சுயமரியாதைச் சுடரொளிகள் வை.குப்புசாமி - குஞ்சம்மாள் இல்லத்தில் 1961 ஆம் ஆண்டிலிருந்து 60 ஆண்டுகளாக சுயமரியாதைத் திருமண முறையில்தான் மணவிழாக்கள் நடைபெறுகின்றன; எந்த வகையிலும் அவர்கள் தாழ்ந்துவிடவில்லை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 30, 2021

சுயமரியாதைச் சுடரொளிகள் வை.குப்புசாமி - குஞ்சம்மாள் இல்லத்தில் 1961 ஆம் ஆண்டிலிருந்து 60 ஆண்டுகளாக சுயமரியாதைத் திருமண முறையில்தான் மணவிழாக்கள் நடைபெறுகின்றன; எந்த வகையிலும் அவர்கள் தாழ்ந்துவிடவில்லை!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் விளக்க உரை

சென்னை, அக்.30  1961 ஆம் ஆண்டிலிருந்து இன் றைக்கு 2021 ஆம் ஆண்டு சரியாக  60 ஆண்டுகளாக நெடுவை அய்யா குப்புசாமி இல்லத்தில் சுயமரியாதைத் திருமண முறையில்தான் மணவிழாக்கள் நடைபெற்று இருக்கின்றன. எந்த வகையிலும் அவர்கள் தாழ்ந்து விடவில்லை. ஒரு மணவிழாவைவிட, இன்னொரு மணவிழாவில் அவர்கள் வளர்ந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டக்கூடிய அளவில்தான் வளர்ச்சி என்பது இருக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

கடந்த 27.10.2021  அன்று காலை சென்னை பெரியார் திடலிலுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நெடுவாக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர்கள் சுயமரியாதைச் சுடரொளிகள் வை.குப்புசாமி - குஞ்சம் மாள் இல்ல மணவிழாவினை தலைமையேற்று நடத்தி வைத்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

மணமக்கள் வை.சுகந்த் - பி.பிரியங்கா

இயக்க வரலாற்றில் பெரியார் நாடு என்று நாங்கள் பெருமைப்படக்கூடிய ஒரத்தநாட்டில், அப்படி ஆக்கிய அரும்பெரும் தொண்டரான சுயமரியாதை வீரர் மானமிகு அய்யா நெடுவை குப்புசாமி - குஞ்சம்மாள் ஆகிய அந்த இருபெரும் வேர்களில் இருந்து தோன்றி, இன்றைக்கு விழுதுகளாக உருவாகி, பெருமைப்படக் கூடிய அளவிற்கு, ஒரு நல்ல குடும்பம் - ஒரு கொள்கைப் பல்கலைக் கழகம் என்று இருக்கக் கூடிய அளவில், மிக அருமையான, சிறப்பான, எடுத்துக்காட்டான வாழ்க் கையை வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய சகோதரர்களில் ஒருவரான அருமைத் தோழர் வைத்தியலிங்கம் அவர் கள், அதேபோல, அவர்களுடைய வாழ்விணையர் சித்ரா ஆகியோருடைய செல்வன் வை.சுகந்த் அவர் களுக்கும், தஞ்சை திருவாளர்கள் பிரேம்குமார் - சாந்தி ஆகியோருடைய செல்வி பிரியங்கா அவர்களுக்கும் நடைபெறக்கூடிய வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சிக்கு முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் அவர்களே, கழகத்தினுடைய மற்றொரு பொதுச்செயலாளர் தோழர் இரா.ஜெயக்குமார் அவர் களே, கழகப் பொருளாளர் மானமிகு குமரேசன் அவர் களே, கழக மாநில அமைப்பாளர் தோழர் ஒரத்தநாடு குணசேகரன் அவர்களே, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய பெருமக்கள் அய்யா அன்பில் லெனின் அவர்களே, அருமை அய்யா சென்னை செல்வராசு அவர்களே, அருமைத் தோழர் பெரியார் வீர விளையாட்டுக் கழக செயலாளர் நா.இராமகிருஷ்ணன் அவர்களே,

பட்டுக்கோட்டை பிருந்தாவனம் மேல்நிலைப்பள்ளி யின் இயக்குநர் ஆசிரியர் அய்யா ராஜமாணிக்கம் அவர்களே, தஞ்சை மாவட்ட செயலாளர் செயல்வீரர் தோழர் அருணகிரி அவர்களே, திராவிடர் கழக மாநில கிராமப்புற பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் அவர்களே,

கழக சொற்பொழிவாளர்கள் தஞ்சை பெரியார் செல் வன் அவர்களே, இராம.அன்பழகன் அவர்களே, ஒரத்த நாடு ஒன்றிய தலைவர் ஜெகந்நாதன் அவர்களே, இறுதி யில் நன்றியுரை கூறவிருக்கக்கூடிய பெரியார் அறக்கட்ட ளையின் உறுப்பினர் அய்யாத்துரை அவர்களே,

நம் அனைவரையும் அன்போடு வரவேற்ற  தோழர் விமல் அவர்களே,

இந்த சிறப்பான அரங்கத்தில், ஒரு மாநாடு போன்று நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டி ருக்கக் கூடிய சான்றோர் பெருமக்களே, இயக்கக் குடும்பத்தவர்களே, தாய்மார்களே, மன்றல் கொண்டிடும் மணமக்களே, உற்றார் உறவினர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முழுக்க முழுக்க கொள்கைவயப்பட்ட,

நம்முடைய குடும்ப உறவுகள்

இந்த மணவிழாவில், நான் தலைமையேற்று நடத்தி வைக்கக்கூடிய இந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன் என்று சொன்னால், இது ஒரு சடங்கோ, சம்பிரதாயமோ அல்ல. மாறாக, இது முழுக்க முழுக்க கொள்கைவயப்பட்ட, நம்முடைய குடும்ப உறவுகள் கொண்டது, கொள்ளப்பட்டது என்ற உணர்வோடு நாங்கள் மணவிழாவினை நடத்தி வைக்கிறோம்.

இங்கே நிகழ்ச்சிகளைப்பற்றி சொன்னார்கள், இந்தக் குடும்பத்தைப்பற்றி சொன்னார்கள். மறைந் தும், மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக் கக்கூடிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அய்யா சுயமரியாதை வீரர் நெடுவாக்கோட்டை குப்புசாமி அவர்கள், மிகப்பெரிய அளவில், உழைப்பை, ஒரு பெரிய வாய்ப்பை இயக்கத்திற்குத் தந்தவர்கள்.

நெடுவாக்கோட்டையில் நடைபெற்று இருந்திருந்தால்...

அந்தப் பகுதியில் இருந்து தோழர்கள் ஏராளமாக வந்திருக்கிறீர்கள். இங்கே நண்பர்கள் சுட்டிக்காட்டி யதைப்போல, இந்த மணவிழா நெடுவாக்கோட்டையில் நடைபெற்று இருந்திருந்தால், இன்னும் பல மடங்கு மக்கள் அதிகமாகக் கூடியிருக்கக்கூடிய அளவில் இருந் திருக்கும். இந்த அரங்கத்தில்கூட, கீழேயும் அமர்ந்தி ருக்கிறார்கள்; மேலே உள்ள பால்கனியிலும் தோழர்கள் அமர்ந்திருக்கிறார்கள். இதுகூட அளவோடு அழைப் பிதழ் கொடுக்கப்பட்ட காரணத்தினால்தான்.

அப்படிப்பட்ட அவ்வளவு செல்வாக்கோடு அவர்கள் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளுடைய திருமணங் களிலே இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு இருக்கிறது என்றால், இதற்கு அடித்தளம் அய்யா குப்புசாமி அவர்கள் ஒரு கொள்கை வீரராக வாழ்ந்தார் என்பதுதான்.

இங்கே நண்பர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, உழைப்பு, கடும் உழைப்பு.

ஏழு பிள்ளைகளை அவர்கள் வளர்த்தார்கள் என்று சொன்னால், அந்தப் பெற்றோர் அய்யா குப்புசாமி அவர்களானாலும் சரி,  குஞ்சம்மாள் அவர்களானாலும் சரி இணைந்த வாழ்விணையர் - கொள்கையிலும் இணைந்தவர்கள்.எல்லோருக்குமாக உழைக்கக் கூடிய வர்கள். பல ஆண்டுகாலமாக நான் அறிவேன் - மாணவப் பருவந்தொட்டு.

தந்தை பெரியார் அவர்களுக்கு ஆங்காங்கே தளபதி களைப்போல இயக்கத்தவர்கள் இருப்பார்கள். இந்த இயக்கம் இன்றைக்கு இவ்வளவு சிறப்பான இயக்கமாக - வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் இயக்கம் - வளர்ந்து கொண்டிருக்கின்ற ஓர் இயக்கமாக ஆனதற்கு அவர்கள் எல்லாம் ஆணிவேர்கள்.

விழுதுகள் வேரைப் பட்டுப்போகாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன

இந்த மேடை இவ்வளவு பலமாக இருக்கிறது என்றால், அப்படிப்பட்டவர்களுடைய உழைப்பு, கடின மான உழைப்பு. அதன் காரணமாகத்தான், இந்தப் பிள் ளைகள் எல்லாம், விழுதுகள் வேரைப் பட்டுப்போகாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. அந்த அளவிற்கு இந்தக் குடும்பம் சிறப்பான குடும்பமாகும்.

அந்த வகையில், இங்கே நண்பர்கள் சுட்டிக்காட்டி யதைப்போல, தந்தை பெரியார் அவர்கள் தலைமை யேற்று, மிகப்பெரிய அளவிலே நடந்த திருமணம் இந்தக் குடும்பத்தில் - திருவாளர்கள் சாமிநாதன், சித்தார்த்தன் அப்படிப்பட்டவர்கள் நினைவில் இருக்கக் கூடியவர்கள் ஆகியோரது திருமணங்களாகும்.

அவர்களுடைய மணவிழா 1973 இல் நடைபெற்றது. நன்றாக நினைத்துப் பாருங்கள் - பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தக் கொள்கைகளைப் பின்பற்றக் கூடிய குடும்பம் இந்தக் குடும்பம்.

