ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 31, 2021

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று நாடு முழுவதும் அதிமுக வினர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்களே?

- சங்கர் அப்பாசாமி, அரியலூர்

பதில்: பல ஆண்டுகாலம் அமைச்சராகவும், 4 ஆண்டுகள் முதல் அமைச்சராகவும் இருந்த எடப்பாடியாரிடம் முன்பு சட்டமன்றத்தில்அம்மா ஆட்சியில் ஓராண்டு முடிந்தும் கூட அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லையே - ஏன்?” என்று திமுக கேட்டபோது சொன்ன பதில்,

“5 ஆண்டு காலத்திற்குள் நிறைவேற்ற ஏராளமான கால அவகாசம் இன்னும் உள்ளதுஎன்ற பதிலைத் தந்ததை மறந்து விட்டார்கள் போலும்! எதிர்க்கட்சிக்கு வந்தவுடன் ஏதாவது செய்து இருப்பைக் காட்ட அதிமுக இப்படிசத்தற்ற சத்தத்தைஎழுப்புகிறது.

நீட்தேர்வில் இவர்கள் நடந்து கொண்ட விதம் நாடு எளிதில் மறக்கக்கூடியதா? "மல்லாக்க படுத்து மார்பு மீது எச்சில் துப்பும்" புத்திசாலித்தனம்!

திமுக பதவிக்கு வந்து இன்னும் - (மே 7ஆம் தேதி பதவியேற்றது) - உருப்படியாக 100 நாள் கூட ஆக வில்லை - கரோனா தொற்றுக்குத் தானே அதன் முன் னுரிமை - மறந்துவிட்டதா?

- - - - -

கேள்வி  2:  கேரளாவில் ஆண் அரசுப் பணியாளர் களுக்குத் திருமணத்தின் போது வரதட்சணை மறுப்பு சான்றிதழைக் கட்டாயப்படுத்தியிருப்பது வரவேற்கத் தக்கதாக இருந்தாலும் சட்டப்படி சரியானதா?

- சு.அறிவன், வீராக்கன்

பதில்: வரதட்சணை தருவதும், வாங்குவதும் சட்ட விரோதமே! வரதட்சணையை மறுப்பதே சரி. அதற் கான சான்றிதழை கட்டாயப்படுத்து வது சட்டப்படி சரியல்ல.

- - - - -

கேள்வி 3: தமிழும், சமஸ்கிருதமும் சிவனின் இரண்டு கண்கள் என்று அமெரிக்கப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் பேசியிருக்கிறாரே?

- .மணிமேகலை, வீராபுரம்

பதில்: பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் அவ்வாறு பேசியிருக்கிறார் என்ற செய்தி பற்றி அறிந்தோம். வேதனைப்பட்டோம். 2019ஆம் ஆண்டு அமெரிக்க மனித நேய அமைப்பும், பெரியார் பன்னாட்டு அமைப்பும் இணைந்து நடத்திய  மாநாட் டில் வடமொழிக்கு வக்காலத்து வாங்கிய கருத்தினை மரியாதையுடன் சுட்டிக்காட்டி மறுப்புரை வழங்கி னோம். இரண்டு கண்களில் ஒன்று எப்படி "தேவ பாஷை"யானது? மற்றொன்று "நீஷபாஷை"யானது?

செம்மொழியான பழுதாகாத கண்ணும்  தமிழ் - "காமாலைக்  கண்ணும்" (மக்களிடையே புழக்கமில்லாத நிலை) இரண்டும் ஒன்றா? "ஆனைக்கும் அடி சறுக்கும்!"

பல நேரங்களில் சறுக்குவதும் உண்டு!

- - - - -

கேள்வி 4: ஆங்கிலத்தில் எழுதப்படும் தமிழ்நாடு அரசின் கோப்புகளை தமிழில் மொழி பெயர்க்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்திதானே!

-சாந்தி, நாமக்கல்

பதில்: மகிழ்ச்சிக்குரியது தான்; என்றாலும் தமிழ்நாடு அரசு அதிகாரிகளும், நிர்வாகமும் கோப்புகளை தமிழிலேயே எழுதிட ஆணை பிறப்பித்து, தமிழ் ஆட்சி மொழி என்பதை வலியுறுத்துதல் அவசியம்.

தமிழில் எழுத, பயிற்சி  தேவையாயின், அத்தகைய பிற மாநில அய்..எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகளுக்கும் தனியே தமிழ் வல்லுநர்கள் மூலம் சிறப்புப் பயிற்சி வகுப்பினை 6 மாதத்திற்குள் கையேடு ஒன்றின் துணையுடன் நடத்தி, 5 ஆண்டுகளில் முழுவதும் தமிழில்  என்ற நிலையை அடைந்து - தேவையானவை களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தரலாம் - என்ற ஏற்பாடு செய்து கொள்ளுதல் நலம்!

- - - - -

கேள்வி 5: காஞ்சி ஜூனியர் சங்கராச்சாரியின் பிறந்ததின விழா கொண்டாட தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் ரூ. 1 கோடியை நன்கொடையாக அளித்திருக்கிறாரே? இந்த பணத்தை அரசுப் பள்ளிக்கு அளித்திருக்கலாமே ? பார்ப்பனர் பண்ணையம் கேட்பாரில்லையா?

-செல்வம் வைரம், பஹ்ரைன்

பதில்: முதலில் அந்த ஒரு கோடி ரூபாய் அவருடைய சொந்தப் பணமா? அரசின் பணமா என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஅய்) மூலம் வெளிக் கொண்டு வருவது முக்கியம். சொந்தப் பணத்தை யாருக்கும் வழங்கலாம். அரசுப் பணத்தை அவர் இப்படி வழங்கினால் அது சட்ட விரோதம் - நியாய விரோதம்.


- - - - -

கேள்வி 6: தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான கல்வி உதவித்தொகை பற்றி கடிதம் வாயிலாக எழுப்பிய கேள்விக்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர் களுக்கான படிப்பு உதவித்தொகைத் திட்டம் நிறுத்தப் பட்டுவிட்டது என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளாரே?

- தமிழ்வாணன், மதுரை

பதில்: எஸ்.சி. மாணவர்களுக்கான படிப்பு உதவித் திட்டத்தை நிறுத்தியதை எதிர்த்து நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாதாடி மீண்டும் நிலைநாட்ட முயலவேண்டும்.

- - - - -

கேள்வி 7: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வெள்ளியால் கதவு செய்து கொடுத்த மல்லையா திவாலாகி விட்டார் என்று லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதே?

- கருணாமூர்த்தி, ஆவடி

பதில்: பக்தி பகல் வேஷம் - ஊரை ஏமாற்ற; கொள்ளையை மறைக்கவே - புரிகிறதா?

- - - - -

கேள்வி 8: டில்லியில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப் பட்ட தலைவர்களைக் கொண்டு புதிதாக சமூகப் புரட்சிக்கான அணி  உருவாக்கப்பட்டுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

- .சே. அந்தோணிராஜ், செங்கோட்டை

பதில்: வரவேற்கத் தக்க திருப்பம். கை மேல் பலன் கிடைத்ததே - சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பும் - கோர்ட் அவமதிப்பு வழக்கும் அதற்கு உதவியது - பிரதமர் வாய் திறக்கிறார் - முன்னுரிமை தந்து.பி.சிபற்றி பேசுகிறார்!

- - - - -

கேள்வி 9: தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும்தகைசால் தமிழர் விருதுக்குப் பொருத்தமானவர் தானே தோழர் சங்கரய்யா அவர்கள்?

- பகுத்தறிவு, கோபிச்செட்டிபாளையம்

பதில்: உடனடியாக நாம் மகிழ்ச்சி  பொங்க பாராட்டி வரவேற்றுள்ளோமே!

- - - - -

கேள்வி 10: ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் ஹிந்துத் துவவாதிகளின் மிரட்டலால் தமிழ்நாட்டு ஊடகவியலா ளர்கள் நெருக்கடிக்குள்ளாக்கப்படுவது தொடர்கதை யாக உள்ளது சரியா?

- செ.பாக்யா, பொன்னமராவதி

பதில்: பாதிக்கப்படும் ஊடகவியலாளர்களைப் பற்றி அனைத்து முற்போக்காளர்களும் ஒரு கண்டன பிரச்சார மேடையை உருவாக்கி, இவர்கள் மிரட்டப் படுவது, பழி வாங்கப்படுவது குறித்து பகிரங்கப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment