தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா - வரலாற்றுக் காவியத்தின் மணம் வீசும் பொன்னாள் இந்நாள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 2, 2021

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா - வரலாற்றுக் காவியத்தின் மணம் வீசும் பொன்னாள் இந்நாள்!

 அதிக காலம் ஆட்சி புரிந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உருவப் படத்தை முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் திறப்பது பெருமைக்குரியது!

நூற்றாண்டு காணும் தமிழ்நாடு சட்டப்பேரவை யின் சாதனைகளைப் பட்டியலிட்டும், அதிக காலம் ஆட்சி புரிந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் படத்தினை இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் திறந்து வைப்பது பெருமைக் குரியது என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத் துள்ளார். அவரது  அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டின் வரலாற்றில் இந்நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். தமிழ்நாடு சட்டப் பேரவையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நாளாயிற்றே!

மாண்டேகு செம்ஸ் போர்டு பரிந்துரையின்படி இந்தியாவில் கொண்டுவரப்பட்டதுதான் சட்டமன்றங்கள்.

அந்த வகையில் முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட நீதிக்கட்சி 98 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல் அமைச்சரவையை அமைத்தது. 1921 ஜனவரி 12 அன்று கன்னாட் கோமகன் சட்டமன்றக் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

முதல் பிரதமராக (Premier)கடலூரைச் சேர்ந்த வழக்குரைஞர் சுப்பராயலு (ரெட்டியார்) அணி செய்தார்.

புகழ்பெற்ற பிரதமர்கள் (பிரீமியர்)

அணி செய்த மன்றம்

பின்னர் பனகல் அரசர் (இராமராய நிங்கர்), பொப்பிலி ராஜா, முதலிய பெருமக்கள் பிரதமராக இருந்து நல்லாட்சி புரிந்தனர்.

தமிழ்நாட்டு மக்களுக்கு நலந்தரும் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திய பெருமைக்குரியது நீதிக்கட்சி ஆட்சி.

முதல் வகுப்புரிமை ஆணையைப் பிறப்பித்து செயல்படுத்திய பெருமை நீதிக்கட்சி ஆட்சிக்கு உண்டு. கல்வி உரிமை அறவே மறுக்கப்பட்டுக் கிடந்த பார்ப்பனர் அல்லாதார் மக்களின் சமூகநீதியைக் கணக்கில் கொண்டு எண்ணற்ற திட்டங்கள் நீதிக்கட்சி ஆட்சியின் சாதனை மகுடத்தில் என்றென்றும் வைரக் கற்களாக மின்னிக் கொண்டிருக்கும்.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதன் முதலாகப் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது நீதிக்கட்சியே! (1921, ஏப்ரல் 1).

பஞ்சமர், பறையர் என்ற சொல் நீக்கப்பட்டது, பொது வீதிகள், சாலைகள், குளங்கள், கிணறுகள் - இவற்றை இவர்கள் பயன்படுத்திட முழு உரிமை உண்டு. கல்விக் கூடங்களில் சேர்க்கை, பேருந்துகளில் பயணம் இவை உறுதிப்படுத்தப்பட்டன.

நீதிக்கட்சி ஆட்சியின் சாதனைகள்!

பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Board)  கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான குழு (Selection Board) மருத்துவக் கல்லூரிகளில் சேர சமஸ்கிருதம் படித்திருக்கவேண்டும் என்ற நிபந்தனை நீக்கம். மருத்துவத் துறையை இந்திய மயமாக்கல், இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், தேவதாசி ஒழிப்புச் சட்டம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உருவாக்கம், சென்னைப் பல்கலைக் கழகம், சட்டப் பல்கலைக் கழகம் உருவாக்கம், சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை உருவாக்கம், தமிழ்நாடு பெயர் மாற்றம், சுயமரியாதைத் திருமணச் சட்டம், இருமொழிக் கொள்கைச் சட்டம், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டம், 10 ஆம் வகுப்புவரை தமிழ் கட்டாயம், கல்வி, வேலை வாய்ப்புகளில் பெண்களுக்குத் தனி இட ஒதுக்கீடு (30%),

தமிழ்வழி பயின்றோருக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு, உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடம், மகளிர் காவல் துறை, தமிழ் செம்மொழி, நுழைவுத் தேர்வு ரத்து,  தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு (அரசி யல் காழ்ப்பால் பின்னர் ரத்து), பெரியார் நினைவு சமத்துவபுரம், பெண்களுக்குச் சொத்துரிமை, உள்ளாட் சித் தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, பெண்கள் முன்னேற்றத்திற்கான அடுக்கடுக்கான சட்டங்கள், திட் டங்கள், சட்டமன்றம் தொடங்கும்போது திருக்குறளைச் சொல்லித் தொடங்குதல், சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்தியாவிலேயே முதன்முதலாக

மாநில சுயாட்சிக்காக ஆணையம்!

மாநில சுயாட்சிக்காக இந்தியாவிலேயே சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.வி.இராஜ மன்னார் தலைமையில், முன்னாள் சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் .லட்சுமணசாமி முதலியார் மற்றும் நீதிபதி சந்திரா ரெட்டி ஆகிய மூவர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்தார் முதலமைச்சர் கலைஞர் (16.4.1974).

இத்தியாதி, இத்தியாதி சாதனைகள் கடற்பாறையின் ஒரு சிறு முனை போன்றதேயாகும்.

இந்தியத் துணைக் கண்ட அளவில் பார்த்தாலும் சாதனை சரித்திர உச்சியில் முதல் இடத்தில் இருந்து பட்டொளி வீசி பறப்பது தமிழ்நாடு சட்டப்பேரவையே!

வெளிநாடுகளிலிருந்து வரும் பார்லிமெண்ட் குழு வினர், பார்க்க விரும்பிய இடம் சென்னை சட்டமன்ற நடவடிக்கைகள்தாம்.

இந்தியாவிலேயே சட்ட மேலவைக்குத் துணைத் தலைவராக ஒரு பெண் - டாக்டர் முத்துலட்சுமி (ரெட்டி) அணி செய்தார் என்ற வரலாறு இந்த சட்டமன்றத்துக்கு உண்டு.

‘‘இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை'' என்று முதலமைச்சர் அண்ணா முழங்கினார். இது சூத்திரர் களால் சூத்திரர்களுக்கு ஆளப்படும் ஆட்சி என்று கலைஞர் அவர்களும் பிரகடனப்படுத்திய பெருமை இந்த சட்டப்பேரவைக்கு உண்டு.

‘‘நீதிக்கட்சியின் வழிவந்தவன்!''

அண்ணா அவர்கள் முதலமைச்சரான நிலையில், 10 ஆண்டுகள் குறுகிய காலத்தில் தேர்தல் அரசியலில் நுழைந்து ஆட்சியைப் பிடித்தது தி.மு..வின் சாதனை என்று செய்தியாளர்கள் குறிப்பிட்டபோது  - முதலமைச் சர் அண்ணா அவர்கள், ‘‘நீங்கள் கூறுவது தவறு; எங் களின் திராவிட இயக்கமான நீதிக்கட்சியின் தொடர்ச் சியே தி.மு.. ஆட்சி'' என்று பளிச்சென்று சொன்னதுண்டு.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் வரலாற்று நிகழ்ச்சிகள் அனைத்தும் தி.மு.. ஆட்சிப் பொறுப்பில் இருந்த போதுதான் நடைபெற்றுள்ளன.

சட்டமன்ற பொன்விழா (1989), பவள விழா (1997) ஆகியவற்றைக் கொண்டாடியது தி.மு.. ஆட்சிதான். இந்த நூற்றாண்டு விழாவையும் இன்று (2.8.2021) கொண் டாடுகிறது என்பது குறிப்பிடத்தக்க பொன் அத்தியாயம் ஆகும்.

அதிக காலம் ஆட்சி புரிந்த கலைஞர் உருவப்படத்தை முதல் குடிமகனால் திறப்பு பெருமைக்குரியது!

போட்டியிட்ட அனைத்து சட்டப்பேரவைத் தேர் தல்களில் வெற்றி பெற்றவரும், அதிக காலம் முதல மைச்சராக இருந்தவர் என்ற முறையில் முதல் இடத்தை வகிப்பவருமான (6,864 நாள்கள்) முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உருவப் படத்தை இந்தியாவின் முதல் குடிமகனாகிய குடியரசுத் தலைவர் திறந்து வைப்பது எத்தகைய சிறப்பும் - பெருமையும் வாய்ந்தது என்பதை எண்ணும்போது தமிழர்கள் ஒவ்வொருவரும் பெருமகிழ்ச்சி கொள்ளும் தருணம் இது.

22 முதலமைச்சர்களைச் சந்தித்தது - தமிழ்நாடு சட்டப்பேரவை.

தளபதி மு..ஸ்டாலின் வரலாறு படைப்பார்!

அந்த வரிசையில் நீதிக்கட்சி வழிவந்த திராவிட இயக்கத்தின் வழிதோன்றல் தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒரு கால கட்டத்தில் சட்டமன்ற நூற்றாண்டு விழா நடைபெறுவது மகிழ்ச்சிக்குரியதாகும்.

இவர் காலத்தில் மேலும் மேலும் வரலாறு போற்றும்  - படைக்கும் சட்டங்களும், திட்டங்களும் நிறைவேறும் என்பதில் அய்யமில்லை.

அந்த வகையில் இந்நாளில் இதுவரை மேற்கொள் ளப்பட்ட சட்டங்களுக்கும், திட்டங்களுக்கும் பாராட்டு தல்களைத் தெரிவிப்பதுடன், இனி நிறைவேற இருக்கும் சட்டங்களுக்கும், திட்டங்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி 

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை       

2.8.2021            

No comments:

Post a Comment