ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 7, 2021

ஆசிரியர் விடையளிக்கிறார்


கேள்விகோயில் உண்டியலில் பணம் போட வேண்டாம் என்று வெளிப்படையாகவேவிஜயபாரதம்இதழ் கூறுகிறதே-இதிலிருந்து பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

- திராவிட விஷ்ணு, வீராக்கன்

பதில்: ‘அவாளுக்குப் பயன்பட்டால்தான் கடவுள், கோயில், உண்டியல் எல்லாம். இல்லை என்றால் எல்லாம் இல்லைதான்.

முன்பு பொதுக்கூட்டங்களில், தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்,  அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகி பற்பல கோயில்களில் ஆதிதிராவிடர் உள்பட மற்ற ஜாதியினரே அர்ச்சகர் ஆகிவிட்டால் நம்முடைய கடவுள் மறுப்பு வேலையை பார்ப்பனரே எடுத்துக் கொண்டு, ‘கோயிலுக்குப் போக வேண்டாம். அங்கிருப்பது கடவுள் அல்ல! கல்!!’ என்று பிரச்சாரம் செய்யும் நிலையும் வரலாம்என்று. அதன் முன்னோட்டம் தான் இதுவோ!

கேள்வி : பிரதமர் அலுவலகத்தில் உள்ள ஆலோசகர்கள் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக பதவி விலகுவது எதைக் காட்டுகிறது?

- .சே.அந்தோனி ராஜ், செங்கோட்டை

பதில்:  பிரதமரோடு ஒத்துப் போக முடியாதவர்கள் எண்ணிக்கை பெருகுகிறது என்பதைக் காட்டுகிறது.

கேள்வி:  இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மட்டும் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டதும், அப்படியானால் 10 விழுக்காடு உயர்ஜாதியினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு அளிப்பது விதிமீறல் இல்லையா என்று நீதிபதிகள் கேட்டிருப்பதும் எதைக் காட்டுகின்றன?

- மணிமேகலை, வீராபுரம்

பதில்: திராவிடர் இயக்க சமூக நீதி கொள்கை நியாயபூர்வமானது என்றும், வெல்லத்தக்கது என்பதையும் எடுத்துக் காட்டுவதாக உள்ளன!

கேள்வி:  பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள் தங்களால் செய்ய முடியாததை ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில் செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்வது சரியா?

- சங்கர் அப்பாசாமி, ஜெயங்கொண்டம்

பதில்: பத்தாண்டுகள் - காட்சி - ஆட்சியல்ல. 3 மாதங்கள் ஆட்சி - காட்சியல்ல! மக்கள் புரிந்து வருகிறார்கள்.

கேள்வி:  கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு நெறிமுறைகளை அனைத்துக் கட்சிகளும் பின்பற்றி வரும் நிலையில், பி.ஜே.பி மாநிலம் முழுவதும் கூட்டம் நடத்துவது சட்டவிரோதம் தானே? ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

-கார்த்திகேயன், ஆண்டிமடம்

பதில்: காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்துள்ளார்கள். ‘கடிதோச்சி மெல்லெறியும்ஆட்சி தமிழ்நாட்டின் தி.மு.. ஆட்சி! அதனால் கடுமையாக எதனையும் உடனடியாக செய்ய முடியாது!

கேள்வி:  காவல்துறையினருக்கு வாரத்தில் ஒருநாள் கட்டாய ஓய்வு கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவிட்டிருப்பது வரவேற்க வேண்டிய ஒன்றுதானே!

 - எஸ்.முருகேசன், கூடுவாஞ்சேரி

பதில்: நிச்சயமாக, அவர்களும் மனிதர்கள் அல்லவா? கடமையாற்றும் போது தக்க ஓய்வு - குடும்பத்தினரோடு நேரத்தை செலவழித்தல் - அவர்களை மேலும் புத்துணர்வுடன் பணி செய்யத் தூண்டும்.

சிறந்த ஏற்பாடு - பாராட்டுகிறோம் தமிழ்நாடு காவல்துறை இயக்குநரையும், செயல்படுத்தப் பணித்த முதல் அமைச்சரையும்.

கேள்வி:  தமிழ்நாட்டைப் பிரிக்கும் திட்டம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசின் விளக்கம் -  பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகின்றஇந்த விபரீதப் போக்கு தேவையா?

 - இரா. அலமேலு,  செங்குன்றம்

பதில்: ஆழம் பார்த்தார்கள் போலும்! புரிந்து கொண்டார்கள். புற்றுக்குள் சென்று விட்டது விபரீத யோசனை என்ற அரவம்!

கேள்வி : முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டுள்ள (05.08.2021) ‘மக்களைத் தேடி மருத்துவம்என்ற உன்னதமான மனித உயிர்காக்கும் மகத்தான திட்டம் ஏழை எளிய கிராமப்புற  மக்களுக்கு, மகளிர்க்கும் குழந்தைகளுக்கும் பெரும் பயன் அளிக்கும் தொலைநோக்குத் திட்டம் அல்லவா?

- பா. ஆனந்த், திருவொற்றியூர்.

பதில்: கலைஞர்வருமுன்காப்போம்திட்டம் தொடங்கினார்.  வந்த நோய்களுக்கும், வரவிருக்கும் நோய்களைத் தடுக்கவும் இப்படி வீடுதேடி மருத்துவம் செல்வது மிகவும் நல்லது!

நமது பெரியார் மருத்துவ அணி  பல ஆண்டுகளாகமக்களை நோக்கி  மருத்துவம்என்று திட்டத்திற்கு பெயரிட்டு இத்தகு பணியை செய்து வருகிறது.

அருமையான திட்டம். வெற்றி பெற வாழ்த்துக்கள் - நமது முதல் அமைச்சருக்கும், மருத்துவத்துறை அமைச்சருக்கும், அரசுக்கும்.

கேள்வி :  நமக்காக பாடுபட்ட  தலைவர்களின் சிலைகளை கம்பிகளுக்குள் வைத்து பாதுக்காப்பட வேண்டிய அவல நிலை இந்த ஆட்சியிலும் தொடர்கிறதே அய்யா?

- .கண்ணன், திருவையாறு

பதில்: தலைவர்களைவிடுதலைசெய்வது மிகவும் அவசரம்.  முதலமைச்சர் அதற்கான ஆணைகளைப் பிறப்பித்து, கண்காணிப்பு கேமிராக்களை உருவாக்குதல் அவசியம்.

No comments:

Post a Comment