புரட்சிக் கவிஞர் தந்தை பெரியாருக்கு வாசித்தளித்த "வந்தோனோபசாரப் பத்திரம்" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 22, 2021

புரட்சிக் கவிஞர் தந்தை பெரியாருக்கு வாசித்தளித்த "வந்தோனோபசாரப் பத்திரம்"

* முத்துசெல்வன்

பெங்களூரு

புரட்சிக் கவிஞர் தந்தை பெரியாரின் உரையை 1925 இல் கேட்டிருந்தாலும் பெரியாருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு  1928 ஆம் ஆண்டில் தொடங்கியது.    1928 ஆம் ஆண்டில் புதுச்சேரியில் பெரியார் பேசிய பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.  அப்பொதுக் கூட்டத்தில் புரட்சிக் கவிஞர் கலந்து கொண்டார்.  'குடிஅரசு' ஏடுகளைப் படிக்கும்  பழக்கத்தைக் கொண்டிருந்த  அவருக்கு  அந்தக் கூட்டம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனலாம்.  பெரியாருடைய கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர்  பகுத்தறிவுக் கொள்கையையும்,  சுயமரியாதைக் கொள்கை யையும் பரப்புவதைத் தன் கடமையாகவே கொண்டு இயங்கத் தொடங்கினார். பெரியார் பாசறைக்கு ஒரு   புரட்சிக் கவிஞர் கிடைத்தார்.

தந்தை பெரியாருடன் இணைவதற்கு முந்தைய பாரதிதாசன்

ஏப்ரல் 29, 1891-இல் பிறந்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.  அவர்  கனகசுப்புரத்தினம் என்னும் தன்  இயற்பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டதைக் குறித்து, " நான் அப்போது பாண்டிச்சேரியில் வாத்தியார் வேலையில் இருந்தேன். அப்போதே சில பத்திரிக்கை களுக்கு கட்டுரைகளும், பாட்டுகளும் எழுதியனுப்புவது வழக்கம். யாராவது தொல்லை தருவார்கள் என்று கருதி நான் ஒரு புனைப்பெயர் வைத்துக்கொள்ள விரும்பினேன். அப்போது என் கண் முன்னே, "சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச்சோற்றுப் பார்ப்புக்கு ஒரு நீதி" என்று கேட்ட பாரதியார்- பார்ப்பானாயிருந்தும் பயப்படாது, தீமை வரும் என்று தெரிந்திருந்தும் திகைக்காது, தமிழில், புரியும் படி சொல்லிய பாரதியார் தான் நின்றார். உடனே பாரதிதாசன் என்று புனைப்பெயர் வைத்துக்கொண்டேன" என்று கூறியுள்ளார்..

1906 ஆம் ஆண்டு புதுவைக்கு அடைக்கலம் தேடி வந்த பாரதியாருடன் 13 ஆண்டுகள் நெருக்கமாகப் பழகினார் பாரதிதாசன். பாரதியார் 1921-ஆம் ஆண்டு மறைந்தார். அவர் மறைவுக்குப் பின்னும் ஏறத்தாழ ஏழாண் டுகள் பாரதியாரின் 'கவிதா மண்டல'த்தில் இணைந்தே வந்துள்ளார்.  அந்தக் காலத்தில் மயிலம் ஶசிறீஷண்முகம் வண்ணப்பாட்டு, மயிலம் சிறீசிவசண்முகக்கடவுள் பசரத் நம், மயிலம் சுப்பிரமணியர் துதியமுது, கதர் இராட்டி னப்பாட்டு, சிறுவர் சிறுமியர் தேசியகீதம், பாரததேவி வாழ்த்து , தேசிய உபாத்தியாயர்  போன்ற பாடல்களையே இயற்றி வந்தார்.

 1928-இல் தந்தை பெரியாருடன் இணைந்த புரட்சி கவிஞர் பகுத்தறிவு கொள்கைகளை மேற்கொண்டதுடன் அவற்றைப் பரப்பும் முன்னணிக் கவிஞராகவும் திகழ்ந்தார். 

