பொங்கல் விழா - நினைவும் நிஜமும் - தஞ்சாவூர் கவிராயர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 13, 2022

பொங்கல் விழா - நினைவும் நிஜமும் - தஞ்சாவூர் கவிராயர்

மாநகரங்களில் திருவிழாக்கள் வருகின்றன, போகின்றன அவை வந்து சென்றதற்கான சுவடுகளைக் காணமுடிவதில்லை. பொங்கலும் அதற்கு விலக்கல்ல. தமிழர் பண்பாட்டின் அடையாளமாகத்திகழும் பொங்கல் திருவிழாவுக்கு சென்னையில் முக்கியத்துவம் தரப்படுவதில்லை. மாநகர வாழ்வும் வளர்ச்சியும் கிராமங்களைச் சார்ந்து நிற்பினும் உழவுத் தொழிலையும், உழவுப் பண்பாட்டின் விழுமியங்களையும் முதன்மைப்படுத்தும் பொங்கல் திருவிழாவுக்கு சென்னையில் சிறப்பில்லை. இது ஒருவகையான பண்பாட்டு வீழ்ச்சி, மாநகரங்களின் ஆக்டோபஸ் விரல்கள் கிராமங்களையும் தீண்டிவரும் நிலையில் பொங்கல் தரும் உற்சாகம் கிராமங்களிலும் மங்கிவருகிறது.

துள்ளாத மனமும் துள்ளும்:

 பொங்கல் என்று சொன்ன மாத்திரத்தில் என் மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. இது கடந்தகால நினைவுகளில் எழுகின்ற மகிழ்ச்சி. இத்தனைக்கும் தஞ்சை மாவட்டச் சிற்றூரிலிருந்து சென்னைக்குப் புலம் பெயர்ந்து ஏறத்தாழ முப்பது வருடங்கள் ஆகிவிட்டன. மானுட வாழ்வின் கணிசமான காலகட்டத்தை மாநகரில் கழித்திருக்கிறேன். கிராமத்தில் வாழ்ந்தபோது கிடைத்த நினைவுகளை அசைபோடுவதில் ஏற்படும் கிளர்ச்சிக்கு ஈடு இணைகிடையாது.

பொங்கல் வந்துவிட்டதற்கு அடையாளமாக போகிப் பண்டிகையை சென்னை வாசிகள் கொண்டாடுகிற கொடுமையைச் சொல்லவேண்டும். எங்கே பார்த்தாலும் பிளாஸ்டிக் குப்பைகளையும், டயர்களையும் எரித்து புகை மண்டலத்தை உருவாக்கி மூச்சுத் திணறவைக்கும் மாநகரவாசிகள் மீது ஒரு கையாலாகாத கோபம்தான் வருகிறது. பழையன கழித்து புதியன புதுக்கும் மனப் பக்குவம் மறைந்து எரித்தலை முன் நிறுத்தி வாழ்தலைச் சிதைக்கும் வக்கிரப் போக்கு வந்துவிட்டது.

கிராமங்களில் பழங்குப்பைகள், செத்தைச் சருகுகள், பழம்பாய்கள் ஆகியவற்றை எரித்து நம்மைவிட்டு அழுக்கும் குப்பையும் அகன்று விட்டதான உணர்வுடன் எழுகின்ற புகை மூட்டத்தில் பழமைக் குளிர் விலகி புதுமைக் கதிர் துலங்கும் வெம்மையின் கதகதப்பாக விளங்கும் போகிப் பண்டிகை.

குக்கரில் அடங்கும் பொங்கல்

மாநகரப் பொங்கல் குக்கரில் அடங்கிவிட்டது. குக்கர் சத்தத்துடன் பொங்கலோ பொங்கல் என்று குரல் எழுப்பும் குடும்பங்களும் உண்டு. அவர்களைப் பார்க்க பாவமாக இருக்கும். உழவனின் உழைப்பைப் பறைசாற்றும் சாதனைத் திருவிழாவை வெறும் சடங்காக மாற்றிவிட்டோம். நகரத்துக் கடைகளில் கரும்புக் கட்டுகள் வந்து இறங்குகின்றன. வாழைப் பழங்களும் விற்கப்படுகின்றன. இஞ்சி, மஞ்சள் கொத்து விற்பனையும் அமோகம்தான். குக்கரின் இடுப்பிலே மஞ்சள் கொத்து பார்க்கவே சகிக்கவில்லை.

கதிரவனுக்கு நன்றி:

விளை நிலங்கள் வீடுகட்டும் நிலங்களாக விற்கப்படாத காலத்தில் வாழ்ந்த தலைமுறையினரின் கடைசிக் கண்ணிகள் கழன்று விழுகின்றன. அறுவடை செய்த நெற்பயிற் கட்டுகளை களத்து மேட்டில் குவித்து போரடிக்கும்போது எழுகின்ற வைக்கோல் வாசனை அலாதியானது. அன்று நெற்கதிர்களைத் தூக்கி போரடித்த கைகளை வயல் வஞ்சித்து விட்டது. அன்று கதிரவனுக்கு நன்றி தெரிவிக்க கூப்பிய கரங்கள் பிழைப்புக்காக நகர்ப்புறத்தில் காரையும் மண்ணும் சுமக்கின்றன. காடுவெட்டி நிலம் திருத்தி கழனியில் பணிபுரிந்த உழவர்களை காலம் கட்டட வேலைச் சித்தாள்களாக மாற்றிவிட்டது.

சூரியனும் சிட்டுக்குருவிகளும்:

சிறு பிராயத்தில் தஞ்சை கிராமம் ஒன்றில் உழவர் பெருங்குடி மக்கள் கூட்டத்தோடு வாழ்கின்ற பேறு எனக்குக் கிடைத்தது. பொங்கல் சமயத்தில் அவர்கள் வீட்டை பூச் செண்டுகளால் அலங்கரிப்பதில்லை. அறுவடை செய்த பொற்கதிர்களின் கரங்களாய் மின்னும் தானியக் கொத்தினை செண்டுபோல் வீட்டு வாசலில் கட்டித் தொங்கவிடுவார்கள். அந்த தானியத்தைக் கொத்தவரும் சிட்டுக்குருவிகள் வீட்டுத் தாழ்வாரத்தில் பறக்கும், எங்கள் வீட்டுக்குப் பின்னால் கண்ணுக்கெட்டிய தூரம் அறுவடை செய்த வயல்கள் பரந்து கிடக்கும். இச்சமயத்தில்தான் பூம் பூம் மாட்டுக்காரர்களும், குறி சொல்பவர்களும் வருவார்கள். அறுவடை செய்த வயல்களில் ஆட்டுக்கிடை போட கீதாரிகள் வருவார்கள். இவர்களின் வருகை பொங்கலை முன்னறிவிப்பதாக இருக்கும்

அறுவடைத் திருவிழா:

கிரேக்க இதிகாசங்களில் ஞாயிறு வழிபாடு இருந்திருக்கிறது. வேதங்களும், உபநிடதங்களும் சூரியனைப் போற்றி வழிபடுகின்றன. தமிழ்நாட்டு உழவர் ஞாயிற்றின் மக்கள். சிலப்பதிகாரம் ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் என்று மங்கல வாழ்த்தோடு தொடங்குகிறது.

சிற்றூர்ப் பொங்கல் சித்திரங்கள்.

சிற்றூர்ப் பொங்கல் சித்திரங்கள் இன்றளவும் மனதில் நினைவின் வண்ணம் மாறாது உள்ளன. கிராமத்திலுள்ள வீடுகளுக்கெல்லாம் ஒட்டடை அடித்து வெள்ளை பூசுவது கோலாகலமாக நடக்கும். ஏணியில் ஏறி தென்னைமட்டைத் தூரிகையோடு அப்பா மேலே நிற்க கீழிருந்தபடி மகனோ மகளோ சுண்ணாம்பு வாளியை உயர்த்துவார்கள். பாய்களை நனைத்து காயப்போடும் வேலை நடக்கும். திண்ணைச் சுவற்றில் தரையிலிருந்து ஓரடி உயரத்துக்கு காவிப்பட்டைகள் தீட்டுவோம்.

குடிசை வீடுகளின் கூரைகளின் மீது ஏறிப் பூசணிக் கொடிகளில் பூசணிப்பூ பூத்துக்குலுங்கும். அவற்றின் ஊடாக பச்சைக்காய்களும் தென்படும். தெருவில் போடப்படும் கோலங்களின் நடுவே பிடித்து வைக்கப்படும் சாணத்தின்மீது அழகாக பூசணி பூத்துநிற்கும். பூசணி பூத்துவிட்டால் பொங்கல் பூத்துவிட்டது என்று பொருள். சாணியோடு அப்பூசணிப்பூவை எறிந்துவிட மாட்டார்கள். அப்படியே எடுத்து வறட்டிதட்டி காயவைத்து பொங்கல் அடுப்பில் போடுவார்கள். அடுப்பிலே பற்றிய நெருப்பில் பூசணி மறுபடி மலரும். சூரியனை வரவேற்கும் சுடராக மாறும்.

வீட்டு முற்றத்தில் பொங்கல் பானைகளை போட்டி போட்டுக் கொண்டு எரிப்போம். பொங்கல் பொங்கி வரும்போதுபொங்கலோ பொங்கல்என்று கூவுவோம். பறை தட்டுவோம். வீட்டில் பிறந்த பெண்ணுக்கு சீர்வரிசை கொடுக்கும் பழக்கமும் நகர்ப்புறங்களில் இல்லை. வண்டி கட்டிக் கொண்டு வாழைத்தாரும், கரும்புக் கட்டும், பரிசுப் பணமும் தந்துவிடும் பழக்கம் அற்புதமானது. இப்பழக்கம் மணி ஆர்டரில் சீர் அனுப்பும் பழக்கமாக  மங்கிவிட்டது.

தோட்டத்தில் விளைந்த காய்கறிகளும், கூடத்து வாழைப்பழத்தாரும் சேர்ந்து ஒரு வாசனை கமழும். வாழைத்தாரிலிருந்து வாழைப்பழங்களைப் பறித்துத் தின்போம். ஒவ்வோர் நாள் கனிதலுக்கும் ஏற்ப அதில் ஒரு சுவை ஏறி இருக்கும். கரும்பைக் கடித்து துப்பிய வெள்ளைச் சக்கைகள் குவிந்து கிடக்கும்.

கொம்பிலே கலை வண்ணம் கண்டார்

மாட்டுப் பொங்கலின்போது மாடுகளின் கொம்புகளுக்கும் வண்ணம் தீட்டுவார்கள். வண்டியில் பூட்டிய மாட்டுவண்டிகளின் பந்தயம் நடக்கும். பொங்கலன்று தெருவில் சைக்கிளில் வந்து, தபால்காரர் நிற்பார். நாங்கள் ஓவென்று. கத்திக்கொண்டு ஓடிப்போய் அவர் முன்னால் நிற்போம். அப்பாவுக்கு நிறைய பொங்கல் வாழ்த்துக்கள் வரும். வண்ண வண்ண வாழ்த்து அட்டைகள். பொங்கல் வாழ்த்துக்களை பெறுகிற முகங்களில் எத்தனை பெருமிதம் எத்தனை மகிழ்ச்சி! இப்போதெல்லாம் பொங்கல் வாழ்த்துக்கள்! குறுஞ்செய்திகளாய் மின்னி மறைகின்றன.

கிராம சேவகர் பாட்டு

வெள்ளைக் கதர் சட்டையும் வேட்டியுமாக கிராம சேவகர் வருவார். நாமக்கல் கவிஞர் பாடிய உழவர் திருநாள் பாட்டினை அவர் பாட நாங்கள் கோரசாகப் பாடுவோம்.

உணவுப் பொருள்கள் இல்லாமல்

உயிரோடிருப்பது செல்லாது

உழவுத் தொழிலே உணவுதரும்

உடையும் அதனால் அணிய வரும்

தங்கமும் வெள்ளியும் இருந்தாலும்

தானியம் ஒன்றே விருந்தாகும்

என்ற நினைவில் நிற்கும் பொங்கல் வரிகளை இன்று நினைத்துப் பார்த்தால் பெருமூச்சுதான் வருகிறது. -

(நன்றி: காக்கைச் சிறகினிலே , ஜனவரி-2022)

No comments:

Post a Comment