89 விடுதலை சந்தாக்கள் அறிவிப்புக்குத் தலைதாழ்ந்த நன்றி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 27, 2022

89 விடுதலை சந்தாக்கள் அறிவிப்புக்குத் தலைதாழ்ந்த நன்றி!

என்னுடைய பிறந்த நாள் விழா என்பதைவிட- பெரியார்  உலகத்திற்கான ஒரு தொடக்க விழா!

உலக திராவிடர் மகளிர் மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியரின் ஏற்புரை

சென்னை, ஜன.27 89 'விடுதலை' சந்தாக்கள் அறிவிப்புக்குத் தலைதாழ்ந்த நன்றி!  என்னுடைய பிறந்த நாள் விழா என்பதைவிட- பெரியார்  உலகத்திற்கான ஒரு தொடக்க விழா என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த 12.12.2021 அன்று இந்திய நேரப்படி இரவு 8.30 மணிமுதல் 12.05 மணிவரை அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு அமைப்பு காணொலிமூலம் நடத்திய உலக திராவிடர் மகளிர் மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஏற்புரையாற்றினார்.

அவரது ஏற்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

என்னுடைய அருமைத் தோழர்கள், ஒரு பெரிய போர்க்களத்தில், நான் பெரிய போராளியாக இருப்பதற்கு, ஒரு பெரிய படை இருக்கவேண்டும். அந்தப் படையாக நீங்கள் திகழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். அந்தப் பாசறையாக இன்றைக்கு நீங்கள் உருவாகியிருக்கிறீர்கள்.

உங்களுக்கு நன்றி!

அதேநேரத்தில், 89 விடுதலை சந்தாக்கள் என்று நீங்கள் அறிவித்தமைக்காக நான் தலைவணங்கி நன்றி செலுத்து கின்றேன்.

சில நேரங்களில் வயது அதிகமாகிவிட்டதே என்று சொல்லுகிறார்களே என்று ஒரு சங்கடம் தோன்றும் இயற்கையிலே. ஆனால், விடுதலை சந்தாக்கள் வயதை வைத்துத்தான் தருகிறார்கள் என்று சொல்லும்பொழுது, நமக்கு இன்னும் கொஞ்சம் வயதாகி இருக்கக்கூடாதா? இன்னும் கொஞ்சம் சந்தா கிடைக்குமே என்று ஆசைப்படக் கூடிய அளவிற்கு, அந்த நேரத்தில் வயதைக் கூட்டியிருக்கலாமே என்று நினைக்கிறோம். செயல்படும்பொழுது அது வயது குறைவாக இருந்தாலும்கூட.

அதைவிட மிகச் சிறப்பாக அருமைத் தோழர் தீர்மானமாக இங்கே அறிவித்தபொழுது,

பெரியார் உலகம் -

பெரியார் உலக மயமாகவேண்டும்

உலகம் பெரியார்மயமாக வேண்டும்

பெரியாரை உலகமயமாக வைக்கவேண்டும் என்பது தான்.

இன்றைக்குப் பெரியார் உலக மயமாகிக் கொண்டிருக்கிறார். ஒரு போராயுதமாக, பேராயுதமாக திகழ்கிறார்கள்.

எனவேதான், போராளிக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆயுதம் - அந்த ஆயுதத்தை யாராலும் வெல்ல முடியாது.

அந்த அளவிற்கு அவர்கள் சிறப்பான ஒரு வாய்ப்பைப் பெற்று வந்திருக்கக்கூடிய சூழ்நிலையில்,

அஸ்திவாரத்தைப் போட்டிருக்கிறீர்கள்;

அடிக்கல் நாட்டியிருக்கிறீர்கள்

நீங்கள் - பெரியார் உலகத்திற்காக - பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில் ஒரு கோடி ரூபாயினை அளிப்போம் என்று நீங்கள் அளித்திருக்கின்ற அந்த உற்சாகம் இருக்கிறதே, அதுவே பெரியார் உலகத் தினுடைய பணிகள் வேகமாக, விரைவாக இன் றைக்கு நடைபெறுவதற்கு நீங்கள் நீண்ட அஸ்திவாரத்தைப் போட்டிருக்கிறீர்கள்; அடிக்கல் நாட்டியிருக்கிறீர்கள் என்பதற்காக மீண்டும் தலை தாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனக்கு அவர்தான் முதல் ஆசிரியர்!

கனிமொழி இங்கே சொன்னார்கள்,

அப்பொழுது அவர் பகுத்தறிவுப் பால் அருந்தி வளர்ந்த  எங்கள் பிள்ளை. எங்கள் குடும்பத்துச் செல்வம்.

ஒருமுறை நான் கலைஞர் அவர்களை தொலைப்பேசியில் தொடர்புகொண்டபொழுது, அந்தத் தொலைபேசியை கனிமொழி எடுக்கிறார்; அருகிலிருந்த கலைஞர் அவர்கள், யார்? என்று கேட்கிறார்.

கனிமொழி அவர்கள், ஆசிரியர் என்று சொன்னவுடன்,

கலைஞர் அப்பொழுது சொன்னது என்னுடைய காதிலும் விழுந்தது.

கலைஞர், சிரித்துக்கொண்டே, என்னம்மா, உனக்குக்கூட ஆசிரியர்தானா? என்று.

ஆமாப்பா, அதிலொன்றும் சந்தேகமில்லை. எனக்கு அவர்தான் முதல் ஆசிரியர் என்று.

அதை அவரும் சொல்லுவார், நானும் அதைக் கேட்டுக் கேட்டுப் பூரித்துப் போவேன்.

அன்றிலிருந்து இன்றுவரையில், பகுத்தறிவுக் கொள்கை மாறாமல், மிகப்பெரிய அளவிற்கு, இன்றைக்கும் சிறப்பாக, நாடாளுமன்றத்தில் ஒரு தலைசிறந்த நாடாளுமன்ற வாதியாகவும், அதேநேரத்தில், அரசியலை, விஞ்ஞான ரீதியாக நடத்தக்கூடிய, பேசக்கூடியவராகவும் இருப்ப தெல்லாம், பகுத்தறிவு இயக்கத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய ஒரு வாய்ப்பு.

எனவேதான், பகுத்தறிவுப் போராளிகளாக நாங்கள் மட்டும் இல்லை; போராளிகள் பல களங்களிலே இருக்கிறார்கள்.

இன்னும் நாம் அடையவேண்டிய இலக்கு ஏராளம்

அந்த வகையிலே, நீங்கள் எல்லோரும் உற்சாகப்படுத்தியதற்காக நன்றி செலுத்துகின்றோம்.

இன்னும் நாம் அடைந்த தூரத்தைவிட, அடைய வேண்டிய இலக்கு ஏராளம் இருக்கிறது.

பெண்களுக்கு இன்னமும் சங்கடங்கள் ஏராளமாக இருக்கின்றன.

தந்தை பெரியார் அவர்கள் சொன்னதைப்போல,

ஜாதி என்று சொல்லும்பொழுது,

உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி என்று பிரிவு வைத்தி ருக்கிறார்களே, அதில், எல்லா ஜாதி பெண்களையும் ஒரே பிரிவாகத்தான் வைத்திருந்தார்கள்.

எனவேதான், நமக்கு உயர்ந்தஜாதி பெண்களா? தாழ்ந்த ஜாதி பெண்களா? என்பதைப்பற்றி பிரச்சினை கிடையாது. பேதமிலாத பெருவாழ்வு.

அவர்களுக்குரிய இடத்தை, அவர்களுக்குரிய உரி மையை அவர்கள் பெறவேண்டும்.

குரல் கொடுக்க முடியும்களத்திலே நிற்க முடியும்.

அந்த உரிமைக்காக, பகுத்தறிவுப் போராளியாக நான் அவர்களுக்காக மட்டுமல்ல - ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் - எங்கே அவர்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டாலும் - உலகம் முழுவதும் வாழக்கூடிய மனிதர்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டாலும், இந்த எளியவனால் குரல் கொடுக்க முடியும் - களத்திலே நிற்க முடியும்.

மற்றவர்களை நாம் சங்கடப்படுத்தாமல், அவர்களுக்காக நாம் கஷ்ட, நஷ்டங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

‘‘ஒரு லட்சியத்தை நீங்கள் அடையவேண்டுமானால், கஷ்ட நஷ்டங்களை நீங்கள் விலையாகக் கொடுக்க வேண்டும்‘‘ என்பார் தந்தை பெரியார் அவர்கள்.

எனவே, அந்த விலை கொடுப்பதுதான் போராளியி னுடைய நோக்கம்.

போர்க்களத்தில் நிற்கின்றவர்களுக்கு வெற்றி - தோல்வி என்பது கிடையாது. களத்திலே கடைசி வரையில் நின்று போராடவேண்டும்.

இறுதிமூச்சு அடங்குகின்ற வரையில் அவன் போராளியாக இருக்கவேண்டும்.

ஒரு மனிதனுக்கு சிறப்பு வேறு எதிலும் இல்லை - அவன் இறுதிவரை கொண்ட கொள்கைகளுக்காகவே வாழ்ந்தான்; களத்திலேயே கடைசிவரையில் நின்றான். போராளியாகவே அவன் வாழ்ந்தான்; போராளியாகவே அவன் மறைந்தான் என்று சொல்லுவதைவிட, ஒரு மனிதன் அடையவேண்டிய இலக்கு வேறு இருக்க முடியாது.

அதைத்தான் நீங்கள் இந்த 89 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவிலே - பெரியார் பன்னாட்டமைப்பு - உலக திராவிடர் மகளிர் மாநாடு - அதன் தீர்மானங்கள் மூலமாகத் தந்திருக்கிறீர்கள்.

எனக்கு பெருமை என்று நான் கருதவில்லை; கடமையாகக் கருதுகிறேன்!