அந்த மணவிழாவிலும், அய்யா அவர்கள் தலைமை தாங்கிய நடத்திய மணவிழாவிலும் நான் கலந்து கொண்டிருக்கின்றேன், மணமக்களை வாழ்த்தியிருக்கிறேன்.

அடுத்தபடியாக, அய்யா வை.குப்புசாமி அவர்களு டைய தம்பிகள் அய்யாக்கண்ணு, ஆறுமுகம் அவர் களுக்குத் தந்தை பெரியார் அவர்களுடைய தலைமை யில், 1961 ஆம் ஆண்டு மணவிழா நடைபெற்றது.

60 ஆண்டுகளாக இந்தக் குடும்பத்தில் சுயமரியாதைத் திருமண முறையில்தான் மணவிழாக்கள்

எனவே, 1961 ஆம் ஆண்டிலிருந்து இன்றைக்கு 2021 ஆம் ஆண்டுவரை சரியாக 60 ஆண்டுகள் - 60 ஆண்டு களாக இந்தக் குடும்பத்தில் சுயமரியாதைத் திருமண முறையில்தான் மணவிழாக்கள் நடைபெற்று இருக்கிறது. எந்த வகையிலும் அவர்கள் தாழ்ந்துவிட வில்லை. ஒரு மணவிழாவைவிட, இன்னொரு மண விழாவில் அவர் கள் வளர்ந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டக்கூடிய அளவில்தான் வளர்ச்சி என்பது இருக்கிறது.

ஏனென்றால், மந்திரமில்லை, சடங்கில்லை, சம்பிர தாயமில்லை, சனாதனமில்லை - என்னாகுமோ என்று தாய்மார்கள் உள்பட, வயதானவர்கள் உள்பட யாரும் பயப்பட வேண்டியதில்லை. அவையெல்லாம் இல்லாத காரணத்தினால்தான், மணமக்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.

மற்றவர்களை குறை சொல்வதற்காக சொல்லவில்லை; வைதிக மண முறை என்றால், மாங்குச்சிகளைப் போட்டு புகையை வளர்த்திருப்பார்கள். மணமக்கள் கண்களைக் கசக்கிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால், இந்த மண முறையில், இங்கே மணமக்கள் மகிழ்ச்சியோடு அமர்ந்திருக்கிறார்கள். மணமக்கள் அரு மைச் செல்வர்கள் சுகந்த் ஆனாலும், பிரியங்கா அவர் களானாலும் இரண்டு பேரும் நிறைய படித்தவர்கள். பெரும் நிறுவனத்தில்  பொறுப்பான பதவியில் இருக் கிறார்கள். இரண்டு பேரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதுதான் நமக்கு மகிழ்ச்சி - அதுதான் அடிப்படை யான விஷயமும்கூட!

அய்யா அவர்கள்கூட சொன்னார்கள், மணமக்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். மகிழ்ச்சியோடு இருப் பது மட்டுமல்ல, இங்கே மணமக்கள் பேசிக்கொண்டே, கலகலப்பாக இருந்தார்கள். நாம் என்ன பேசுகிறோம் என்பதை பிறகு கேட்டுக்கொள்ளலாம் - இந்த உரை அவர்களுக்காககூட அல்ல - உங்களுக்காக.

மணப்பெண்ணுக்கு இரண்டு நாள்

உபதேசம் செய்வார்கள்

இவ்வளவு கலகலப்பாக ஒரு நூறாண்டுகளுக்கு முன்பு ஒரத்தநாடு பகுதியில் மணமகள் இப்படி இருந் திருப்பார்களா?  தாய்மார்கள், பாட்டிமார்கள் எல்லாம் இங்கே இருக்கிறார்கள். அவர்களுடைய திருமணத்தை யோசனை செய்து பார்த்தால் தெரியும். இங்கே மணமகள் பிரியங்கா கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கிறார். நன் றாக நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அப்படித் தான் இருக்கவேண்டும், அவரைப் பாராட்டுவதற்காகத் தான் இதனை சொல்கிறேன், மகிழ்ச்சியோடு சொல் கிறேன்.

ஒரு 50, 100 ஆண்டுகளுக்கு முன்பு, திருமணத்திற்குப் பெண்ணை தயார் செய்யும்பொழுது, ஜோசியம் பார்த்து தயார் செய்ததுபோக, அந்த மணப்பெண்ணுக்கு இரண்டு நாள் உபதேசம் செய்வார்கள். இன்றைய இளைய தலை முறையினர் தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.

நீ மணமேடைக்குச் சென்று அமரும்பொழுது, தலையை நிமிர்த்தி வைத்திருக்கக்கூடாது; தலை குனிந்துதான் இருக்கவேண்டும். அப்படி இல்லை என்றால், இந்தப் பெண் என்ன குதிரை மாதிரி இருக் கிறதே? யானை மாதிரி இருக்கிறதே? என்று சொல் வார்கள். நீ அப்படி இருக்கக்கூடாது; மிகவும் அடக்க மாகவும், தலையை குனிந்துகொண்டுதான் இருக்க வேண்டும் என்று சொல்லிச் சொல்லி, அந்த மணமகளின் தலை நிமிரவே முடியாத அளவிற்கு ஆகியிருக்கும்.

