தருமபுரி மண்டல திராவிடர் கழக மகளிர் அணி, மகளிர் பாசறை சார்பாக நடத்தப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் சிறப்புப் பட்டிமன்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 12, 2021

தருமபுரி மண்டல திராவிடர் கழக மகளிர் அணி, மகளிர் பாசறை சார்பாக நடத்தப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் சிறப்புப் பட்டிமன்றம்

தருமபுரி, ஜூலை 12- தருமபுரி மண்டல திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை சார்பாக 29.06.2021 அன்றுமுத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பெரும் பணியில் விஞ்சி நிற்பது - சமூகநீதியா? மாநில சுயாட்சியா? தமிழ் உணர்வா?” என்ற தலைப்பில் சிறப்பானதொரு பட்டிமன்றம் நடைபெற்றது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் நினைவாக நடத்தப்பட்ட இந்த சிறப்பான  பட்டிமன்றத்திற்கு கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி நடுவராக பொறுப்பேற்று சிறப்பித்தார்கள்.

தருமபுரி மண்டல மகளிரணி செயலாளர் நல்லாசிரியர் மு.இந்திரா காந்தி பட்டிமன்றத்திற்கு தலைமை ஏற்றார். காணொலி வழியாக நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரை யும் ஓசூர் மாவட்ட மகளிரணி தலைவர் செல்வி செல்வம்  வரவேற்று உரை ஆற்றினார்.

கழக துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் .இன்பக்கனி இந்த நிகழ்விற்கு சிறப்பானதொரு தொடக்கவுரை ஆற்றினார்.

மாநில மகளிர் அணி அமைப்பாளர் குடியாத்தம் .தேன்மொழி இணைப்புரை வழங்கினார்.

மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி முன்னிலை வகித்து உரையாற்றினார்.

தலைமை உரை: மு.இந்திரா காந்தி

தருமபுரி மண்டல மகளிரணி செயலாளர்:

காணொலி பட்டிமன்றத்திற்கு தலைமையேற்ற

மு.இந்திராகாந்தி அவர்கள், முதலமைச்சர் கலைஞர் ஆற்றிய சாதனைகளைப் பட்டியலிட்டார்.

விவசாயிகளின் கடன் ரத்து,  விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் போன்ற திட்டங்களை அறிவித்து,  விவசாயி களின் அரும்பெரும் தோழராய் விளங்கியவர் கலைஞர்.

பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர்.

பெண்களின் பொருளாதார தற்சார்புக்காக, மகளிர் சுய உதவி குழுக்கள் என்னும் மாபெரும் திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர்.

ஜாதியற்ற சமூகங்கள் படிப்படியாக உருவாக வேண்டும் என்று, ஜாதி ஒழிப்பு வீரர் தந்தை பெரியாரின் பெயரில், தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரங்களை உருவாக்கியவர் கலைஞர் .

கடவுள் வாழ்த்தை மொழி வாழ்த்தாக மாற்றி அந்த இடத்தில்நீராரும் கடலுடுத்த.....” என்ற அழகிய தமிழ் பாடலை வைத்தவர் கலைஞர்.

செம்மொழி மாநாட்டின் நோக்கப் பாடலானசெம்மொழியான தமிழ் மொழியே....”என்று கலைஞர் இயற்றிய  அழகிய தமிழ்ப்பாடல், கலைஞரைப் போலவே இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று தன்னுடைய தலைமை உரையில் குறிப்பிட்டார்.

துவக்க உரை:

.இன்பக்கனி

(துணைப் பொதுச் செயலாளர்) 

துவக்க உரை ஆற்றிய துணைப் பொதுச்செயலாளர்  . இன்பக்கனி,  பெரியாரும், அறிஞர் அண்ணா அவர்களும் ஒரு மிகப்பெரிய சமுதாயப் புரட்சியை தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டிருந்த வேளையில், அவர்கள் வழியில் தன்னை இணைத்துக்கொண்டு தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கி அரசியல் விழிப்புணர்வுக்கும் வித்திட்டார் கலைஞர்.

மானமிகு சுயமரியாதைக்காரன்என்று தன்னை ஒரு வரியில் அறிமுகப்படுத்திக் கொண்ட தலைவர் கலைஞர்.

