உதய சூரியனுக்கு நன்றிப் பொங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 13, 2022

உதய சூரியனுக்கு நன்றிப் பொங்கல்

- டேவிட் அனோஜன்

கஸ்தம்பாடி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்,

திருவண்ணாமலை மாவட்டம்

பொங்கல் பண்டிகை என்பது ஜாதி, சமய, பேதம் இன்றி உலகில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கின்ற னரோ அங்கெல்லாம் கொண்டாடப்படும் தனித்துவம் வாய்ந்த ஒரு பண்டிகையாகும். தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அய்ரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமி ழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படு கிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் ஒரு நன்றிப் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

இப்பண்டிகை தமிழர்களின் வாழ்வியல் மற்றும் மரபியல் சார்ந்த பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகவும்,  வாழ்க்கை முறையில் ஆழ வேரூன்றிய திருவிழாக்களில் முதன்மையானதாகவும் கொண்டா டப்படுகிறது. நாம் நன்றியுணர்வோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதன் அடையாளமாக இந்த பொங்கல் கொண்டாட்டங்கள் அமைகின்றன.

தமிழர்களின் வாழ்வியல் இயற்கையோடு இயைந் தது. இயற்கையை நேசிப்பது, அனைத்து உயிர்கள் மீதும் அன்பு காட்டுவது, தன்னுயிர் போல மண்ணை யும் மரபையும் பாதுகாப்பது, இன்னும் சொல்ல வேண்டுமானால், இந்த உலகத்திற்கே அறத்தையும் வீரத்தையும் போதித்தும் வாழ்ந்தும் காட்டிய புற நானூற்றின் சாட்சியமாக வாழும் ஓர் பெருமைவாய்ந்த இனம் கொண்டாடும் பாரம்பரிய விழாவாகும்.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்குஎன்று முழக்கமிட்டு பாடிய பாவேந்தர் பாரதிதாசனின் பாடல் வரிகளும், 'உலகம் என்னும் தேருக்கு உழவனே அச்சாணி ' என்று கூறிய வள்ளுவனும், 'செங்கோலை நடத்துவது உழவனின் ஏரடிக்கும் சிறுகோலே 'என்றுரைத்த கம்பனின் வரிகளும், ‘உழ­வுக்­கும் தொழி­லுக்­கும் வந்­தனை செய்­வோம்என்று உழ­வுத்­தொ­ழி­லுக்கு முத­லி­டம் தந்த மகா­கவி பாரதியின் வரிகளும், இவர்கள் 'சேற்றில் ' கை வைத்தால்தான் நாம் 'சோற்றில் ' கை வைக்க முடியும் என்று உரைக்கும் புதுமொழிகளும் போற்றிப்புகழும்  உழவின் பெருமையை உலகுக்கு சொல்லும் சிறப்புவாய்ந்த பண்டிகைதான் இந்த பொங்கல் பண்டிகையாகும்.

இச்சிறப்பு வாய்ந்த பொங்கல் பண்டிகையை அனைவரும் சிறப்பாக பொங்கலிட்டு, மகிழ்ச்சியோடு தங்கள் குடும்பமாக, உற்றார் உறவினரோடு, ஊரோடு, உலகத்தோடு இணைந்து கொண்டாடும் விதமாக, தமிழ்நாட்டில் வசிக்கும் ரேசன் அட்டை உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவை தமிழகத்தில் மறு வாழ்வு முகாம்களில் வசித்துவரும் அனைத்து இலங்கைத் தமிழர்களுக்கும் வழங்கப்படுகிறது. தொப் புள்கொடி உறவுகளான தமிழக உடன்பிறப்புக்களோடு இணைந்து மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங் கைத் தமிழர்களும் பொங்கலிட்டு இந்த விழாவை கொண்டாடி மகிழ்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது..

தை பிறந்தால் வழி பிறக்கும்எனும் நம்பிக்கை யோடு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வந்தாலும், வழி பிறப்பதற்கான எந்த அனுமானங்களும் இல்லா மல்தான்  கடந்த காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் நம்பிக்கையோடு பிறந்து அவநம்பிக்கையோடு முடிந்து வந்திருக்கிறது.

பிறந்திருக்கின்ற இந்த ஆண்டு தங்களது நம்பிக் கைக்கு விடிவுகாலமாக அமையும் என முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழ் மக்கள் அனைவரும் உறுதியாக நம்புகின்றனர். மாற்றத்திற்கு உட்படாத சமூகம் இல்லை என்கின்ற இயற்பியல் விதிக்கமைய, மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர் களின் நீண்ட கால நம்பிக்கையும் முகாம்  வாழ்வும் மாறுவதற்கான விடியல் தமிழக அரசால் பிறந்துள்ளது என்றே கூற வேண்டும்.

சொந்த நிலத்தை இழந்து, உறவுகளை இழந்து, உடைமைகளை இழந்து ஆதரவற்ற நிலையில் தாய்த் தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருபவர்களின் வலிமிகுந்த வாழ்கையின் தேடல், மிச்சமிருக்கும் காலத்திலாவது உரிமைளோடு கூடிய ஒரு சராசரி மானுடத்தின் வாழ்கையை வாழ வேண்டும் என்பதுதான்.    அடைக்கலம் புகுவது மனித உரிமைகளில் ஒன்று. ஆனால், ஒரு முறை அகதியாக்கப்பட்ட நாம், நம் தலைமுறை தாண்டியும் அகதியாகவே இருந்துவிடுவோமா? என்ற ஏக்கம்  நித்தம் நம்மை ஆட்கொண்டு, அந்த சூழலுக்குள் அடிமையாக்கி வருவதில் இருந்து ஒரு மீட்பு கிடைக்க வேண்டும் என்றே கடந்த கால் நூற்றாண்டாக ஒவ் வொருவரும் ஏங்கித் தவித்து வருகிறோம். 

மனிதப் பிறவியில் உயிரைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக நாடோடி களாக புலம்பெயர்ந்து இன்னொரு நாட்டில் அகதி களாக வாழும் வாழ்க்கை என்பது அவதிகள் நிறைந்த வலிசுமந்த வாழ்க்கையாகும். உயிர் வாழ்தல் ஒன் றைத் தவிர வேறு எந்த பலனும் இல்லாத வாழ்க்கை இனிமேலும் தொடரக்கூடாது என்ற அகதிகளின் மனக்குமுறல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களின் உள்ளத்தை சென்ற டைந்து உள்ளதாகவே நம்புகிறோம். என்றாவது ஒரு நாள் நமக்கும் விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த எங்களின்  எதிர்பார்ப்புகளுக்கு அண்மை யில் அவர் அறிவித்த ரூ.317.4 கோடி மதிப்பீட்டிலான அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்பட பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளும், நிரந்தர தீர்வாக குடி யுரிமை பெற்றுத்தர தேவையான நடவடிக்கைகளை ஏற்படுத்தும்  விதமாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவும் அவர்களது செயல்பாடுகளும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளன.

கரோனா எனும் கொடிய பெருந்தொற்றின் காரணமாக அமலில் இருந்த இரண்டாண்டு தொடர் பொதுமுடக்கம், புயல் மற்றும் மழை போன்ற இயற்கைப் பேரிடர்கள், பொருளாதார நெருக்கடிகள் என்று தமிழ்நாடு அரசின் முன் பல்வேறு சவால்கள் இருந்தபோதும், தமிழ்நாட்டில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் நீண்ட காலமாக வசித்து வரும் இலங் கைத் தமிழ் மக்கள் மாண்போடும் சுயமரியாதையோ டும் வாழ வேண்டும் என்று வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்புகளை வெளியிட்டு அவற்றை மக்களுக்கு உடனடியாக கிடைக்க நடவடிக்கைகள் எடுத்து வருவது வெறும் வார்த்தைகளில் நன்றி சொல்ல முடியாதவை. குடியுரிமை எனும் நிரந்தரத் தீர்வைத் தவிர மற்ற அடிப்படை வாழ்வாதார வசதிகள் அனைத் தும் இங்குள்ள தமிழர்களுக்கு நிகராக கிடைக்க வழிகள் தற்போது பிறந்துள்ளது. குடியுரிமை எனும் ஜனநாயக வாழ்வுரிமையும் விரைவில் கிடைக்கும் எனும் நம்பிக்கையும் அனைவரின் மனங்களிலும் ஏற்பட்டு உள்ளது.  

உலகங்களின் இயக்கத்துக்குக் காரணியாகக் கதிரவன் இருக்கிறான் என்பதுதான் அறிவியலும் அய்தீகமும் சொல்வது. எனவேதான் நமது பண்பாட் டில் கதிரவ வழிபாட்டுக்கு மிக உன்னதமான இடத்தை கொடுத்திருக்கிறோம். அதேபோல, தமிழகத்தில் இருக்கும் இலங்கைத் தமிழ் மக்களின் விடியலுக்கான நம்பிக்கையாக உதயசூரியனும் அதன் தலைவர்களும் துணையாக இருக்கிறார்கள் என்று உறுதிபட நம்புகிறோம்.

இவை மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகள் என்று புறம்தள்ள வேண்டாம், ஏனென்றால், ''அகதி வாழ்வின் வலியை உணர வேண்டுமென்றால் ஒரே ஒரு நாள் அகதியாக வாழ்ந்து பாருங்கள்என்று கூறுவார்கள். அதுபோல, உரிமைகள் ஏதும் இல்லாத நிலையில் வாழும் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யும் விதமாக அண்மைக் காலங்களில் ஏற்பட்டுவரும் நம்பிக்கையான நிகழ்வுகளை எண் ணிப்பார்த்தால் அவை உண்மையான வார்த்தைகள் என்று புரியும்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வசித்துவரும் இலங் கைத் தமிழ் மக்கள் அனுபவித்து வந்த  துன்ப துயரங் களுக்குத் தீர்வு காணும் ஆட்சியாகவும், பிறக்கின்ற தைத்திருநாள்  அகதிகள் மனங்களில் ஏற்பட்டுள்ள நம்பிக்கைகள் நனவாகும் நம்பிக்கையின் ஆண்டு களாகவும் அமையும் என்று நம்புகிறோம்.

தமிழர்கள் எப்போதும் நன்றி மறவாத நற்பண்பு கொண்டவர்கள். ஆறறிவு கொண்ட மனிதர்களாக இருந்தாலும் அய்ந்தறிவு கொண்ட மிருகங்களாக இருந்தாலும், நம்மைப் பாதுகாக்கும் இயற்கையாக இருந்தாலும் செய்நன்றி மறவாமல் நன்றி செலுத்தும் பண்பை உடையவர்கள் என்ற உயரிய மாண்பு எப்போதும் இருக்கிறது.

அந்த மரபணு வழிமரபில் வந்தவர்கள் என்ற விதத்தில், பிறக்கின்ற தைத் திருநாளை தமிழகத்தில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழ் மக்கள் தமிழ்நாடு அரசுக்கு செலுத்தும் நன்றிப் பொங்கலாகவும், மறுவாழ்வு பொங்கலாகவும் நம்பிக் கையின் விழாவாகவும் கொண்டாடி அனைவருட னும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறோம்.


No comments:

Post a Comment