மணப்பெண்ணின் தலையை நிமிர்த்தியவர்கள் இரண்டு பேர்தான்

அந்த குனிந்த மணப்பெண்ணின் தலையை நிமிர்த் தியவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் தந்தை பெரியார் - இன்னொருவர் ஒளிப்பட நிபுணர்.

அய்யா சொல்லாமலேயே தலையை நிமிர்த்தி நிமிர்ந்து இருப்பார் மணமகள்.

பழைய காலத்தில் போட்டோ எடுப்பவர், கருப்புத் துணியை அவருடைய தலையில் போர்த்திக்கொண்டு, இப்படி நில்லுங்கள், அப்படி நில்லுங்கள், தலையை நிமிர்த்தி வையுங்கள் என்று சொல்வார்.

இப்பொழுது அதற்கு அவசியமே இல்லாத அள விற்கு, குனிந்த பெண்ணின் தலையை நிமிர வைத்தது மட்டுமல்ல -குனிந்த அவர்களுடைய வாழ்க்கையை நிமிர வைத்தவரும் தந்தை பெரியார் அவர்கள்தான்.

பெண்ணுக்குப் படிப்பு, பெண்ணுக்குச் சொத்துரிமை, பெண்ணுக்கு உத்தியோக உரிமை இவை அத்தனையும் தேவை என்று சொன்னார்.

அதை செயல்படுத்திய ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி - திராவிடர் ஆட்சி - அண்ணா காலத்தில் தொடங்கி, கலைஞர் காலத்தில் அது மிகப்பெரிய அள விற்கு வளர்ந்து, இன்றைக்கு இந்தியாவிலேயே முதல் முதலமைச்சர் என்று பெயர் பெற்றிருக்கின்ற நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் தளபதி மு..ஸ்டாலின் அவர் களுடைய காலத்தில், பெண்களுக்கு இட ஒதுக்கீடு அரசுப் பணிகளில் இதுவரை 30 சதவிகிதம் இருந்ததை, 40 சதவிகிதம் என்று உயர்த்தியிருக்கிறார்.

யார்மீதும் நமக்குக் கோபம் இல்லை;

யாருடைய உரிமையையும் பறிப்பதல்ல

இவையெல்லாம் இந்தக் கொள்கையினால்தான். இந்தத் திருமண முறை நாம் யாரையும் வெறுப்பதனால் அல்ல. யார்மீதும் நமக்குக் கோபம் இல்லை. யாருடைய உரிமையையும் பறிப்பதல்ல.

எனவே, இந்த மணவிழா ஓர் அற்புதமான, ஒரு மகிழ்ச்சிகரமான, மன நிறைவான ஒரு குடும்ப விழா.

எங்களைப் பொறுத்தவரையில் இரத்த உறவுகளை விட, கொள்கை உறவுகள் பலமானது என்ற உணர்வோடு இருக்கக் கூடியவர்கள். அதன் காரணமாகத்தான் இந்த மணவிழாவில் மட்டுமல்ல இந்தக் குடும்பத்தில் பல திருமணங்களை நான் தலைமை தாங்கி நடத்தி யிருக்கிறேன்.

வீரமணி அவர்களுடைய மணவிழா 1975 இல். கெட்ட வாய்ப்பு - இயற்கையின் கோணல் புத்தி அவர் இப்பொழுது இல்லை.

ஆனந்தன் அவர்களுக்கு 1983 இல்.

அதேபோல, நம்முடைய அருமைத் தோழர்கள் அய் யாத்துரை அவர்களானாலும், வைத்தியலிங்கம் அவர் களானாலும் 1991 இல் அவர்களுடைய மணவிழாவை தலைமை தாங்கி நான் நடத்தியிருக்கிறேன்.

வசதி வாய்ப்புகளுக்கு இரண்டாமிடம், கொள்கைகளுக்குத்தான் முதலிடம்

ஒரு பெரிய வாய்ப்பு, இன்றைக்கு அவர்களு டைய பிள்ளைகளின் மணவிழாவையும் நான் நடத்தி வைத்திருக்கிறேன் என்று சொல்லும் பொழுது, இது ஒரு பெரிய வாய்ப்பு. நிச்சயமாக  அவர்களுடைய பேரப் பிள்ளைகளின் மண விழாக்களையும் நடத்தினால் ஆச்சரியப்படுவதற் கில்லை.  என்னடா, இவருக்கு இவ்வளவுப் பெரிய  ஆசையா? என்று நினைக்கவேண்டிய அவசிய மில்லை. அந்த அளவிற்கு அறிவியல் வளர்ந்திருக் கிறது; அதைவிட மிக முக்கியம் எங்களுடைய கொள்கை வளர்ந்திருக்கிறது. பல நேரங்களில் வசதி, வாய்ப்புகள் வந்தால், சில இடங்களில் கொள் கைகள் போய்விடும். ஆனால், வசதி வாய்ப்பு களுக்கு இரண்டாமிடம், கொள்கைகளுக்குத்தான் முதலிடம் என்று சொல்லக்கூடிய குடும்பம்தான் அய்யா குப்புசாமி அவர்களுடைய குடும்பம்.

ஆகவேதான், நெடுவாக்கோட்டைக்கு என்னை அழைத்துத் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக, நீங்கள் இருக்கும் பெரியார் திடலிலேயே மணவிழாவை நடத்துகிறோம் என்று வந்திருக்கிறார்கள்.

அய்யாவிடம் சண்டை போட்டு, உரிமை எடுத்துக்கொண்டு சொல்வார்!

அய்யா குப்புசாமி அவர்களைப்பற்றி நிறைய சொன் னார்கள்; இத்தனைக்கும் அவர் பெரிய அளவிற்குப் படிக்காதவர்; பெரியார் போன்றே பகுத்தறிவு, பட்டறிவு தான். ஆனால், அவருடைய பிள்ளைகள் எல்லாம் நன்றாகப் படித்திருக்கிறார்கள். அதில் வேடிக்கை என்னவென்றால், அவருடைய பிள்ளைகளைப் படிக்க வைத்து, அவர்கள் எல்லாம் தயாராக இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல நண்பர்களே, இதில் தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி என்னவென்றால்,

அய்யா குப்புசாமி அவர்கள், தந்தை பெரியார் அவர்கள் தலைவராக இருந்த காலத்திலும் சரி, அன்னை மணியம்மையார் அவர்கள் அதற்குப் பிறகு தலைமை யேற்ற காலத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி, எப் பொழுதுமே தன்னுடைய பிள்ளைகளை அவர் பாது காத்ததைவிட, அந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள யாராவது உதவி என்று போனால், அவர்களைத் தன்னுடைய சொந்த செலவில் அழைத்துக்கொண்டு வந்து அய்யா அவர்களை சந்தித்து, சண்டை போட்டு, உரிமை எடுத்துக்கொண்டு சொல்வார், ‘‘அவருக்கு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இடம் வேண்டும்; இவரைப் பட்டதாரி ஆக்கவேண்டும்; இவருக்கு கல்லூரியில் இடம் வேண்டும்'' என்று சொல்வார்.

அந்த வட்டாரத்தில் நிறைய பேர் படித்தார்கள் என்று சொன்னால், அதற்கு அதுதான் அடிப்படையானது, அவருடைய பிள்ளைகள் மட்டுமல்ல, அங்கே இருக்கின்ற அத்தனை பேரும் பெரிய அளவிற்கு இன்றைக்கு வந்திருக்கிறார்கள் என்றால், பெரிய பொறுப்பிற்கு வந்திருக்கிறார்கள் என்றால், அய்யா குப்புசாமி அவர்களுடைய கடுமையான தொண்டறம்.

அப்படிப்பட்ட ஒரு பொதுநலத் தொண்டர். அவரைப் பொறுத்தவரையில், தன் குடும்பம், தன் பிள்ளை, தன் வீடு என்பதோடு நிறுத்தவில்லை. பொதுத் தொண்டு என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்தவர். அதேபோன்று அவருடைய வாழ்விணையரான குஞ்சம்மாள் அவர்கள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் முத்திரை பதித்தவர்கள்

ஆகவேதான், இந்தக் குடும்பம் மிகப்பெரிய அளவிற்கு வளர்ந்திருப்பதற்குக் காரணம். இன்றைக்கு அய்யாத் துரை போன்று வைத்தியலிங்கம் போன்று இருக்கக்கூடியவர்கள் - ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் முத்திரை பதித்தவர்கள்.

அய்யாதுரை அவர்கள் கனிம வளத்துறையில், வைத்தியலிங்கம் அவர்கள் கபாடி என்று சொல்லக்கூடிய சடுகுடு விளையாட்டில் வல்லுநராகத் திகழ்ந்தவர்.

இப்படி ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு பிள்ளைகளையும் ஆளாக்கி, அவர்களை ஆளாக்கியதைவிட, இந்தக் கொள்கையை விட்டு நழுவாதவர்களாக ஆக்கினார்கள். இந்தக் கொள்கையில் இருந்தால் என்ன லாபம் என்று சொன்னால், ஒழுக்கம், நேர்மை, நாணயம், கட்டுப்பாடு - இவை அத்தனையும் இருக்கக்கூடிய கொள்கை, பெரியாருடைய கொள்கை.

கடவுளை மற என்று சொன்னவர்,

மனிதனை நினை என்று சொன்னார்

பல  பேர் புரியாமல், பெரியார் அவர்கள் கடவுள் இல்லை என்று சொன்னவர் என்று சொல்வார்கள்.

பெரியார் அவர்களைப் பொறுத்தவரையில், கடவுளை மற என்று சொன்னவர், மனிதனை நினை என்று சொன்னார்.

பல நேரங்களில், கடவுளை நினைத்துக்கொண்டு, மனிதர்களை மறந்துவிடுகிறார்கள். மனிதர்களுடைய வாய்ப்புகளைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. மனிதர்களுடைய சமத்துவத்தைப்பற்றி கவலைப்படுவதில்லை.

ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன்,

1928 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார். இந்த மணமுறையை தந்தை பெரியார் புகுத்தி 90 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அதனுடைய விளைவுதான், இன்றைக்கு எல்லோரும் நாங்கள் வசதி, வாய்ப்புகளை உருவாக்கக் கூடிய அளவிற்கு, சிறப்பாக வாழ்கின்றோம்.

அப்படிப்பட்ட ஒரு பெரிய வாய்ப்பு சாதாரணமானதல்ல. அத்தனையும் வளர்ந்து, இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள் படித்திருக்கிறார்கள். பெருமையாக இருக்கிறது.

தாய்மார்கள், சகோதரிகளுக்கு நான் முக்கியமாக சொல்லிக் கொள்கிறேன். இன்றைக்கு மணமகளாக இருக்கின்ற பிரியங்கா சிறப்பான முறையில் படித்து பட்டதாரியாக இருக்கிறார்கள்.

ஒரு நூறாண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற படித்து, பட்டதாரிகளாக முடியுமா?

அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் சமூகநீதி

இப்பொழுது இருக்கின்ற படிப்பில், நிர்வாக மேலாண்மை படிப்புதான் மிகவும் உயர்ந்த படிப்பு. ஒரு காலத்தில் நமக்குப் படிப்பு வராது என்று சொன்னார்கள். அதிலும் கிராமத்தில் உள்ள பிள்ளைகள் படிப்பைப்பற்றி நினைக்கவே முடியாது.

படிக்கவேண்டும்; இதுதான் பெரியாருடைய தத்துவம். எல்லோருக்கும் படிப்பு - அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் சமூகநீதி.

அனைவருக்கும் அனைத்தும் என்பதற்காகத்தான் இன்றைக்குப் போராட்டம் நடைபெறுகிறது. குறிப்பாக பெண்கள் படிக்கக்கூடாது; கீழ்ஜாதிக்காரர்கள் படிக்கக்கூடாது என்றார்கள். இதை மாற்றுவதற்காகத்தானே இந்த இயக்கம். இதில் என்ன தவறு இருக்கிறது?

நாம் யாரையும் படிக்கவேண்டாம் என்று சொல்லவில்லை; உயர்ந்த ஜாதிக்காரர்கள் படிக்கக்கூடாது என்று சொல்லவில்லை. நாங்களும் படிக்கிறோம் என்று சொல்கிறோம்; எங்களுக்கும் அந்த வாய்ப்பைக் கொடுங்கள் என்று சொல்கிறோம்.

அதனுடைய விளைவுதானே மணமக்கள் இருவரும் படித்திருக்கிறார்கள்; பெரிய பொறுப்புகளில் இருக்கிறார்கள்.

இந்த இயக்கம் இல்லாவிட்டால்பெரியார் பிறந்திருக்காவிட்டால்...

அய்யா குப்புசாமி அவர்களைப் பார்த்தீர்களேயானால், செருப்பு அணியாமல்கூட வருவார்; அதைப்பற்றி கவலைப்படமாட்டார். கடுமையான உழைப்பாளி. அவருடைய பிள்ளைகள் இன்றைக்கு இவ்வளவு வளர்ந்திருக்கிறார்கள், இந்தக் குடும்பத்தில் வந்த பெண்கள் எல்லாம் பட்டதாரிகளாக இருக்கிறார்கள் என்று சொன்னால், இந்த இயக்கம் இல்லாவிட்டால், பெரியார் பிறந்திருக்காவிட்டால், நமக்கு இந்த சூழ்நிலை ஏற்பட்டிருக்குமா?

இந்த இயக்கம் இந்தப் பணியை செய்யாமலிருந்தால், இந்த வாய்ப்புகள் ஏற்பட்டிருக்குமா? என்பதை நீங்கள் தெளிவாக சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பொதுவாக மணமக்களுக்கு நான் அறிவுரை சொல்வதில்லை. வேண்டுகோளாகத்தான் சொல்வேன்.

அன்பார்ந்த மணமக்களே, புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னதைப்போல, ஒருமனதாயினர் தோழி, திருமண மக்கள் நன்கு வாழி! என்றார்.

நீங்கள் இதற்கு முன்பு இரண்டு மனம் - இன்றுமுதல் ஒரு மனம். இருவரையும் ஒருவகையில் சிந்திக்கிறீர்கள், அதுதான் அதனுடைய அடிப்படை.

அய்யா செல்வராஜ் அவர்கள் சுருக்கமாகவும், தெளிவாகவும் சொன்னார்.

உங்களுடைய வாழ்க்கை வெற்றிகரமாக அமைய விட்டுக் கொடுக்கவேண்டும்; ஒருவரை ஒருவரைப் புரிந்து கொள்ளவேண்டும் என்று.

நல்ல அளவிற்கு மணமக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் மிக அழகாகச் சொன்னார்,

‘‘விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை -

கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை'' என்று.

ஆகவே நீங்கள் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு, அன்போடு விட்டுக் கொடுங்கள்.

வைத்தியலிங்கம் அவர்கள் சடுகுடு போட்டிக்குச் சென்றால், யாருக்குப் பரிசு என்றால், வெற்றி பெற்றவர்கள்தான் இதுவரையில் பரிசு வாங்கியிருக்கிறார்கள். ஆனால், வாழ்க்கை என்பது அதற்கு நேர் எதிரானது - இதைத்தான் மணமக்களாகிய நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.

யார் முந்திக்கொண்டு, இன்னொருவருக்காகத் தோற்கிறீர்களோ, அவர்களே உண்மையாக வெற்றி பெற்றவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

எனவே, உங்களுக்காக நான் தோற்பதற்காகத் தயாராக இருக்கிறேன் என்று இருவரும் சொல்லவேண்டும். அந்த வாழ்க்கைதான் தோல்வியில்லாத வாழ்க்கை - மகிழ்ச்சிகரமான வாழ்க்கை - துயரமோ, துன்பமோ இல்லாத வாழ்க்கையாக அமையக்கூடிய வாழக்கையாக இருக்கும்.

ஒருவர் எஜமானன்இன்னொருவர் அடிமையல்ல

எனவேதான்,  நீங்கள் இருவரும் உற்ற நண்பர்களாக வாழுங்கள். சுயமரியாதைத் திருமண முறையின் தத்துவம் - மகளிர் நினைக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், ஒருவர் எஜமானன் - இன்னொருவர் அடிமையல்ல. இருவரும் நண்பர்கள்.

சம உரிமை, சம வாய்ப்பு - நண்பர்கள் என்றால், எதை வேண்டுமானலும் தியாகம் செய்வார்கள். அதுதான் உண்மையான நட்பு.

அந்த நண்பர்களாக, சமத்துவத்தோடு இருக்கவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம். எளிமையாக வாழுங்கள், சிக்கனமாக வாழுங்கள்.

ஒரே ஒரு வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் உங்களுடைய ஆற்றலுக்கு, உங்களுடைய திறமைக்கு, உங்களுடைய உழைப்பிற்கு நிறைய அளவிற்கு எதிர்காலத்தில் வளர்வீர்கள், வளரவேண்டும்; அதுதான் எங்களுடைய ஆசையும்!

பெற்றோரிடம் நன்றி காட்டுங்கள்!

எவ்வளவுதான் நீங்கள் வளர்ந்தாலும், எவ்வளவு பெருமை பெற்றாலும் ஒன்றை நீங்கள் மறந்துவிடாதீர்கள். அது என்னவென்றால், நன்றி காட்டவேண்டும்; யாருக்கு? உங்கள் பெற்றோருக்கு நன்றி காட்டுங்கள் - அவர்களுடைய உழைப்பினால்தான் நீங்கள் வளர்ந்திருக்கிறீர்கள். ஆகவே, அவர்களிடம் நன்றி காட்டுங்கள், பாசம் காட்டுங்கள்.

பல நேரங்களில் படிப்பு, அந்தஸ்து, பணம் எல்லாமே பெருகுகிறது. சில நேரங்களில் பெற்றோருக்கு தங்கள் பிள்ளைகள், தங்களிடம் பாசமாக இல்லையே என்ற ஏக்கம் இருக்கிறது. அந்த சூழ்நிலை இந்தக் குடும்பத்தில் இருக்காது. பொதுவானவர்களுக்காக நான் இதைச் சொல்கிறேன்.

ஆகவே, அப்படிப்பட்ட ஓர் அருமையான வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தவேண்டும். உங்களுடைய தாத்தா - பாட்டி, உங்களுடைய பெற்றோர் உங்களை மிகப்பெரிய அளவிற்கு ஆளாக்கியிருப்பதற்கு எப்படி நல்ல நெறியோடு வாழ்ந்திருக்கிறார்கள்; எளிமையாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

அய்யா குப்புசாமி அவர்களைப் பார்த்தால், மிராசுதாரர் போன்று பெரிய அளவிற்கு வெளிக் காட்டமாட்டார்; சாதாரண எளிய துண்டு போட்டிருப்பார். அவரைப் பார்த்தால் ஒன்றுமே தெரியாது. அதுபோன்றுதான் மற்றவர்களும். இன்றைக்கு இவ்வளவு பெரிய நிலையில் இருந்தாலும், நம்முடைய வைத்தியலிங்கம் ஆனாலும், நம்முடைய அருமைத் தோழர் கனிம வளத்துறை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற அய்யாத்துரை அவர்களானாலும் அடக்கத்தோடுதான் இருப்பார்கள். அதுதான் அவர்களுடைய பெரிய செல்வம் - தனித்தகுதி.

இல்லறத்தில் இருக்கும்பொழுதே தொண்டறம்

எனவேதான், இந்த இயக்கம் உங்களை உயர்த்தி இருக்கிறது. ஆகவேதான், இந்தக் கொள்கை என்று சொன்னால், நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும் - மனிதநேயத்தோடு பழகுவதுதான் - பாசத்தோடு பழகுவதுதான் - எல்லோருக்கும் உதவுவதுதான்.

ஆக, அந்த அடிப்படையில் மணமக்களாகிய நீங்கள் சிறப்பாக வாழவேண்டும். இல்லறம் - துறவறம் என்பதை பெரியார்தான் மாற்றினார் - இல்லறத்தில் இருக்கும்பொழுதே தொண்டறம் என்று சொன்னார்.