தனக்கு மலர் வளையம் வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களுக்கு இரங்கற்பா எழுதுகின்ற நேரத்தில்  எல்லாம்அதனை தனக்கானதாகவும் நினைத்து எழுதினேன்என்று மரணத்தைத் துணிச்சலோடு எதிர்கொண்டவர் கலைஞர்.

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கல்லக்குடியில் தண்டவாளத்தில் தலைவைத்து ஆரம்பித்த அவரது போராட்டம்  மரணித்த பிறகும் மெரினா கடற்கரையில் அறிஞர் அண்ணாவின் அருகில் துயில் கொள்ள நடத்திய சட்டப் போராட்டத்துடன் முடிவுற்றது. அவரின் விருப்பப்படி தான் ஏற்றுக்கொண்ட தலைவர் அறிஞர் அண்ணா அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு  அருகிலேயே, துயில் கொண்டிருக்கும் கலைஞர் மறையவில்லை.

மாநில சுயாட்சியின் குரலாய், தமிழ் மொழி உணர்வின் குரலாய், சமூக நீதியின் குரலாய், இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கூறி பட்டிமன்றத்தைத் தொடங்கி வைத்தார்.

தலைப்புகளில் பேசிய

பட்டிமன்ற பேச்சாளர்கள்:

வழக்குரைஞர் பா மணியம்மை

(மாநில மகளிர் பாசறை செயலாளர்)

முத்தமிழறிஞர் கலைஞரின் பெரும் பணிகளில் விஞ்சி நிற்பது தமிழுணர்வே என்ற தலைப்பில் பேசிய வழக்குரைஞர் மணியம்மை,  முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்று மக்களால் சிறப்பாக அழைக்கப்படுவதற்குக் காரணமே கலைஞர் தமிழின் மீது கொண்டிருந்த அந்த பற்று தான் என்பதையும், 14 வயதில் அவர் முதல் முதலாக கையில் ஏந்திய கொடி தமிழ்க் கொடி என்பதையும், பதினைந்து வயதில் இளமைப்பலி என்ற கட்டுரையை எழுதியவர் என்பதையும், செந்தமிழ் சொற்பரப்பியல் அகரமுதலி என்ற மாபெரும் தமிழ் சொற்களஞ்சியத்தை  வெளியிட செய்தவர் கலைஞர் என்றும், தமிழ் மொழிக்கு உயர்தனிச் செம்மொழி என்ற மத்திய அரசின் பெருமையான அறிவிப்புக்குக் காரணம் கலைஞர் என்றும் பல கருத்துக் களை எல்லாம்  முன்வைத்து தன் தலைப்பிற்கு வலு சேர்த்தார்.

அம்பிகா கணேசன்

(திருச்சி மாவட்ட மகளிர் பாசறை தலைவர்)

என்றால் அம்மா, என்றால் ஆடு என்று தமிழில் கற்பதற்குக் கூட உரிமையற்ற சமூகமாக, சமூக நீதி மறுக்கப்பட்ட சமூகமாக இருந்த தமிழர்களின் கல்வியை மிகப் பெரும் அளவிற்கு உயர்த்தியவர் கலைஞர்.

சமூக நீதியின் உச்சம் என்று சொல்லப்படுகின்ற அளவிற்கு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை இயற்றியவர் கலைஞர். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்குக் கல்வி கட்டண விலக்கு போன்ற ஆணைகளைப் பிறப்பித்து, கல்லாமை என்னும் பெரும் புதை சேற்றில்  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அமிழ்த்தி வைக்கப்பட்டிருந்த  தமிழர்களை,  இதோ, தந்தை பெரியாரின் கைத்தடி, இதனைப் பற்றி மேலே வாருங்கள்என்று அவர்களுக்குக் கல்வி கதவுகளைத் திறந்து விட்டவர் கலைஞர் என்று கூறி முத்தமிழறிஞர் கலைஞரின் பெரும்பணிகளில் விஞ்சி நிற்பது சமூகநீதியே என்று தன் வாதத்தை நிறைவு செய்தார்.

