டாக்டர் அம்பேத்கர் எழுதிய காதல் கடிதம் (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 18, 2021

டாக்டர் அம்பேத்கர் எழுதிய காதல் கடிதம் (2)

என் மனம் அமைதியை இழந்து தவிக்கிறது. நம் ஊரையும் உங்கள் அனைவரையும் தேடு கிறது. உன் இன்மையை நினைத்து ஏங்குகிறேன்; யஷ்வந்த்துக்காக ஏங்குகிறேன். கப்பலில் என்னை வழியனுப்புவதற்காக அன்று நீ வந்தி ருந்தாய் ரமா. வட்ட மேசை மாநாட்டுக்கு நான் புறப்படப் போகிறேன். கூடியிருந்த மக்கள் என்னை வாழ்த்தி ஆர்ப்பரிக்கிறார்கள். அனைத் தையும் நீ பார்த்துக் கொண்டே நின்றிருந்தாய். அவர்கள் என் மீது காட்டிய பேரன்பைக் கண்டு நீ நெகிழ்ந்து போயிருந்தாய்! உன் உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த உன்னால் இயல வில்லை.

ஆனால் நீ சொல்ல நினைத்த அனைத்தையும் உன் கண்கள் சொல்லின! அன்று வார்த்தைகளைக் காட்டிலும் உன் மவுனமே அதிகம் பேசியது. வழிந்த உன் கண்ணீர்த் துளிகள் வார்த்தைகள் அனைத்தையும் அர்த்தமற்றதாக்கிவிட்டன!


தன் குடும்பத்தினருடன் டாக்டர் அம்பேத்கர்: பிரப்ரவரி  1934, ராஜ்கிருகா இல்லம், தாதர், பம்பாய் 
* இடமிருந்து: யஷ்வந்த் (மகன்), அம்பேத்கர், ரமாபாய் (மனைவி), லட்சுமிபாய் (அம்பேத்கரின்  அண்ணன் ஆனந்த்ராவின் மனைவி, முகுந்த் (அண்ணன் மகன்) மற்றும் அம்பேத்கர் வளர்த்த நாய் டாபி.

இதோ லண்டனில் இந்தக் காலை வேளையில் அந்த நினைவுகள் அனைத்தும் எனக்குள் எழுகின்றன. அழ  வேண்டும் போல் இருக்கிறது. செய்வதறியாமல் நிற்கிறேன். என்ன செய்து கொண்டிருக்கிறாய் ரமா? யஷ்வந்த் என்ன சொல்கிறான்? என்னைத் தேடுகிறானா? அவனுடைய மூட்டுக்களில் சில பிரச்சனைகள் இருந்தனவே இப்போது எப்படி இருக்கிறான்? அவனை நன்றாக கவனித்துக் கொள் ரமா. நம்முடைய நான்கு குழந்தைகளை நாம் இழந் திருக்கிறோம். தற்பொழுது யஷ்வந்த் மட்டுமே இருக்கிறான். உன் தாய்மையின் அடையாளம் அவன்! நாம் அவனை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

