‘‘சூத்திரப்பட்டம்'' என்பது பாரத ரத்னா பட்டமா? இழிவை ஒழிக்கும் போரிலே தொடர்ந்து ஈடுபடுவது திராவிட இயக்கமே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 28, 2021

‘‘சூத்திரப்பட்டம்'' என்பது பாரத ரத்னா பட்டமா? இழிவை ஒழிக்கும் போரிலே தொடர்ந்து ஈடுபடுவது திராவிட இயக்கமே!

 வேலூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்

வேலூர், ஆக.28  இன இழிவை ஒழிக்கும் போரிலே தொடர்ந்து ஈடுபட்டு வருவது - தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் - திராவிட இயக்கமே  என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

நீட்தேர்வு ஒழிக்கப்படவேண்டும்

ஏன்? எதற்காக? கருத்தரங்கம்

கடந்த 24.10.2021 அன்று காலை வேலூர் பேபி மகாலில் நடைபெற்றநீட்' தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்? எதற்காக? என்ற கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

இந்த வேலூர் மாநகரில் ஒரு வரலாற்று சிறப்புமிகுந்த, திராவிட இயக்கத்தினுடைய வரலாற்றில், இது ஒரு சிறந்த பொன்னேடு என்ற பெருமைக்குரிய ஒரு நிகழ்ச்சி யாக அமைந்திருக்கக்கூடிய ‘‘கற்போம் பெரியாரியம்'', ‘‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை'' ஆகிய இரண்டு நூல்கள் அறிமுக விழா - ‘நீட்' தேர்வு என்று நம்முடைய பிள்ளைகள், ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள், தங்களுடைய மருத்துவ கனவை, ஒருபோதும் நனவாக்கக் கூடாது; அதற்கு நாங்கள் தடுப்பணை கட்டிவிட்டோம் என்று சொல்வதுதான் நீட் தேர்வு என்ற ஒரு சூழ்ச்சிப் பொறி என்பதை விளக்குகின்ற வகையிலும் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

நாடு முழுவதும் பிரச்சாரமாக - மக்கள் இயக்கமாக நடத்திக் கொண்டிருக்கின்றோம்!

நாடெங்கும் திரளான மக்கள் மத்தியில், இதைப்பற்றி எடுத்துச் சொல்லவேண்டும் என்பதற்காகவும், ‘நீட்தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்? எதற்காக? என்ற விளக்கத்தை நாடு முழுவதும் ஒரு பிரச்சாரமாக, மக்கள் இயக்கமாக நடத்திக் கொண்டிருப்பதின் ஒரு பகுதி யாகவும், இந்த வேலூரில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்ற இந்த நிகழ்ச்சியினுடைய தலைவர், மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சிறந்த செயல்வீரர் வி.சி. சிவக்குமார் அவர்களே,

வரவேற்புரையாற்றிய வேலூர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் அவர்களே,

இந்த சிறப்பான நிகழ்ச்சியில், ஒரு வரலாற்று முக் கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சி - அவர் பேசிக் கொண்டே இருக்கிறார்; இன்னும் பேசவேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புவோமே தவிர, எப்பொழுது நிறுத்தப் போகிறார் என்று நாம் நினைக்கக் கூடிய அள விற்கு இல்லை. அவ்வளவு பெரிய ஆற்றல் வாய்ந்த உரை.

இங்கே சபாநாயகர் இல்லைஅவர்தான் விழா நாயகர்

அவர் ஏராளமாக தயார் செய்திருக்கிறார், இதற்காக. 45 நிமிடங்களுக்குமேலே பேசியிருக்கிறார். இங்கே சபாநாயகர் இல்லை; அவர்தான் விழா நாயகர்.

ஆகவே, மணி அடிப்பதற்கு ஆளில்லை. மணி உட் கார்ந்து கொண்டிருக்கிறேன், அவ்வளவுதானே தவிர, வேறொன்றும் கிடையாது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர் அருமையான தொரு ஓர் உரையை ஆற்றினார். இந்த உரையை, இந்த நிகழ்வை உலகம் முழுவதும் கேட்டுக் கொண்டிருக் கிறார்கள்பெரியார் வலைக்காட்சி'யின்மூலமாக.

எதிர்க்கட்சியினருக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்!

அப்படிப்பட்ட ஒரு பதிவான ஒரு வரலாற்று ஆவணம் இந்த நிகழ்ச்சி. அதிலே ஒரு தனிச் சிறப்பு, நம்முடைய அருமைச் சகோதரர், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒப்பற்ற ஒரு பொதுச்செயலாளர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாகும்.

கலைஞருக்கு அடுத்தபடியாக, தொடர்ந்து 50 ஆண்டுகள் சட்டமன்றத்திலே இருந்தார் என்ற பெருமையும், சட்டமன்றத்திலே அவர் ஆளுங் கட்சி அணியில் இருந்தாலும், அமைச்சராக இருந் தாலும், எதிர்க்கட்சியில் இருந்தாலும் -  எதிர்க்கட்சி யில் இருக்கும்பொழுது, ஆள்வோருக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார். அதேபோன்று, ஆளும் கட்சியில் இருக்கும்பொழுது, எதிர்க்கட்சியின ருக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்.

திராவிட இயக்கத்தினுடைய சிறந்த செல்வங்களில் ஒன்று

அப்படிப்பட்ட ஆற்றல் வாய்ந்த அருமை சகோதரர், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச்செய லாளர், எல்லாவற்றிற்கும் மேலாக, இன்றைக்கு இந்தி யாவில் உள்ள மாநில முதலமைச்சர்களிலேயே, முதல் முதலமைச்சர் என்று ஆட்சி அமைத்த 200 நாள் களுக்குள் சிறப்பான பெயர் பெற்ற ஒருவருக்கு, அருந்துணையாக, மிகப்பெரிய அளவிற்கு அவருக்கு ஒரு பாதுகாப்பு கேடயம்போல, தன்னுடைய பொது வாழ்க்கையில், அவரையும் அடுத்து, பெரிய நிலையில் இருப்பதோடு, திராவிட இயக்கக் கொள்கைகளுக்கும் அவர் எவ்வளவு சிறந்த பாதுகாவலர் என்பதற்கு அடை யாளமாகத் திகழும் அருமைச் சகோதரர், உடன்பிறவாத சகோதரர், கொள்கை உறவு, திராவிட இயக்கத்தினுடைய சிறந்த செல்வங்களில் ஒன்று என்று பெருமைப்படக் கூடிய அளவிற்கு இன்றைக்கும் இருக்கக்கூடிய அருமைச் சகோதரர் துரைமுருகன் அவர்களே,

கதிர்ஆனந்த் அவர்களுக்கும் சேர்த்துதான் சொல்லியிருக்கிறார்!

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பான வகையில், இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் அவர்களே,

பல உரைகள், நமக்கு மட்டுமல்ல, நேரில், இவ்வளவு நேரம் பாடம் எடுத்திருக்க முடியாது அவருக்கு - அவருக்கும் சேர்த்துத்தான் மாண்புமிகு அமைச்சர் சொல்லியிருக்கிறார்.

இளைஞர்களுக்குத் தெரியவேண்டும். விழுதுகள் முக்கியம் - ஆனால், விழுதுகளைவிட, அதைப் பாது காத்துக் கொண்டிருக்கிற அடித்தளம் வேர்கள். திராவிட இயக்கத்தினுடைய வேர்களைப்பற்றி அவர் பேசினார். அந்த வேர்கள் மிகவும் முக்கியம்.

கருப்பு இனம் எழுந்ததற்குக் காரணம், மேலைநாடு களிலும், மற்ற இடங்களிலும், ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளில், அடிமைத்தளையிலிருந்து அவர்கள் விடுதலை அடைந்ததற்குக் காரணம், அதே அமெரிக் காவில் வெள்ளைக்காரர்களின் திமிர் இன்னமும்கூட அடங்காதிருக்கக் கூடிய இடத்தில், ஒரு கருப்பினத்தைச் சார்ந்தவர்கள் இன்றைக்குப் பொறுப்பிற்கு வந்திருக் கிறார்கள். முன்பு, குடியரசுத் தலைவராக வந்தார்கள்; இப்பொழுது குடியரசுத் துணைத் தலைவராக வந்தி ருக்கிறார்கள். குடியரசுத் தலைவரை நிர்ணயம் செய் யக்கூடிய அளவிற்கு இருக்கிறார்கள் என்ற பெருமைக் கெல்லாம் அடித்தளம் எது தெரியுமா? நண்பர்களே,

உங்களுக்குத் தெரியவேண்டும் - அவர் பேசும் பொழுது, என்னுடைய சிந்தனைகள் அங்குதான் சென்றன.

ரூட்ஸ்' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் - அதாவது வேர்கள் - அந்த வேர்கள் ஏழு தலைமுறையாக எப்படி யெல்லாம் அடிமையாக இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அந்தப் புத்தகம்தான் ஒரு பெரிய புரட்சியை உருவாக்கியது. இளைஞர்களை சிந்திக்க வைத்தது.

பாதையில்லாத ஊருக்கெல்லாம் ஈரோட்டுப் பாதை நடந்தது. அந்தப் பாதையில்லாத இடத்திலே, சிதைந்து குண்டும், குழியுமாக இருக்கின்ற இடத்திற்குச் சென்று, இதே வேலூருக்கு நாம் எப்படி சென்னையிலிருந்து வந்தோம்?

இன்றைய தலைமுறையினருக்கு பழைய சாலைகளைப்பற்றி தெரியாது

அதற்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி-

டி.ஆர்.பாலு போன்றவர்கள் ஒன்றிய ஆட்சியில் அங்கம் வகித்தபொழுது, ஒரு பெரிய நெடுஞ்சாலையைப் போட்டு - இன்றைய தலைமுறையினர் வேகவேகமாக இன்றைக்கு வருகிறார்கள்.

அழகாகச் சொன்னார், இது அவர்கள்மீது குற்றமல்ல, எடுத்துச் சொல்லவேண்டும் என்பதற்காகச் சொன்னார். அன்றைய சாலையிலும் பயணம் செய்து; இன்றைய சாலையிலும் பயணம் செய்தால்தான், இந்த சாலையைப் போட்டவர்களுடைய பெருமை நமக்கு விளங்கும்.

ஆனால், இன்றைய தலைமுறையினர் இன்றைய சாலையில் மட்டும்தான் பயணம் செய்திருப்பார்கள்; அவர்களுக்குப் பழைய சாலைகளைப்பற்றி தெரியாது.

அப்படிப்பட்ட ஓர் அருமையான சிறந்த உரையை ஆற்றினார். முதல் முறையாக நான், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் அவர்களுடைய உரையை கேட்டேன்.

சூத்திரப்பட்டம் என்ன, ராவ் பகதூர் பட்டமா? பாரத ரத்னா பட்டமா?

நிறைய பட்டங்களையெல்லாம் நாம் பெற்றிருக் கிறோம் என்பதெல்லாம் வேறு; எவ்வளவு பட்டங்கள் பெற்றாலும், நமக்கு சூத்திரப் பட்டம் இருக்கிறதே? இதைத்தான் பெரியார் கேட்டார்.

மற்ற பட்டங்கள் எல்லாம் நம்முடைய அறிவிற்கு. ஆனால், நாம் கேட்டதே கிடையாது  - அவன் நம்மையெல்லாம் கீழானவன் என்று ஆக்கி வைத்து விட்டார்கள்.

சூத்திரப் பட்டம் என்ன, ராவ் பகதூர் பட்டமா? பாரத ரத்னா பட்டமா? நம்முடைய பெண்களை, நம்முடைய தாயை, நம்முடைய சகோதரிகளை விபச்சாரி என்று சொல்லி, அவர்களைக் கேவலப்படுத்தி, நம்மையும் கேவலப்படுத்துகின்ற ஒரு சட்டம் - ஒரு தர்மம் - ஆண்டாண்டு காலமாக நம்மை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கின்ற அந்த நிலைகளைப்பற்றியெல்லாம் தான், திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம் கவலைப்பட்டது.  அமைச்சரவர்கள் அதை மிக அழகாக எடுத்துச் சொன்னார்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சிறப்பித்து, புத்தகங்களை ஏராளமாகப் பெறுவதற்குக் காரணமாக இருக்கக்கூடிய அருமை மாவட்ட அவைத் தலைவர், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் அருமைச் சகோதரர் முகம்மது சகி அவர்களே,

குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் அருமைத் தோழியர் அமுலு அவர்களே,

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற சட்டப்பேரவை உறுப்பினர், மிகச் சிறப்பான துடிப்பு மிகுந்த ஒருவர், செயலூக்கம் உள்ளவர்; அருமைத் தோழர் கார்த்திகேயன் அவர்களே,

மாவட்ட காங்கிரஸ் இயக்கத் தலைவர் அருமை நண்பர் டீக்காராமன் அவர்களே,

பெரியார் மருத்துவர் மகம்மது சகி அவர்களே, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இங்கே சிறப்பான வகையில் ஏற்பாடுகளைச் செய்துள்ள மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் அவர்களே,

மாநில மகளிரணி அமைப்பாளர் தேன்மொழி அவர்களே, மண்டலத் தலைவர் சடகோபன் அவர்களே, பட்டாபிராமன் அவர்களே, பெரியார் மருத்துவரணி செயலாளர் டாக்டர் பழ.ஜெகன்பாபு அவர்களே,

திராவிடர் கழகக் காப்பாளர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சத்துவாச்சாரி கணேசன் அவர்களே,

மாநில மகளிரணி பொருளாளர் தோழர் அகிலா அவர்களே, மண்டல மகளிரணி செயலாளர் தோழர் ஈசுவரி அவர்களே, மாவட்ட மகளிரணி தலைவர் தோழர் கலைமணி அவர்களே,

நன்றியுரை கூறவிருக்கின்ற விசுவநாதன் அவர்களே,

ஏராளமாக வந்திருக்கக்கூடிய அனைத்து இயக்கங் களைச் சார்ந்த, இயக்கங்களுக்கு அப்பாற்பட்ட தோழர்களே, தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியார் பிறந்திருக்காவிட்டால்....

இது ஒரு சிறப்புமிகுந்த விழா - வேலூர் என்று சொன்னால், அதற்கு எத்தனையோ பெருமைகள் உண்டு. அதில் இன்னும் ஒரு சிறப்பானது அறிவாசான் தந்தை பெரியார் அவர்களைப்பற்றி சொன்னார்கள் அல்லவா!

பெரியார் பிறந்திருக்காவிட்டால் என்ற ஒரு கேள்வியை, நீண்ட காலத்திற்கு முன்னால், ஆத்தூரில் சிலை திறந்த நேரத்தில், நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், கேள்வியாகக் கேட்டார், பொது மக்கள் மத்தியில்.

பெரியார் பிறந்திருக்காவிட்டால், என்ன நிலைமை ஏற்பட்டிருக்கும்? ஒவ்வொரும் அதனை நினைத்துப் பார்க்கவேண்டும். அதைத்தான் மிக அழகாக நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் சகோதரர் துரைமுருகன் அவர்கள் அருமையாகச் சொன்னார்கள்.

நாமெல்லாம் இன்றைக்கு முழங்காலுக்குக் கீழே வேட்டி கட்டியிருக்கிறோம். படித்திருக்கிறோம், சிறப்பான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று சொன்னால், நேரிடையாக பல பேருக்கு என்ன காரணம் என்று தெரியாது?

நாங்கள் எல்லாம் பட்டதாரிகள் என்று  அமைச்சர் பேசும்போது சொன்னார். என்னை உற்சாகப்படுத்து வதற்கு நிறைய செய்திகளை சொன்னார். தயவு செய்து நினைத்துப் பாருங்கள், நாங்கள் எல்லாம் முதல் தலைமுறையினர். அவருக்கு என்ன சொன்னாரோ, அவை அத்தனையும் எனக்கும் பொருந்தும். ஒரே ஒரு வேறுபாடு - நான் கடலூர் நகரத்தில் இருந்தேன்; அவர் கிராமத்தில் இருந்தார்.

எங்களுக்கு அறிவு இருக்கிறது, ஆற்றல் இருக்கிறது என்று நினைக்கலாம்

ஆனால், எவ்வளவுதான் நாங்கள் பட்டங்களை வாங்கி, தங்க மெடல்கள் வாங்கி, முதல் ரேங்க்கைப் பெற்றாலும் - ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள் ளுங்கள்; எப்படி இவையெல்லாம் சாத்தியம்; எங்களுக்கு அறிவு இருக்கிறது, ஆற்றல் இருக்கிறது என்று நினைக்கலாம்.

நாங்கள்தானே கஷ்டப்பட்டு படித்துப் பட்டம் வாங் கினோம்; இதற்கும், பெரியாருக்கும் என்ன சம்பந்தம்? இதற்கும் திராவிட இயக்கத்திற்கும் என்ன சம்பந்தம்? என்று சிலர் நினைக்கலாம்.  சில அறிவாளிகள் அப்படி நினைக்கலாம். நான்தானே தேர்வு எழுதினேன், நான் தானே பட்டம் வாங்கினேன்; அவர்களா  தேர்வு எழுதி னார்கள், பட்டம் வாங்கினார்கள் என்று நினைக்கலாம்.

ஆனால், நண்பர்களே, ஒன்றே ஒன்றை அந்த இளைஞர்களுக்கு நினைவூட்டவேண்டியது என்னவென்று சொன்னால், கல்லூரிக்குள் போனோம், தேர்வு நடந்தது - படித்தோம், பட்டம் வாங்கினோம் என்று சொல்கிறீர்கள்.

ஏன் படிக்கக்கூடாது? என்று தட்டித் திறந்த தடிதந்தை பெரியாரின் கைத்தடி

கல்லூரிக் கதவு காலங்காலமாக நமக்கு மூடி இருந்ததே - பள்ளிக்கூட கதவுகளே மூடியிருந்ததே - படிக்கத் தகுதியில்லை, தேவையில்லை என்று சொன்னவர்களைப் பார்த்து, திமிறி ஏன் படிக்கக் கூடாது? என்று, உள்ளே அழைத்து, அந்தக் கதவைத் தட்டித் திறந்த தடி - தந்தை பெரியாரின் கைத்தடி - அந்த இயக்கம் சுயமரியாதை இயக்கம்.

கதவு திறந்தால்தானே, மண்டபத்திற்குள் வர முடியும். மண்டபம் மிக அழகாக இருக்கிறது; மண்டபத்தை சிறப்பாகக் கட்டியிருக்கிறார் கார்த்தி கேயன், பெருமையாக இருக்கிறது; நன்றி அவருக்கு. இந்த மண்டபத்திற்குள் அமர்ந்து நாம் பேசுகிறோம். கதவு திறந்திருந்ததால்தான், நாம் உள்ளே வந்து பேசுகிறோம். கதவு மூடியிருந்தால், நம்மால் உள்ளே வந்திருக்க முடியுமா?

மதங்களில்கூட கதவை திறந்து வைக்கவில்லை. தட்டுங்கள் திறக்கப்படும்தான் என்று சொன்னார் கள். கிறித்துவ மதத்தில், பைபிளில்கூட ‘‘தட்டுங்கள் திறக்கப்படும்'' என்று சொன்னால், மூடியிருக்கிறது என்றுதான் அர்த்தம். திறந்திருந்தால், தட்டமாட் டார்கள், அதுதான் மிக முக்கியம்.

எட்டி நின்றவர்களை, கிட்டே வா என்று அழைத்த இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம்!

தட்டுங்கள் திறக்கப்படும் என்றார்கள். தட்டினால், திறப்பதற்கு அவர்கள் தயாராக இருந்தார்கள். ஆனால், நம்மாள், தட்டினாலும் திறப்பதற்குத் தயாராக இல்லை. தட்டுவதற்கே நீ கிட்டே வரக்கூடாது என்று சொல்லி, எட்டி நில் என்று சொன்னார்கள்.

எட்டி நின்றவர்களை, கிட்டே வா என்று அழைத்த இயக்கம்தான் நண்பர்களே, இந்தத் திராவிடர் இயக்கம் பல காலகட்டங்களில்.

இன்றைக்கு இவ்வளவு பேர் இங்கே அமர்ந்தி ருக்கிறோமே, சகோதரிகள் அமர்ந்திருக்கிறார்களே, சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறாரே அமுலு அவர்கள். எத்தனை லட்சம் பேருக்கு அவர் பிரதிநிதியாக வந்திருக்கிறார்?

இன்றைக்குப் பெண்கள் ஏராளமாக வந்திருக் கிறார்களே, - இதை ஒரு நூறாண்டுகளுக்கு முன்னால், நினைத்துப் பார்க்க முடியுமா? நாற்காலியில் அமர்ந் திருக்கிறார்கள் - இப்பொழுது ஏராளமான பேர் நாற் காலிக்கு வந்துவிட்டார்கள்; இன்னும் வரவேண்டும் என்று விரும்புகிறார்கள், அது நியாயம்தான். முன் பெல்லாம் நாற்காலியில் அமரக்கூடிய தைரியம் உண்டா? செருப்பு அணிந்துகொண்டு செல்ல முடியுமா?

முதன்முறையாக பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்தது மட்டுமல்ல - சொத்துரிமைக்கும் அடித்தளம் அமைத்தது

உலகத்தில் முன்னேறிய நாடு அமெரிக்கா - அந்த அமெரிக்க நாட்டில், பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது; இந்தியாவிலும் பல இடங்களில் கிடையாது. 1923 இல் நீதிக்கட்சி ஆட்சி - திராவிடர் ஆட்சி - அந்த ஆட்சிதான் முதன்முறையாக பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்தது மட்டுமல்ல - சொத்துரிமைக்கும் அடித்தளம் அமைத்தது.

சுயமரியாதை இயக்கம் என்ன செய்தது என்று கேட்கும் நண்பர்களே, சுயமரியாதை இயக்கம் என்ன செய்தது என்பதை சொல்கிறேன்.

இந்த நிகழ்ச்சி ஒரு மாநாடுபோன்று நடைபெறுகிறது. மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன் அவர்களுடைய உரை சிந்தனையைத் தூண்டியிருக்கிறது.

பெரியார் அய்யா சொல்கிறார்,

உலகத்தில் உள்ள எத்தனை அகராதிகளை வேண்டு மானாலும் புரட்டிப் புரட்டிப் பாருங்கள், ‘சுயமரியாதை' என்ற ஒரு சொல்லுக்கு ஈடான சொல் வேறு எங்கேயும் இருக்காது. இது ஒன்றுதான் மனிதனை குறிப்பது. வேறு எந்த இயக்கத்திலாவது மனிதனை அடையாளப்படுத்தி இருக்கிறார்களா?

(தொடரும்)

No comments:

Post a Comment