நன்னெறியின் மறுபெயரே நாத்திகம்! - (6) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 24, 2021

நன்னெறியின் மறுபெயரே நாத்திகம்! - (6)

பகுத்தறிவு எனப் பிரச்சாரம் செய்துகூட்டத்தைச் சேர்த்துஅறக்கட்டளை அமைத்து, கோடிகளைக் குவித்து அசையா சொத்துகளை ஒரு பத்து பேர் ஆண்டு அனுபவிப்பதுதான் பகுத்தறிவு நாத்திக சமூக நீதியா?” என்று நீட்டி முழங்குகிறார் நீஷ பாஷை என்று தமிழைக் கூறும் நீஷ மனிதரின் சீடர்.

ஆம், பகுத்தறிவாளரான பெரியார் அறக்கட்டளை வைத்துள்ளது உண்மைதான். அதன் அறப்பணிகள் நாடறிந்தவை - அது ஒரு திறந்த புத்தகம். சங்கரமடம் டிரஸ்ட் அப்படியா?

கல்வி நிறுவனங்கள், குழந்தை இல்லம், முதியோர் இல்லம், மருத்துவமனைகள், நூலகம், பகுத்தறிவு வெளியீடுகள் என்று இன்னோரன்ன வகையில் முறைப்படி, அரசின் சட்ட திட்டங்களின் படி நடந்து கொண்டு தான் உள்ளன.

மருத்துவமனையில் கைவிடப்பட்ட குழந்தைகளை  (Found Lings)  வாரி அணைத்து, உச்சி மோந்து, வளர்த்தெடுத்து, கல்விப்பால் ஊட்டி, திருமணத்தையும் செய்து வைப்பது பெரியாரின் அறக்கட்டளை. அவர்களுள் பலரும் பல நிலைகளில் உயர்ந்தும் உள்ளனர்.  பிறந்து சிலநாள்களே ஆன அந்தக் குழந்தைகளை வளர்ப்பது எளிதான காரியமா? அன்னை மணியம்மையார் எப்படியெல்லாம் அந்தப் பிள்ளைகளுக்குத் தாயாய் இருந்து வளர்த்து எடுத்தார்!

அந்தக் குழந்தைகளுக்குத் தலைப்பெழுத்து (Initial) என்ன தெரியுமா? .வெ.ரா.. (பெரியார், மணியம்மையார் ஆகியோர் பெயர்களின் முதல் எழுத்து)  என்பதுதான். யார் பெற்ற பிள்ளைகளோ, அவர்களை எடுத்து ஆளாக்கியதோடு அவர்களுக்குப் பெற்றோர்களாக தம் பெயர்களையும் கொடுத்து நுகர்ந்திட பெரும் மனித குணம் வேண்டும்.

ஆனால் சங்கராச்சாரியார் நடத்தும் அறக்கட்டளைகளின் தன்மை என்ன? அவை யாருக்குப் பயன்படுகின்றன?

காஞ்சி மடத்தில் செயல்படும் டிரஸ்ட்கள் பல.

(1) வேத ரஷண நிதி டிரஸ்ட் (இந்தியா முழுவதும் வேதபாட சாலைகளை நடத்துவதற்கும், வேத பண்டிதர்களைக் கவுரவிப்பதற்கும்)

(2) கன்னிகாதான டிரஸ்ட் - ஏழை பிராமணப் பெண்களை உத்தேசித்தே இந்த டிரஸ்ட் என்று சங்கராச்சாரியார் வெளிப்படையாகவே சொல்கிறாரே!

(3) ஷஷ்டியப்த பூர்த்தி டிரஸ்ட் (வேத பாஷ்யங்களைப் படிப்பதற்கு உற்சாக மூட்டுவதற்கு)

(4) கலவை பிருந்தாவன் டிரஸ்ட் (வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை ஒன்றை ஏற்படுத்தி அனேக இடங்களில் வேத ஸம் மேளனங்கள் நடத்திப் பண்டிதர்களைக் கவுரவிக்க இந்த டிரஸ்ட்.)

காஞ்சிபுரத்தை அடுத்த கலவையில் சங்கரமடம் நடத்தும் முதியோர் இல்லத்தில் 160 பேர்; வேத பாடசாலையில் 21 சிறுவர்கள்-  அனைவரும் பிராமணர்கள் (ஆதாரம்: ‘தினமணி, 16.1.2005’)

இப்படி காஞ்சி மடம் நடத்தும் டிரஸ்டுகள் எல்லாம் பார்ப்பான் வயிற்றில் அறுத்துக் கட்டத்தான் என்பது நினைவிருக்கட்டும்!

சூத்திரர்கள் கொட்டிக் கொடுக்கும் - காணிக்கைகளாக அள்ளிக் கொடுக்கும் பணம் எல்லாம் பார்ப்பனர்களுக்கே பயனாகப் போய் சேர்கிறது என்பதைப் புரிந்து கொள்க!

தினமலர்கூற்றுப்படியே, பெரியார் டிரஸ்ட் - பத்துபேர் மேற்பார்வையில் பாதுகாப்பாக இருக்கிறது - சங்கரமட டிரஸ்ட்டோ ஒரே ஒரு பேர் வழியிடம் தான் இருக்கிறது. அதனால் தான் சங்கர்ராமன் கொலைக்காக அள்ளிக் கொடுக்க முடிந்தது.

இந்த இடத்தில் பெரியாரையும், பெரியவாளையும் எடைப் போட்டு பாரீர் என்பதே நம் வேண்டுகோள்!

*****

மதுரையில் தொழில் அதிபர் சீதாராமனுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சிரோமணி விருது வழங்கினார். அந்நிகழ்ச்சியில் அவர் என்ன பேசினார்?

நல்லவர்களை வாழ்த்தும் பழக்கம் வெகுகாலமாக இருந்து வருகிறது. சீதாராமன் தமிழுக்கும், திருக்குறளுக்கும் சேவை செய்து வருகிறார். அவருக்கு இந்த விருது வழங்குவது பொருத்தமானது என்றார். ஆனால் திருக்குறளைப் பற்றி அவரின் உண்மையான கருத்து என்ன?

திருக்குறளில் உள்ள அறத்துப்பால் கிட்ட தட்ட பகவத் கீதையின் தமிழாக்கமே ஆகும். வாழ்வின் வழி முதலும் குறிக்கோளும் அதில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதுஎன்று  கூறினார் (‘தினத்தந்தி’, 15.4.2004).

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்என்பது திருக்குறள். பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் (கீதை அத்தியாயம் 9, சுலோகம் 32) என்கிறது கீதை; உண்மை இவ்வாறு இருக்க கீதையின் தமிழாக்கமே திருக்குறள் என்பது அறிவு நாணயமா? அதாவது தமிழாக்கமாம் - புரிகிறதா? கீதையிலிருந்து திருக்குறள் காப்பி அடிக்கப்பட்டதாம் - மலமும்  - மணமும் ஒன்று என்று கூறும் குணக் கேடர்களை எது கொண்டு சாற்ற?

ஜூனியர் சங்கராச்சாரியார் இப்படி சொல்கிறார் என்றால், சீனியர் சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி எப்படி உளறினார்?

தீக்குறளை சென்றோதோம்என்று ஆண்டாளின் திருப்பாவை பாடலின் வரிக்கு என்ன பொருள் கூறினார்?

தீய திருக்குறளை ஓத மாட்டோம்என்று பொருள் கூறியவர் தானே. குறளை என்றால் பொருள் என்ன? மதுரைத் தமிழப் பேரகராதி என்ன கூறுகிறது? குறளை - குள்ளம், கோட் சொல், குற்றம் என்ற பொருளைத் தருகிறது.

ஆனால் சங்கராச்சாரியாரின் தமிழ் வெறுப்பு - துவேஷம் உண்மைக்கு மாறானதைக் கூறச் செய்கிறதே!

சங்கராச்சாரி முதல் சவுண்டிகள் வரை தமிழ் என்றால் அப்படி ஒரு துவேஷம்!

கேள்வி: பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவதன் மூலம் கன்னடர்  - தமிழர் இடையே நல்லுறவு, நல்லிணக்கம் ஏற்படும் என்று கருநாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளாரே?

பதில்: நல்லுறவா? நல்ல உறவுதான். யாராவது கன்னட வெறியர்கள் ஒரு சமயம் பார்த்து அந்தச் சிலையை அவமதிக்காமல் இருந்தால் போதுமே.

(‘துக்ளக்‘, 19.8.2009)

புரிகிறதா? ‘ஆமையைத் திருப்பிப் போட்டு அடிக்கனும்,’ என்ற ஆசாமிக்கும், இந்த அக்ரகார குஞ்சுகளுக்கும் வேறுபாடு என்ன?

பூஜை வேளையில் தமிழில் பேச மாட்டாராம்  சங்கராச்சாரியார். தீட்டுப்பட்டு விடுமாம். சொல்லுகிறவர் கருஞ்சட்டைக்காரர் அல்லர் - காஞ்சி சந்திரசேகரரின்  அந்தரங்க ஆலோசகர் அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (நூல்: ‘இந்து மதம் எங்கே போகிறது?’ - பக்கம் 99, 100)

சென்னை மியூசிக் அகாடமியில் பூணூல்காரர் ஒருவரின் ஒரு நூல் வெளியீட்டு விழா (23.1.2018). தமிழ்நாடு ஆளுநர் பன்வாரி லால் புரோகித் பங்கேற்ற அவ்விழாவில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதியும் பங்கு கொண்டார். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப் பெற்றது. ஆளுநர் உட்பட அனைவரும் எழுந்து நின்றனர் - சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதியைத் தவிர; மனுசன் குத்துக்கல்லு போல உட்கார்ந்திருந்தார். அதே நேரத்தில் நிகழ்ச்சியின் இறுதியில் பாடப்பட்ட நாட்டுப்பண் (ஜனகனமன பாடல்) பாடப்பட்ட பொழுது எழுந்து நின்றார்.

தினமலரில் கட்டுரை எழுதியசூத்திரதமிழரே - இதற்கு என்ன பொருள்?

அரசு விழாவில் கடவுள் வாழ்த்துப் பாடப் பெற்றால், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் தந்தை பெரியார் என்ன செய்வார்? தள்ளாத வயதில், தனியாக எழுந்து நிற்க முடியாத நிலையிலும், இரு தோழர்களைத் தன் இருபக்கத்திலும் நிறுத்தி, அவர்களின் தோள்களில் கைகளைப் போட்டு கடவுள் வாழ்த்துப் பாடல் முடிகிற வரை, நிற்பாரே! கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியாரின் பண்பாடும், பொது ஒழுக்கமும், நாகரிகமும் எத்தகையது! ஜெகத்குரு என்று சொல்லிக் கொள்ளும் சங்கராச்சாரியாரின் புத்தி எத்தகையது என்பதைத் தெரிந்து கொள்க!

*****

மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காகவே உலகில் அவதரித்த உத்தம புருஷர்கள் போல் பகல்வேஷம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

வீட்டில் புதையல் கிடைக்கும் என்ற மோசடி பூசாரியின் பேச்சைக் கேட்டு பெற்ற பிள்ளையை பலி கொடுப்பதும், வீட்டிலுள்ள நகைகளை வைத்து பூஜை செய்து, நகைகளை பறி கொடுப்பதும் இன்றும் நடக்கிறது.

பகுத்தறிவாளர்கள் நிறைந்த நம் நாட்டில் இந்நிலை இன்னும் மாற வில்லையே, இதற்குக் காரணம், பகுத்தறிவாளர்களின் பேச்சு தமிழ்நாட்டில் எடுபடாதது தானா? என்று பகுத்தறிவாளர்களைப் பார்த்து பெரிய கேள்வி கேட்டது போல தனக்குத்தானே தட்டிக் கொள்கிறார் தினமலரின் கைப்பிள்ளை.

ஒன்றை ஒப்புக் கொள்கிறார். தங்களுக்குப் பகுத்தறிவு இல்லை என்பதை. பகுத்தறிவாளர்கள் ஏமாற மாட்டார்கள். பக்தியினால் பகுத்தறிவைப் பறி கொடுத்தவர்கள் தாம் ஏமாறுகிறார்கள்.

மூட நம்பிக்கை இருக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் கட்சியா? அதை முதலில் சொல்லட்டும். இல்லை என்று பதில் கூறுவார்களேயானால் மூடநம்பிக்கை ஒழிப்புக்காக அவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்ற கேள்வி எழுமே!

அம்மை வந்தால் மாரியாத்தாள் கோபம் என்று மாரியம்மன் கோயிலுக்குச் சென்று கூழ் காய்ச்சி ஊற்றுவார்கள். காலரா வந்தால் காளியம்மன் கோயிலுக்குச் சென்றும் கூழ் காய்ச்சி ஊற்றுவார்கள். ஆனால் அம்மையும், காலராவும் வந்து கொண்டுதான் இருந்தன.

இப்பொழுது அவை ஒழிந்தனவே! கடவுளால் நோய் என்ற எண்ணம் இருந்த இடம் தெரியாமல் போனதே - இது மூட நம்பிக்கையிலிருந்து மக்கள் மீண்டார்கள் என்று பொருள் இல்லையா?

மூடநம்பிக்கை இன்னும் இருக்கிறதே என்கிறார்கள். மருத்துவம், விஞ்ஞானம் ஒரு பக்கத்தில் வளர்ந்து கொண்டு தான் உள்ளது. இருந்தாலும் நோயாளிகள் அதிகரித்து வருகிறார்களே - மருத்துவம், விஞ்ஞானம் தோற்றுப் போய் விட்டது என்று கூறுவார்களா?

ஞானக்கண் உள்ளவர் என்று சொல்லிக் கொண்ட சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கரா நேத்ராலயத்தில் கண் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளவில்லையா? அம்மை வந்து மரணமடைந்த சங்கராச்சாரியார்கள் உண்டே!

பகவான் சாயிபாபா - அவரை நினைத்தாலே தலைதெறிக்க நோய் பறந்து ஓடி விடும் என்றனரே - அந்த சாயிபாபா எத்தனை மாதங்கள் நோயின் உபாதையால் அவதிப்பட்டார்!

பார்வதிதேவியாரிடம் ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தன் அற்பாயுசில் (18 வயதில்) சாவைத் தழுவியது ஏன்?

கடவுள் மறுப்பு சிந்தனையை நாட்டு மக்கள் மத்தியிலே பிரச்சாரம் செய்த வண்ணம் இருந்த பெரியார் 95 ஆண்டு வாழ்ந்தது எப்படி?

புருஷன் செத்தால் மொட்டை அடிக்கப்பட்டு வெள்ளைப் புடவை உடுத்தி, மூலையில் உட்கார வைக்கப்பட்ட மொட்டைப் பாப்பாத்திகள் இப்பொழுது இருக்கிறார்களா? ஜீன்ஸ் பேண்டும், சுடிதாரும் போட்டுக் கொண்டல்லவா நடமாடுகிறார்கள்.

அய்யர், அய்யங்கார்கள் கூட பெயருக்குப் பின்னால் ஜாதியைப் போட்டுக் கொள்வதில்லையே - இந்த மாற்றங்கள் எல்லாம் ஆகாயத்திலிருந்து பொத்தென்று குதித்தனவா?

இவ்வளவுப் பேசுகிறார்களே, உங்களின் கோயிலும் குளங்களும் சாதித்தது என்ன? கோயில் கருவறைக்குள் காம சரச லீலையுள் திளைத்த தேவநாதப் பார்ப்பனர்கள் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள்?

திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் பத்ரிநாத்தின் கதை என்ன? ஜெகத்குரு ஜெயேந்திரரின் காம வேட்டை பற்றி அக்கிரகார பெண்மணி அனுராதா ரமணன் அளித்த வாக்கு மூலம் என்ன?

பகுத்தறிவு விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கிறது. ஒழுக்கத்தை வலியுறுத்துகிறது; ஆஸ்திகமோ - எந்தப் பஞ்சமா பாதகங்களையும் செய்தும் -  அதற்குப்  பிராயச்சித்தம் உண்டு என்று ஒழுக்கக் கேட்டுக்கு அகலமாக கதவுகளைத் திறந்து வைத்துள்ளதே - இதுதானே ஆத்திகம்!

12 வருடம் பாவங்களைச் செய்திருந்தாலும் கும்பகோணம் மகாமகக் குளத்தில் மகாமகத்தன்று ஒரு முழுக்குப் போடு - ஒட்டு மொத்தமாக  (Whole sale) பாவங்கள் பறந்து ஓடும் என்ற நிலை இருந்தால் பாவங்கள் பெருகுமா, குறையுமா?

குறைந்த முதலீடு - கொள்ளை லாபம் என்பதுதானே இதன் பொருள்.

உண்மை என்னவென்றால் மகாமகக் குளத்து நீரில் மலக் கழிவு 28 சதவீதமும், சிறுநீர்க்கழிவு 40 சதவீதமும் என்று - சோதனை மூலம் அறிவித்தவர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர்  (DT NEXT, 23.2.2018) என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா?

கேள்வி கேட்க ஆரம்பித்தால் கொஞ்ச நஞ்சமிருப்பதும் கிழிந்து போய் விடும் - ஜாக்கிரதை!

முடிப்பதற்கு முன்...

கடைசியாக அனைவரின் சிந்தனைக்கும் இதோ தந்தை பெரியாரின் நிலைப்பாடு,

ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும், இதை அறவே விடுத்து வெறும்தேசம்’ ‘தேசம்என்று கூக்குரலிடுவது எமது பத்திரிகையின் நோக்கமன்று. மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும். உயர்வு தாழ்வு என்ற உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்து வரும் ஜாதிச் சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால், இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிர் ஒன்றென என்னும் உண்மை அறிவு மக்களிடம் வளர வேண்டும். இன்னோரன்ன பிற நறுங்குணங்கள் நம் மக்கள் அடையப் பாடுபடுவது நமது நோக்கமாகும்.  எவர் எனக்கு இனியர், எவர் எனக்கு இன்னார் என்ற விருப்பு வெறுப்பின்றிநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக் கண் மேற் சென்றிருத்தற் பொருட்டுஎன்ற வாக்கைக் கடைப்பிடித்து, நண்பரே ஆயினும் ஆகுக, அவர்தம் சொல்லும் செயலும் கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித் தொதுக்கப்படும்!”

- தந்தை பெரியார்

குடிஅரசுதலையங்கம்- 2.5.1925

அதே நேரத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் திருவாளர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன கூறுகிறார்?

நம் தேசத்தில் கூட பண்புக் குறைவான போக்கு - கிளர்ச்சி - டெமான்ஸ்ட்ரேஷன்சும், புரட்சி ஆகிய எல்லாம் கடந்து 40, 50 வருஷங்களாத்தான் உண்டாகி இருக்கின்றன. அதாவது மற்ற தேசங்கள் மாதிரி, நாமும் வெளியில் சமத்துவம் கொண்டாட வேண்டும் என்று ஆரம்பித்த பிறகு தான் உண்டாகியிருக்கின்றன.”

- கல்கி, 4.4.1976

மக்கள் அனைவரும் சமத்துவ சம நிலை என்று கருதி உழைத்த தந்தை பெரியார் எங்கே? சமத்துவத்துக்காக கிளர்ச்சி செய்வதை பண்புக் குறைவானது என்று கருதுகிற சங்கராச்சாரியார் எங்கே?

தினமலர்எழுத்தாளர் மட்டுமல்ல, நாட்டு மக்களும் பொதுவாக இதற்குப் பிறகாவது சிந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கலாமா? வணக்கம்!

குறிப்பு: தேவைப்பட்டால் மறுபடியும்..


No comments:

Post a Comment