யஷ்வந்த்தின் மீது எப்போதும் உன் கவனம் இருக்கட்டும். அவனுக்கு நிறைய கற்றுக் கொடு. இரவு நேரங்களில் அவனை எழுப்பி படிக்கச் செய். என் தந்தை அப்படித்தான் என்னை இரவு நேரங்களில் எழுப்பி படிக்க வைப்பார். என்னை எழுப்பிவிட வேண்டும் என்பதற்காகவே அவர் தூங்காமல் விழித்திருப்பார். இந்த ஒழுக்கத்தை அவரிடம் இருந்துதான் நான் கற்றுக் கொண்டேன். நான் படிக்கத் தொடங்கிய பிறகே அவர் உறங்கப் போவார். தொடக்க நிலையில் இரவு நேரங்களில் எழுந்து படிப்பதற்கு மிகவும் சோம்பலாக இருக் கும். இரவு நேரம் ஓய்வாக இருப்பதற்குத்தானே தவிர படிப்பதற்கு அல்ல என்றே கருதுவேன். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, வாழ்க்கையில் உறக்கத்தைக் காட்டிலும் கல்வியே முதன்மை யானது என்பதை உணர்ந்து கொண்டேன். அதற்கான அத்துனைப் பெருமைகளும் என் தந்தையையே சேரும்! என் கவனம் முழுவதும் கல்வியின் மீதே குவிக்கப்பட வேண்டும் என்ப தற்காக என் தந்தை இழந்தவை ஏராளம்! என் வாழ்வை வெளிச்சமாக்க அவர் இரவும் பகலும் உழைத்தார். அவருடைய உழைப்பின் பலன் களை தற்போது கண்கூடாகப் பார்க்கிறேன். இன்று அதற்காகப் பெரிதும் மகிழ்ச்சி அடை கிறேன் ரமா!

ரமா, என்னைப் போலவே யஷ்வந்த்தையும் படிப்பின் மீது அதிக ஈடுபாடு கொள்ளச் செய்ய வேண்டும். புத்தகங்களைப் பற்றிய ஆர்வத்தை அவனுக்குள் நாம் தூண்டிவிட வேண்டும்.

ரமா, பணமும் ஆடம்பர வாழ்க்கையும் எதற்கும் பயன்படாது. உன்னைச் சுற்றிலும் நீயே பார்க்கலாம். மக்கள் அதுபோன்ற வசதிகளை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஏதோ ஓர் ஒற்றை இலக்கை அடைவதற்காக அவர் களின் ஒட்டுமொத்த வாழ்வும் தேங்கிப் போய் விடுகிறது. அதற்கு மேல் அவர்கள் வளர்வதும் இல்லை; அடுத்த கட்டத்திற்கு நகர்வதும் இல்லை. அதுபோன்றதொரு வாழ்க்கையாக நம்முடையது முடங்கிப் போய்விடக்கூடாது ரமா! நம்மைச் சுற்றிலும் துன்ப துயரங்களைத் தவிர வேறு எதுவும் இல்லை . வறுமை மட்டுமே நம் உற்ற துணையாய் இருக்கிறது. எந்த இடர்ப்பாடுகளும் நம்மைவிட்டு விலகுவதே இல்லை . அவமா னங்களும் ஏமாற்றங்களும் புறக்கணிப்புகளும் நம்மை நிழல் போல் பின்தொடர்ந்து கொண்டே வருகின்றன. எங்கும் பேரிருள்; எப்போதும் பெரு வலி.

நமக்கான மீட்பர்களாக நாம் மட்டுமே இருக்க வேண்டியுள்ளது. நாம் தேர்ந்தெடுத்துக் கொண்ட பாதைக்கான வழிகாட்டியாகவும் அங்கு நிறுத்தப் பட்டிருக்கும் விளக்குகளுக்கு ஒளியூட்டியாகவும் நாம் மட்டுமே இருக்கிறோம். அந்தப் பாதையை வெற்றியை நோக்கிய ஒன்றாக நாம் மட்டுமே மாற்ற முடியும். இந்தச் சமூகத்தில் நமக்கான இடம் எங்குமே இல்லை . நமக்கான இடத்தை நாம் மட்டுமே உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதுதான் நம்முடைய நிலை ரமா. அதற்கேற்றாற் போன்றதொரு உயர்ந்த கல்வியை யஷ்வந்த்திற்கு நீ வழங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவன் நேர்த்தியாக உடையணியுமாறு பார்த்துக் கொள்! பண்பட்ட பழக்க வழக்கங்களை அவ னுக்கு கற்றுக்கொடு. உயர்ந்த நோக்கங்களை நோக்கி அவன் எண்ணங்களை ஒருமுகப்படுத்து.