சமய நம்பிக்கையாளராக (தனது 30 -ஆம் அகவையில்) இருந்தவர், தான் வாழ்ந்த காலத்துச் சூழ்நிலையை முழுவ துமாக உள்வாங்கியதுடன் சமூகச் சீர்திருத்தக் கொள்கைய ராக மாறி வாணாள் முழுவதும் அதனைத் தன் பாடு பொருள்களில் முகாமையானதாகக் கொண்டிருந்தார். 

"பகுத்தறிவுக் கொவ்வாத ஏடுகளால்

எள்ளை அசைக்க இயலாது.  மானிடர்கள்

ஆக்குவதை ஆகாதொழிக்குமோ போக்குவதைத் தேக்குமோ

மக்கள் உழைக்காமல் மேலிருந்து வந்திடுமோ?" 

என்று கேட்டுத் தீர்வாக,

"நல்லறிவை நாளும் உயர்த்தி உயர்த்தியே

புல்லறிவைப் போக்கும் புதுநிலை தேடல் வேண்டும்."

என்று தன் உள்ளக் கிடக்கையை  வெளிப்படுத்தினார்.

10-2-1929 அன்று புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றிய தந்தை பெரியாருக்குப் புரட்சிக்கவிஞர் ஒரு வரவேற்பிதழை வாசித்தளித்தார்..

100 வரிகளைக் கொண்ட அந்த "வந்தனோபசாரப் பத்திரம்'  என்னும் தலைப்பில் வரவேற்புப் பாடல் 10.02.1929 நாளிட்ட குடிஅரசு இதழி வெளிவந்துள்ளது.

இந்தப் பாடல்தான் 'குடிஅரசு' இதழில் வெளிவந்த புரட்சிக்கவிஞரின் முதல் பாடலாகக் கருதப்படுகிறது.

"ஈரோடு திருவாளர் .வெ.ராமசாமி நாயக்கரவர்கட்குப் புதுச்சேரி  பொதுக்கூட்டத்தில் வாசித்துக் கொடுத்த வர வேற்பு" என்னும் குறிப்பு அந்தக் குடிஅரசு  இதழில் பாட லுக்கு முன் இடம் பெற்றுள்ளது (பாவேந்தம் 18.சான்றோர்: 38,)

அந்த வரவேற்பிதழைப் பார்ப்பனீயத்தைத் தோலுரித் துக் காட்டுவதாகவே அமைத்துள்ளதுடன்,, அந்தப் பார்ப் பன வஞ்சசகத்தைஎதிர்த்து முறியடிக்க வல்லார் பெரியார் ஒருவரே என்பதை சுட்டிக் காட்டுவதாகவும் அமைத் துள்ளார்.

விருத்தம்

"வருகஉயர் இராமசா மிப்பெயர்கொள்

அறிஞர் உன்றன் வரவால் இன்பம்

பருகவரும் இந்நாளை வாழ்த்துகின்றோம்

பனிபறக்கத் தகத்த காயம்

பெருகவரும் செங்கதிர்போல் மடமை வழக்

கம்பறக்க பீடை இங்கு

மருவவைத்த பார்ப்பனியம் வடுவின்றிப்

பறக்கஉனை வரவேற்போமால்" 

மடமை என்னும் பீடையை இங்கு நிலைநிறுத்திட முனைந்து வரும் பார்ப்பனியத்தை இருந்த அடையாளம் தெரியாமல் ஒழிப்பதற்காகப் பெரியாரை வரவேற்பதாகக்  கூறுகிறார்.   

ஆதியிலே வாழ்வடைந்த பாரதத் தார்க்

கதன் பிறகு பிழைக்கவந்த பார்ப் பனீயம்

சோதியிலே வானத்தைக் கீறி நல்ல

சுவர்க்கத்தைக் காட்டியது மெய்யா? பின்னைத்

தேதியிலே நமைக்கலந்து பெருமை பெற்றுச்

சிலசிலவாய்த் தமதுநலம் தனைஉ யர்த்திச்

ஜாதியிலே சமயத்தே  சாத்தி ரத்தே

தனையுயர்த்திக் கொண்டதுவும் மெய்யா? நாட்டிற்

பாதியிலே பாதியதிற் பாதி தன்னைப்

பணிவதுமுக் கால்இஃதோர் சமுகந் தானோ! 2

பார்ப்பனீயம் திணித்த தீயவை இல்லாது சிறப்பாக இருந்த இந்தியாவில் - 'பாரதம்' என்ற சொல்லைத்தான் புரட்சிக் கவிஞர் பயன்படுத்தியுள்ளார் -  வேற்று மண்ணி லிருந்து பிழைக்க  வந்த பார்ர்ப்பனர், வானத்தைக் கீறி  -மேலுலகம் - சுவர்க்கம் - என்னும் ஆசையைக் காட்டி ஏமாற்றியதுடன் இங்கிருந்த மக்களுடன் கலந்து அவர்களை, அன்றிருந்த சனாதனத்தின் அடிப்படையான  ஜாதி,  சமயத்தில்  ஆழ்த்தித் தங்க்களை உயர்ந்தவர்களாக்கிக் கொண்டதைச் சுட்டிக் காட்டுகிறார்

இப்படி உயர்த்திக் கொண்டார்கள் என்பதையும் கூறி, அவர்களை ஒடுக்கும் திறன் படைத்த பெரியாரை வரவேற்பதாகக் கூறுகிறார்.

" பார்ப்பனீயம் மேலென்று சொல்லிச் சொல்லிப்

பழயயுகப் பொய்க்கதைகள் காட்டிக் காட்டி

வேர்ப்புறத்தில் வெந்நீரை வார்த்து வார்த்து

மிகப் பெரிய சமுகத்தை இந்நாள் மட்டும்

தீர்ப்பரிய கொடுமைக்குள் ஆக்கி விட்ட

செயல்அறிந்து திடுக்கிட்ட வீரா!  

என்றழைத்து,  மக்கள் அவருடைய பணிகளை உணர்ந்துவரும் நிலையிலும் அவர் தம் பணியில் ஓயாமல் உழைத்துவரும் பெரியாரின் அரும்பணிக்கு வணக்கம் செய்வதாகக் கூறுகிறார், 

"பார்ப்பனர்மே லானவரோ? பாரிலுள்ளோர் தாழ்ந்தவரோ?" என்ற கேள்வியை முன்வைத்து, இதற்குரிய விடை காண வேண்டுமாயின் திருக்குறளே தக்க  நூல் என்பதை

.......... .......... நீ தேவரகுறள் - பார்ப்பாய்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யால்"

என்னும் வரிகளால் பின்னாளில் புலப்படுத்தியுள்ளார்.

- பழம் புதுப் பாடல்கள் .277, குயில், 8.6.1958: பாவேந்தம் 15: தமிழ்:122, ஜாதி மறுப்பு)

 இந்த வரவேற்பிதழில் புரட்சிக் கவிஞர் அன்றைய தமிழர் நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

இந்திய மக்களிடையே மிகச் சிறுபான்மையராக இருப்பினும் தங்களைத் தவிர மற்றையோர் தங்களுக்குக் கீழானோரே என்று கருதி இருந்ததால் தங்களுடையே செல்வாக்கு எவ்விததிலும் குறைந்துவிடக் கூடாதென்பதில் மிகுந்த கவலைக் கொண்டு அதற்கேற்ப இயங்கியோர் பார்ப்பனர் என்று குறிப்பிடுகிறார். எந்தத் துறையாயினும் தங்களையே முன்னிறுத்துவோர் என்று கூறும் கவிஞர் ,

சமுகத்தில்  தாங்களொரு சிறிய தான

`` தனிச்சமுகம் என்றெண்ணி இருப்பதாலும்

சமுகத்தில் நாமன்றி மற்றோர் யாரும்

தாழ்ந்தோர்கள் என்றெண்ணி இருந்த தாலும்

சமுகத்தில் தங்களது செல்வாக் கென்றும்

தாழ்வடையப் பார்ப்பதில்லை பார்ப்ப  னர்கள்

சமுகத்தில் எத்துறைக்கும் தமையே கோரும்

தாம்திருந்தும் சாத்திரங்கள் பொய்யென் பாரா? 

எனக் கேட்டு, நாம் எப்படி இருந்தோம் என்பதை விளக்குகிறார்.

பார்ப்பனரின் வல்லதிகாரப் போக்கில் சுழன்று கொண்டிருந்த 'காலமென்னும் சக்கரத்தின்' சூழ்ச்சியை நாம் உணராதிருந்த நிலையில் அதைப் பற்றிக் கவலை கொள்ளாத பிறநாட்டார் அன்றாடம் எழும் புது புது எண்ணங்களால் முன்னேற்றம் காணும் நிலையில் நம் நிலையை எண்ணிப் பார்த்தால் வயிற்றெரிச்சலே மிஞ்சுமே தவிர முன்னேற்றத்தின் முதற்படியையும் மிதிக்கவில்லை என்று கூறுகிறார்.

"காலமென்னும் சக்கரத்தின் சூழ்ச்சி தன்னில்

கடுகளவும் நாம்கலந்து கொண்டோ மில்லை

தூலமென இருந்திட்ட  பிறநாடெ ல்லாம்

சொல்வதுண்டோ என்னென்ன புதிய எண்ணம்

ஞாலமெல்லாம் புதுவாழ்க்கை இன்ப வாழ்க்கை

நடக்கையிலே நம்நிலையை எண்ணிப் பார்க்கில்

மூலவயி றெரிவதல்லால் முன்னேற் றத்தில்

முதற்படியை மிதித்தோமா இல்லை இல்லை."

முன்னேற நினைக்கும் எண்ண ஓட்டத்துடன் நால் வருணத்தை நாம் ஏற்கோம் என்று கூறினால் பார்ப்பான்  நால்வருண முறை வேதத்திலேயே வரையறுக்கப்பட்டது என்று கூறுவான் என்றும், நாம் குழந்தை மணம் தீதென்றால். அவன் பருவமணம் தீதென்பான் என்றும், பறையர் என்றழைக்கப்படும் ஆறு கோடிப் பேர் (1929 -இல்) உயரட்டும் என்று நாம் கூறினால்  பார்ப்பான் விரைந்து வந்து எதிர்ப்பான் என்றும் பார்ப்பனரைப் படம் பிடித்துக் காட்டுகிறார் கவிஞர்.

மேல்வருணம் கீழ்வருணம் வேண்டா மென்றால்

மிகப்பொறுப்பு கொண்டவன்போல் பார்ப்பான் வந்து

நால்வருணம் வேதத்தில் உண்டென் கிறான்

நாலுயுகத் தின்பின்னும் இதையே சொல்வான்

பால்யமணம் நாட்டுக்குத் தீமை என்றால்

பருவமணம் தீதென்று பகரு கின்றான்

மேல்வரட்டும் அறுகோடிப் 'பறையர்' என்றால்

விரைந்தோடிப் பார்ப்பனீயம்காலைக் கவ்வும்

"என்று கூறுகிறார்.

சநாதன தர்மத்திற்குக் குரல் கொடுக்கும் காஞ்சி சங்கராச்சாரி.

சநாதனமே சங்கரர்  தரும் நெறி என்னும் கட்டுரையில் அவர்,

"பழைய தர்மங்களை எல்லாம் முறிவுபடாமல் காப்பாற்றப் பிரயத்தனப்பட வேண்டும் என்று எங்களுக்கு சிறீ சங்கர பகவத்பாதர்கள் ஆக்ஞை இட்டிருக்கிறார்கள். அவர் பெயரை நான் றைவேற்றுவதும், நிவைத்துக் கொண்டிருப்பதால்தான் நீங்கள் இங்கு வருகிறீர்கள். அவருடைய ஆக்ஞையை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது என் கடமை. ஆக்ஞையைக் காரியத்தில் நிறைவேற்றாததும் ஒரு பக்கம் இருக்கட்டும். சாஸ்திர வழக்கங்கள், லோக க்ஷேமம், ஆத்ம க்ஷேமம் இவற்றைக் கருதியே வகுக்கப்பட்டவை என்பதையாவது உங்களுக்குப் புரிய வைக்கப் பார்க்கிறேன்என்று சநாதனத்தின் பெருமையை நிலைநாட்ட முயல்கிறார்.

 ஜாதிப் பிரிவினைகளால் இந்துச் சமூகம் சீரழிந்து விட்டது எனக் கூறப்படும் கருத்தை மறுக்க வந்த காஞ்சி சங்கராச்சாரி, 

"யுகாந்திரமாக, இந்தத் தேசத்துக்குப் பரம க்ஷேமத்தைச் செய்துவந்த அந்த தர்மங்களால் ஏதேதோ கொடுமைகள் நேர்ந்ததாகச் சொல்லி, கெட்ட பெயரை உண்டாக்கி, அவற்றைத் தூக்கில் போடப் பார்க்கிறார்கள். நம் சனாதன சாஸ்திரங்கள் வரையரை செய்து தந்த சமூகப் பாகுபாடு (வர்ண தர்மம்) கூடாது என்று சிலருக்குத் தோன்றுகிறது. எனவே, தர்ம சாஸ்திரங்களால் வாஸ்தவத்தில் ஏற்படாத கொடுமைகளை இவர்களாகக் கற்பித்துச் சொல்கிறார்கள்என்று கூறுகிறார். 

சங் பரிவாரத்தின் கோல்வால்கர் அதனை வழி மொழிகிறார்.

"வர்ண வியாவஸ்தா என்று சொல்வதையே - நமது மக்கள் இழிவு என்று நினைக்கிறார்கள். அது ஒரு சமூக அமைப்பாகும். சமூக ஏற்றத்தாழ்வு அல்ல. பிற்காலத்தில் தான் இது திரித்துக் கூறப்பட்டது. பிரித்தாளும் சூழ்நிலையை விரும்பிய பிரிட்டிசாரே இப்படிப் பரப்புரை செய்தனர்.

நான்கு சமூகப் பிரிவுகளும் - அவரவர்கள் சக்திக்கேற்ற கடமைகளைச் செய்வதன் மூலம் கடவுளை வணங்கலாம் என்பது தான் இதன் தத்துவம்.

பிராமணர்கள்தங்கள் அறிவுத் திறமையால் உயர்ந்தவர்கள். சத்திரியர்கள் எதிரிகளை அழிப்பதில் வல்லவர்கள். வணிகம், வேளாந்தொழில் செய்பவர்கள் வைசியர்கள். தங்கள் தொழிலைச் செய்வதன் மூலம் சமூகத்திற்குத் தொண்டாற்றுவோர் சூத்திரர்கள். இந்த நான்கு பிரிவுகளிலும் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது.

இது ஒரு சமூக அமைப்பு. இதைப் புரிந்து கொள்ளாமல் இந்த அமைப்பு முறைதான் வீழ்ச்சிக்கே காரணம் என்று பரப்புரை செய்கிறார்கள்என்கிறார் கோல்வாக்கர். (Bunch of Thoughts 8ஆவது அத்தியாயம் )

புரட்சிக் கவிஞர் பார்ப்பனரின் கரவைக் கூறுமிடத்து,, நாடு முழுவதும் கோயிலகளைக் கட்டிப் பிழைத்து வரும் பார்ப்பனர் பாடுபட்டுப் பிழைத்தால்தான் நாட்டவர் செல்வத்தில் அவர்கட்குப் பொறுப்பிருக்கும் என்று கூறும் கவிஞர், 

"பாடை நிறைய பிணங்கள் குவியுன் போதும்

பார்ப்பனர்க்குப்  பணம்வாங்கித் தருவ  தற்கு

நாடுகின்ற மந்திரங்கள் நாட்டிலுண்டு

நரிக்கெதிரே ஆடிறந்தால் நகைத்தல் போலே" என்று கூறுகிறார். 

நரிக்கு முன்னால் ஆடு இறந்தால் நரிக்குக் கொண் டாட்டம்;  ஊரில் பிணம் விழுந்தால் பார்ப்பனர்க்கு கொண் டாட்டம் என்பதை எப்படிக் கூறுகிறார் பாருங்கள்! 

கைம்பெண் மறுமணத்தை எதிர்ப்பதற்கு சாத்திரங் களை எடுத்து வைத்துத் தடுக்க முயலும் பார்ப்பனர் மூடப்பழக்கங்களை ஒதுக்கி மாற்றுப் பாதையில் செல்ல நினைத்தால் அந்த வழியை அடைத்து அந்தப் பாதையில் நன்மை இல்லை என்று கூறும் பார்ப்பனர்க்கு பொது நலத்தில் சிறிதும் கவலை இல்லை என்கிறார். அது மட்டுமா? 

குழந்தைத் திருமணத்தைத் தடுப்பதற்காக ஆங்கிலேய அரசு எடுத முயற்சிகளை திலகர் போன்றோர் எதிர்த்ததால் திரும்பப் பெறப்பட்டதையும், பிறகு பல ஆண்டுகள் கழித்து 'சாரதா சட்டம்' நிறைவேற்றப்பட்டதையும் கவனித்தால் புரட்சிக் கவிஞர் கூற்றின் அடித்தளம் புரியும். இந்து மதத்தின் அடிப்படைக் கூறுகளில் எல்லாம் கைவைப்பதற்கு வெள்ளைக்காரர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று திலகர் மக்களிடையே பரப்புரை செய்தார். . 'பூப்படையாத பெண்களுக்குத் திருமணம் செய்தால் சிறைத் தண்டனை என்கிறது உங்கள் அரசு. பூப்படைவதற்குள் திருமணம் செய்யவில்லை நரகத்திற்குப் போவீர்கள் என்கிறது எங்கள் இந்து மதம். நாங்கள் என்ன செய்வது?’என்றார் ஆச்சார்யா. இப்போது பெண்களின் திருமண அகவை குறைந்தது ஆக இருக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு முன்வைக்கின்றது

முப்பத்து முக்கோடி மக்கள் (1929 -இல் இந்தியாவின் மக்கள் தொகை).  நாட்டு முடியை ஏற்கக் கூடிய நாள், அவர்களுக்குக் அதில் நாட்டமில்லை என்றும் அவர்கள் என்றும்  நம் சமூகம் பிறனிடத்தில் இருப்பதையே விரும்பியோர் என்பதை,

"முப்பத்து முக்கோடி மக்கள் நாடு

முடிபுனையும் நற்சமயம் பார்ப்பனர்க்குக்

கர்ப்பத்தில் சனியடையும் சமய மென்று

கருதுவதால் அச்சிறிய தொகையி னார்கள்

எப்போதும் இச்சமுகம் பிறனி டத்தே

இருப்பதிலே அன்னவர்க்குக் கவலை யேது? "  என்று கூறுகிறார். 

இதிலிருந்து இந்தியா 1929 வாக்கிலேயே விடுதலை பெறுவதற்கான அறிகுறிகள் இருந்திருக்கக் கூடும் என்ப தையும் அந்தச் சூழலைத் தன்னலம் கருதிய பார்ப்பனர் விரும்பவில்லை என்பதையும் உணர முடிகிறது.

 "பொய்பகட்டுப் பார்ப்பனரை நம்பு மட்டும்

பொதுவாழ்வின் உள்ளீடு மாய்வ துண்மை."  - 1929-இல் புரட்சிக் கவிஞர் கூறியது இன்றளவும் நீடிப்பதன் அடிப் படை நம் மக்களுடைய அடிமைத்தனம் என்றுதான் கூற வேண்டும்.

