செப்.27 அகில இந்திய விவசாயிகள் சங்கப் போராட்டத்தை திராவிடர் கழகம், திராவிட விவசாய சங்கம் ஆதரிக்கும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 25, 2021

செப்.27 அகில இந்திய விவசாயிகள் சங்கப் போராட்டத்தை திராவிடர் கழகம், திராவிட விவசாய சங்கம் ஆதரிக்கும்

சி.பி.எம். ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் அறிவிப்பு

சென்னை, செப்.25  அகில இந்திய அளவில் வரும் செப்டம்பர் 27இல் நடக்க உள்ள விவசாயிகள் போராட்டத்தை திராவிடர் கழகம், திராவிட விவசாய தொழிலாளர் சங்கம் ஆதரிக்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

நேற்று (24.9.2021 ) முற்பகல் 11 மணியளவில் திரிபுராவில் பா...வின் பாசிச வன்முறை வெறியாட்டம் - ஜனநாயகத்தை மீட்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.

அவரது கண்டன உரை வருமாறு:

கரோனாவைவிட கொடுமையானவர்கள் மதவெறியர்கள் - ஹிந்துத்துவா பேசக்கூடியவர்கள்

மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய பா...வின் பாசிச  வன்முறை வெறியாட்டம் - திரிபுராவில் ஜனநாயகத்தை மீட்க பெருந்திரள் ஆர்ப்பாட்டம் என்கிற சிறப்பான இந்த நிகழ்ச்சியை குறுகிய காலத்தில், கரோனா தொற்று நம்மை மிரட்டுகின்ற நிலை இருந்தாலும்கூட, கரோனாவைவிட கொடுமையானவர்கள் மதவெறியர்கள் - ஹிந்துத்துவா பேசக்கூடியவர்கள். ஆகவே, அவர்கள் நேரி டையாக வன்முறையில் திரிபுராவில் இறங்கியிருக்கிறார்கள்.

எங்கோ திரிபுராவில்தானே நடந்திருக்கிறது என்று யாரும் நினைக்க முடியாது. தெருக்கோடியில் தீ வைக்கப் பட்டால், அந்தத் தீ நம்முடைய வீட்டிற்கும் வரும் என்கிற எச்சரிக்கையேடு, நாம் அனைவரும் ஒன்றுபட்டு, தென்கோடியில் இருக்கின்றவர்கள்கூட நாம் வேற்றுமை உடையவர் அல்ல. ஒரே முகத்தோடு - ஒரே குரலோடு எதிர்ப்போம் என்று காட்டுவதற்காக ஒரு அருமையான ஓர் இயக்கத்தைக் கட்டுகின்ற வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்து சிறப்பான வகையில் ஏற்பாடு செய்து, இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும், இந்த நிகழ்ச்சியின் தலைவராகவும் இருக்கக்கூடிய தோழர் பாலகிருஷ்ணன் அவர்களே,

முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்களே, அதேபோல, முன்னிலை ஏற்று இங்கே உரையாற்றிய எம்.கே.நடராஜன் சி.பி.அய்.(எம்.எல்.)  அவர்களே, அடுத்து எனக்குப் பின் சிறப்பாக உரையாற்ற இருக்கின்ற மாநிலங்களவை உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளருமான அன்பிற்குரிய சகோதரர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக இங்கே வருகை புரிந்துள்ள துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி அவர்களே, சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் அன்புச்சகோதரர் செல்வப்பெருந்தகை அவர்களே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், ஆற்றல்மிகுந்த எழுச்சித் தமிழரான அன்பு சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களே, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் தோழர் பேராசிரியர் ஜவஹிருல்லா அவர்களே, சி.பி.அய் (எம்) கட்சியின் அரசியல் தலைமைக் குழுப் பொறுப்பாளர் அருமைத் தோழர் வி.ராமகிருஷ்ணன் அவர்களே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் துணை செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன் அவர்களே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பைச் சார்ந்த மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் தோழர் அபுபக்கர் அவர்களே, மற்றும் எனக்கு முன் உரையாற்றிய மே 17 இயக்கத்தைச் சார்ந்த தோழர் திருமுருகன் காந்தி அவர்களே, மனித உரிமை அமைப்பைச் சார்ந்த திரு..மார்க்ஸ் அவர்களே, வரவிருக்கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அருமைச் சகோதரர் வைகோ அவர்களே, தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வேல்முருகன் அவர்களே, மேலும் இங்கே சிறப்பாகக் குழுமியுள்ள, மேடையில் அமர்ந்துள்ள அத்துணைத் தோழர்களே, திராவிடர் கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

அத்துணை இயக்கத்தினுடைய பொறுப்பாளர்களே, தோழர்களே, தோழியர்களே, தாய்மார்களே, நண்பர்களே உங்கள்அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘‘திரிபுராவிலே பா... தொண்டர்களுடைய அட்டூழியம்‘’ - துண்டறிக்கை!

இந்தப் பெருந்திரள் போராட்டம் ஏன் சென்னையில் தேவைப்பட்டது? என்பதை விளக்குகின்ற வகையிலே, ஓர் அருமையான வெளியீட்டை இங்கு கொடுத்திருக்கிறார்கள். எப்படியெல்லாம் சூறையாடப்பட்டது கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் - எப்படியெல்லாம் மக்களுடைய எழுச்சியை அவர்கள் தடுப்பதற்காக ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்பதை - அங்கே நடந்த அட்டூழியங்களை படமெடுத்து, அச்சிட்டு எல்லோருக்கும் வழங்கக்கூடிய வகையில், ஆதாரப்பூர்வமாக நாம் நடத்துவது என்பது, ஏதோ ஒரு பிரச்சாரத்திற்காக அல்ல. மாறாக, ஒரு அநீதியைக் கண்டிக்கவேண்டும் - நீதி கேட்கவேண்டும். இதுபோன்ற வன்முறைகளுக்கு இடம் தந்தால், ஜனநாயகம் பாழ்படுத்தப்படும்; பாசிசம் இந்த நாட்டை ஆண்டுகொண்டிருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதற்காகத்தான், இந்த நிலையை அவர்கள் தெளிவாக எடுத்து, இங்கே ஆதாரப்பூர்வமாக - ‘‘திரிபுராவிலே பா... தொண்டர்களுடைய அட்டூழியம்'' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட படத்திலேயே மிகத் தெளிவாக விளக்கி யிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல நண்பர்களே, இங்கே நம்முடைய தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய தலைமை உரையில் சிறப்பாக சில பகுதிகளை எடுத்துச் சுட்டிக்காட்டினார்கள். இங்கே உரையாற்றிய நண்பர்களும் சொன்னார்கள்.

அவர்கள் திட்டமிட்டு, பண பலம், பத்திரிகை பலம் மற்ற எல்லா பலங்களையும் கையாண்டார்கள்

செப்டம்பர் மாதம் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்துத் தாலுகாக்களிலும் மனு கொடுக்கும் போராட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்றது. ஒரு ஆட்சியை - எப்படி அவர்கள் குறுக்கு வழியில் - கொல்லைப்புற வழியாக - பின் வாசல் வழியாக ஆட்சிக்கு வந்தார்கள். எவ்வளவு பித்தலாட்டங்களைச் செய்து, எத்தனை பேரை விலைக்கு வாங்கி - எத்தனை பேரை கட்சி மாறச் செய்து - எந்த அளவிற்கு, வடகிழக்கு மாநிலங்களில் வித்தைகளைக் காட்டினார்களோ,  அதனுடைய ஒருபகுதியாக, தொடர்ச்சியாக திரிபுராவில், 20 ஆண்டுகாலம் அசைக்க முடியாத அளவிற்கு இடதுசாரி கம்யூனிஸ்டுகளுடைய ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது என்பதை மாற்றிக் காட்டவேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டு, பண பலம், பத்திரிகை பலம் மற்ற எல்லா பலங்களையும் கையாண்டார்கள்.

அதையும் தாண்டி மக்கள் எழுச்சி இப்பொழுது  வந்து விட்டது. இங்கே நண்பர்கள் சொன்னதை, நான் திரும்பவும் சொல்லவேண்டிய அவசியமில்லை. எந்தெந்த வாக்குறுதி களையெல்லாம் கொடுத்தார்களோ, அவை அத்தனையும் பொய் வாக்குறுதிகள். அது மக்களுக்குப் புரிந்துவிட்டது. மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். பழங்குடி தோழர்களை வைத்து வஞ்சித்தார்கள். அவர்களை நாம் கவுரவமாக பழங்குடிகள் என்று சொல்லுகிறோம். நம்முடைய சகோதரர்கள் என்ற உணர்வோடு சொல்கிறோம்.

இன்றைக்கு அம்பலப்படுத்தப்பட்டுவிட்டது

ஆனால், அவர்கள், அவர்களை அழைப்பதுகூட, ‘வனவாசிகள்', ‘காட்டு மனிதர்கள்' என்று சொல்லிலே கூட அவர்களுக்கு மரியாதை கிடையாது.

அவர்கள், யாரையும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்கிற வித்தைக்காரர்களே தவிர, வியூகங்களைச் செய்து, அந்த நேரத்தில் எதையாவது செய்து சரிப்படுத்தவேண்டும் என்று நினைக்கக்கூடிய அளவில், அவர்கள் நடந்துகொண்டது எல்லாம் இன்றைக்கு அம்பலப்படுத்தப்பட்டுவிட்டது.

அதைத்தான் தோழர்கள் இந்தத் துண்டறிக்கையில் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லி, அருமையாக விளக்கியிருக்கிறார்கள். இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்துத் தாலுக்காகளிலும் மனு கொடுக்கும் போராட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்றது.

இந்த வன்முறைக்கு என்ன காரணம்?

ஏன் அவர்கள் ஆத்திரப்பட்டார்கள் என்பதற்கான காரண, காரியங்களை விளக்கியிருக்கிறார்கள். இதைப் புரிந்துகொண்டாலே, போதும். இதன் ஒரு பகுதியாக, 20 ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்த எதிர்க்கட்சித் தலைவரான தோழர் மாணிக் சர்க்கார், தனது தொகுதியான கத்தாலியாவிற்கு மனு அளிக்கச் சென்றார். முன்னாள் முதலமைச்சர், 20 ஆண்டுகாலம் தொடர்ந்து முதலமைச்சராக இருந்தவர் - எளிமையின் சின்னம் அவர்.

திரிபுராவில் முதல் அமைச்சர் சந்திப்பு

வங்காள மொழியில் பெரியார் நூல்

ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் தந்த தகவல்

நான் அவரை சந்தித்திருக்கிறேன்; உங்களுக்கு வியப்பாக இருக்கும்; திரிபுராவில் சந்தித்திருக்கிறேன். அகர்தலாவில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு - வாஜ்பேயி பிரதமராக இருந்தபொழுது, பெர்னாண்டஸ் ராணுவ அமைச்சராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில், திரிபுராவில் பெரியார் விழா நடைபெறுகிறது. அந்த விழாவில் கலந்துகொள்வதற்காக நாங்கள் சென்றோம். திரிபுராவில் உள்ளவர்கள் எவ்வளவு தெளிவானவர்கள். ஒரு சித்தாந்தப் போராட்டம் என்று சொன்னார்களே, அது வேடிக்கையல்ல. அந்த விழாவிற்குத் தலைமை தாங்கியவர், மாணிக் சர்க்கார் அவர்கள். அந்த விழாவிற்கு வந்த அமைச்சர்கள் எல்லாம், சைக்கிளில் வந்து இறங்கினார்கள். அந்த அளவிற்கு எளிமையின் சின்னங்களாக இருந்து அவர்கள் வந்தார்கள்.  அந்தப் பகுதி மக்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் என்பதை, அங்கு இரண்டு நாள் தங்கியிருந்து பார்க்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.

இன்னுங்கேட்டால், நாங்கள் வியப்பில் ஆழ்ந்திருக்கும் பொழுது, அங்கே அமைச்சராக இருந்த கம்யூனிஸ்ட் தோழர் சொன்னார்; அவர் பெரியார் அவர்களுடைய தொண்டைப்பற்றி பேசிவிட்டுச் சொன்னார்;  மாணிக் சர்க்கார் அவர்கள் பேசி முடித்தவுடன், ‘‘உங்களுக்கு இன்னொரு வியப்பான  செய்தியை, தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கின்ற திராவிடர் கழகத் தலைவருக்குச் சொல்கிறேன்; உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்; இங்கே இருக்கும் பெரியவர் ஒருவர், பெரியாரைப்பற்றி, வங்காள மொழியில் (பெங்காலி) புத்தகம் எழுதியிருக்கிறார், அதை நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம்; இதோ அந்தப் புத்தகத்தைப் பாருங்கள் என்று அந்தப் புத்தகத்தைக் கொடுத்தார். அந்தப் பெரியவரைப்பற்றி நான் விசாரித்தேன். அவருக்கு 85 வயதிருக்கும். ஒரு சாதாரண குடிசை வீட்டில் வசித்து வருகிறார். அவரை சந்திக்கவேண்டும் என்று சொன்னேன், அந்த அமைச்சரே என்னை அந்தப் பெரியவரிடம் அழைத்துச் சென்றார்.

எதற்காக இதனைச் சொல்கிறேன் என்றால் நண்பர்களே, மக்களோடு மக்களாக இருந்த அரசாங்கம். மக்களுக்காக இருக்கக்கூடிய அரசாங்கம். மக்களுடைய தோழனாக இருக்கக்கூடிய ஓர் அரசாங்கம்.

மேனாள் முதலமைச்சரை காவல் துறையினரும், பா...வினரும்

பாதி வழியிலேயே தடுத்தனர்!

அப்படிப்பட்ட ஆட்சியை நடத்திய ஒரு முதலமைச்சர் - 20 ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்தவர் - தன்னுடைய தொகுதிக்கு மனு அளிக்கச் செல்கிறார் - எதிர்க்கட்சித் தலைவர்.

அவரை காவல் துறையினரும், பா...வினரும் பாதி வழியிலேயே தடுத்தனர். சாலைகளில் மரங்களையும், டயர்களையும் கொளுத்திப் போட்டனர். மக்கள் எழுச்சியோடு அவற்றையெல்லாம் உடைத்துக்கொண்டு, ஏழு கிலோ மீட்டர் நடந்துசென்றே மனு கொடுத்தார்.

இந்த அமைப்பு லட்சியத்தால் கட்டப்பட்டு இருக்கிறது. எத்தனை இடங்கள் என்பதைப் பொறுத்ததல்ல; அதனால் தான், இடங்கள் கூடினாலும், குறைந்தாலும் இந்த அணி நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி - சட்டமன்றத் தேர்தல் வரையில்  - ஏன்? ஊராட்சி மன்றத் தேர்தல்கள் உள்பட - சிறுசிறு கருத்து மாறுபாடுகளும், வேறுபாடுகளும் இருந்தாலும்கூட, லட்சிய ரீதியாக கொள்கைக்காக சேர்ந்திருக்கின்ற அணி என்பதால், இதனை யாரும் அசைத்துப் பார்க்க முடியாது என்கிற உறுதியோடு, கட்டமைப்பு இருக்கிறது என்று காட்டுவதற்கு, இந்த மேடை ஒரு வாய்ப்பு. அந்த வாய்ப்பை மிகத் தெளிவாகத் தந்திருக்கிறார்கள் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

20 ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்த ஒருவர், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய ஒருவர் மனு கொடுத்தால், அதை வாங்கவேண்டியது நாகரிகம் அல்லவா!

‘‘மிருக பலம் இரண்டாவது முறை கொண்டிருக்கிறார்கள்’’

இங்கே உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தோழர் முத்தரசன் அவர்கள் சொன்னார், ‘‘மிருக பலம் இரண்டாவது முறை கொண்டிருக்கிறார்கள்'' என்று.

மிருக பலம் என்பது ஆங்கிலச் சொற்றொடர். இன்னொரு வார்த்தை சொல்வார்கள், புரூட் மெஜாரிட்டி என்று. புரூட் என்பதற்கு என்ன அர்த்தம் என்று நான் விளக்கிச் சொல்லவேண்டிய அவசியமில்லை.

மிருக பலம் என்பது, மொத்த பலத்தைக் காட்டுவதுதான். அதற்காக மிருகமாகவே மாறுகிறார்கள் என்றால், அதை சகித்துக் கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை - மிருகங் களை எப்படியெல்லாம் பழக்கப்படுத்தவேண்டும் என்று தெரிந்தவர்கள்தான் இந்த மேடையில் இருக்கக்கூடியவர்கள். பழக்கப்படுத்தவேண்டிய நேரத்தில், பழக்கப்படுத்துவார்கள்.

அதைத்தான் அழகாகச் சொன்னார் நம்முடைய தோழர் முத்தரசன் அவர்கள்.

எங்களுக்குத் தேவையில்லை என்று ஒதுக்கியிருக்கிறோம்

சரி, அந்த மொழிதான் உனக்குப் புரியவேண்டும் என்று சொல்கிறீர்களா? அது வேண்டாம் என்று ஒதுக்கியிருக்கிறோம்; எங்களுக்குத் தேவையில்லை என்று ஒதுக்கியிருக்கிறோம். இல்லை, இல்லை எனக்கு அந்த மொழிதான் புரியும் என்றால், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள்.

எனவே, எங்கோ திரிபுராவில் நடந்தது - அங்கே நடைபெற்ற வன்முறையில் தீ வைத்தார்கள் - வீடுகளைச் சூறையாடினார்கள் - ஒரு பெண் தோழர் உள்பட பலர் படுகாயமடைந்தார்கள் என்று சொல்லுகின்ற நேரத்தில், இதற்கெல்லாம் என்ன காரணம்?

மீண்டும் தங்களுடைய ஆட்சி வரப்போவதில்லை என்பதை நன்றாக அவர்கள் தெரிந்துகொண்டார்கள்.

பந்தை அடிக்க முடியாதவன், காலை அடிப்பான்

கால்பந்து ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கும்பொழுது, பந்தை அடிக்க முடியாதவன், காலை அடிப்பான். கோல் போடவேண்டியவர்கள், பந்தை அடிப்பார்கள்; பந்தை விட்டுவிட்டு, இவர்கள் காலைத் தேடுகிறார்கள்.

ஆகவே, எவ்வளவு நாளைக்குத்தான் கால்கள் தாக்கப்படு வதைப் பொறுத்துக் கொண்டிருப்பார்கள்? இதனால், நாம் வன்முறையைத் தூண்டுகிறோம் என்று பொருள் அல்ல. வன்முறையை வெறுப்பவர்கள் நாம். வன்முறையை வேண்டாம் என்று சொல்லித்தான் ஜனநாயகப் பாதைக்கு வந்திருக்கிறார்கள்.

எனவே, இந்த நாடு மீண்டும் காடாகக் கூடாது.

மீண்டும் வன்முறை ஆட்சிவரக்கூடாது.

மீண்டும் ஜனநாயகத்திற்கு விடை கொடுத்து, ஒரு பாசிச உருவம் வரக்கூடாது என்பதற்காகத்தான், ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்ற முயற்சி.

எங்கே திரிபுராவில் ஆட்சி வரவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல - அங்கே ஜனநாயகம் காப்பாற்றப்படவேண்டும் - மீட்கப்படவேண்டும் என்று சொன்னாலும், அடிப்படையில் இதுதான் முக்கியம்.

ஹிந்துத்துவாவினுடைய கொள்கையில், சவார்க்கார் சொல்லியிருக்கின்ற வார்த்தையே,

ஹிந்துக்களை ராணுவ மயமாக்கு -

ராணுவத்தை ஹிந்து மயமாக்கு

இதுதான் அவர்களுடைய முழக்கம்.

அதை அந்த இளைஞர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆகவேதான், அந்த பாணியிலேயே அதை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் வருகிறது.

திரிபுராவில் நடக்கின்ற வித்தைகள் இங்கே நடக்காது!

அந்த வித்தைகள் எல்லாம் அங்கே நடக்கின்ற வித்தை கள். இங்கே நடக்காது - ஏனென்றால், இது பெரியார் மண் - சமூகநீதி மண் - முழுக்க முழுக்க மதச்சார்பற்ற உணர்வு பெற்ற மண்.

எது எங்களைப் பிரிக்கிறது என்று பார்க்கமாட்டோம் -

எது எங்களை இணைக்கிறது என்பதைப் பார்த்து, எல்லோர்  கைகளும் உயரக்கூடிய அளவிற்கு, சிறப்பாக ஒன்றுபட்டு இருக்கக்கூடிய அளவிற்கு இருப்போம். அதுதான் எங்களுடைய உணர்வுகள்.

