ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 8, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: உத்தரப் பிரதேசத் தேர்தலில் இந்த முறையாவது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பா... ஆட்சியை வீழ்த்த வாய்ப்புள்ளதா?

-இன்பத்தமிழன், பிலாக்குறிச்சி

பதில்: ‘எல்லோரும் அங்கே தனித்தனிதான்; ஏகமனதாகி அவர் நம்மை எதிர்ப்பதெங்கே?’ என்ற புரட்சிக்கவிஞரின் கவிதை வரிகள் தான் நினைவுக்கு வரும் நிலை.

விவசாயிகள், மக்கள் தயாராகிவிட்டனர் பா...வை வீழ்த்த! அநேகமாக மக்கள் வெற்றி பெறுவார்கள். அங்கே கட்சித் தலைவர்கள் கடவுளிடம் மாற்றிமாற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்! ஒருவர் இராமரிடம், மற்றொருவர் கிருஷ்ணனிடம், இன்னொருவர் பரசுராமனிடத்தில்!  பூணூல்களுக்கு நல்ல கிராக்கி - காரணம் அங்கு மக்கள் தொகையில் 12 சதவிகிதமாம் அவர்கள்! 88 சதவிகிதத்தினர் பிளவுபட்டுக் கிடக்கிறார்கள்; அதனால் நப்பாசை காவிகளுக்கு!  

கேள்வி 2: இந்தியாவில் கல்வியில் முன்னோடி மாநிலமாகத்  தமிழ்நாடு திகழும் நிலையில் அண்மையில் நீதிமன்றங்கள் பல்கலைக் கழகங்களை அவற்றின் தரம் குறித்து விமர்சிப்பதில் குறியாக உள்ளனவே - ஏன்?

- திராவிட விஷ்ணு, வீராக்கன்

பதில்: தமிழ்நாடு உடனடியாக அதன் மாநில கல்விக்கொள்கையை அறிவிப்பதே சரியான தடுப்பு நடவடிக்கை. சட்டப்படி நமக்குள்ள உரிமையை நாம் பயன்படுத்த வேண்டாமா?

கேள்வி 3: தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே விளங்கும் வண்ணம் சட்டம் இயற்றினால் என்ன?

-தமிழ்க்குமரன், ஈரோடு

பதில்: சட்டமன்றத்தின்  அடுத்த கூட்டத்தொடரில் அதுபற்றிய தீர்மானம்  கொண்டு வருவதாக அறிவிப்பு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் கேரளம் நமக்கு வழிகாட்டுகிறதே!

 கேள்வி 4: ஒவ்வொரு ஜாதியினரும் சங்கம் உருவாக்கி இளைஞர்களை சத்திரியர் என்ற போலிப் பெருமையும்,  ஜாதி ஆணவமும் உள்ள வெறியர்களாக மாற்றுகிறார்களே  - இதற்கு பதிலடியாக என்னதான் செய்வது?

-தமிழ் மைந்தன், சைதாப்பேட்டை

பதில்: இளைஞர்கள் ஜாதி வெறியர்களை ஒதுக்கி, மூலையில் முக்காடு போடும்படிச் செய்ய உறுதியேற்று - உழைத்து உதயசூரியனின் பிரகாச ஒளியை பெரிதாக்க முன்வருவதே ஒரே வழி. சட்டப்படி தமிழ்நாட்டில் இரண்டு பிரிவுகள் மட்டுமே - ‘பிராமணன்’ - ‘சூத்திரன்’ - பஞ்சமர் கூட அவர்ணஸ்தர்களே!

கேள்வி 5: ‘நீட்டுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றி அனுப்பி வைத்தும் .தி.மு.. ஆட்சிக் காலத்தைப் போலவே, தி.மு.. ஆட்சிக் காலத்திலும் எதுவும் முன்னேற்றம் இல்லையே..?

- வீரேஷ் குமார், மயிலாடுதுறை

பதில்: அவசரப்பட வேண்டாம். அதற்கான தீவிர முயற்சிகள் தொடங்குகின்றன. முதலமைச்சர் முயற்சிகள் துவங்கிவிட்டன! எதிர்நீச்சலில் வெற்றி பெறுவார் - பெறுவோம்!

கேள்வி 6: பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு சரியா, இல்லையா என்னும் விவாதத்திற்குப் பதிலாக, ரூ. 8 லட்சம் உச்சவரம்பு என்பது சரியா, தவறா என்னும் விவாதமாக இப் பிரச்சினை சுருங்கிவிட்டதா?

- முகிலா, குரோம்பேட்டை

பதில்: அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இது கிளைதான்; அதற்கு 5 நீதிபதிகள் அமர்வு (Full Bench) விசாரணை நடைபெறும், அதைப்பற்றி விவாதம் வந்துதானே ஆக வேண்டும்?

கேள்வி 7: பஞ்சாபில் பிரதமர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி பாதுகாப்பு குறைபாடு காரணமாக ரத்து செய்யப்பட்டதாக பிரதமரும், கூட்டம் சேராததால் ரத்து செய்யப்பட்டதாக காங்கிரசும் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டுகின்றனரே, யார் சொல்வது உண்மை ?

- .மணிமேகலை, வியாசர்பாடி

பதில்: பிரதமர் சென்று - நிகழ்ச்சியை ஒத்தி வைத்துத் திரும்பி வந்தார் டில்லிக்கு என்பதே உண்மை! யார் எது காரணம் என்பது வெளிப்படையான ஆய்வுக்கு உரியது!

கேள்வி 8: இணைய சூதாட்டங்கள் தொடர்ந்து பலரின் உயிரைப் பறித்து வரும் நிலையில் அவற்றுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய நீதிமன்றத்தின் தீர்ப்பு இனியாவது மாறுமா?

- கோ.ராஜேந்திரன், புதுச்சேரி

பதில்: இடையே உள்ள வழக்குகளால் ஏற்பட்ட தடை நீக்கம்கிளியரன்ஸ்ஆகி வரும்வரை காத்திராது நிச்சயம் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டம் கொண்டு வரலாம்; இன்றேல் அவசரச்சட்டம் கூட நிறைவேற்றலாம்.

கேள்வி 9: அகில இந்திய காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி பா...வை விமர்சிப்பதை விட பல மடங்கு கூடுதலாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறாரே?

-மன்னை சித்து , மன்னார்குடி - 1.

பதில்: நோய் நாடி, நோய் முதல் நாடும் சிறந்த மருத்துவ முறையைக் கையாளும் ராகுல்காந்திக்கு நமது பாராட்டுகள்! இதுவே சரியான அணுகுமுறையாகும்.

No comments:

Post a Comment