  சங் பரிவாரத்தினர் (RSS - A Trojan Horse -  ஆசிரியர்) டில்லியில் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் உருவான சூழ்நிலைகளையும் புரட்சிக் கவிஞர் அன்று பாடியதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பார்ப்பனீயம் எப்படிப்பட்டது என்பது புரியும்

எந்த இடத்திலும் பார்ப்பனரின் ஆதிக்கம் வேர்விட்டுச் செழிப்பாய் இருப்பதைக் காண்கிறோம்.  அவன் திருந்தி விட்டான் என்று சிறுபிள்ளையயும் ஒப்புக் கொள்ளும் படி செய்துவரும்  நிலையில், "யார் சொல்வார் இந்நிலையில் பாரதத்தார் இன்பநிலை கூடுமென்று?" என்று கேட்கிறார்.

இன்றைக்குச் சில பார்ப்பனரல்லாதார் வீடணர்களாக மாறி பார்ப்பனீயத்திற்கு அடி பணிந்து தாங்கள் சூத்திரர் களாக இருப்பதே பெருமை என்னும் மனப்பான்மையுடன் இருப்பது போலவே அன்றும் இருந்த நிலையைக் கவிஞர்,  பார்ப்பனரின் மயக்குச் சொற்களில் தடுமாறும் சில பார்ப்பனரல்லாதார் அவர்களுடன் சேர்ந்து ஆர்ப்பரித்து அவர்களுடைய ஆதிக்கத்தில் அடிமையாய்க் கிடந்த சூழலில், தந்தை பெரியார்  உறுதியுடன் எதிர்கொண்டு. “சுயமரியாதைஎன்னும்பயிர் செழிக்க ஆற்றிய பெரும்பணியைக் கவிஞர். விளக்கி, 

 அதனைப் பொறாது

வேர்க்கின்ற வெயர்வையெல்லாம்  வெள்ள மாகி

மிளிர்கின்ற சத்தியமே வித்தாய் இன்பம்

சேர்க்கின்ற மனவுறுதி உழவாய்க் கொண்டு

சின்னாளிற் பன்னாளின் வளப்பங் கண்ட 11

சுயமரியா தைப்பெயர்கொள் பயிர்செ ழிக்கத்

தொண்டுசெய்யும் இராமசா மித்த லைவா!

என்று தந்தை பெரியாரை விளிக்கின்றார்.

அவருக்கு எதிரே புவியே பயர்ந்து வரும்போதும்  கிஞ்சித்தும் அஞ்சசாமல் செயற்கரிய செய்வதற்காகப் பிறந்த பெரியார்,  இந்த உலகின் உண்மை நிலையை நன்குணர்ந்த அறிவு மிக்கோர் என்று புகழ்ந்து அவருடைய வியப்புறு இயக்கம் வெல்க என்று வாழ்த்தி. பெரியாரை "மேன்மை யெல்லாம் நீஎய்தி வாழ்க நன்றே" என்று வாழ்த்துகிறார்.  

 "புயத்தெதிரே புவிபெயர்ந்து வருமப் போதும்

புலன்அஞ்சாத்  தன்மையுள்ள கர்ம வீரர்

செயற்கரிய செயப்பிறந்த பெரியோய்! இந்தச்

செகத்துநிலை நன்கறிந்த அறிவு மிக்கோய்!

வியப்புறுநின் இயக்கமது நன்றே வெல்க!

மேன்மையெல்லாம் நீஎய்தி வாழ்க நன்றே" 

தந்தை பெரியாருடைய 80 - ஆவது பிறந்தநாள் வாழ்த்தாகப் புரட்சிக் கவிஞர் பாடிய பாடல்:

நேரிசை வெண்பா

எண்பதாம்ஆண்டடைந்தும் என்தமிழ்நா டெய்துவதே

பண்பதாம் என்றே பகைவடக்கர் - மண்புதைய

வீழ்த்த எம்பெரியார் வெல்கவே வெல்கஎன்று

வாழ்த்தி மகிழ்கின்றோம் நாம். 

- பழம் புதுப் பாடல்கள், குயில் 23-09-1958

No comments:

Post a Comment