திராவிட மாதிரியிலான பொது சுகாதாரம். மருத்துவம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 17, 2022

திராவிட மாதிரியிலான பொது சுகாதாரம். மருத்துவம்

சக்திராஜன் ராமநாதன் - சுந்தரேசன் செல்லமுத்து

அனைத்திந்திய தேசிய தகுதிக்கான நுழைவுத் தேர்வில்நீட்மூலம் இளங்கலை மருத்துவ, பல் மருத்துவப் பட்டப்படிப்பு மற்றும் முதுகலை மருத்துவ பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் ஒதுக்கப்படும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது இந்திய அரசமைப்புச் சட்டப்படி செல்லத்தக்கதே என்று அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு நாட்டின் சமூக நீதி வரலாற்றில் ஒரு மைல் கல்லாக திகழ்வதற்கு தகுதி உடையதே ஆகும்.

செயல்பாடுகளின் தகுதி மற்றும் பொதுச் சேவைக்கான அர்ப்பணிப்பு உணர்வுடன் தகுதிக்கு உரிய அடையாளங்களைப் பார்க்க வேண்டும். ஒரு போட்டித் தேர்வின் மூலம் இவற்றை மதிப்பிடுவது என்பது இயலாததே ஆகும்’’ என்று நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் .எஸ்.போபண்ணா அடங்கிய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தகைய மிகமிக முக்கியமான தீர்ப்பின் வெளிச்சத்தில் தகுதி என்பதற்கு குறுகிய, மயக்கம் தரும் விளக்கங்களை நாம் கைவிட வேண்டிய நேரம் இப்போது வந்து விட்டது. “தகுதி என்பது, ஒரு சமூகமாக நாம் மதிக்கும் சமத்துவம் என்பது போன்ற சமூக நற்செயல்களை மேம்படுத்தும் ஒரு கருவியாக கருத்து மாற்றம் செய்து பயன்படுத்தப்பட வேண்டும்மாயத் தோற்றம் அளிக்கும் பிறப்பினால் வரும் தகுதிக்கு மாறாக, வரலாற்றுச் சாதனைகளையே தகுதி என எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டின் பழக்கவழக்கங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்தியா முழுவதும் ஆண்டாண்டு காலமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு அடிமைப்பட்டுக் கிடக்கும் அடித்தட்டு மக்களை சமூக அளவில் முன்னேற்றம் அடையச் செய்வதற்கு இதனையே பின்பற்ற இயலும்.