எனவே, ஜனநாயகம் தழைக்கவேண்டும் -

அவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை - அதை நினைவூட்டினால், ஆத்திரப்படுகிறார்கள். ஆத்திரப் படும்பொழுது, அறிவுக்கு வேலையில்லை. ஆத்திரம், அறி வுக்கு இடமில்லாத அளவிற்குப் போகும். ஆகவேதான், அவர்கள் வன்முறையில் இறங்கியிருக்கிறார்கள்.

அதனைக் கண்டிக்கவும்,

ஜனநாயகத்தை மீட்கவும்

இப்படிப்பட்ட இயக்கங்களை நாடு தழுவிய அளவில் கட்டவேண்டும். அதற்குத் தமிழ்நாடு ஏற்கெனவே நல்ல எடுத்துக்காட்டு.

அதன் காரணமாகத்தான் இருள் ஒழிந்த நிலையில், உதயசூரியன் உதித்திருக்கக்கூடிய அளவிற்கு, ஒளிமிகுந்த ஒரு ஆட்சியாக இருக்கிறது. அதற்குத் துணையாக ஒரே நிலையில் நாம் இருக்கிறோம்.

மீண்டும் ஒன்றுபட்டு குரல் கொடுக்கிறோம்

எனவேதான், மீண்டும் ஒன்றுபட்டு குரல் கொடுக்கிறோம்; அது திரிபுராவாக இருந்தாலும் அல்லது வேறொரு பகுதியாக இருந்தாலும்,

மதவெறிக்கு இடமில்லை -

மதவெறியை மாய்த்து

மனிதநேயத்தைக் காப்போம்!

வன்முறையைத் தகர்த்து

எல்லா மக்களையும் ஒன்றுபடுத்துவோம்!

நம்முடைய கட்சி, கொள்கைகளைத் தாண்டி, ஜனநாய கத்தை, மக்களாட்சியை, மக்கள் விருப்பத்தை, மக்களுடைய நோக்கத்தை, அதனை செய்வதற்காக உழைக்கின்ற நம்முடைய இடதுசாரி அமைப்புகள், யார் யாருக்கு எங்கெங்கே வாய்ப்பு இருக்கிறதோ - அவர்களையெல்லாம் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்ற முறையில்,

உங்களுடைய அத்தனை முயற்சிகளுக்கும் எங்கள் இயக்கமும் துணையாக இருக்கும்.

செப்டம்பர் 27:  திராவிடர் விவசாயத் தொழிலாளர் சங்கம் பங்கேற்கும்

வருகின்ற 27 ஆம் தேதி நடைபெறுகின்ற போராட்டத்தில் கூட  திராவிடர் கழகம், திராவிடர் விவசாயத் தொழிலாளர் சங்கம் பங்கேற்கும் என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி,

முதன்முதலில் கண்டித்த இயக்கம் - திராவிடர் கழகம்; கண்டித்த தலைவர், தந்தை பெரியார்

நீங்கள்  என்றைக்கு  அழைத்தாலும், நாங்கள் இருக்கி றோம் - இப்போது அல்ல - கம்யூனிஸ்டுகள்மீது சேலம் சிறைச்சாலையில், உள்ளே பிரகாசம் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றபொழுது, அதனை முதன்முதலில் கண்டித்த இயக்கம் - திராவிடர் கழகம்; கண்டித்த தலைவர், தந்தை பெரியார்; கண்டித்து எழுதிய ஏடு விடுதலை.

ஆகவேதான், அந்தப் பணியை செய்வதற்குத்தான், உங்களிடமிருந்து சற்று முன்பாக பேசி, விடுதலைக்குச் செல்லவேண்டும்; கொஞ்சம் விடுதலை கொடுங்கள் எனக்கு என்று தலைவரிடம் கேட்டுக்கொண்டேன்.

உங்களோடு கடைசிவரையில் இருக்கக்கூடியவர்கள்!

எனவே, மற்ற தோழர்கள் தவறாக நினைக்கக்கூடாது. இடையில் வந்துவிட்டுச் செல்லக்கூடியவர்கள் அல்ல. உங்களோடு கடைசிவரையில் இருக்கக்கூடியவர்கள். இன்றைய சூழ்நிலையில், இடையில் விடைபெற்றுச் செல்கி றேன். அதற்காக மன்னிக்கவேண்டும் என்று கேட்டு, விடை பெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்!

வாழ்க பெரியார்,

வளர்க பகுத்தறிவு!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.

No comments:

Post a Comment