பெரியாருடைய கொள்கைகளில் நேரிடையான தொடர்பு இல்லாமல் இருக்கலாம்; ஆனால் - தந்தை பெரியாருடைய தாக்கமில்லாத குடும்பம் நாட்டிலே, உலகத்திலே எங்கும் இல்லை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 4, 2022

பெரியாருடைய கொள்கைகளில் நேரிடையான தொடர்பு இல்லாமல் இருக்கலாம்; ஆனால் - தந்தை பெரியாருடைய தாக்கமில்லாத குடும்பம் நாட்டிலே, உலகத்திலே எங்கும் இல்லை!

டாக்டர் கீர்த்திகா - டாக்டர் சந்தர்பால் மணவிழாவில் தமிழர் தலைவர் உரை

தஞ்சை, பிப்.4 தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகளில், நம்முடைய மணமக்களின் பெற்றோர், பாட்டிகள், தாத்தாக்களுக்கு நேரிடையான தொடர்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அக்கொள்கையினுடைய தாக்கம் என்பது இந்தக் குடும்பத்தில் எப்படி ஏற்பட்டு இருக்கிறது - தந்தை பெரியாருடைய தாக்கம் இல்லாத குடும்பம் நாட்டிலே, உலகத்திலே எங்கும் இல்லை என்பதற்கு அடையாளம் இந்தக் குடும்பங் களாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மணமக்கள் டாக்டர் கீர்த்திகா - டாக்டர் சந்தர்பால்

கடந்த 23.1.2022  அன்று காலை 10.30 மணியளவில்   தஞ்சாவூர் தீர்க்கசுமங்கலி திருமண மண்டபத்தில், தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகப் பதிவாளர் டாக்டர் சிறீவித்யா - தலைமை ஆசிரியர் டாக்டர் அறவாழி ஆகியோரின் மகள் டாக்டர் கீர்த்திகாவிற்கும், திண்டுக்கல் மாவட்டம் பாப்பணம்பட்டி கணேசன் - ஜெயக்குமாரி ஆகியோரின் மகன் டாக்டர் சந்தர்பாலுக்கும் வாழ்க்கை இணையேற்பு விழா நடைபெற்றது. இம்மணவிழாவில் காணொலிமூலம் திராவிடர் கழகத் தலைவர், பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழக வேந்தர் ஆசிரியர்

கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார். 

அவரது வாழ்த்துரை வருமாறு:

சிறப்போடும், இந்தக் கரோனா காலகட்டத்தில் அரசாங்கத்தின் கட்டுப்பாடு விதிகளைக் கடைப்பிடித்தும் நடைபெறக்கூடிய அன்புச்செல்வர்கள் சந்தர்பால் - கீர்த்தனா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சிக்கு நம் அனைவரையும் வரவேற்று உரை யாற்றிய மணமகளின் தந்தையார் பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்கும் உரிய, டாக்டர் அறவாழி அவர்களே, அவருடைய வாழ்விணையர் பேராசிரியர் சிறீவித்தியா அவர்களே,

இவர்களுடைய பெருமைமிகு சம்பந்தியார் திண்டுக்கல் மாவட்டம் பாப்பணம்பட்டி கணேசன் - ஜெயக்குமாரி அவர்களே,

இங்கே இணைப்புரை வழங்கிய கழகக் கிராமப்புற பிரச்சார செயலாளர் அருமைத் தோழர் முனைவர் அதிரடி அன்பழகன் அவர்களே,

மற்றும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு இணங்க, குறைவான அளவிலே இந்த மணவிழாவில் கலந்து கொள்ளவேண்டும் என்கின்ற முறையில், அந்தக் கட்டுப்பாட்டை நாம் தலைவணங்கி ஏற்றுக்கொண்டு நடைபெறக்கூடிய எளிய ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும், இனிய ஒரு நிகழ்ச்சி என்ற முறையில், இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்துள்ள உற்றார் உறவினர்களே, அருமைப் பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இம்மணவிழாவினை தலைமையேற்று நடத்த விருக்கக்கூடிய கழகப் பொதுச்செயலாளரும், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினருமான தோழர் அன்புராஜ் அவர்களே,

மற்றும் தாய்மார்களே, பெரியோர்களே, இயக்கத் தோழர்களே, உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.

அறிவியல் சார்ந்த  அற்புதமான ஒரு சாதனை

இந்த மணவிழாவில் குறைந்த அளவிலே கலந்து கொள்ளக் கூடியவர்களாக இருந்தாலும்கூட, இந்தக் காணொலிமூலமாக உலகம் முழுவதும் இருக்கக்கூடிய வர்கள் இந்த மணமக்களை வாழ்த்திக் கொண்டிருக் கிறார்கள் என்பது அறிவியல் சார்ந்த  அற்புதமான ஒரு சாதனையாகும்.

எவ்வளவு இடையூறுகள் இருந்தாலும், அந்த இடையூறுகளை மனிதனுடைய பகுத்தறிவு வெல்லக் கூடியது. அதுதான் தந்தை பெரியார் அவர்களுடைய மிக அறிவார்ந்த சாதனைகளில் மிக முக்கியமானது.

எல்லையற்ற மகிழ்ச்சியை அடைகிறோம்

அந்த வகையில், இந்த மணவிழாவில் நான் கலந்து கொள்வதற்குப் பல்வேறு தடைகள் இருந்தன. எனக்கு சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று ஏற்பட்டு, அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வெளியே வந்திருக்கிறேன். அப்படி வந்து, முதல் நிகழ்ச்சியாக அன்புச் செல்வர்கள் கீர்த்திகா - சந்தர்பால் ஆகியோ ருடைய மணவிழாவில் கலந்துகொள்வதில் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைகிறோம்.

இந்த மணவிழாவில் நாங்கள் குடும்பத்தோடு கலந்து கொள்வது என்பது இயல்பானது. வேந்தர் என்பதற் காகவோ அல்லது பதிவாளர் என்பதற்காகவோ மட்டும் இந்த மணவிழாவில் கலந்துகொள்ளவில்லை. அது ஒரு சாதாரண அம்சம். அதைவிட மிகவும் பெருமைக்குரியது என்னவென்று சொன்னால், இரண்டு நல்ல குடும்பங்கள் இணையக்கூடிய ஓர் அற்புதமான மணவிழா.

பெரியாருடைய தாக்கம் இல்லாமல்,

எந்தக் குடும்பமும் கிடையாது

தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகளில், நம்முடைய மணமக்களின் பெற்றோர், பாட்டிகள், தாத்தாக்களுக்கு நேரிடையான தொடர்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அக்கொள்கையினுடைய தாக்கம் என்பது இந்தக் குடும்பத்தில் எப்படி ஏற்பட்டு இருக்கிறது - பெரியாருடைய தாக்கம் இல்லாமல், எந்தக் குடும்பமும் கிடையாது என்பதற்கு அடையாளம் இந்தக் குடும்பங் களாகும்.

எடுத்துக்காட்டாகச் சொல்லவேண்டுமானால், மண மக்களைப் பாருங்கள்- மணமகன் டாக்டர் சந்தர் பால் அவர்கள், சிறப்பான வகையில் மருத்துவப் படிப்பு எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்.  ஆர்த்தோ படிப்பை படித்து முடித்திருக்கிறார்.

ஒரு கிராமிய எளிய சூழ்நிலையிலிருந்து அவருடைய இரண்டு, மூன்று தலைமுறைகளுக்கு முன்பு இந்த அளவிற்கு யாரும் படித்ததில்லை. ஆனால், பேரப் பிள்ளைகள் இன்றைக்கு இந்த அளவிற்குப் படித்தி ருக்கிறார்கள். தம்மின் தம்மக்கள் அறிவுடைமை என்று சொல்லக்கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கிறார்கள்.

அதுபோலவே நம்முடைய  மணமகள் கீர்த்தி காவைப்பற்றி சொல்லவேண்டுமானால், அவர் டாக் டராக இருக்கிறார். அவருடைய பெற்றோரில் ஒருவர் டாக்டர், இன்னொருவர் பேராசிரியர், ஆய்வாளர் - பல்கலைக் கழகப் பதிவாளராக இருக்கிறார்.

இப்படி இவர்கள் எல்லாம் இந்த அளவிற்குப் படித் திருக்கிறார்கள் என்றால், நன்றாக நீங்கள் நினைத்துப் பாரக்கவேண்டும். பெரியாருடைய தாக்கம் - ஏனென் றால், ஒரு காலத்தில் நாமெல்லாம் ஒடுக்கப்பட்ட சமுதா யத்தைச் சார்ந்தவர்கள்.

இந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் களுக்குப் படிக்க உரிமையில்லை. படிக்க உரிமையில் லாத காரணத்தால்,  உத்தியோகம் பார்க்கத் தகுதியில்லை. நமக்குத் திறமையில்லை என்று சொல்லி சொல்லி அழுத்தி வைத்திருந்தார்கள்.

நம்முடைய பிள்ளைகளுக்கு வாய்ப்புக் கொடுத்தால்,

யாருக்கும் குறைவானவர்கள் அல்ல

தந்தை பெரியார் அவர்கள் பிறந்து, சுயமரி யாதை இயக்கம் என்ற ஓர் இயக்கத்தைத் தொடங்கி, திராவிடர் இயக்கம் இன்றைக்குச் செய் திருக்கின்ற கல்வி புரட்சியைச் சொல்லவேண்டு மானால், மணமேடையை பாருங்கள் - நம்முடைய பிள்ளைகளுக்கு வாய்ப்புக் கொடுத்தால், யாருக் கும் குறைவானவர்கள் அல்ல அவர்கள். அந்த வகையிலே, இந்த மணமக்கள் அருமையான செல்வங்கள்; சிறப்பான ஆற்றல் வாய்ந்தவர்கள். அவர்கள் வாழ்க்கையில் இன்னும் முன்னேறு வார்கள்; முன்னேறவேண்டும் என்பதுதான் நம்முடைய பெரிய அவா.

அந்த வகையில், இந்த மணவிழாவினை நடத்தி வைக்க நான் ஒரு சம்பிரதாயமாக வர வில்லை. உள்ளபடியே ஓர் உறவு முறையிலே வந்திருக்கிறோம் என்று பெருமையோடு சொல் லுகிறோம்.

மூன்று வகை குடும்பங்கள்

எங்களைப் பொறுத்தவரையில், அதிலும் குறிப்பாக என்னைப் பொறுத்தவரையில், எங்கள் குடும்பம் என்று வருகின்றபொழுது, அதில் மூன்று வகை குடும்பங்கள் உண்டு.

என்ன அந்த மூன்ற வகை என்று சொன்னால்,

ஒன்று, குருதி - ரத்த உறவு உள்ள ஒரு குடும்பம்; அதில், மகன், மகள், பேரன், பேத்தி என்று நாம் வகைப்படுத்தக் கூடிய ரத்த உறவுள்ள ஒரு குடும்பம்.

இன்னொன்று, கொள்கை உறவுள்ள ஒரு குடும்பம். அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்திக் கொண்டு, அதனால் பயனும் அடைந்து கொண்டிருக்கக்கூடிய குடும்பம்தான் கொள்கைக் குடும்பம்.

ரத்த உறவுக் குடும்பத்திற்கு, ஒரு குறுகிய வீடு, குறுகிய இடம், ஒரு முகவரி உண்டு.

ஆனால், கொள்கை உறவிற்கு, உலகளாவிய அளவிற்கு, அதற்கு முகவரி. உலகம் முழுவதும் இருக்கக்கூடியவர்கள் நம் சொந்த பந்தங்கள்.

யாவரும் கேளிர் - அனைவரும் உறவினர் என்று சொல்லக்கூடிய அளவிற்குக் கொள்கை உறவுகள்.

மூன்றாவது வகை என்னவென்று சொன்னால், தந்தை பெரியார் அவர்களுடைய சிக்கனத்தினாலே, கையெழுத்துப் போடுவதற்குக்கூட நாலணா வாங்கி, அதையெல்லாம் முடிச்சுப் போட்டு வைத்து, அதை ஓர் அறக்கட்டளையாக்கி, கோடிக்கணக்கான ரூபாயை நன்கொடைகளாகப் பெற்று, பொதுமக்களுக்கே அது பயன்படக்கூடிய அளவிற்கு, பள்ளிக்கூடமாக, உயர்நிலைப்பள்ளியாக, ஆசிரியைப் பயிற்சி பள்ளியாக, குழந்தைகள் இல்லமாக, பத்திரிகை நிலையங்களாக, மருத்துவமனைகளாக, பல்கலைக் கழகங்களாக, பாலிடெக்னிக்குகளாக, மருந்தியல் கல்லூரிகளாக இன்றைக்கு ஆகி, அதன்மூலமாக மிகப்பெரிய அளவிற்கு திகழக்கூடிய கல்விக் குடும்பம்.

கொள்கை உறவுள்ள கொள்கைக் குடும்பம்தான் முதலில்!

எனவே, மூவகைக் குடும்பம்.

குருதிக் குடும்பம் - குறுகிய குடும்பம்.

என்னைப் பொறுத்தவரையில், எங்களைப் பொறுத்தவரையில், குருதிக் குடும்பத்தை வரிசைப் படுத்தினால், முதல் வரிசையில், நாங்கள் முதலில் எண்ணிப்பார்க்கவேண்டிய குடும்பம், கொள்கை உறவுள்ள கொள்கைக் குடும்பம். இரண்டாவது கல்விக் குடும்பம். மூன்றாவது எங்கள் குருதிக் குடும்பம்.

எங்களுக்கு உறவு என்பது ஒரு சாதாரணம். உறவை விட நெருக்கமானது கொள்கை உறவு. ஆகவேதான், மூன்றாவது வரிசையிலே நாங்கள் நிற்போம்.

சிறீவித்யா - அறவாழி குடும்பம்- கொள்கை உறவுள்ள குடும்பம்- கல்வி உறவுள்ள குடும்பம்!

அந்த வகையில் பார்க்கும்பொழுது சிறீவித்யா, அவருடைய வாழ்விணையர் அருமை நண்பர் அறவாழி அவர்களானாலும், அவர்கள் எங் களுக்குக் கொள்கை உறவுள்ள குடும்பமும்கூட, கல்வி உறவுள்ள குடும்பமும் கூட.

சிறீவித்யா அவர்கள், கல்லூரியாக இருந்து பல் கலைக் கழகமாக மாறியிருக்கிறபோது - அவர்கள் இந்தத் துறைக்கு வந்தார்கள். கடுமையாக உழைக் கக்கூடியவர். எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும், அதனை மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர்.

அதிலும், இந்த சமுதாயத்திலே, ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலே பெண்கள் படிப்பது என்பது அபூர்வம். அந்த வகையில், ஒரு கிராமப் பகுதியி லிருந்து, ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து ஒரு பெண் வந்து, யாருடைய தயவும் இல்லாமல் சிறப்பாகப் படித்து முடித்து, வாழ்க்கையில் முன் னேறி வந்திருப்பதை பெருமைக்குரிய ஒன்றாக நாம் நினைக்கிறோம்.

அந்த வெற்றிக்குக் காரணமானவர், அவருக்குத் துணையாக நின்றவர் அவருடைய வாழ்விணை யராக இருக்கக்கூடிய டாக்டர் அவர்களாவார்கள்.

அந்த வகையிலே நண்பர்களே, எங்களுடைய கல்வி உறவுக் குடும்பத்தில் நாங்கள் பெருமையோடு மதிக்கின்ற பதிவாளர். அதனால்தான், அவரே எதிர்பார்க்காத நேரத்தில், அவரை நாங்கள் பதி வாளராகத் தேர்ந்தெடுத்து நியமனம் செய்தோம்.

எந்தப் பொறுப்பாக இருந்தாலும், ஆய்வாக இருந்தாலும், எந்தத் தகவலைக் கேட்டாலும் விரல் நுனியிலே வைத்துக்கொண்டு சொல்லக்கூடிய ஆற்றல்  வாய்ந்தவர் சிறீவித்தியா அவர்கள்.