ஒரு மாபெரும் மாற்றம்

தொடர்ந்து வந்த திராவிட இயக்க தமிழ்நாடு அரசுகள், ஓர் அகண்ட அனைத்து மக்களையும் உள்ளடக்கிய முறையில் தகுதி என்பதையும், அதன் சமூக பாதிப்புகளையும் புரிந்துகொண்டு உள்ளன. கிராமப்பகுதிகளில் மருத்துவப் பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு முதுகலை மருத்துவ பட்டப்படிப் பில் சேர்வதற்கு இடஒதுக்கீடு அளிப்பது என்ற ஆக் கப்பூர்வமான செயல்பாடு (Affirmative action) 40 ஆண்டு காலத்திற்கு மேல் நடைமுறையில் சோதனை செய்து பார்த்து வெற்றி பெற்று வந்துள்ளது. முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மிகச்சிறந்த உயர் மருத்துவப் படிப்பு இடங்களில் 50 விழுக்காடு இடங்கள் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் கார ணமாக, அரசு மருத்துவமனைகளில் பல்வகை சார்ந்த மருத்துவ சிகிச்சை அளிக்கும் விஷயத்தில் ஒரு மாபெரும் மாற்றமும். முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக மாநிலத்தின் பொது சுகாதார, மருத்துவ கட்டமைப்புகள் மிகப்பெரிய அளவில் விரி வடைந்தன. முன்னேற்றமான இந்த சீர்திருத்தங்கள் மகப்பேறு மருத்துவம், மயக்க மருந்து துறை, பொது மருத்துவம், நீரிழிவுநோய்த்துறை, பொது அறுவை சிகிச்சை, எலும்பு மருத்துவத்துறை போன்ற எண் ணற்ற விசேட மருத்துவத்துறைகள் அரசு மருத்துவ மனைகளில் பல்கிப் பெருகுவதற்கு வழிவகுத்தன. இத்தகைய விசேட மருந்துத்துறைகள் 40 ஆண்டு களுக்கு முன்னர் எல்லா மாவட்ட மருத்துவமனை களிலும் கூட இருக்கவில்லை. இத்துடன் சிறுநீரகம், இதய நோய், நரம்பியல் மருத்துவத்துறைகள் சென்னை, மருத்துவக் கல்லூரியில் 1960, 1970களில் கூடுதலாக உருவாக்கப்பட்டன. சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் மட்டும் அல்லாமல், இரண்டாம் கட்ட நகரங்களிலும் கூட இத்தகைய விசேட மருத்துவத்துறைகள் துவக்கிசேவை செய்யப் படுவதற்கு இத்தகைய விசேட மருத்துவத் துறை முதுகலை வகுப்புகளில் அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது பெரும் அளவில் பங்களித்துள்ளது. இன்று தமிழ்நாடு முழு வதிலுமுள்ள அரசு மருத்துவமனைகளில் 900க்கும் மேற்பட்ட இதுபோன்ற பல்வேறு துறை விசேட மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலை ஒரு சில அய்ரோப்பிய நாடுகளுடன் மட்டுமே ஒப்பிட்டு பார்க்க இயன்றதாக உள்ளது.

இந்த ஈடு இணையற்ற திட்டம் ஒரு இரண்டு விதமான பலனை, பாதிப்பை அளித்துள்ளது. இளங் கலை மருத்துவப் பட்டம் பெற்ற இளைஞர்கள் கிரா மப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மூன்று ஆண்டுகள் பணியாற்றுவதற்கு இது ஊக்கமளிக்கிறது. மருத்துவ இளங்கலைப் பட்டம் பெற்ற மருத்துவர்கள் முதுகலை, விசேட மருத்துவத் துறை பட்டப்படிப்பு வகுப்புகளில் சேர்வதற்கான இட ஒதுக்கீடு பெறுகுவதற்கு, அவர்கள் மூன்று ஆண்டு காலம் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற வேண்டும் என்பது ஒரு நிபந்தனையாகும். இதன் விளைவாக அரசு மருத்துவ மனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள் பற்றாக்குறை எப்போதுமே ஏற்படவில்லை, மக்கள் தங்கள் வீட்டு வாசலிலேயே மேலான மருத்துவ சிகிச்சை பெற முடிந்தது.

அரசு மருத்துவர்களிடம் அரசு பெற்ற ஒப்பந்தம் காணாமல் போனது ஏன்?

இந்தக் கொள்கையை வடிவமைக்கும்போது, தமிழ்நாடு அரசில் இருந்த சுகாதாரத்துறை மேலா ளர்கள் குறுகிய கண்ணோட்டம் கொண்டவர்களாக இருக்கவில்லை. முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் விசேட உயர்தர மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீட்டைப் பெறும் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களிடமிருந்து, பணி ஓய்வு பெறும் வரை தாங்கள் அரசுப் பணியிலேயே தொடர்ந்து இருப் போம் என்று உறுதி அளிக்கும் ஈடு இணையற்றதொரு ஓய்வு ஒப்பந்த பத்திரத்தை இத்தகைய அரசு மருத்துவர்களிடமிருந்து அரசு பெற்றுக்கொண்டது. தங்களது பணிக்காலம் முழுவதிலும் அரசுப்பணியில் இத்தகைய சிறப்பு மருத்துவர்களில் பெரும்பாலா னவர்கள் நீடிப்பதை இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்து கிறது. இத்தகைய பணி ஓய்வு ஒப்பந்தப் பத்திரத்தை வாங்குவதன் முக்கிய நோக்கமே, இத்தகைய மருத்து வர்கள் அரசுப் பணியை விட்டுவிட்டு தனியார் பணிக்கோ அல்லது அயல்நாடுகளுக்கோ சென்று விடுவதை தடுப்பதுதான். இந்த நடைமுறை பணி புரியும் மருத்துவர்கள் மாற்றும் அரசு இருவருக்குமே வெற்றி பெறும் சூழ்நிலையை உருவாக்குவதை மெய்ப் பித்து உள்ளது. இந்த ஈடு இணையற்ற இத்திட்டம் நாட்டில் எங்குமே இப்போது காணப்படவில்லை.

சென்னை மருத்துவக் கல்லூரி சென்னை அய்.அய்.டி. நிறுவனங்கள் இரண்டுமே நாட்டிற்கு அளித்துள்ள சேவையைப் பற்றி ஆக்கப்பூர்வமான பகுத்தாய்வு ஒன்றை மேற்கொள்வதற்கு ஒருவர் முயன்றால், ஒளிவீசும் அறிவாற்றல் மிகுந்த மாண வர்கள் மட்டுமே அவற்றில் கல்வி கற்பதற்கு சேர்கின் றனர். சமூக முன்னேற்றம் மற்றும் பிராந்திய வளர்ச்சி இரண்டிலுமே தமிழ்நாட்டின் சமூகத் தேவைகளுக்கு ஏற்றவாறு சீர்திருத்த கொள்கைகளை சென்னை மருத்துவக் கல்லூரி பின்பற்றுவதால் அது புகழ் பெற்று ஒளிர்கிறது.

எட்ட இருக்கும் பொருள்கள் தெளிவாகத் தெரியாத கண்களின் பார்வைக் குறைபாடு:

என்றாலும் நீட் நுழைவுத் தேர்வு மற்றும் அனைத்திந்திய மருத்துவக் கவுன்சிலின் 6ஆவது விதியின்படி மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக் கொள்கை மிகப்பெரிய மாற்றத்துக்கு உள்ளாகியுள் ளது. கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்து வர்களுக்கு அளிக்கப்படும் மதிப்பெண் குறைக்கப் பட்டுவிட்டது. முதுநிலை மருத்துவ பட்டயப் படிப் புக்கான இடங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 50% அளவிற்கு மேலாக அளிப்பதில்லை என்ற கொள்கையை அகில இந்திய மருத்துவக் கவுன்சில் உருவாக்கிக் கொண்டது. இந்த விஷயத்தில் தொடர் புடையவர்களை கலந்தாலோசிக்காமலே டில்லியில் உள்ள கொள்கை வடிவமைப்பாளர்கள் இந்த முடிவை மேற்கொண்டு இருப்பதுடன் இவ்வாறு தெளிவாகத் தெரியாத கலங்கல் நிறைந்த கொள்கை யின் நியாயத்தை அரசு பொதுமக்கள் முன் இதுவரை வைத்ததில்லை.

பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு சேர்க்கையில் இட ஒதுக் கீட்டை மறுக்கும் அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளை எதிர்த்து தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தபோது, பணியிலிருக்கும் மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதை எதிர்த்து ஒன்றிய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும் அளவுக்குச் சென்றுவிட்டது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. பணியிலி ருக்கும் மருத்துவர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்கு இட ஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை நீக்குவது, மாநில மருத்துவ சேவை செய்வதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்று மாநில அரசு சரியாகக் கூறியுள்ள நிலையில், எந்தவித சட்டப்படியான பின் பலமும் அற்ற காவல் நாயான அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் தெளிவற்ற கலங்கல் நிறைந்த விதிகளுக்குப் பின்னால் ஒன்றிய அரசு ஒளிந்து கொள்கிறது.

வெற்று வாய்ச் சொல் வீராப்பு

இந்த நடவடிக்கையின் மூலம், கிராமப்புற மருத்துவ சேவை நடைமுறையையே பேரிழப்புக்கு உள்ளாக்கியுள்ள ஒன்றிய அரசினால், நடைமுறைக்கு வெளியே கேள்விகள் கேட்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் செலவு மிகுந்த நவீன பயிற்சி மய்யங்களில் பயிலும் நகர்ப்புற மாண வர்களுடன் போட்டியிடுவதற்கு இளம் மருத்துவர்கள் தள்ளப்படுகின்றனர். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் அரசுப் பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கும், இட ஒதுக் கீடு வழங்கும் வழக்குகளில் ஒன்றிய அரசு தாக்கல் செய்திருக்கும் பிரமாண பத்திரங்கள், தகுதி, திறமை என்பது என்ன என்பது பற்றிய குறுகிய அடிப்படை யில் தாக்கல் செய்யப்பட்டவையாகும். காலத்தால் சோதனை செய்து அறியப்பட்ட நடைமுறையை பலப்படுத்துவதற்கு மாறாக, விசேட மருத்துவப் படிப்பு, உயர் மருத்துவப் படிப்புகளில் பயின்ற மறுமலர்ச்சி பெற்ற மருத்துவர்கள் போதுமான அளவில் கிடைப் பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு மாறாக, மருத் துவ அதிகாரிகளிடையே துன்பங்களையும், சோகத் தையும் ஏற்படுத்துவதற்கு ஒன்றிய அரசு தலைகீழாக நிற்கிறது. கிராமப்புறங்களில் பணியாற்றுவதற்கு போதுமான மருத்துவர்கள் கிடைக்கவில்லை என்ற ஒன்றிய அரசின் புலம்பலும், இளங்கலை மருத்துவ பட்டப்படிப்பிற்கு பிறகு கிராமப்புற மருத்துவ சேவைக்கு அவர்கள் விரும்பாத நிலையில் கட்டாயப் படுத்தித் தள்ளுவதும் அல்லது ஆய்வு மருத்துவர் களுக்கான ஒரு குறுகிய கால மருத்துவ பட்டயப் படிப்பை உருவாக்கி அதில் பயின்றவர்களை கிராமப் புற மருத்துவ சேவைக்குப் பயன்படுத்திக் கொள்வதும் வெறும் வாய்ச்சொல் வீராப்பேயாகும்.

2017க்குப் பிறகு வந்தநீட்தேர்வின் சோதனை களைத் தொடர்ந்து, உயர் சிறப்பு மருத்துவப் படிப் புகளுக்கான இடங்கள் அனைத்தும் 100% இடங்களை மாநில அரசுகள் ஒன்றிய அரசு தொகுப்புக்கு சரண் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக ஆக்கப் பட்டது. அந்தந்த மாநிலங்களின் தேவையான 15% இளங்கலை பட்டப்படிப்பு இடங்களும், 50% உயர் சிறப்பு மருத்துவ பட்டப்படிப்பு இடங்களும் அளிக்கப் படாமல், முழுமையாக அவை பொது கவுன்சிலுக்காக ஒன்றிய தொகுப்புக்கு சரண் செய்யப்படுகின்றன.

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசுப் பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு முன்பு அளிக்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டு நடைமுறை மீண்டும் தங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு உயர் சிறப்பு மருத்து வப் படிப்புக்கான இடங்களில் 50% இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

உச்சநிதிமன்ற தீர்ப்பை ஏற்று ஒன்றிய அரசு செயல்படுமா?

பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு முது கலைப் பட்டப்படிப்பிலும், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளிலும் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தகுதி, திறமை என்பதற்கான அகண்டதொரு விளக் கத்தை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கான இட ஒதுக் கீடுகளை அளித்து, மாநிலங்களின் தேவைகளை, நிறைவேற்றுதலில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டு இந்த ஆண்டிலேயே மாணவர் சேர்க்கையை ஒன்றிய அரசு மேற்கொள்ளுமா?

நன்றி: 'தி இந்து' 27.1.2022

தமிழில்: ..பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment