பல்லக்குகள் இறக்கப் படுகின்றன - நமது கழகத்தின் முயற்சியால் - மனித உரிமை இயக்கம் அல்லவா!

நமது தலைவர் நூற்றாண்டைக் காணட்டும்! நமது ஒப்பு உவமை இல்லாத கழகத் தொண்டர்களின் உன்னத செயல்பாட்டுக்கு வாழ்த்துகள் - பாராட்டுகள் என்பதை விட வேறு எந்தக் கிரீடத்தைச் சூட்ட முடியும்?

வாழ்க பெரியார்!

வெல்க திராவிடம்!!

- 65 ஆண்டு 'விடுதலை' வாசகர்

கலி. பூங்குன்றன்

No comments:

Post a Comment