பழங்குடி மாணவர்களுக்கு நடமாடும் வாகனம் மூலம் கல்வி கிராமம் வாரியாகக் கற்பிக்க முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 15, 2021

பழங்குடி மாணவர்களுக்கு நடமாடும் வாகனம் மூலம் கல்வி கிராமம் வாரியாகக் கற்பிக்க முடிவு

சென்னை, ஜூலை 15 பழங்குடி மாணவர்களுக்கு நடமாடும் வாகனம் மூலம் கல்வி கற்பிக்கும் திட்டத்தை ஆசிரியர்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பழங்குடியினர் நல இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்துப் பழங்குடியினர் நல இயக்குநர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கும் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

‘’கோவிட்-19 தொற்று காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளிகள் செயல்படாத நிலையில் உள்ளதால் மலை கிராமங்களில் உள்ள பழங்குடியின மாணவ, மாணவிகளின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களின் கல்வி அறிவை மேம்படுத்தும் பொருட்டு நடமாடும் ஊர்திகளைக் கொண்டு, மலை கிராமங்களில் உள்ள பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு தினசரி பாடம் கற்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்தத் திட்டத்தைச் செம்மையாகச் செயல்படுத்த கீழ்க்கண்டவாறு அறிவிக்கப்படுகிறது.

மாவட்டத்திலுள்ள பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களைக் கண்டறிந்து, அந்தக் கிராமங்களில் உள்ள மாணவ மாணவியருக்கு கல்வி கற்க ஏதுவாகச் சிறிய வாகனம் ஒன்றின் மூலமாக பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் நடமாடும் கல்வி கற்பிக்கும் திட்டம் என்ற திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

இதற்கான செலவுத் தொகை மாவட்ட அலுவலர்களிடம் இருந்து பெறப்படும் பட்டியல்களின் அடிப்படையில் வழங்கப்படும்.

பாடம் கற்பிப்பதற்காக ஏற்கெனவே பழங்குடியினர் நலத்துறைப் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்களாகப் பணிபுரிந்த உள்ளூர் ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளப்படுவர்.

இத்திட்டத்தை முறையாகச் செயல்படுத்தும் பொருட்டு, மலை கிராமங்களின் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் அல்லது ஆசிரியர்களைக் கொண்டு, தினசரி கிராமம் வாரியான கால அட்டவணையைத் தயார் செய்து நடைமுறைப்படுத்த சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இத்திட்டம் செயல்படுவது தொடர்பான நிழற்படங்களுடன் கூடிய அறிக்கையை ஒவ்வொரு வாரமும் முதல் மற்றும் இறுதி நாளன்று இயக்குநரகத்திற்கு மாவட்டத் திட்ட அலுவலர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களால் சமர்ப்பிக்கப்பட வேண்டும்‘’.

இவ்வாறு அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment