ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 14, 2021

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: அறநிலையத்துறை ஆலோசனைக் குழுவுக்கு நாத்திகரான முதலமைச்சர் மு..ஸ்டாலின் தலைமை தாங்கக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்ததோடு, மனுதாரர் 5 ஆண்டுகளுக்கு பொது நலவழக்குகள் தொடரக்கூடாது என தடை விதித்தது சரியான சாட்டை அடி அல்லவா?

- இல. சீதாபதி, மேற்கு தாம்பரம்.

பதில்: சரியான சாட்டையடி மட்டுமல்ல; 5 ஆண்டுகள் கண்காணிப்பு பற்றிய தீர்ப்பு - மட்டையடியும் கூட! என்றாலும் காவிகளுக்குப் புத்திவருவதில்லையே!

ஹிந்துஎன்ற சனாதன வேதமதத்தில் நாத்திகரும் இருக்கலாம் என்ற பழைய புராண இதிகாச காலந்தொட்டே இருக்கும் கதைகள் பற்றிய அறிவும் கூட இத்தகையஜென்மங்களுக்கு’ - கட்டை! ஜாபாலி - தசரதனுக்கும், இராமனுக்கும் மந்திரி. ஜாபாலி கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர் என்று ராஜகோபாலாச்சாரியார் எழுதியுள்ளாரே! அதுகூட இந்தமண்டூகங்களுக்குதெரியாது!

கேள்வி 2: திமுக ஆட்சி வந்த பிறகும் கட்டடத் திறப்பு, புதிய திட்டங்கள் துவங்கும் பணி ஆகியன பார்ப்பனர்களை வைத்து, பூஜை செய்து தொடங்கும் போக்கு தொடர்வது வேதனை அளிப்பதாக உள்ளதே?

- சிவகுமார் சண்முகம், பஹ்ரைன்

பதில்: வேதனையளிப்பதாக உள்ளது. கண்டனத்திற்குரியது. அதிமுக அரசின் பாணியை கைவிட வேண்டும். முதலமைச்சர் இதில் ஆணையிட வேண்டும். இது மதச்சார்பற்ற அரசு என்பதை தனது அதிகாரிகளுக்கும், அமைச்சர் களுக்கும் அறிவுறுத்தி தவறுகளைத் திருத்திட முன் வரவேண்டும்!

இது அண்ணா வழியோ, கலைஞர் வழியோ அல்ல என்பதை இன்றைய முதலமைச்சர் அறியாதவரல்ல.

கேள்வி 3: விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா என்னும் பெயரை தயானந்த் கேல்ரத்னா என்று மாற்றுகிறார்களே?

- மாவீரன், சோழங்குறிச்சி

பதில்: ‘பெரிய பதவி, சின்ன புத்திஎன்று முன்பு அரசியலில் பயன்படுத்திய சொலவடைதான் பதில் இதற்கு!

கேள்வி 4: பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு 27 விழுக்காடு என்பது குறைவு என்றும் தமிழ்நாட்டில் உள்ளதுபோல் இட ஒதுக்கீட்டின் அளவு உயர்த்தப்பட வேண்டும் என்றும் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் கூறியிருப்பது பற்றி?

- வேலு, அவிநாசி

பதில்: தயாநிதிமாறனின் பேச்சு பாராட்டுக்குரியது மட்டுமல்ல; சட்ட பூர்வமானது. 69 சதவிகிதமே கூட, மக்கள் எண்ணிக்கை விகிதத்தில் போதுமானது (adequate) இல்லை. எனவே அவர் நியாயத்தையே கூறியுள்ளார் மக்களவையில். பாராட்டுகள்.

கேள்வி 5: மீன்வள மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கலாமா?

- தமிழ்மைந்தன், சைதாப்பேட்டை

பதில்: நிச்சயம் எதிர்பார்க்கலாம்; காரணம் மு..ஸ்டாலின் அவர்கள் முதல் அமைச்சராகப் பதவியேற்கும் போதே, இதற்கு முன் வெறும் மீன்வளத்துறை என்று இருந்த அந்தத் துறையின் பெயரை விரிவுபடுத்தி, மீனவர் நலத்துறை, மீன்வளத் துறை என்று போட வைத்தவர்; நிச்சயம் மீனவர் நலன் காப்பதில் அவர் கண்ணும் கருத்துமாய் இருப்பார்!