உன் நினைவுகளை அடிக்கடி பற்றிக் கொள்கிறேன். யஷ்வந்த்தையும் நினைத்துக் கொண்டே இருக்கிறேன். எனக்குப் புரியவில்லை என்பதெல்லாம் இல்லை ரமா! உன்னுடைய துயரங்கள் அனைத்தையும் நான் உணர்கிறேன். மரத்திலிருந்து வீழும் இலைகளைப் போல் கொஞ்சம் கொஞ்சமாக உன் உடல் நலம் உதிர்ந்து கொண்டிருப்பதையும் மெல்ல மெல்ல அந்த மரமே பட்டுப் போய்க் கொண்டிருப்பதையும் நான் அறிந்தே இருக்கிறேன். ஆனாலும் நான் என்ன செய்ய முடியும் ரமா? ஒரு புறம் நம் முடைய ஓயாத முடிவே இல்லாத வறுமை; மற் றொரு புறம் என்னுடைய வளைந்து கொடுக்காத உறுதி. உலகின் ஒட்டுமொத்த அறிவையும் அள்ளிச் சேகரிக்கும் உறுதி!

வேறு எது குறித்த சிந்தனையுமின்றி அறி வைத் தேடும் வேட்கையிலேயே மூழ்கிப்போய் கிடக்கிறேன். ஆனால் என்னைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றாக நீயே இருக்கிறாய். என்னைச் சார்ந்தவர்களை நீயே கவனித்துக் கொள்கிறாய்.

உதிரும் உன் கண்ணீரைக் கொண்டு எனக்கு உத்வேகமூட்டுகிறாய். நீ இருப்பதால்தான் எல்லை இல்லாத இந்த அறிவுக்கடலை எந்தத் தடங்கலுமின்றி எனக்குள் வரித்துக் கொள்ள முடிகிறது.

மனந்திறந்து சொல்கிறேன் ரமா, நான்

ஒன்றும் இரக்கமற்றவன் அல்ல. அறிவு மீது நான் கொண்ட தீராத வேட்கையின் காரணமாக அந்தப் பாதையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் பயணத்தில் ஏதேனும் தடை ஏற்படும் பொழுது அது என்னை வருத்துகிறது; என் அமைதியைக் குலைத்து கோபம் கொள்ளச் செய்கிறது. எனக்கும் இதயம் இருக்கிறது ரமா. நானும் சில நேரங்களில் தடு மாறத்தான் செய்கிறேன்.

ஆனால் என்னை ஒரு மாபெரும் புரட்சிக்கு ஒப்புக் கொடுத்து இருப்பதால் என் உணர்வுகள் அனைத்தையும் நானே பொசுக்கிக் கொள்கிறேன். அதனால் நீயும் யஷ்வந்த்தும் தான் பல நேரங் களில் பாதிக்கப்படுகிறீர்கள் என்பதுதான் உண்மை. அதனை உணர்ந்த காரணத்தால்தான் இன்று வழியும் கண்ணீரை ஒரு கையால் துடைத்துக் கொண்டே மற்றொரு கையால் இந்தக் கடி தத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன்! பட்லேயை (யஷ்வந்த்) பார்த்துக் கொள். அவனை அடித்து விடாதே. நான் சில நேரங்களில் அவனை அடித் திருக்கிறேன். அதை எப்போதும் அவனுக்கு நினைவூட்டி விடாதே. அவன் உன்னுள் ஓர் அங்கம்!

