அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை கடந்து வந்த பாதை-10 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 27, 2021

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை கடந்து வந்த பாதை-10

ஆசிரியர் அறை கூவலும்  மகாராஜன் கமிட்டி அமைப்பும்

04.06.1978 - திருச்சியில் மத்திய கமிட்டி

திராவிடர் கழக மத்திய நிர்வாகக் கமிட்டி 04.06.1978, காலை 10 மணியளவில் திருச்சி பெரியார் மாளிகையில் அன்னை மணியம்மையார் அரங்கில் எழுச்சியுடன் துவங்கியது.

இந்தக் கமிட்டியில் - கருவறை நுழைவுக் கிளர்ச்சிக் குறித்து முக்கிய தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

மனித சமுதாயத்தில் பிறவியின் பேரால் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை ஒழித்தேத் தீரவேண்டும் என்ற மனிதாபிமான உணர்வின் அடிப்படையில் தந்தை பெரியார் அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமை பெரும் கிளர்ச்சியைத் துவக்கினார்கள்.

அப்போதைய தி.மு.. ஆட்சி, தந்தை பெரியார் அவர்கள் அதற்காகப் போராடத் தேவை இல்லை என்றும், அதற்கான சட்டத்தைத் தாங்களே நிறைவேற்றுகிறோம் என்றும் கூறி அனைத்துக் கட்சியினரின் ஒருமித்த ஆதரவுடன் அர்ச்சகர் சட்டத்தை நிறைவேற்றியது.

பிறவி ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதிலேயே எப்போதும் குறியாக இருக்கும் பார்ப்பனர்கள் பன்னிரெண்டு பேர் உச்சநீதிமன்றத்திற்கு படை யெடுத்துச் சென்று தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அர்ச்சகர் சட்டத்தை செல்லுபடியற்றதாக்கும் ஒரு தீர்ப்பினைப் பெற்றுவிட்டனர்.

இந்நிலையில், தந்தை பெரியார் அவர்கள் தமிழர் சமுதாய இன இழிவு ஒழிப்பு மாநாட்டைச் சென்னையில் கூட்டி போராட்டத் திட்டத்தை அறிவித்து செயல்பட இருந்த காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் நம்மைவிட்டு மறைந்தார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் மறைவுக்குப் பிறகு நம் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற அன்னை மணியம்மையார் அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் இறுதி இலட்சியத்தை நிறைவேற்றுவதில் மிகவும் அக்கறை கொண்டு,

அய்யா அவர்கள் அறிவித்த போராட்டத் திட்டங்களின் அடிப்படையிலேயே அஞ்சல் அலுவலகம் முன் மறியல் ஒன்றிய  அமைச்சர்கட்கு கறுப்புக்கொடி காட்டுதல் போன்ற முதற்கட்ட போராட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக நடத்தியும் காட்டினார்கள்.

ஒன்றிய அரசு உரிய சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கோரி தி.மு.. அரசு சட்டமன்றத்திலே மீண்டும் நினைவூட்டும் தீர்மானத்தை நிறைவேற்றி அன்றைய ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தது என்றாலும், ஒன்றிய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் கழகத் தலைவர் அம்மா அவர்கள் தஞ்சை பெரிய கோவில் கர்ப்பக்கிரக நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார்கள்.

நெருக்கடி நிலை என்ற பெயரால் திருமதி. இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் கொண்டுவந்த பத்திரிகைத் தணிக்கையின் காரணமாக தஞ்சையில் நடக்கவிருந்த கர்ப்பக்கிரக நுழைவுப் போராட்டத்தை ஒத்திவைக்க நேர்ந்தது.

மீண்டும் அப்போராட்டத்தை நடத்தியே ஆகவேண்டும் என்று கருதி இருந்த முக்கிய தருணத்தில் நமது தலைவர் அம்மா அவர்கள் மறைந்துவிட்டார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக அறிவித்ததும், அம்மா அவர்கள் தொடர்ந்து போராடியதுமான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமையைப் பெற்றுத்தரும் இலட்சியத்தை எந்த விலை கொடுத்தும் நிறைவேற்ற திராவிடர் கழகம் தயாராக இருக்கிறது. தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழா ஆண்டிலேயே இதற்கொரு முடிவைக் காண திராவிடர் கழகம் விரும்புகிறது என்று தீர்மானிக்கப்பட்டது.

நீதிபதி மகராஜன் குழு

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு செய்ய தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவையொட்டி நீதிபதி திரு.டாக்டர் எஸ்.மகராஜன் அவர்கள் தலைமையில் குழு ஒன்றினை ...தி.மு.. ஆட்சிக் காலத்தில் (முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன்) நியமிக்கப்பட்டது. (தமிழ்நாடு அரசு ஆணை எண்:1573 வணிகவரி மற்றும் அறநிலையத் துறை நாள்: 24.09.1979)

தந்தை பெரியார் அவர்கள் நூற்றாண்டு விழாவையொட்டி தந்தை பெரியார் அவர்களின் இறுதி  விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமை தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க நீதிபதி டாக்டர் எஸ்.மகராசன் தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஒன்றினை மாண்புமிகு எம்.ஜி.ஆர். அவர்களின் தலைமையிலான ...தி.மு.. அரசு அமைத்தது. (தமிழ்நாடு அரசு ஆணை எண்: 1573 வணிகவரி மற்றும் அறநிலையத்துறை நாள் 24.9.1979) அக்குழு உறுப்பினர்கள் வருமாறு:

(1) நீதிபதி டாக்டர் எஸ்.மகராசன் (தலைவர்), உறுப்பினர்கள் (2) சுவாமிநாத குருக்கள், (3) . விசுவநாத சிவாச்சாரியார், (4) என்.ரெங்கராச பட்டர், (5) மு. அருணாசலம், (6) .வச்சிரவேல் முதலியார், (7) திருமுருக கிருபானந்தவாரியார், (8) யு.சுப்பிரமணியன், (9) ஜோ.மு. முத்துசாமி பிள்ளை, (10) . சுந்தரராஜ பட்டர், (11) டி.என்.சாம்பமூர்த்தி சிவாச்சாரியார், (12) .வெ.ரா.கிருஷ்ணசாமி ரெட்டியார் ஆகியோர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் உட்பட பலரையும் இக்குழு சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றது.

No comments:

Post a Comment