கேள்வி 6: இந்தியாவில் ஒன்றிய - மாநில அரசுகளும், ஊடகங்களும் கிரிக்கெட் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டு பிறகு ஒலிம்பிக்கில் தங்கம் கிடைக்கவில்லை என்று பிதற்றுவது சரியா?

- எஸ்.பத்ரா, வந்தவாசி.

பதில்: நெற்றியடி கேள்வி இது!

தீராத விளையாட்டு அரசியல் தீர்க்கப்பட்டால்தான் - உண்மையானவர்களை தக்க முறையில் அடையாளம் கண்டு சிறப்பான பயிற்சி கொடுக்க போதிய அரசு அமைப்புகள் உருவாக்கப்பட்டால் - நாமும் அமெரிக்காவைப் போல சீனாவைப் போல பதக்கங்களை குவிக்க முடியும்.

கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சரிபகுதி கூட மற்ற விளையாட்டுகளுக்குத் தரப்பட வில்லயே -  விளையாட்டிலும் நால் வருணம் ஆட்சி புரிகிறதே!

கேள்வி 7: இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் எந்தெந்த ஜாதிகளைச் சேர்ப்பது என முடிவெடுக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியல் சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியிருப்பது மகிழ்ச்சிதானே !

- மல்லிகா, மாங்காடு

பதில்: பெரியார் மண்ணான தமிழ்நாடும், அதன் திமுகவின் முயற்சியும், அத்துணை முற்போக்குக் கட்சிகளும் சமூகநீதிக் கொடியை ஏந்தின - பா... தவிர, அதன் கனிந்த பயன் இது.

பண்ணைப் பணியாளன் மகிழாமல் இருக்க முடியுமா?

கேள்வி 8: மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை ஒன்றிய அரசிடம் ஒப்படைத்த பிறகு தமிழ்நாடு இடஒதுக்கீட்டு முறை எப்படி பொருந்தும்? என்று சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

- பா. செல்வி, வாணுவம்பேட்டை.

பதில்: வழக்குரைஞர்கள் முதல் அமர்வில் உள்ள நீதிபதிகளுக்கும் அதன் முழு வரலாற்றை விளக்கி, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத் தீர்ப்பு, ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை ஆணைப்படிதான் என்பதை நன்கு விளக்கினால்; அவர்கள் புரிந்துகொள்வர்!

பொதுவாக இடஒதுக்கீடு என்பதை தமிழ்நாடுதான் மற்றவர்களுக்கு எப்போதும் பாடம் எடுத்துப் புரிய வைக்கும்!

கேள்வி 9: தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டுக்குச் சட்டம் இயற்ற வேண்டும் என்று மக்களவையில் திருமாவளவன் பேசி இருப்பது கையொலி எழுப்பி வரவேற்க வேண்டிய விடயம் அல்லவா ?

- கு.கணேஷ், கடப்பாக்கம்.

பதில்: நாம் துவக்க முதல் அதனை வற்புறுத்தி பெரும் அளவில், தேசிய அகில இந்திய கட்சிகளான காங்கிரசு, கம்யூனிஸ்ட் கட்சிகளே தீர்மானம் இயற்றும் அளவுக்கு தெளிவும் தேவையும் ஏற்பட்டுவிட்டது.

பொதுத்துறைகள் தனியார் மயமாக்கப்படும் நிலையில் அதுதான் சரியான தீர்வு - மருந்து.

கேள்வி 10: அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பிரச்சினையில் புதுப்புதுத் தடைகளை உருவாக்க முனைந்துகொண்டே இருக்கிறார்களே?

- முகிலா, குரோம்பேட்டை

பதில்: ஆதிக்கவாதிகளின் வெறி அவ்வளவு எளிதில் அடங்கிவிடுமா? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அனுபவித்த சுகம் கண்ட சுரண்டல் சுய நல பூணூல்கள் இறுதிவரை, தங்களது பிம்பங்களை எங்கெங்கு ஊடுருவியுள்ளனவோ அதனைப் பயன்படுத்தி கடைசி முயற்சி செய்கின்றன. ஆனால் நிச்சயம் அவாள், எண்ணம் ஈடேறாது! கெஞ்சினால் மிஞ்சுவார்கள், மிஞ்சினால் கெஞ்சும் நிலைக்கு விரைவில் வருவார்கள்.

No comments:

Post a Comment