மதங்கள் மற்றும் மனித மனங்களுக்குள் நிலவும் விருப்பு வெறுப்புகளையும் இந்த சமூகத் தில் நிலவும் அனைத்து வகையான ஏற்றத் தாழ்வு களையும் ஒழித்துக் கட்டுவதற்கான வழிமுறை களை நான் கண்டடைய வேண்டும். அவை அனைத்தும் எரித்து சாம்பலாக்கப்பட்டு புதைக் கப்பட வேண்டும். மக்களின் பண்பாடுகளில் இருந்தும் நினைவுகளில் இருந்தும் அது அடி யோடு அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

இக்கடிதத்தை வாசித்துக் கொண்டிருக்கும் வேளையில் உன் கண்களில் கண்ணீர் தேங்கி யிருக்கும் என்பதை நானறிவேன். உன் உள்ளம் கனத்துப் போயிருக்கும். உதடுகள் துடித்தாலும் உதிர்ப்பதற்கான வார்த்தைகளை உன் உணர் வுகள் தேடிக்கொண்டிருக்கும். எனக்குத் தெரியும் ரமா, தொட்டால் நொறுங்கிப் போகக்கூடிய உணர்வு களோடு நீ அங்கு நின்று கொண்டி ருப்பாய்!

ரமா, நீ இல்லாத ஒரு வாழ்க்கை எனக்கு எப்படி இருந்திருக்கும்? ஒரு வேளை நீ என் துணையாக இல்லாமல் போயிருந்தால் என் வாழ்வு என்ன ஆகியிருக்கும்? வசதி வாய்ப்புகள் மட்டுமே முதன்மையானது என்று கருதும் வேறு யாராவது இருந்திருந்தால் இந்நேரம் என்னை விட்டுப் பிரிந்து போயிருப்பார்கள். எப்போதும் பசியுடனும் மாட்டுச் சாணத்தைத் தேடிக் கொண் டும் சாணத்தைத் தட்டி அடுப்பெரித்துக் கொண் டும் வாழ்க்கையை ஓட்டுவதற்கு யாருக்குத்தான் பிடிக்கும்?

அதிலும் பம்பாய் போன்ற நகரத்தில் அப்படியொரு எரிபொருளைத் தேடிக்கொண்டு யார் அலைவார்கள்? கிழிந்து போன துணிகளை ஒட்டுப்போட்டுக் கொண்டும்; இந்த ஒற்றைத் தீப்பெட்டிதான் மாதம் முழுமைக்கும்; கைவசம் இருக்கும் தானியங்களையும் உப்பையும் வைத்து தான் இனிவரும் நாட்களை நகர்த்த வேண்டும் என்பது போன்ற என்னுடைய வறுமை தோய்ந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டும் என் னோடு வாழ்வதற்கு யாருக்குத்தான் பிடிக்கும்?

ஒரு வேளை என் வார்த்தைகளுக்கு மதிப் பளிக்காத பெண்ணாக நீ இருந்திருந்தால் என் நிலைமை என்னவாகி இருக்கும்? என் இதயமே நொறுங்கிப் போயிருக்கும் ரமா! என்னுடைய உறுதி குலைந்து போயிருக்கும். நான், முழு மையாக சிதைந்து போயிருப்பேன். என் கனவுகள் அனைத்தும் கற்பனைக்கு எட்டாத வகையில் நொறுங்கிப் போயிருக்கும். இந்த வாழ்வில் எவற்றை எல்லாம் நான் எதிர்நோக்கி இருந்தேனோ அவை அனைத்தையும் தொலைத் திருந்திருப்பேன். நான் அடைய நினைத்திருந்த அனைத்தும் பாதி வழியிலேயே நின்று போய் காயங்களால் மட்டுமே எஞ்சியிருந்திருப்பேன். எந்த ஓர் அடையாளமுமற்ற ஒரு சின்னஞ்சிறு செடியைப் போல நின்று கொண்டிருந்திருப்பேன்.

என்னை எப்படிப் பார்த்துக் கொள்வாயோ அப்படியே உன்னையும் கவனித்துக் கொள். சீக்கிரம் உன்னிடம் வருவேன். கலங்காதே. எல்லோரிடமும் என் அன்பைச் சொல்!

- உன்

பீம்ராவ்

லண்டன்

30.12.1930

No comments:

Post a Comment