நிதானம் தேவை - "விஜயபாரதமே!" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 25, 2021

நிதானம் தேவை - "விஜயபாரதமே!"

விஜயபாரதம்என்னும் ஆர்.எஸ்.எஸ். வார இதழ் (29.11.2021 பக்கம் 12, 13) “.வெ.ரா.சிலையா? பிரிவினை பேச சதியா?” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளது.

(1) சிலை வழிபாட்டில் நம்பிக்கையற்றவர்கள், ஹிந்து மத துவேஷிகள், குறிப்பிட்ட ஒரு சமூகத்தை கொச்சைப்படுத்துபவர்கள், இவர்களின் வழிகாட்டியான .வெ.ராமசாமி நாயக்கருக்கு சிலை ஏன்? அவ்வாறு சிலை வைத்தால் அதை வணங்குபவனுக்கு என்ன பெயர்? ஏன் என்றால் கடவுள் இல்லை, கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என விமர்சனம் செய்தவருக்கு சிலை வைத்தால், அவரது சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்துபவரும் காட்டுமிராண்டிதானே?” என்று புத்திசாலி போல பேனா பிடித்துள்ளது ஆர்.எஸ்.எஸ். இதழ்!

சங்கராச்சாரியாரிடம் தாக்கத்தை

ஏற்படுத்திய தந்தை பெரியார்

சங்கராச்சாரியாரிடமே கூட தாக்கத்தை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் என்றால் யாருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம், ஆனாலும் அதுதான் உண்மை.

தந்தை பெரியார் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அந்த வழியாக காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி மேனா (பல்லக்கு)வில் சென்றார். அதனைக் கவனித்த தந்தை பெரியார் மற்றவர்கள் சிரமப்பட்டு தூக்கிச் செல்ல சொகுசாக உட்கார்ந்து கொண்டுள்ளாரே! இவர்களைத் துறவி என்று எப்படி சொல்ல முடியும்? என்றார். பெரியாரின் பேச்சு பெரியவாள் என்று சொல்லப்படும் அவரின் காதில் விழுந்தது. அவ்வளவுதான். மேனாவை விட்டு கீழே நடக்க ஆரம்பித்தார் சங்கராச்சாரியார்.

அவர் ஏதோ சொல்கிறார், பெரிசா எடுத்துக்காதீங்கோ என்று கேட்டுக் கொண்டார்கள்.

அவர் சொல்வது சரிதான்.... சுகத்தை துறக்காதவன் துறவியே இல்லை. இனிமே எனக்கு இந்த மேனா வேண்டாம். இனி எங்கே சென்றாலும் நடந்தே செல்வேன் என்றார்.

(ஆதாரம்: சக்தி விகடன், பொறுப்பாசிரியர், ரவி பிரகாஷ்)

குறிப்பு: காஞ்சிபுரம் சங்கராச்சாரியாரிடம் 40 ஆண்டு காலம் பணிபுரிந்த லட்சுமி நாராயணன் என்னும் 76 வயதுள்ள பெரியவரிடம் (மாங்காட்டில்) எழுத்தாளர் சாருகேசியுடன், சக்தி விகடன் பொறுப்பாசிரியர் ரவி பிரகாஷ் எழுதிய கட்டுரையிலிருந்து.

 

ரீஃபார்ம்களைப் பற்றி சங்கராச்சாரியார்

ரீஃபார்ம்களை ஆரம்பித்து விடுகிற எல்லா லீடர்களையும் ஒழுங்கு தப்பினவர்கள் என்று சொல்லுவதற்கில்லைதான். சாஸ்த்ர, ஸம்பரதாய விதிகளாகிற ஒழுங்குகளை இவர்களும் விட்டவர்கள்தான் என்பதால் இவர்களை ஸனாதன தர்ம பீடங்களான மடஸ்தாபனங்களிலிருந்த நாங்கள் ஒப்புக் கொள்ளத்தான் இல்லை என்றாலும், இவர்கள் Personal Life இல் (தனி வாழ்க்கையில்) ஸத்யம், ஒழுக்கம், தியாகம், அன்பு போன்ற பலவற்றைக் கடைப்பிடித்தவர்கள் என்பதை ஆக்ஷேபிப்பதற்கில்லை. ஓரளவிற்குப் படிப்பு, விஷய ஞானம் எல்லாம் உள்ளவர்களாகவும், ஜனங்களை நல்லதில் கொண்டு போக வேண்டும் என்பதில் நிஜமான அக்கறை கொண்டவர்களாகவுமே இந்தச் சீர்திருத்தத் தலைவர்களில் பலர் இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்“ - சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி

- என்று குறிப்பிட்டுள்ளார் (‘தெய்வத்தின் குரல்;’ மூன்றாம் பகுதி, பக்கம் எண்.336)

இந்த சங்கராச்சாரியார் காலத்தில் வாழ்ந்த ரீஃபார்மர் தந்தை பெரியார்தானே!

முதலில் "விஜயபாரதங்கள்" ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தந்தை பெரியாரின் சிலை வழிபாட்டுக்கு உரியதல்ல. கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்ற வாசகமே அதனை உணர்த்துமே!

இந்த அடிப்படைக் கூடத் தெரியாமல் அறியாமை இருட்டில் இருந்து கொண்டு எழுதுவது பரிதாபமே!

தனக்கு உதவியாளராக இருந்த மகள் போன்ற மணியம்மையாரை திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக சிலையா? என்பது ஆர்.எஸ்.எஸின் கேள்வி.

கேட்டுக் கேட்டு புளித்துப் போனது இது. தனது உதவியாளரை - தனக்குப் பின் இயக்கத்தில் சொத்துப் பாதுகாப்புக்கும், நடப்புக்கும் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடு என்று எடுத்துச் சொன்னபிறகு, முதலையும் மூர்க்கனும் கொண்டது விடான் என்ற பாணியிலே இருப்பவர்களைத் திருத்துவது கடினமே.

பெரியார் எதிர்பார்த்தது போலவே இயக்க உடமைகளுக்கும், இயக்க நடப்புகளுக்கும் அவர் எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருந்தார்,  செயல்பட்டார் என்பது அறிவுடையோர்க்குத் தெரியும்.

தனது மடத்துக்கு வந்த பெண்மணியை கையைப் பிடித்து இழுத்த ஆட்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களுக்கு ஜெகத்குரு.

பெண்ணுரிமைக்காகவும், ஒழுக்கத்துக்காகவும் குரல் கொடுத்துப் பிரச்சாரம் செய்த தலைவருக்குச் சிலை வைத்தால் ஒரு கூட்டத்திற்கு நெறி கட்டுகிறது. புரிந்து கொள்ளத்தக்கதே!

நற்செயல்களுக்காக ஒருவருக்குச் சிலை வைக்கலாம் என்று ஒத்துக் கொள்கிறதுவிஜயபாரதம்.”

தந்தை பெரியாரை விட மக்கள் நலனுக்கு, சமூகநீதிக்கு, பெண்ணுரிமைக்கு, மூடத்தன எதிர்ப்புக்கு, பொது ஒழுக்கத்துக்குப் பாடுபட்ட தலைவர் யார்?

திருச்சியில் முதன்முதன் தந்தை பெரியாருக்குச் சிலை வைக்கப்பட்ட போது, சிலைக்குழுவின் துணைத் தலைவர் யார்? .வே.ரா.கிருஷ்ணசாமி ரெட்டியார் நாத்திகரா? சிறீரங்கம் வெங்கடேச தீட்சிதர் யார்? கடவுள் மறுப்பாளரா?

தவத்திரு குன்றக்குடி அடிகளார், தந்தை பெரியாரை தலைவர் பெரியார் என்று அழைத்தது எல்லாம் எந்த அடிப்படையில்?

ஆர்.எஸ்.எஸின் வேரில் புழுத்த வருணாசிரம ஜாதிப் புற்றுநோயை ஒழித்து மனித சமூகத்தில் சகோதரத்துவத்தைப் பேணிய ஒப்பாரும் மிக்காருமில்லாத் தலைவர் என்பதற்காகத் தானே.

ஒன்றிய அரசு அவரின் நூற்றாண்டையொட்டி சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டது எந்த அடிப்படையில்?

இந்தியாவில் இரண்டாயிரம் வருடத்தில் மகத்தான ஒரு சமுதாயப் புரட்சி தமிழ்நாட்டில்தான் நடந்திருக்கிறது. திராவிடர் கழகத் தலைவர் பெரியார் தான் அந்தப்புரட்சியைச் செய்தவர்  என்பது அமெரிக்காவில் உள்ள மூத்த பேராசிரியர்களின் கருத்து ஆகும்!

- பேராசிரியர் ஜான்னரலி

(‘ஆனந்தவிகடன்’, 16.7.1972)

இந்து ராஜ்ஜியம் என்று கூறி மக்களைப் பிறப்பின் அடிப்படையில் பேதப்படுத்தி குளிர்காயும் ஆதிக்கக் கூட்டத்திற்குப் பெரியார் என்றால் பேரிடியாகத்தான் இருக்கும், பூகம்பமாகத்தான் தோன்றும்.

இவற்றையெல்லாம் கடந்து உலகநாடுகள் போற்றும் அளவுக்கு உயர்ந்து நிற்கும் ஒரு பெருந்தலைவர் பெரியாரைத் தூற்றினால், தூற்றியவர்கள்தான் அவமானப்படுவார்கள், தூற்றப்படுவார்கள்.

