தமிழ்நாடு, புதுச்சேரி வானொலி நிலையங்களை மூடுவதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 13, 2022

தமிழ்நாடு, புதுச்சேரி வானொலி நிலையங்களை மூடுவதா?

தமிழ்நாடு, புதுச்சேரி வானொலி நிலையங்களை மூடுவதா? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:

நாட்டிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிய பா... அரசு தனியார் மயமாக்குவதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்ற நிலையில், ஒன்றிய அரசின் தகவல் ஒலிபரப்புத்துறையின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் இயங்கிவரும் வானொலி நிலையங்களை முடக்கும் முடிவை ஒன்றிய பா... அரசு எடுத்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரசார் பாரதி முடிவு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள மொத்தம் ஆறு வானொலி நிலையங்களில், சென்னை வானொலி நிலை யத்தை முதன்மை நிகழ்ச்சி தயாரிப்பு நிலையமாக வைத் துக்கொண்டு புதுச்சேரி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய வானொலி நிலையங்களை வெறு மனே ஒலிபரப்பு நிலையங்களாக மாற்றுவது என பிரசார் பாரதி முடிவு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

 இதுவரை அனைத்து வானொலி நிலையங்களுமே நிகழ்ச்சி தயாரிப்பு நிலையங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. உள்ளூர் பண்பாடு, விவசாயம், நாட்டுப்புறக் கலைகள், அப்பகுதி மக்களுக்குத் தேவையான தகவல்கள், வட்டாரச் செய்திகள் என ஒவ்வொரு வானொலி நிலை யமும் ஒவ்வொரு 12 மணி நேரத்திற்கு தனது சொந்த தயாரிப்பு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்து வருகின்றன.

நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலையிழப்பார்கள்

இவை தவிர அகில இந்திய வானொலியின் சென்னை முதன்மை நிகழ்ச்சி தயாரிப்பு மய்யத்தின் நிகழ்ச்சிகளும், அகில இந்திய வானொலியின் டில்லி செய்திகளும் இடம்பெறுகின்றன. இந்நிலையில்ஒரு மாநிலம், ஒரு முதன்மை நிகழ்ச்சி தயாரிப்பு வானொலி நிலையம்என்ற புதிய திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்து, அதன்படி தமிழ்நாட்டில் உள்ள வானொலி நிலையங்கள் மூடப்படும் என்ற ஆபத்து உள்ளது. இதன்மூலம், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலையிழப்பார்கள்.

பிரசார் பாரதியின் செய்தி அறிவிப்பின்படி, பொங்கல் அன்று முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள பாரம்பரியமிக்க வானொலி நிலையங்கள் மூடப்பட உள்ளனவாம்.

கடந்த 7.1.2022 அன்று பிரசார் பாரதியின் அனைத்து நிகழ்ச்சி தயாரிப்பு தலைமைப் பொறுப்பாளர்களின் சந் திப்பை பிரசார் பாரதியின் கூடுதல் பொது இயக்குநர் நடத்தியுள்ளார்.

அந்தக் கூட்டத்தில் முதன்மை நிலையம் தவிர அனைத்தையும் வெறும் ஒலிபரப்பு நிலையங்களாக மாற்றுவது என்ற அரசின் முடிவு பொங்கல் முதல் அமலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின்படி அவசியமான உள்ளூர் விவரங்கள் இருந்தால் வாரம் ஒன்றுக்கு வெறும் 5 மணி நேரம் மட்டும் அவை பற்றி ஒலிபரப்பு செய்து கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

தமிழ் மொழிக்கான முக்கியத்துவம் யாவும் கேள்விக்குரியதாக அமைந்துவிடும் பேராபத்து

இதன்மூலம், உள்ளூர் நிகழ்ச்சிகள் தயாரிப்பு முற்றாக முடக்கப்படும் அதேவேளையில் டில்லியிலிருந்து உரு வாக்கப்படும் செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளுமே தமிழ்நாடு, புதுச்சேரியிலுள்ள வானொலி நிலையங்களில் ஒலிபரப் பப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழ்ப் பண் பாட்டு நிகழ்வுகள், தமிழ் மொழிக்கான முக்கியத்துவம் யாவும் கேள்விக்குரியதாக அமைந்துவிடும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.

ஒரே நாடு, ஒரே மொழி எனும் ஆர்.எஸ்.எஸ். நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஒரே ஒலிபரப்பாக வானொலி நிலையங்களைக் குறிவைத்து முடக்குவது ஆபத்திலும் பேராபத்தாக முடிந்துவிடும் நிலை உள்ளது.

தனியாருக்குத் தாரை வார்ப்பதிலேயே ஒன்றிய பாஜக அரசு முனைப்பு காட்டுகிறது

நாடு விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து கட்ட மைக்கப்பட்டு, வலுப்படுத்தப்பட்டு வந்த லாபகரமாக இயங்கிவரும் நவரத்னா என்று போற்றப்படும் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதிலேயே ஒன்றிய பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது.

தொலைத்தொடர்புத் துறையில் தனியார் நிறுவனங்கள் குறிப்பாக அம்பானி நிறுவனங்கள் பிற தனியார் நிறு வனங்களை அபகரித்துத் தனியே ஆதிக்கத்தைக் கொண் டுள்ளன. அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமோ இன்னமும் 4ஜியை நடை முறைப்படுத்துவதில் ஆமைவேகத்தில் உள்ளது. அதே நேரத்தில் தனியார் நிறுவனங்கள் 5 ஜியை நோக்கி வேக மெடுத்து செல்கின்றன.

கண்டனக் குரல்களை எழுப்பி தடுத்து நிறுத்திடுக!

 வானொலி, தொலைக்காட்சி நிலையங்களில் இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்புகள் தொடர்ந்து கொண்டி ருக்கின்றன. இந்தி பேசாத மாநிலத்தவர்களின் எதிர்ப்புகள் வெடிக்கும் போது அரசு தன் முடிவில் பின்வாங்குவதும், பின்னர் திணிப்பதையுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இந்நிலையிலேயே வானொலி நிலையங்களை முடக்கும் ஒன்றிய அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நமது தமிழ்நாடு அரசும், புதுவை அரசும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதுபற்றி கண்டனக் குரல்களை எழுப்பித் தடுத்து நிறுத்திட உடனடியாக ஆவன செய்ய வேண்டு கிறோம்.

               

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

13.1.2022

No comments:

Post a Comment