எனவே, நீங்கள் உங்களுக்காக வாழ்வது மட்டுமல்ல, குடும்பத்தை உயர்த்துவதோடு மட்டுமல்ல, இந்த சமுதாயத்திற்கு நாம் என்ன செய்தோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மற்றவர்களுக்காகவும் நீங்கள் உதவி செய்யுங்கள் - சமுதாயத்திற்காக இருங்கள் - தாய்மார்களே, சகோதரிகளே இதுபோன்ற மணவிழாக்கள் என்று சொன்னால், அதிலே சகோதரத்துவம், சமத்துவம் இருக்கிறது.

இந்த மணவிழாவில் தாலி இல்லை. மாறாக தங்கச் சங்கிலியில் மணமக்களின் பெயர்கள் இருக்கிறது.

பெரியார் ஏன் தாலியை எதிர்த்தார்?

தாலிமீது எங்களுக்கென்ன கோபம் - ஒரே மாதிரி தாலி கிடையாது எல்லோருக்கும். அப்போதுதான் தெரிந்தது பெரியார் ஏன் தாலியை எதிர்த்தார் என்று.

சில வீட்டில் இரண்டு தாலி - சில வீட்டில் குண்டுத் தாலி - சில வீட்டில் பூசை போட்டிருப்பார்கள். தாலி ஏன் மாறுபடுகிறது என்று கேட்டால், ‘‘இது எங்கள் ஜாதி வழக்கம்'' என்று சொல்கிறார்கள்.

ஜாதியை எங்கே கொண்டு போய் வைத்திருக்கிறார்கள் பாருங்கள். ஒருவருக்கொருவர் வித்தியாசம் காட்டுவதற்காக வைத்திருக்கிறார்கள். மனிதர்களைப் பிரிப்பதற்காகத்தான் தாலி என்பதே!

மனிதர்களைப் பிரிப்பதற்காக அல்ல - இணைப்பதற்காகத்தான் இந்த இயக்கம். ஆகவேதான், இது துணிவு, கனிவு, பணிவு எல்லாமே இருக்கக்கூடிய ஒரு வாய்ப்பு என்ற முறையில்தான் இருக்கிறதே தவிர, யாரையும் சங்கடப்படுத்துவதற்காக அல்ல - யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல - யாரையும்  கோபப்படுத்துவதற்காக அல்ல. நம்முடைய உரிமையை நிலைநாட்டுவதற்காக.

நண்பர்கள் சொன்னதைப்போல, மானமும், அறிவும் மனிதருக்கு அழகு.

சுயமரியாதை மணமுறை தொடங்கியபொழுது, பெரியார் எப்படி நடத்தினார் என்றால், இளைய தலைமுறையினருக்கு ஆச்சரியமாக இருக்கும். மணமக்களைத் தூக்கிக் கொண்டு போய் பதுக்கி வைத்திருந்து, கடைசி நிமிடத்தில் அழைத்து வருவார்கள்.  ஏனென்று சொன்னால், பெற்றோரே மணமக்களை கொண்டு போய்விடுவார்கள் மணமேடையிலிருந்து. அதையெல்லாம் தாண்டி இன்றைக்கு இந்தக் கொள்கை வெற்றி பெற்றிருக்கிறது.

சட்டப்படி சுயமரியாதைத் திருமணங்கள் செல்லாது என்று சொன்னார்கள். அண்ணா அவர்களுடைய ஆட்சி வந்தவுடன், சுயமரியாதைத் திருமணங்கள் செல்லும் என்று சட்டவடிவம் கொடுத்தார்.

சமுதாயமும் ஏற்றுக்கொண்டதுசட்டமும் ஒப்புக்கொண்டது

இன்றைக்கு சமுதாயமும் ஏற்றுக்கொண்டது - சட்டமும் ஒப்புக்கொண்டது.

இந்த மணவிழா முறையில் மணவிழாவினை நடத்திக் கொண்டவர்கள் எல்லோருமே சிறப்பாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்; வளர்ந்திருக்கிறார்கள். எந்த வகையிலும் குறைவில்லை.

எளிமை, சிக்கனத்தோடு வாழவேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னார். எனவே, அந்தத் தத்துவங்களையெல்லாம் கொண்டதுதான் இந்த மணமுறையே தவிர, வேறொன்றுமில்லை.

யார் எளிமையாக வாழ்கிறார்களோ, அவர்கள் கடன்காரர்களாக இருக்கமாட்டார்கள்

யார் சிக்கனத்தோடு வாழ்கிறார்களோ, அவர்கள் கைநீட்டி, மற்றவர்களிடம் கடன் வாங்கவேண்டிய அவசியமிருக்காது.

எனவே, வாழ்க்கைத் தத்துவம்தான் பெரியாருடைய சுயமரியாதைத் தத்துவம் - எனவே, சுயமரியாதை வாழ்வு சுகவாழ்வு என்று சொன்னார்கள்.

இப்பொழுது மணமக்கள் இருவரும் மணவிழா உறுதிமொழி கூறி, வாழ்க்கை இணையேற்பு விழாவினை நடத்திக் கொள்வார்கள்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

No comments:

Post a Comment