கீழை நாடுகளைப் பற்றி பெர்ட்ரான்டு ரசல் ஒரு நூலில் எழுதும்போது, இங்குள்ளவர்கள் எதை எழுதினாலும், பேசினாலும் மேற்கோள் காட்டிப் பேசுவதுதான் வழக்கம். தனது கருத்து என்று வெளியிட மிகவும் தயங்குவார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். நான் அறிந்த வரையில் மேற்கோள் காட்டிப் பேசாமல் தனது அறிவையே முன்வைத்துப் பேசும் தனித்த சிந்தனையாளர் பெரியார் ஒருவர் தான்!

- .எஸ்.பி.அய்யர் சட்டக்கல்லூரி இயக்குநர்.

10.2.1960 அன்று சென்னை சட்டக்கல்லூரியில் தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் சட்டக்கல்லூரி இயக்குநரான .எஸ்.பி.அய்யர் இவ்வாறு கூறினார். அந்நிகழ்ச்சியில் தந்தை பெரியார் சிறப்புரையாற்றினார் என்பது முக்கியமானதாகும்,

1927ஆம் ஆண்டிலேயே தன் பெயருக்குப்பின்னால் இருந்த நாயக்கர் பட்டத்தைத் தூக்கி எறிந்த பெரியாரைக் குறிப்பிடும்பொழுது .வே.ராமசாமி நாயக்கர் என்று குறிப்பிடுகிறதுவிஜயபாரதம்என்றால், அது அவர்களின் பூணூல் ஜாதிப் புத்தியைத்தானே காட்டும்!

ஒழுக்கமுள்ள ஒரு கடவுளைக்கூடகற்பிக்கலாயக்கற்ற கும்பல், ஒழுக்கத்தின் ஊற்றுக்கண்ணாக - பொதுப்பணியைத் தொண்டறமாகக் கருதி 95 வயது வரை உழைத்த ஒரு தலைவரைக் கொச்சைப்படுத்த விரும்பினால்,   மக்கள் அவர்களைத்தான் கொச்சையாக நினைப்பார்கள் - அற்பர்களாகக் கூட்டி ஒதுக்குவார்கள்.

ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் பாடும்பொழுது, ஆளுநர் உட்பட எழுந்து நின்று மரியாதைகாட்டும் நிலையில், குத்துக்கல்லாக உட்கார்ந்த பேர்வழிதானே விஜயபாரதங்களுக்குப் பெரியவாள்!

அதே நேரத்தில் அரசு விழாக்களில் கடவுள் வாழ்த்து பாடப்படும்பொழுது பொது ஒழுக்கம், நாகரிகத்தைப் பேணும் வகையில், தள்ளாத வயதில் தானாக நிற்க முடியாத நிலையிலும், இரு பக்கங்களிலும் தொண்டர்களை நிறுத்தி, அவர்களின் தோள்களில் கையைப் போட்டுக்கொண்டு, அந்தக் கடவுள் வாழ்த்துப்பாடி முடிக்கப்படும் வரை நின்றாரே.

அவர் மனிதரா - காவி வேட்டி மைனர்களா?

ஆர்.எஸ்.எஸின் ஏடான விஜயபாரதத்துக்கு ஒன்று சொல்லிக் கொள்வோம்!

மூன்று முறை அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ். காந்தியார் சுட்டுக்கொல்லப்பட்ட போது தடை செய்யப்பட்ட அமைப்பும் கூட!

காந்தியார் சுடப்பட்ட நிலையில் சுட்டவன் நாதுராம் கோட்சே என்னும் பார்ப்பான் என்று தெரிந்த நிலையில் மும்பையில் என்ன நடந்தது?

அக்ரகாரங்கள் எரிந்தன. பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனரே!

தந்தை பெரியார் அன்று கண்ஜாடை காட்டியிருந்தால், இங்கு பார்ப்பனர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும், அக்ரகாரங்களின் நிலை எந்த நிலைக்கு ஆளாகி இருக்கும்?

ஒரு பொறுப்பான தலைவர் என்ற முறையில் அந்த நிலையைத் தடுத்து நிறுத்திட்ட மாபெரும் உன்னதத் தலைவர் தந்தை பெரியார்.

அன்றைய முதலமைச்சரான ஒழுக்க சீலர் ஓமந்தூராரின் அழைப்பின் பேரில் வானொலியில் தந்தை பெரியார் ஆற்றிய உரையால் தமிழ் மண்  அமைதிப் பூங்காவாயிற்று என்பதை மறக்க வேண்டாம்!

தந்தை பெரியாருடன் கருத்து மாறுபட்ட நிலையில் கூட தோழர் ஜீவா சொன்னார் - “பெரியாரை விமர்சிக்கும்போது நிதானம் வேண்டும்!” என்றாரே, அதனை இந்த நேரத்தில் நினைவூட்டுகிறோம்.

விஜயபாரதமேயாரைப்பற்றி எழுதுகிறோம் என்பதில் நிதானம் தேவை! தேவை!!

No comments:

Post a Comment