அவருடைய பெற்றோர், அவருடைய பாட்ட னார் உள்பட எல்லோரும் நம்முடைய பாராட்டு தலுக்கும், பெருமைக்கும் உரியவர்கள்.

ஒரு நல்ல குடும்பம் - பல்கலைக் கழகம்

அந்த வகையில், இந்தக் குடும்பம் ஒரு நல்ல குடும்பம் - பல்கலைக் கழகம் என்ற அளவிலே இது பெரு மைக்குரிய குடும்பமாகும்.

எனவேதான், இந்த மணவிழாவினை தஞ்சைக்கே வந்து நடத்தி வைக்கக்கூடிய வாய்ப்பினைப் பெரிதும் எதிர்பார்த்திருந்தேன். ஆனால், இன்றைய சூழ்நிலை யில், கரோனா தொற்று காலகட்டத்தில் வர முடியாத சூழ்நிலை. இன்றைக்குக்கூட ஊரடங்கு - இந்த ஊரடங் கில், தனி அனுமதி பெற்று, இப்போது இந்த மணவிழா நடைபெறுகிறது. குறிப்பிட்ட அளவிற்குத்தான் நபர்கள் பங்கேற்க முடியும். வர முடியாத சூழலில், காணொலி மூலமாக இம்மணவிழாவினை  நடத்தி வைக்கிறேன்.

மணமகள் கிருத்திகா அவர்கள், இந்தப் பின்னணியில் இருந்தவர். ஆனால், மணமகன் சந்தர்பால் அவர்களை நன்றாகப் படிக்க வைத்த அவருடைய பெற்றோரைப் பாராட்டவேண்டும். ஒரு காலத்தில் நமக்கெல்லாம் படிக்கக்கூடிய வாய்ப்பு கிடையாது.

சமஸ்கிருதம் படித்திருந்தால்தான், மருத்துவக் கல்லூரியில்  மனுவே போட முடியும் என்றிருந்த நிலையை மாற்றியமைத்தது திராவிடர் இயக்கம்.

ஆகவே, அருமை நண்பர்களே, திராவிடர் இயக்கம் என்ன செய்தது என்று பல பேருக்குத் தெரியாது.

பெரியாருடைய தாக்கமில்லாத குடும்பம் நாட்டிலே, உலகத்திலே எங்கும் இல்லை!

எனவே, இந்தக் குடும்பம் பெரியாருடைய கொள்கை களை நேரிடையாக ஏற்றுக்கொள்ளாத, கருப்புச் சட்டை போடாத குடும்பமாக இருக்கலாம். ஆனால், பெரியாரு டைய தாக்கமில்லாத குடும்பம் நாட்டிலே, உலகத்திலே எங்கும் இல்லை.

பெரியாருடைய உழைப்பினாலே பயன்பட்டு இருக்கிறார்கள்

எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டவர்கள் படித்திருக் கிறார்களோ, எங்கெல்லாம் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், அழுத்தப்பட்டவர்கள் உத்தி யோகத்திற்குப் போயிருக்கிறார்களோ, அவர்கள் அத் தனை பேரும் பெரியாருக்குக் கடன் பட்டிருக்கிறார்கள். பெரியாருடைய உழைப்பினாலே அவர்கள் பயன்பட்டு இருக்கிறார்கள்.

அந்த வகையிலே இந்தக் குடும்பம் ஒரு சிறந்த குடும்பம். எனவே, இந்த மணவிழாவினை நடத்தி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும், வாய்ப்பையும் அடைகிறேன். ஒரே ஒரு வருத்தம், நேரிலே வந்து  நான் கலந்துகொள்ளா முடியாவிட்டாலும், அறிவியல் அதற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கிறது.

நான் சில நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்தபொழுதுகூட, எப்படியாவது இந்த மணவிழா விற்கு வந்துவிடவேண்டும் என்று நினைத்த நேரத்தில், அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

ஆகவே, அன்புராஜ் அவர்களை அனுப்பி வைத்தேன். அந்த வகையிலே, இது சிறப்பான மணவிழா. நம்முடைய இயக்கப் பொறுப்பாளர்கள், கல்வியாளர்கள், துணை வேந்தர் போன்றவர்கள் இம்மணவிழாவில் பங்கேற்று இருக்கிறார்கள்.

வெறும் சம்பளத்திற்காகப் பணியாற்றக் கூடியவர்கள் அல்ல

பல்கலைக் கழக உறவுகள் என்பது இருக்கிறதே, அவர்கள் அத்துணை பேரும் எங்களுக்கு உறவுகள். கல்வி உறவுகள். இங்கே பணியாற்றக் கூடியவர்கள் யாரும் வெறும் சம்பளத்திற்காகப் பணியாற்றக் கூடிய வர்கள் அல்ல. ஒரு குடும்ப உறவோடு இருக்கக் கூடிய வர்கள். அவர்களுடைய நலனும், நல் வாழ்வும், அவர் களுடைய வளமும், வாழ்வும் சிறந்து, அவர்களுடைய முன்னேற்றத்தை எங்கள் முன்னேற்றமாக நாங்கள் கருதக் கூடியவர்கள்.

அந்த வகையிலேதான், இந்த மணவிழாவில் பங் கேற்பதை மிகமிக இன்றியமையாத கடமையாக நாங்கள் கருதுகிறோம்.

எனவே, எனது சார்பிலும், என்னுடைய வாழ்விணை யர் சார்பிலும், எங்களுடைய அத்துணைக் குடும்பங் களின் சார்பிலும், மணமக்களை வாழ்த்துவதோடு,

மணமக்களே, நீங்கள் எளிமையாக வாழுங்கள், சிறப்பாக வாழுங்கள். உங்களுடைய அறிவு, ஆற்றல் என்பது பெரிது. நான் எப்பொழுதும் மணமக்களுக்கு அறிவுரை சொல்வதில்லை. வேண்டுகோளாகத்தான்  வைப்பேன்.

அந்த வகையிலே, அன்பார்ந்த மணமக்களே, வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவோ உயருவீர்கள்; உங்களுக்கு அறிவும், ஆற்றலும் உண்டு.

உங்களிடம் ஒன்றே ஒன்றைத்தான் கேட்டுக் கொள்கிறேன்.

உங்களுக்காக காலம் முழுவதும் உழைத்த உங்கள் பெற்றோரிடம் நன்றி காட்ட மறக்காதீர்கள்; உங்கள் பெற் றோரிடம் பாசத்தைக் காட்ட மறக்காதீர்கள். உங்களிடம் அவர்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை; பாசத்தை, அன்பைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அதை என் றைக்கும் மறக்காமல் செய்யுங்கள்.

தன் பெண்டு, தன் பிள்ளை, தன் குடும்பம் என் றில்லாமல், எல்லா மக்களுக்கும் பயன்படக்கூடிய அள விற்கு, வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம் எல் லோருக்கும் உதவி செய்யுங்கள்.

நாம் முதலில் நம்முடைய வாழ்க்கையை சரிப்படுத்திக் கொள்ளவேண்டியதுதான்.

இல்லறம் - தொண்டறம்

பெரியார்தான் தொண்டறம் என்ற வார்த்தையை சொன்னார். முந்தைய காலத்தில் இல்லறத்திற்கு அடுத்து துறவறம் என்று சொல்வார்கள். ஆனால், தந்தை பெரியார் அவர்கள்தான் இல்லறத்திற்குப் பிறகு நல்லறம்; அந்த நல்லறத்திற்கு என்ன அடையாளம் என்றால் தொண்டறம்.

ஆகவே, வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம் தொண்டறம் செய்யுங்கள்; உதவி செய்யுங்கள்.

எளிமையாக வாழுங்கள், சிக்கனமாக வாழுங்கள்; மேலும் முன்னேற்றத்தோடு வாழக்கூடிய அளவிற்குத் தன்னம்பிக்கையோடு வாழுங்கள்.

எங்கே தன்னம்பிக்கை இருக்கிறதோ, அங்கே மூடநம்பிக்கைகளுக்கு இடமில்லை.

இந்த மணவிழாவிற்கு வந்திருக்கக்கூடிய உற்றார் உறவினர்களுக்குச் சொல்கிறேன்.

இங்கே எவ்வளவு மகிழ்ச்சியாக இந்த மணமக்கள் அமர்ந்திருக்கிறார்கள்; எவ்வளவு எளிமையாக அமர்ந் திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.

ஆகவேதான், மணமக்களே, நீங்கள் ஒருவருக் கொருவர் அன்பு பாராட்டவேண்டும். இந்த மகிழ்ச்சி நீடிக்கவேண்டுமானால், அது பிரமாதமல்ல - மிகச் சாதாரணமான ஒரு காரியத்தை செய்தால், உங்களுக்கு எப்பொழுது அந்த மகிழ்ச்சி ஏற்படும்?

என்ன செய்யவேண்டும் என்று கேட்கிறீர்களா?

தன்முனைப்பில்லாமல் இருவரும் நடந்துகொள்ள வேண்டும். ஒருவருடைய வெற்றி, இன்னொருவருடைய தோல்வி என்பது மற்ற இடங்களில்.

ஆனால், நீங்கள் இருவரும் போட்டி போடுகின்ற நேரத்தில்,  யாருக்காக, யார் விட்டுக் கொடுக்கிறார்களோ; யார் முதலிலே தோல்வி அடைகிறார்களோ, அதுதான் மிகவும் சிறப்பானது.

தேர்தலில் வெற்றி, விளையாட்டிலே வெற்றி என்பது வெற்றி பெற்றவர்களுக்கு. ஆனால், நண்பர்களே, உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால், போட்டிப் போட்டுக்கொண்டு, ஒருவருக்கொருவர் உங்களுக்குள் தோல்வி அடைய வேண்டும்.

மணமக்களை வாழ்த்துவதற்கு தஞ்சை தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், என்னுடைய அன்பிற் குரிய சகோதரருமான நீலமேகம் அவர்கள் வந்திருக்கிறார்.

ஊரடங்கு என்றாலும்கூடபெரியார் கொள்கைகள் அடங்காது

ஆகவே, இந்த மணவிழாவிற்குப் பல நண்பர்கள் வந்திருக்கிறார்கள். இன்றைக்கு ஊரடங்கு என்றாலும்கூட, பெரியார் கொள்கைகள் அடங்காது, அடங்காது என்ப தற்கு அடையாளமாக இம்மணவிழா நடைபெறுகிறது.

மணமக்களே நல்ல வண்ணம் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

சுயமரியாதை வாழ்வு சுகவாழ்வு!

சுயமரியாதை வாழ்வு என்பது, மற்றவர்களை மதிப்பது.

ஒழுக்கம் என்பது மற்றவர்கள் நம்மை எப்படி நடத்தவேண்டும் என்று நினைக்கின்றோமோ, அப்படியே நாம் மற்றவர்களை நடத்தவேண்டும் என்பதுதான் ஒழுக்கம்.

எனவேதான், நீங்கள் எளிமையாக, சிக்கனத்தோடு, கட்டுப்பாடோடு, தொண்டறத்தோடு வாழுங்கள் என்று கேட்டு,

இம்மணவிழாவிற்கு வந்திருக்கின்ற அனைவரையும், இந்தக் கல்விக் குடும்பத்தினுடைய தலைவன் என்கிற முறையில், சட்டப்பேரவை உறுப்பினர் உள்பட அனைவரையும் வருக! வருக! என வரவேற்கிறேன்.

இந்தக் குடும்பம் எங்களுடைய குடும்பம் - நம்முடைய குடும்பம். ஆகவேதான், அனைவரையும் வரவேற்க வேண்டியது என்னுடைய கடமையும்கூட!

மணமக்களுடைய தொண்டறம் வெல்க!

அந்த வகையில், நான், உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து, வரவேற்று மணமக்கள் வாழ்க! மணமக்களுடைய தொண்டறம் வெல்க என்று சொல்லி என்னுடைய வாழ்த்துரையை முடிக்கின்றேன்.

வாழ்க பெரியார்!

வாழ்க மணமக்கள்!

வளர்க பகுத்தறிவு!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

No comments:

Post a Comment