7 வயதுக்குள்ளான பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் ரத்து: சீனாவில் புதிய சட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 27, 2021

7 வயதுக்குள்ளான பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் ரத்து: சீனாவில் புதிய சட்டம்

பெய்ஜிங், அக்.27 7 வயதுக்குள்ளான பள்ளி மாணவர்களுக்கு மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக, வீட்டுப் பாடங்களை ரத்து செய்யும் புதிய சட்டத்தை சீனா பிறப்பித்துள்ளது.

சீனாவில் கரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, பள்ளிகள் மூடப்படுவதும், திறக்கப்படுவதுமாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் பெரும்பாலான மாகாணங்களில் இணையம் மூலமே கல்வி கற்பிக்கப்படுகிறது.

இந்த நிலையில் 7 வயதுக்குக் குறைவான பள்ளி மாணவர்களுக்கு அதிகப்படியான வீட்டுப் பாடங்கள் அளிக்கப்படுவதாகவும், இதனால் அவர்கள் விளையாடுவதற்குப் போதிய நேரம் கிடைக்கவில்லை என்றும் பெற்றோர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டினர். வீட்டுப் பாடங்களால் மாணவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுவதாகவும் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அதிகப்படியான வீட்டுப் பாடங்கள் தொடர்பான புகார்களைக் கருத்தில் கொண்டு 7 வயதுக்குள்ளான மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் தருவதை ரத்து செய்யும் புதிய சட்டத்தை சீனா இயற்றியுள்ளது.

அதேபோன்று 6 வயதுக்கும் குறைவான மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வையும் சீன அரசு முழுமையாகத் தடை விதித்துள்ளது. மேலும், பள்ளிக் கல்வி, சேவையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை சித்தாந்தத்தைத் தனியார் பயிற்சி மய்யங்கள் சிதைப்பதால் அதைத் தடுக்கப் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்றும் சீன அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment