சிதம்பரம் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண் அவமதிப்பு : தீட்சதர்கள் கைது! கே. பாலகிருஷ்ணன் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 20, 2022

சிதம்பரம் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண் அவமதிப்பு : தீட்சதர்கள் கைது! கே. பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை, பிப்.20  சிதம்பரம் நடராஜர் கோயிலில் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்ணை தாக்கிய தீட்சிதர்களை கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை இயக்குநருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புகார் கடிதம் கொடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது: சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு கடந்த 13ஆம் தேதி சென்ற ஜெயஷீலா என்ற தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்ணை அங்கிருந்த தீட்சிதர்கள் ஜாதியின் பெயரைச் சொல்லி திட்டியும், கேவலமாக பேசியும், கையால் தாக்கியும் கீழே தள்ளியுள்ளனர். இது தீண்டாமை வன்கொடுமையாகும். இதுகுறித்து ஜெயஷீலா சிதம்பரம் நகர காவல்நிலையத்தில் புகார் செய்து, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.  வழக்குப் பதிவு செய்து ஆறு நாட்களுக்கு மேலாகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. சட்டத்திற்கு முன் அனைவரும் சமமானவர்கள்.ஆனால், மாவட்ட காவல்துறையினர் கண்டும், காணாமலும் இருப்பதும், கைது செய்யாமல் இருப்பதும் நீதிமன்றத்திற்கு சென்று அவர்கள் முன்பிணை பெறுவதற்கு உடந்தையாக செயல்படும் நடவடிக்கையாக உள்ளது. இது குற்றவாளிகள் அனைவரையும் தப்புவிக்கும் சட்டவிரோதமான  நடவடிக்கையாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் பக்தர்களை தாக்குவது, குறிப்பாக பெண்களை தாக்குவது உள் ளிட்ட சமூக விரோத செயல்களில் கோவிலை மய்யமாக பயன்படுத்தி செயல் படுகின்றனர்.மேலும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க மறுப்பது, அப்படியே கோயிலுக்குள் நுழைபவர்களை தாக்குவது, கேவலமாக பேசுவது, கொலை மிரட்டல் விடுவது, தீண்டாமைக் கொடுமைகளை இழைப்பது போன்ற சட்டவிரோதமான நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர். அப்படி இவர்கள் மீது வரும் புகார்கள்மீது மாவட்ட காவல்துறையினர் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதில்லை.இது குற்றவாளிகளை மேலும் கூடுதலாக ஊக்கப்படுத்தும் செயலாக அமைந்து விடுகிறது. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் தாழ்த்தப்பட்ட சமூக  பெண்ணை தாக்கிய தீட்சிதர்கள் அனை வரையும் உடனடியாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய  வேண்டும் என்று கூறியுள்ளார். இக்கடிதத் தின் நகல்கள் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  மற்றும் சிதம்பரம் துணை காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

 

No comments:

Post a Comment