பேராசிரியர் பெரியார் செல்வி

Union of States, மாநிலங்கள் இணைந்த ஒன்றிய அரசு என்ற அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்தின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உண்டு. இதனை வலியுறுத்தி முதல்  மாநில சுயாட்சி குரலை எழுப்பிய அறிஞர் அண்ணா அவர்களுக்குப் பிறகு அதனைத் தொடர்ந்து முழங்கி வந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

1971ஆம் ஆண்டில் கலைஞர் முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் தான் ஒன்றிய அரசிற்கும் மாநில அரசிற்கும் ஆன உரிமைகள் அதிகார பரவல்கள் குறித்து ஆராய ராஜமன்னார் கமிட்டி என்ற ஒரு குழு கலைஞர் அவர்களால்  அமைக்கப்பட்டது.

இன்று வரையிலும் மாநில உரிமைகள் குறித்த எந்தவொரு கருத்திற்கும் அடிப்படை ஆதாரமாக விளங்கும் இந்த ராஜமன்னார் குழு அளித்த அறிக்கையின் முக்கியமான பரிந்துரைகள், ‘மாநிலங்களின் தேவைக்கேற்ப சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்படவேண்டும். மாநிலத்தில் ஆளுநரை நியமிக்கும் போது மாநில அரசின் ஒப்புதல் பெற்று நியமிக்க வேண்டும்‘, என்பதையும் முன்வைத்து வலியுறுத்தினார்.

நெருக்கடி நிலை காலத்தின் போது தன்னுடைய ஆட்சியையே விலையாகக் கொடுத்து நெருக்கடி நிலைப் பிரகடனத்தை துணிச்சலாக எதிர்த்து நின்றதற்கும் காரணம் கலைஞர் அவர்களின் மாநில சுயாட்சி உரிமை உணர்வு தான், என்று கூறி கலைஞரின் பெரும்பணிகளில் விஞ்சி நிற்பது மாநில சுயாட்சியே என்று தன் வாதத்தை நிறைவு செய்தார்.

கடலூர் ரமாபிரபா

(கடலூர் மண்டல மகளிரணி செயலாளர்)

முத்தமிழறிஞரின் பெரும் பணிகளில் விஞ்சி நிற்பது தமிழுணர்வே என்ற வாதத்திற்கு வலுவேற்ற கடலூர் ரமா பிரபா தன் உரையில், 1933இல் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் 14 வயது மாணவனாகத் தமிழ் கொடியைக் கையில் ஏந்தி,ஹிந்தியை எதிர்த்து முழக்கமிட்டதையும், 1942இல் துண்டு அறிக்கையாகமுரசொலியை வெளியிட்டது பற்றியும், எடுத்துக் கூறினார்.

தொடர்ந்து ஹிந்தி மொழி என்பது எடுப்புச் சாப்பாடு எனவும் ஆங்கில மொழி என்பது ஒருவர் சொல்லச் சொல்ல நாம் அதற்கேற்ப சமைக்கின்ற உணவு எனவும் ஆனால் தமிழ்மொழி மட்டும் தான் நம்முடைய தாய் ஓர் ஊட்டச்சத்து நிறைந்த உணவைப் பாசத்தோடு தயாரிப்பது போன்றது என்றும், கலைஞர் தமிழ் மொழியைப் பற்றி கூறியதையும் முன்வைத்தார்.  சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைத்து 1330 குறள்பாக்களையும் அங்கே  எழுத்து ஓவியமாக வடித்து வைத்து, திருக்குறளை நாடெங்கும் பரப்பியவர் கலைஞர் என்றும் கூறி தன் வாதத்திற்கு வலு சேர்த்தார் .

தகடூர் தமிழ்ச்செல்வி

(மாநில மகளிரணி செயலாளர்)

முத்தமிழறிஞர் கலைஞரின் பெரும் பணிகளில் விஞ்சி நிற்பது சமூக நீதியே என்ற தலைப்பிற்கு வலுசேர்க்க உரையாற்றிய மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி அவர்கள், தமிழ்நாட்டில் கலைஞர் முதன் முதலாக முதல்வராக  பணியேற்ற 1970 காலகட்டத்தில், தந்தை பெரியாரின் வேண்டுகோளை ஏற்று பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 25 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாகவும், பட்டியல் சமூகத்தினருக்கு இருந்த 16 சதவீதத்தை 18 சதவீதமாகவும், உயர்த்தினார் என்றும், 1989 ஆம் ஆண்டு முதல்வராக பதவியேற்ற பொழுது மலைவாழ் சமூக மக்களுக்கு 1 சதவீத இட ஒதுக்கீடு தனியாக அளித்தார் என்றும், சமூகநீதியின் முகவரியைச் சரியாக அடையாளம் கண்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக வழங்கப்படுகின்ற சமூக நீதிக்கான  தந்தை பெரியார் விருதினை நம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு அளித்த சிறப்பை பற்றியும், மருத்துவர் அய்யா சோம. இளங்கோவன் தலைமையில் இயங்கும் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக வழங்கப்படுகின்ற சமூக நீதிக்கான கி.வீரமணி விருது முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு அளித்த நிகழ்வை எடுத்து வைத்தும் தன்னுடைய தலைப்பிற்கு வலு சேர்த்தார்.

இளவரசி சங்கர் (பெரியாரியலாளர்)

கலைஞரின் பெரும் பணிகளில் விஞ்சி நிற்பது  மாநில சுயாட்சியே என்ற தலைப்பிற்கு வலு சேர்க்க, இளவரசி சங்கர் அவர்கள்,  நாடாளுமன்றத்தில் இரு மொழிக் கொள்கை குறித்து அறிஞர் அண்ணா ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரையை நினைவு கூர்ந்து, அவருடைய வழியில் மாநில சுயாட்சி  உரிமைகளில் தொடர்ந்து அண்ணாவின் குரலாக ஒலித்தவர் கலைஞர் என்று முன்வைத்தார்.

1984 இல் இந்திரா காந்தி அவர்களால் அமைக்கப்பட்ட சர்க்காரியா குழுவிற்கும், மேற்கோளும் வழிமுறைகளும் காட்டுபவை கலைஞர் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட ராஜமன்னார் குழுவே என்பதையும் முன்வைத்தார்.

தொடர்ந்து ஈழப் பிரச்சினையின் போதும் ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளே  வழிகாட்டுதலாக அமைந்தன என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குறிப்பிட்டு உரையாற்றியதையும் நினைவு கூர்ந்து தன்னுடைய அணிக்கு வலு சேர்த்தார்.

பட்டிமன்ற நடுவர் வழக்குரைஞர் அருள்மொழி (பிரச்சார செயலாளர்)

தன்னுடைய ஒன்பது வயதில் பொதுவாழ்க்கைக்கு வந்த தமிழர் தலைவரும், 14 வயதில் பொதுவாழ்க்கைக்கு வந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களும் இணைந்த கரங்களாக இத்தமிழ் நாட்டுக்கு ஆற்றிய புரட்சி வரலாறுகள் ஏராளம்! ஏராளம்!!

தமிழ் மொழிப்பற்று என்று வருகின்ற நேரத்தில் செந் தமிழ் சொற்பரப்பியல் அகரமுதலி என்ற தமிழ் அகராதியை உருவாக்கும் பணியை  திராவிட மொழி ஞாயிறு தேவ நேயப்பாவாணர் அவர்களிடம் ஒப்படைத்தார் கலைஞர்.

திராவிட மொழி ஞாயிறுஎன்ற பட்டம் தேவநேயப்பா வாணர் அவர்களுக்கு தந்தை பெரியாரால் வழங்கப்பட்டது.

தொல்காப்பியப் பூங்கா தொடங்கி தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்குவது வரை தொடர்ந்தது  கலைஞரின் தமிழ் உணர்வுப் பணி!

இந்திய நாட்டின் குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவரும், சுதந்திர தின விழாவில் நாட்டின் பிரதமரும் தேசிய கொடியை ஏற்றி சிறப்பிப்பது போன்று - மாநில சுயாட்சி என்று வருகின்ற போது குடியரசு தின விழா மற்றும் சுதந்திர தின விழா என இரண்டிலும் மாநில ஆளுநரே கொடி ஏற்றுவதைத் தவிர்த்து இவற்றில்  ஏதாவது ஒன்றில் அந்தந்த மாநில முதல்வர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று முழங்கி, தமிழ் நாடு மட்டுமின்றி, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் சுதந்திர தின விழாவில் கொடியேற்றும் உரிமையைப் போராடி பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

மாநிலங்களின் சுயாட்சி உரிமைகளுக்காக மத்திய அரசுகளை எதிர்த்து அவர் நடத்திய போராட்டங்கள் தான்,  இன்றைக்கும் தமிழ்நாடு, குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஒன்றிய அரசை எதிர்த்து மாநிலங்களின் சுயாட்சி உரிமைகளுக்காகப் போராடுவதற்கான அடிப் படைக் காரணம்.

கலைஞரின் சமூகநீதி திட்டங்கள் என்றால் அதற்கு ஒரு மிகப்பெரிய பட்டியலே போடலாம்.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கு பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூபாய் 12000/- என்றிருந்த உச்சவரம்பை ரூபாய் 50000/-மாக உயர்த்தினார் .

முதல் 10 மதிப்பெண்கள் பெறும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு அவர்களின் தொழில் கல்விக்கான செலவு முழுவதையும் அரசே ஏற்கும்.

மூன்றாம் வகுப்பு, அய்ந்தாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை,

போதிய அளவு பட்டியல் சமூக விண்ணப்பதாரர்கள் இல்லை என்றால் அந்த இடங்களை வேறு சமூகத்திற்குக் கொடுத்து விடும்  நடைமுறையை மொத்தமாக மாற்றி அதனைBacklog’ - பின்னடைவு இடங்கள் என்று சொல்லி  Carry forward’ - முன்கொண்டு செல்லுதல் என்ற திட்டத்தைக் கலைஞர் கொண்டு வந்தார்.

சமூகநீதி என்று வருகின்ற நேரத்தில் அன்றைக்கு எதிர்க்கட்சியில் இருந்த மருத்துவர் ஹெச்.வி.ஹண்டே அவர்களின் ஒரு கேள்விக்கு கலைஞர் அளித்த பதில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க உரை - “என்னுடைய உயி ரையே பணயமாக வைத்து மிக, மிக, மிக, என்று எத்தனைமிகவேண்டுமென்றாலும்  போட்டுக் கொள்ளலாம் என்று சொல்லுகின்ற அளவிற்கு மிகப் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்துள்ளேன். பிற்படுத் தப்பட்ட சமூக மக்கள் இதனை நினைத்துப் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்...... அப்படியே அவர்கள் நினைக்க வில்லை என்றாலும் கூட அவர்களுக்காக உழைத்தேன், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமூக நீதி மறுக்கப்பட்ட அந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக  உழைத்தேன் என்ற நிம்மதி என் மனதில் இருக்கிறதுஎன்று கலைஞர் கூறியுள்ளார்.

எனவே கலைஞர் ஆற்றிய பெரும் பணிகளில் சமூகநீதி பணி ஆற்றியதே அவருக்கு நிம்மதியைத் தருகிறது, மகிழ்ச்சியை தருகிறது என்று அவரே சொல்லி இருக்கிற காரணத்தாலும் கலைஞர் அவர்களின் பெரும் பணிகளில் விஞ்சி நிற்பது சமூகநீதியே என்று இறுதியாக தீர்ப்பளித்தார்.

ஒரத்தநாடு இரா.குணசேகரன்

(மாநில அமைப்பாளர்)

கழக மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேக ரன், அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமன், பகுத்தறி வாளர் கழக மாநில துணைத் தலைவர் அண்ணா சரவ ணன், ஓசூர் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கண்மணி, நெய்வேலி வெ.ஞானசேகரன், முனைவர் தா.கு.திவாகரன் ஆகியோர் கருத்துரையாற்றினர். காணொலியின் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பை வேலூர் மாவட்ட தலைவர் சிவ குமார், வேலூர் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் சங்க நிதி  மிகச்சிறப்பாக நடத்தி இந்த காணொலி பட்டிமன்றத்தின் வெற்றிக்கு பெரிதளவும் துணையாய் நின்றார்கள்.

இறுதியாக தருமபுரி மாவட்ட மகளிர் பாசறை தலைவர் .முருகம்மாள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment