தமிழ்நாட்டைப் பாதிக்கும் மேகதாது அணைக்கு ஒன்றிய அரசு அனுமதி தரக் கூடாது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 12, 2021

தமிழ்நாட்டைப் பாதிக்கும் மேகதாது அணைக்கு ஒன்றிய அரசு அனுமதி தரக் கூடாது!

சட்டமன்ற அனைத்துக் கட்சியினர் கூட்டத்தில் தீர்மானம்!

 சென்னை, ஜூலை 12 உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி  கீழ்ப்படுகை மாநிலங்களின் முன் அனுமதி பெறாமல் எந்தவொரு கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்ற தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, இன்று (12.7.2021) முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களின் தலைமை யில் நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சியினர் கூட்டத்தில் மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவ்விவரம் வருமாறு:

தீர்மானம் 1:

அரசமைப்புச் சட்டத்திற்கு விடப்பட்ட சவால்!

உச்சநீதிமன்றத்தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப் படுகை மாநிலங்களின், முன்அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்த வொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக்கூடாது.  அதைமீறி, தற்பொழுது மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கருநாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது.  இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்குத் தேவையான நீர் கிடைப்பது பாதிப்படையும்.  உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரான இத்தகைய முயற்சி, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும். 

எனவே, கருநாடக அரசின் இத்திட்டத்திற்கு, இதில் தொடர்புடைய ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதிகளையும்வழங்கக்கூடாது என ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்வது.

தீர்மானம் 2:

அனைத்துக் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு!

இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.

தீர்மானம் 3:

தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் வழங்குதல்

தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் அனைத்துக் கட்சியி னரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது. அதன்பிறகு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment