பேராசானுடன்....! சில நினைவுகள்; நிகழ்வுகள்! (10) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 29, 2021

பேராசானுடன்....! சில நினைவுகள்; நிகழ்வுகள்! (10)

அந்நாள்விடுதலை' ஆசிரியரை (திரு.சா.குரு சாமி அவர்கள்) கண்டித்த தந்தை பெரியார் சற்று நேரத்திற்குப் பிறகு அவருக்குப் பொறுப்பான ஒரு பதவி அளித்து (மத்திய திராவிடர் கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பிற்கு) நியமனம் செய்தது பலருக்கு வியப்பைத் தந்தது; இப்போதும் அச் செய்தியைப் படிக்கும் சிலருக்குப் புரியாமல்கூட இருக்கலாம்!

இயக்கத்தினைச் சிறப்பாக நடத்தும் போது தவறு செய்பவர்களை அழைத்து சுட்டிக்காட்டி அவர்கள் திருந்தும் வாய்ப்பளிப்பதே தலைமை யின் முக்கியத்துவம் ஆகும்! திரும்பத் திரும்ப வாய்ப்புகள் அளித்தும் கூட, தங்களது 'குணத்தை'  மாற்றிக் கொள்ள விரும்பாமல் அதே குற்றத்தை தொடர்ந்து செய்தால், அப்போது மன்னிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது அய்யா வின் அணுகுமுறையில் இருந்துள்ளன என்பது அதன் மூலம் தெரிய வருகிறது.

விடுதலை' ஆசிரியர் எழுத்துகளில் சிலவற்றை (பல முறை அய்யாவின் கருத்துக்கு மாறான தலையங்கம் வந்தபிறகும் கூட) அது தன் கருத்தல்ல என்று சில வரி கருத்து மறுப்பை அய்யா வெளியிடுவார்).

இப்படித் திருந்திடும் வாய்ப்பைப் பலருக்கு அளித்தும், எல்லோரையும் ஒரு நிலையில் வைத்துப் பார்த்தும் இயக்கத்தைக் கட்டினார்; வளர்த்தார்; காத்தார். தலைவர்கள் இலக்கணத் திற்கு இது முக்கியத் தேவைகளில் ஒன்றாகும்!

பயிரும் களையும் ஒரு சேர வளர அனுமதித் தால் பயிருக்குக் கேடு அல்லவா? அதை எப் போது, எப்படிக் களையெடுப்பது என்பதை அய்யா என்ற அந்த ஆசானிடமே எவரும் கற்றுக் கொள்ள வேண்டும்.

என்னை திடீரென்று செயலாளர்களில் ஒருவ ராக அறிவித்தவுடன், அருகில் இருந்த ஒரு முக்கியஸ்தர், ‘வீரமணி அவர்களை மத்திய கமிட்டியின் செயலாளர்களில் ஒருவராக அறிவித் துள்ளீர்கள். அவர் மத்திய கமிட்டி (பொதுக்குழு) உறுப்பினராக இல்லையே, திராவிட மாணவர் கழகத்தின் மாநிலத் தலைவராக இருக்கிறாரே' என்று அய்யாவிடம் - தெளிவு பெற விளக்கம் கேட்டார்.

உடனேடக்என்று கணினி பதில் மாதிரி அய்யா சொன்னார்!

"மத்திய கமிட்டி செயலாளராக நியமித்தால்ஆட்டோமெட்டிக்காகவே' அவர் மத்திய கமிட்டி உறுப்பினராகவும் ஆகி விடுகிறார்; தனியே நிய மித்து பிறகு மற்றொரு தடவை செய்ய வேண்டிய அவசியமே இல்லை" என்று சொன்னது கமிட்டி யில் இருந்தோரை வியப்படையச் செய்தது!

அதேபோல யாராவது மாலைக்குப் பதில் பணம் கொடுத்தால் அதை இயக்க நிதியாகக் கருதி அய்யாவிடம் கொடுக்கும் முடிவை எனக் குள் எடுத்து, தொடர்ந்து, இன்று வரை அதைச் செய்வதில் நான் மனநிறைவு கொள்ளுகிறேன்.

ஆசான் பேசும் தனிக் கூட்டங்களில் தரப்படும் நன்கொடை, அன்பளிப்பு அனைத்தை யும் அய்யாவைச் சந்திக்கும் போது பெயர்ப் பட்டியலுடன் தந்து விடுவேன். அய்யா சிரித்துக் கொண்டே வங்கிக் கணக்கில் சேர்த்து விடுவார்.

(பிறகு எனது திருமணத்தை அய்யா, அம்மா ஏற்பாடு செய்து நடத்தியதை வாசகர்கள் அறி வார்கள்).

திருச்சி மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில், அய்யா மீது அழிவழக்குப் போடப்பட்டு நடந்து மூன்று, ஆறு மாத தண்டனை - ஏக காலத்தில் அனுபவிப்பது என்ற தண்டனையைத் தருமுன் நீதிமன்றத்தின் வளாகத் கதவுகள் - இரும்புக் கத வுகள் மூடப்பட்ட நிலையில் தீர்ப்பினை அறிய பல்லாயிரம் பேர் திரண்டு முழக்கமிடுகின்றனர். உணர்ச்சி கொந்தளிப்பு அலைகடலென பரவியது.

மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு. சோலை அய்.பி.எஸ்., திரு. தயா சங்கர் - டி.எஸ்.பி. (மீனாம்பாள்-சிவராஜ் அவர்களது மகன்) அய்யாவிடம் "கூட்டத்தை அமைதிப்படுத்த நீங்கள் சொல்லி அனுப்பினால் கழகத் தோழர்கள் கட்டுப்படுவர்" என்று கேட்டுக் கொண்டனர்.

அய்யா அவர்கள் என்னை அழைத்து, "எப் படித் தீர்ப்பு வந்தாலும், அமைதி காக்க வேண்டும்; காவல்துறை அதிகாரிகளை கடமையாற்ற விட வேண்டும் என்பது எனது கட்டளை!" என்று சொல்லிவிட்டு வாருங்கள் என்று பணித்தார். நானும் சென்று அமைதிப்படுத்தித் திரும்பினேன்.

தண்டனை கூறப்பட்டதும் ஒரு கட்டுக்கடங் காத உணர்ச்சி வெள்ளம்; அய்யாவை நீதிமன்றப் பின்புற வாசல் வழியே அந்த அதிகாரிகளே அழைத்துச் சென்று விட்டார்கள். பிறகு அம்மா வும், நானும் கூட்டத்தினை அமைதிப்படுத்தினோம்.

அந்தக் கூட்டத்தின் உணர்வு அலைகள்சுனாமி'யாக ஓங்கிய பேரெழுச்சி இன்னமும் நினைவை விட்டு நீங்கவில்லை; ஒரு சிறு அசம் பாவிதமும் நடைபெறாது - கண்டன முழக்கங் களை ஒலித்தவாறே ஊர்வலமாகச் சென்று கூட் டத்தினர் அமைதியாகக் கலைந்தனர்.

(தொடரும்)

No comments:

Post a Comment