எனவே, அது எனக்கு பெருமை என்று நான் கருதவில்லை; மாறாக, அது கடமை என்று நீங்கள் எனக்கு உணர்த்தியிருக்கிறீர்கள். ஆணையாக வெளியிட்டு இருக்கிறீர்கள்.

எனவேதான், மீண்டும் சொல்லி முடிக்கின்றேன்.

யான் பெற்றது பட்டமல்ல -

நீங்கள் அளித்த சட்டம் -

‘‘உழைத்துக்கொண்டே இரு -

களத்தை மறக்காதே -

கவனத்தைத் திருப்பாதே’’

என்று தெளிவாக ஆணையிட்டு சொல்லியிருக்கிறீர்கள். அதனால்தான் அது சட்டம் எனக்கு.

அதற்காக நன்றி!

நேரத்தின் நெருக்கடி காரணமாக நண்பர்களே, நான் இன்னும் ஏராளம் சொல்லவேண்டிய செய்திகள் இருக்கின்றன என்றாலும், உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நீங்களும், மற்றவர்களும் பல மணிநேரங்களிலே வித்தியாசப்படுகின்ற நேரத்தில், ஏற்கெனவே உங்களைக் காக்க வைத்திருக்கின்றோம்.

கலந்துரையாடல் நிகழ்வில் சந்திப்போம்!

எனவே, அருள்கூர்ந்து பொறுத்தருளுங்கள். இன்னொரு நாள் விரிவாக உங்களிடம் பேசுவதற்கு நான் வாய்ப்பினைக் கொடுக்கிறேன். நீங்கள் என்னிடத்தில் கேள்விகளைக் கேட்கலாம்; அதற்குரிய பதில்களை நான் சொல்லுகிறேன். கலந்துரையாடல் போன்று அந்த நிகழ்ச்சியை நடத்தலாம் என்று சொல்லி,

இவ்வளவு சிறப்பாக என்னை ஊக்கப்படுத்தி இருக்கிறீர்கள். இந்தத் தகுதிகள் எனக்கு இருக்கிறது என்று நான் நினைப்பதைவிட, இந்தத் தகுதிக்கு என்னை ஆளாக்கிக் கொண்டு,

போர்க்களத்தை மறக்காதே -

போராடுவதை மறக்காதே என்று

பெண்ணே, பெண்ணே

போராடு என்று சொன்னதைப்போல,

நீ களம் காண கருஞ்சட்டையே போராடு

போர்க்களத்தை மறக்காதே

இதுதான் உனக்கு மிக முக்கியம்.

பெரியாருடைய அறிவுச் சுடரை ஆயுதமாகக் கொள் என்று நீங்கள் என்னைப் பணித்திருக்கிறீர்கள்.

அதற்காக என்னை உற்சாகப்படுத்தியிருக்கிறீர்கள் -

அதற்காகவே விடுதலை சந்தாக்களைக் கொடுக்கிறோம் என்று சொல்லியிருக்கிறீர்கள் -

பெரியார் உலகத்தைப் படைப்பதற்கு நாங்கள் உறு துணையாக இருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறீர்கள்.

நீ தனி மனிதன் அல்ல - இதோ உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லி,

எங்கோ ஒரு கோடியில் இருக்கிறோம் என்று நீங்கள் நினைக்காதீர்கள் - நாங்கள் கோடியில் இருந்தாலும், கோடி ரூபாயைத் தருவோம் என்று சொன்னார்கள்.

எனவேதான், இதுவரையில்கோடிஎன்றால், சாதாரண துணியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த ஒரு சாதாரண மக்கள் மத்தியிலே வாழக்கூடிய அளவிற்கு,

இந்த வாய்ப்பைத் தந்து,  உற்சாகப்படுத்தி,

என்னுடைய பிறந்த நாள் விழா என்பதைவிட - பெரியார்  உலகத்திற்கான ஒரு தொடக்க விழா

பெரியார் உலகம் செய்வதற்கு நீங்கள் இன்றைக்கு ஒரு சிறந்த தொடக்க விழாவினை நடத்தியதற்காக - என்னுடைய பிறந்த நாள் விழா என்பதைவிட - இதை ஒரு தொடக்க விழாவாகவே கருதுகிறேன்.

ஆணையிட்ட நாளாகக் கருதுகிறேன் - கடமையைத் தலைமேல் சுமப்பேன்.

களம் மறவாத கடமை வீரனே -

உன்னுடைய பயணத்தை நீ தொடர்ந்து நடத்திக் கொண்டிரு!

சோர்வடையாதே - சோர்வடையாதே!

தெளிவாக நடந்துகொள் -

வேகமாகச் செல் என்று உற்சாகப்படுத்தி இருக்கிறீர்கள்.

அதற்காக நன்றி! நன்றி!! நன்றி!!!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!

வாழ்க பெரியார் பன்னாட்டமைப்புத் தோழர்கள்!

வாழ்க அத்துணை கொள்கை உறவுகளும்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரையாற்றினார்.

No comments:

Post a Comment