கட்டட எழிற்கலைக்கு அறிவியலே அடிப்படை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 2, 2021

கட்டட எழிற்கலைக்கு அறிவியலே அடிப்படை!

மூடநம்பிக்கையை மட்டுமல்ல; வர்ணப் பாகுபாட்டையும் வளர்ப்பதே வாஸ்து சாஸ்திரம்!

பட்டமளிப்பு விழாவில் வேந்தர் கி.வீரமணி உரை

ஊட்டி, நவ.2 கட்டட எழிற்கலைக்கு அறிவியலே அடிப்படை என்றும், மூடநம்பிக்கையை மட்டுமல்ல, வர்ணப் பாகுபாட்டையும் வளர்ப்பதே வாஸ்து சாஸ்திரம் என்றும் மெக்கன்ஸ் ஊட்டி கட்டடக் கலைக் கல்லூரிப் பட்டமளிப்பு விழாவில் பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

மெக்கன்ஸ் ஊட்டி கட்டடக் கலைக் கல்லூரியின் எட்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று (1.11.2021) காலை 10 மணியளவில் ஊட்டி எச்.டி..பி. வளாகத்தில் நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல் லூரியும், கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்ச்சரின் அங்கீகாரம் பெற்ற கல்லூரியுமான இக்கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 2015-2020 காலத்தில் பயின்ற 88 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக விழாவில் பங்கேற்க வருகை தந்த பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களை, கல்லூரியின் தலைவர் என்.முரளிக்குமரன் உள்ளிட்ட நிர்வாகிகள், மாணவர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

கல்லூரியின் கல்வித் தலைவர் ஜி.செல்வகுமார் சிறப்பு விருந்தினர் மற்றும் மாணவர்களை வரவேற்றும், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் சிறப்புகளை எடுத்துரைத்தும் உரையாற்றினார்.

கல்லூரியின் தலைவர் என்.முரளிக்குமரன் அவர்கள் நிகழ்ச்சியைத் துவக்கிவைக்க முதல்வர் பேராசிரியர் என்.எஸ்.சரவணன் கடந்த கல்வியாண்டின் அறிக் கையை வெளியிட்டார்.

பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றிய பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள், “மெக்கன்ஸ் ஊட்டி கட்டடக்கலைக் கல்லூரியின் குறிக்கோள் உரையில், மாணவர்களை திறனாய்வுச் சிந்தனை (critical thinking) யும், நெறிமுறையும் கொண்டவர்களாக உருவாக்கு வதன்மூலம் அவர்களை உலகளாவிய மானுட சமூகத் துக்குப் பயன்படக் கூடியவர்களாக ஆக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வடிவமைப்புக் கல்வி என்பது அறிவியல் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டது.

இந்நிறுவனத்தின் குறிக்கோள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கியப் பகுதியைப் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 51 (எச்), அறிவியல் மனப்பான்மையையும், மனிதநேயத்தையும், கேள்வி கேட்கும் உணர்வையும், சீர்திருத்தத்தையும் வளர்ப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை என்று வலியுறுத்துகிறது.

இதில் கேள்வி கேட்கும் உணர்வை (spirit of inquiry) பல கல்வி நிறுவனங்கள் வளர்ப்பதில்லை. பகுத்தறிவுச் சிந்தனையும் அணுகுமுறையும்தான் இதற்கான பாதையை வகுக்கும்என்று குறிப்பிட்டார்.

டாக்டர் கி.வீரமணி அவர்கள், 1967 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் முக்கியப் பகுதிகளையும் எடுத்துக் காட்டினார்.

மேலும் அவர் தமது உரையில், கட்டட எழிற்கலை என்பது அறிவியலை அடிப்படையாகக் கொண்டு அமையவேண்டுமே ஒழிய, வாஸ்து சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொள்ள முடியாது என்பதைச் சுட்டிக் காட்டினார். எந்தெந்த வர்ணத்தாருக்கு எந்தெந்த வகை நிலங்கள் ஒதுக்கப்படவேண்டும் என்று வகுத்திருப்பதை எடுத்துக்காட்டி, இது நமது அரசமைப்புச் சட்டம் முன்னிறுத்தும் சமத்துவத்திற்கும், சகோதரத்துவத்திற்கும் எதிராக இருப்பதை எடுத்துரைத்தார்.

பண்டைத் தமிழர்களின் கட்டடக் கலை அறிவுக்குச் சான்று பகரும் கீழடியையும், கல்லணையையும் சுட்டிக் காட்டியதோடு, நாளும் வளரும் அறிவியல் சிந்தனையை நாம் எங்கும் கைக்கொள்ள வேண்டியதன் அவசியத் தையும் முன்னிறுத்தி உரையாற்றினார்.

ஆங்கிலத்தில் அமைந்த அவ்வுரை அச்சு வடிவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தொடக்கத்தில் சில மணித்துளிகள் தமிழில் உரையாற்றினார்.

விழாவில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் கே.கிருஷ்ணசாமி, இன்லேண்ட் குரூப் சி... எஸ்.சாலைக்குமரன், செட்டிநாடு டிசைன்ஸ் .மெய்யப்பன், அஸெட் அட்வைஸ் ராஜேஷ் பாபு, துணை நிறுவனர் எஸ்.செந்தில்குமார், நிர்வாக இயக்குநர் எஸ்.ராமசாமி, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

விழாவில் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்று பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல் கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் உரையினை ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் துறைத் தலைவர் கே.எஸ்.சரண்யா நன்றியுரையாற்றினார்.

இவ்விழாவில் பெரியார் மருத்துவக் குழுமத்தின் இயக்குநர் மருத்துவர் இரா.கவுதமன், கோவை மண்டல திராவிடர் கழகத் தலைவர் கருணாகரன், மாவட்ட .. தலைவர் இரா.புகழேந்தி, டி.பி.பழனியப்பன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார், கழகப் பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment