பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி காணொலி தொடக்கவிழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 27, 2021

பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி காணொலி தொடக்கவிழா

அஞ்சாநெஞ்சன் என்றால் அந்த பெயருக்கு உரித்தானவர் அழகிரியே!

- கழக துணைத் தலைவர் புகழாரம் -

பட்டுக்கோட்டை, ஜூலை 27- பட்டுக்கேட்டை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் *பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி காணொலி தொடக்கவிழா 16.07.2021 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பட்டுக்கோட்டை கழக மாவட்ட தலைவர் அத்திவெட்டி பெ.வீரையன் தலைமை வகித்து உரை யாற்றினார். மாநில ..தலைவர் மா.அழகிரிசாமி, தஞ்சை மண்டல தலைவர் மு.அய்யனார், மண்டல செயலாளர் .குருசாமி, மாநில .. துணைத் தலைவர் கோபு.பழனிவேல், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்  இரா.வெற்றிக் குமார், மாநில மாணவர் கழக அமைப்பாளர்  இரா.செந்தூர பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்  அரு. நல்லத்தம்பி, மாவட்டத் துணை தலைவர்  சா.சின்னக்கண்ணு, ஒன்றிய தலைவர்  ரெ.வீரமணி, ஒன்றிய செயலாளர்  ஏனாதி ரெங்க சாமி ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர். பொதுக் குழு உறுப்பினர்  இரா.நீலகண்டன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

பட்டுக்கோட்டை கழக மாவட்ட செயலாளர்  வை.சிதம்பரம், திராவிடர் கழக பொதுச்செயலாளர்  தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர்  இரா.குணசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கலந்துகொண்டு பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி யின் வாழ்க்கை வரலாற்றை படம்பிடித்து காட்டுவது போல் பின்வருமாறு சிறப்புரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

அஞ்சாநெஞ்சன் என்று சொன்னால் அது ஒருவரை மட்டும் தான் குறிக்கும்

காணொலியை தொடங்கும் போது எல்லோரும் ஆர்வ மாக தொடங்குவார்கள். அதைத் தொடர்ந்து செயல்படுத்து வதில் தான் நம்முடைய வெற்றியும் உண்மையும் இருக்கிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அஞ்சாநெஞ்சன் பெயரிலே தொடங்கப்பட்டு இருக்கின்ற காணொலி தொடக்கவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று ஊக்கப்படுத்திப் கொண்டிருக்கக்கூடிய கழகத் தோழர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.

அஞ்சாநெஞ்சன் என்று சொன்னால் அது ஒருவரை மட்டும் தான் குறிக்கும். அது பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் தான் என்று எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.

இயக்க வரலாற்றில் பட்டுக்கோட்டைக்கு என்று அத்தி யாயம், கோட்பாடு இருக்கிறது. உங்களுக்கு சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். தந்தை பெரியார் 1925 நவம்பரில் காங்கிரசை விட்டு வெளியேறுகிறார், அதற்கு 6 மாதத்திற்கு முன்பே காங்கிரசில் இருந்தபோதேகுடிஅரசுஇதழில் சுய மரியாதை பிரச்சாரத்தை தொடங்குகிறார். நாம் எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோம்? காங்கிரசை விட்டு வெளியேறிய பிறகுதான் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார் என்று சொல்கிறோம். அப்படி ஒரு பெயரை தந்தை பெரியார் அறிவித்ததாக தெரியவில்லை. ஆனால் அவர் வாழ்நாள் முழுவதும் சுயமரியாதை பற்றி பேசினார், காங்கிரஸை விட்டு சுயமரியாதையோடு வெளியேறினார்,  குடிஅரசில் சுயமரியாதை பற்றி அதிகமாக எழுதினார் என்ற காரணங்களினால் சுயமரியாதை இயக்கம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.

பட்டுக்கோட்டையில் சுய மரியாதை சங்கம்

உண்மையை சொல்லப்போனால் சுயமரியாதை சங்கம் என்ற ஒன்று முதன் முதலில் தொடங்கப்பட்டது பட்டுக்கோட் டையில் தான், அதற்காக பட்டுக்கோட்டை தோழர்கள் மகிழ்ச்சி அடையலாம். அந்த வகையிலே பட்டுக்கோட்டைக்கு என்று ஒரு தனி வரலாறு இருப்பதை இந்த நேரத்தில் இங்கே பதிவு செய்கிறேன். 1921 செங்கல்பட்டு பிப்ரவரியில் முதல் சுயமரியாதை மாநில மாநாடு என்று சொல்லப்படுகிறது. பட்டுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் மாநாடுகள் மிகவும் புகழ் வாய்ந்தவை - மறக்க முடியாதவை, இயக்கத் திற்கு மிகப்பெரிய பாசறை வீரர்களை உருவாக்கிய ஊர்தான் பட்டுக்கோட்டை. அது கழக கோட்டையாகவே என்றைக்கும் இருந்திருக்கிறது.

தமிழில் பாட வைத்த பட்டுக்கோட்டை

அந்த பட்டுக்கோட்டையிலிருந்து வளர்ந்த அய்யாமாஸ்டர்என்று எங்களால் அன்போடு அழைக்கப்படக்கூடிய விசுவநாதன். மிகவும் நல்ல நண்பர். பட்டுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. அங்கே மாரியம்மன் கோவில் ஒன்று இருக்கிறது அதில் நடைபெற்ற திருவிழாவில் மகாராஜபுரம் விசுவநாதய்யர் சமஸ்கிருதம், தெலுங்கு கீர்த்தனைகளில் பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார், உடனே பட்டுக்கோட்டையில் இருந்த சுயமரியாதை வீரர் மாப்பிள்ளையன் என்பவர் எழுந்து தமிழில் பாடு என குரல் கொடுக்கிறார். மறுபடியும் அவர் தெலுங்கு சமஸ்கிருத மொழிகளில் பாடுகிறார். மறுபடியும் சொல்லுகிறேன் தமிழில்பாடு என்கிறார், எனக்கு தமிழ் பாட வராது என்கிறார் விசுவநாதய்யர், தமிழில் பாடவில்லை என்றால் இந்தக் கச்சேரியை நடக்க விடமாட்டோம் என்றார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி இருக்கும் இடத்திலே இந்த சுயமரியாதை வீரர்கள் உரத்த குரலில் தமிழில் பாடு என்று குரல் கொடுக்கிறார்கள். அப்போது காங்கிரசில் மிகவும் செல்வாக்கு உள்ளவர் நாடிமுத்து பிள்ளை அவர் சொல்லுகிறார் - மாப்பிள்ளையனை தூக்கி வெளியில் போடு என்கிறார். அதற்கு மாப்பிள்ளையன் என்னை தொட்டுப்பார் கொலை விழும் என்று கூறுகிறார். வேறு வழியில்லாமல் எனக்கு தமிழில் பாட வராது என்று- தமிழ் தெரியாது என்று சொன்ன விசுவநாதய்யர் தமிழில் பாடுகிறார். இதைப் பற்றி ஒரு பார்ப்பனர் தந்தை பெரியாருக்கு கடிதம் எழுதுகிறார். நீங்கள் கொஞ்ச நாளுக்கு முன்னாடி பட்டுக்கோட்டையில் வந்து பேசினீர்கள். அதற்கு அப்புறம் உங்களுடைய கட்சித்தொண்டர்கள் எங்களை படாத பாடு படுத்துகின்றனர், பார்ப்பனர்கள் இங்கு வாழ முடியுமா என்ற கேள்வி எழுந் திருக்கிறது. ஆகவே, அண்ணாதுரை போன்றவர்களை அனுப்பிவைத்து ஒரு சமாதான ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதுகிறார்கள். உடனே மாப்பிள் ளையனும் பட்டுக்கோட்டை இராமாமிர்தமும் நடந்த நிகழ்ச்சியை குறித்து அய்யாவிற்கு கடிதம் எழுதுகிறார்கள். அய்யா தயவு செய்து அன்பழகனையோ மதியழகனையோ அல்லது நெடுஞ்செழியனையோ யாராவது ஒரு பேச்சாளரை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என கடிதம் எழுதுகிறார்கள். இதெல்லாம் பழைய குடிஅரசில் பதிவாகியிருக்கிறது.

பட்டுக்கோட்டையில் நடைபெற்ற அதிசய செயல்

பட்டுக்கோட்டையில் 1929 இல் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது மாநாட்டுக்கு தலைவர் சேர்வை என்ற ராமச்சந்திரன். குமரன் பத்திரிகை ஆசிரியர் சோ.முருகப்பா Ôஇந்து மதம்Õ என்கிற தலைப்பில் இரண்டு மணி நேரம் பேசியிருக்கிறார். அந்த மாநாடு முடிவதற்குள் நிறையபேர் பட்டை போட்டவன் பட்டையை அழித்துவிடுகிறான், நாமம் போட்டவன் நாமத்தை அழிக்கிறான், ருத்ராட்சம் போட்டவன் ருத்ராட்சத்தை தூக்கி எறிகிறான், இதெல்லாம் பட்டுக் கோட்டையில் நடைபெற்ற அதிசயச் செயல் போன்றது.  பட்டுக்கோட்டை அழகிரிக்கு குரு யாரென்றால் மாரியம்மன் கோவில் பூசாரி, அப்படியென்றால் சுயமரியாதைக்காரர்கள் அந்தக் காலத்தில் எப்படி எல்லாம் இருந்திருக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அழகிரி அவர்கள் தொடக்கத்தில் உச்சிக்குடுமி, நாமம், கதர் வேட்டி, சட்டை, கையில் தப்பிலி இப்படி இருந்தவர்தான் பட்டுக் கோட்டை அழகிரி. பட்டுக்கோட்டையில் ஒரு மாநாடு நடை பெற்றது, அந்த மாநாட்டு முடிவில் மாயவரம் நடராஜன், நாகை மணி இரண்டு பேருடன் அன்றைக்கு மாணவராக இருந்த பட்டுக்கோட்டை அழகிரி தந்தை பெரியாரோடு கிளம்பிவிடுகிறார்.

தந்தை பெரியாரின் கூற்று

அய்யா அவர்கள் பட்டுக்கோட்டை அழகிரி இறந்த நேரத்தில் என்ன சொல்லுகிறார் என்றால் நண்பர் அழகிரிசாமி முடிவு எழுதியது பற்றி நான் மிகவும் துக்கப்படுகிறேன்.

அழகிரிசாமி எனக்கு முப்பது ஆண்டு நண்பரும், என்னை மனப்பூர்வமாக எந்த நிபந்தனையும் இன்றி பின்பற்றி வருகிற கூட்டுப் பணியாளரும் ஆவார். இந்த 30 ஆண்டு காலத்தில் எனது கொள்கையிலும் திட்டத்திலும் எவ்வித ஆலோசனைகளையும் தயக்கம் கொள்ளாமல் நம்பிக்கை வைத்து அவைகளுக்காக தொண்டாற்றி வந்தவர், என் லட்சியத்திற்கு மறந்தும் புறங்கூறாமை இருந்தது மட்டுமல்லாமல், புறங்கூறுபவர்கள் யாராக இருந்தாலும் ஒழிவு மறைவில்லாமல் கண்டிப்பார்.

விடுதலையில் நான் வெளியிடும் கொள்கைகளையும் திட்டங்களையும் சிறிதும் யோசனையின்றி ஒப்புக்கொண்டு அவைகளை எப்படிப்பட்ட அறிவாளிகள், பிரதிவாதிகள் கூட்டத்திலும் மெய்ப்பித்து வெற்றி காண்பார். கொள்கை வேற்றுமை திட்ட வேற்றுமை என்பது எனக்கும் அவருக்கும் ஒரு நாளும் காணமுடிந்தது இல்லை.

அவருடைய முழு வயதிலும் அவர் இயக்கத்தைத் தவிர வேறு எவ்வித தொண்டிலும் ஈடுபட்டதில்லை. அவருக்கு போதிய பணம் இல்லை. பல காரணங்களால் பொருளாதார நெருக்கடி அடிக்கடி ஏற்படுவது இயற்கையாக இருந்து வந்தாலும், ஒரு சமயத்திலும் விளையாட்டுக்கு கூட கொள்கையில் எந்த நிலையிலும் மாறியிருக்கமாட்டார்.

சமீபகாலமாக அவருக்கு உடல்நிலை வசதி இல்லாததால் அவர் சரிவர இருக்க இயலாது பல அசைவிற்கும் ஆளாகி இருந்தாலும் அழகிரிசாமி இயக்கத்தில் பாமர மக்களிடையே இளைஞர்களிடையே மனத்தைக் கவர்ந்தவரும் அவர் என்று சொல்லவேண்டும். அப்படிப்பட்ட ஒருவர் உண்மையான வீரமும், தீரமும் உள்ளவர் இச்சமயத்தில் முடிந்துவிட்டது என்பது எனக்கு மிகவும் வருத்தத்தை கொடுப்பதோடு, இயக்கத்திற்கு காண முடியாத பெரும் துயர் என்று சொல்லுவேன் என்று அய்யா அவர்கள் சொல்லுகிறார்.

தீவிரமான இயக்க நம்பிக்கைக்காரர் அஞ்சாநெஞ்சன் அழகிரி

1932இல் அய்யா அய்ரோப்பா சுற்றுப் பயணம் சென்றி ருந்தார். அப்போது ஒரு மாநாடு சென்னையில் நடைபெற்றது, முதல் நாள் சுயமரியாதை மாநாடு இரண்டாவது நாள் பெண்கள் மாநாடு. இந்த பெண்கள் மாநாட்டில் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார்கள், அந்த மாநாட்டில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் கலந்து கொள்கிறார்.

கல்கத்தாவில் ஒரு பெண் நீதிபதியை சுட்டுக் கொன்று விடுகிறார்கள், இந்த வன்முறையை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. சிங்காரவேலர் அந்த தீர்மானத்தை எதிர்த்து பேசி விடுகிறார். அதனால் ஒரு குழப்பம் வந்துவிடுகிறது. பட்டுக்கோட்டை அழகிரி சிங்காரவேலர் சொன்ன கருத்தை எதிர்த்து பேசுகிறார் கடுமையாக, அவர் பேசின பிறகு மக்களும் ஆதரவு காட்டுகிறார்கள். தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இதில் சிங்காரவேலருக்கு மிகவும் வருத்தம். மாலை நேரத்தில் சிங்காரவேலர் அழகிரியை தனியாக பார்க்கிறார். அப்பவும் வருத்தப்படுகிறார். உங்களுடைய கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு, ஆனால் ஏன் அப்படி பேச வேண்டிய நிலைக்கு ஆளானேன் என்றால் இயக்கத்தினுடைய தலைவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். அந்த நேரத்தில் அவருடைய இயக்க மாநாட்டில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது என்றால் அந்த இயக்கத் தினுடைய நிலை என்ன ஆகும் என்று நினைத்துப் பார்க்கவேண்டும். கட்டுப்பாடு குறையுமா குறையாதா என்று நினைத்து பார்க்க வேண்டும். அதுவும் தலைவர் இல்லாத நிலையில் அதுபோன்ற நிலை இயக்கத்திற்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு உடன்பாடு இல்லை என்றாலும் ஒரு கருத்து வேற்றுமை வந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த தீர்மானத்தை ஆதரித்தும் உங்களுடைய கருத்தை எதிர்த்தும் பேசினேன் என்று அழகிரி கூறுகிறார்.

நினைத்துப் பாருங்கள் தோழர்களே இயக்கத்தில் இந்த கட்டுப்பாடு கட்டுப்பாடு என்று அய்யா காலத்திலிருந்து நம்முடைய தலைவர்கள் இன்று வரை சொல்லுகிறோம் என்றால் அஞ்சாநெஞ்சன் அழகிரியை விட தீவிரமான இயக்க நம்பிக்கை உள்ள உள்ள ஒருவரை பார்க்க முடியாது. அவருக்கு அடிப்படையில் இயக்கத்தின் உடைய கட்டுப்பாடு தலைவர் என்ன சொல்லுகிறார் - அதுதான் முக்கியம் கட்சியில் ஒரு பிளவு ஏற்பட்டு இருந்தபோதுகூடதலைவன் ஆகாதே தம்பி என்றுதான் எழுதி இருக்கிறார்.

தன்மான கொள்கையில் பின் வாங்காத அஞ்சா நெஞ்சன்

தந்தை பெரியாரை பொதுக்கூட்டத்திலும் மாநாட்டிலும் தோழர் .வெ.ராமசாமி அவர்களே என்று சொல்லக்கூடிய ஒரே ஒருவர் அஞ்சாநெஞ்சன் அழகிரி ஒருவர்தான். பெரியார் வருத்தமாக எடுத்துக்கொள்ளவில்லை என்னுடைய பெயரைத் தானே கூறுகிறார் என்று அய்யா சொல்லியிருக் கிறார். மேடையில் பொப்பிலி ராஜா இருந்தாலும் சரி பனகல் அரசராக இருந்தாலும், அண்ணாமலை செட்டியாராக இருந்தாலும் சமமாகத்தான் அமர்வார். பொருளாதாரத்தில் தள்ளாடினாலும் தன்மான கொள்கையில் கொஞ்சம்கூட பின் வாங்கியதில்லை என்பதை இந்த நேரத்திலே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

அழகிரிக்கே உரித்தான தனித்தன்மை

இந்தி எதிர்ப்புப் போராட்டம் -1937 இல் திருச்சியில் இருந்து ஒரு பெரும்படை நடைப்பயணமாக சென்னைக்கு புறப்பட்டது.

தஞ்சை குமாரசாமி பிள்ளை அதற்கு தலைவர் அதற்கு படைத்தளபதி பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி, நடந்தே செல்ல வேண்டும் வழி நெடுக பிரச்சாரம். இரண்டு மாதம் நடந்தே சென்றார்கள். இடையிடையே பொதுக்கூட்டம் அந்த காலத்தில் காங்கிரஸ்காரர்கள் தான் கடுமையான எதிர்ப்புக் குரல் கொடுத்தவர்கள்.

அப்படி அந்த வழி நடைப்பயணம் போய்க் கொண் டிருக்கும்போது ஓரிடத்தில் கழுதையை கூட்டத்திற்குள் விரட்டிவிடுகிறார்கள், அழகிரி அந்த கழுதையை பிடித்து மேடைக்கு அருகிலேயே கட்டச் சொல்லுகிறார், அடுத்து பேச ஆரம்பித்தவர் ஒவ்வொரு கருத்தாக சொல்லிவிட்டு கேளு கதையே கேளு, அட காங்கிரஸ் கதையை கேளு இப்படி ஒவ்வொரு செய்தியும் கழுதைக்கு சொல்லுவது போல் திராவிடனுடைய மொழி உணர்ச்சியை இனமான உணர்ச் சியை மீட்டெடுக்க கேளு கேளு கேளு இப்படி பேசுகிறார்.

அவரின் சமயோஜித புத்தியை பாருங்கள் - வியூகத்தை வகுப்பது, விதியை வகுப்பது, சூழ்நிலைக்கேற்ப தன்னுடைய கருத்து பிரச்சாரத்தை செய்வது போன்றவை அவருக்கே உரித்தான தனித்தன்மை என்று சொல்வார்கள்.

அஞ்சாநெஞ்சன் அழகிரி என்றால் அந்த பேருக்கு உரித்தானவர்

ஒருமுறை மன்னார்குடியில் பொதுக்கூட்டம் நடக்கிறது வழக்கமாக இன எதிரிகள் கல்லெறிந்தார்கள். சொல்லி சொல்லிப் பார்த்தார் கேட்கவில்லை, ஓஹோ! நான் எல்லா ஊருக்கும் போய் இருக்கேன், ஆனால் எங்கேயும் இல்லாத ஒரு பழக்கம் இந்த ஊரில் நடக்கிறது.

அது மேடையில் பேசும்போது கல்லை விட்டெறிவது என்பதை இப்பதான் நான் தெரிந்துகொண்டேன் என்று சொல்லிவிட்டு, கீழே இறங்கி அவர் கொஞ்சம் கல்லை எடுத்துக்கொண்டு இந்த ஊர் பழக்கத்தை இப்போது கற்றுக்கொண்டேன் அதனால் செய்கிறேன் என்று சொல்லி, மேடையேறி பேசிக்கொண்டே கூட்டத்தை பார்த்து கல்லை விட்டு எறிந்தார், அஞ்சாநெஞ்சன் அழகிரி என்றால் அந்த பேருக்கு உரித்தானவர்.

ஒருமுறை கானாடுகாத்தான் காரைக்குடி பக்கத்தில் இருக்கிற அங்கே மைசூர் சண்முகம் என்ற சுயமரியாதைக்காரர் ஒருவர் இருந்தார், அவர் சேரன்மாதேவியில் ஆரம்பத்தில் நிலமெல்லாம் கொடுத்தவர், பிறகு எதிர்த்தவர். அங்கே அய்யா இருக்கிறார், அழகிரி இருக்கிறார், டாக்டர் வரத ராஜூலு நாயுடு இருக்கிறார், அழகிரி எப்போதும் ஒரு இசைப்பிரியர். அப்போது அந்த ஊரில் மதுரை சிவக்கொழுந்து என்ற பிரபலமான நாதஸ்வர வித்துவான் கச்சேரி நடக்கிறது. அந்த கச்சேரிக்கு அழகிரி செல்கிறார் அந்த நாதஸ்வர வித்துவான் துண்டை தோளில் அணிந்து இருக்கிறார்.

அப்படி நாதஸ்வரம் வாசித்துக் கொண்டு வரும்பொழுது தோளில் கிடக்கும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டு என அங்குள்ள நாட்டுக்கோட்டையார்கள் கூறுகிறார்கள், வேர்வையை துடைப்பதற்காக ஒரு துண்டு அணிந்து இருக்கிறேன் என்று கூறியும் அதை நீக்க வேண்டும் என கூச்சல் போடுகிறார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த பட்டுக்கோட்டை அழகிரிசாமி சிவக்கொழுந்து துண்டை எடுக்காதே என்று ஒரே ஆளாக குரல் கொடுத்தார். உடனே அங்கு சலசலப்பு ஏற்படுகிறது, பிறகு தோளில் துண்டோடு வாசிப்பதற்கு சமாதானமானார்கள். இப்படி செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த எடுத்துக்கொண்ட வியூகம், கொள்கையிலும் இருக்கும். இவற்றையெல்லாம் இன்றைக்கு இருக்கக்கூடிய இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

எளிமைக்கு உதாரணம் அழகிரிசாமி

பொதுக்கூட்டம் என்றால் அந்தக் காலத்தில் சுவரொட்டி விளம்பரம் ஒலிப்பெருக்கி எல்லாம் கிடையாது. திடீரென்று ஒரு நாள் ஒருவர் தன் தோளிலே அந்த தண்டோராவை, மாட்டிக்கொண்டு ஊரில் இன்று மாலை ஆறு மணிக்கு பட்டுக்கோட்டை அழகிரிசாமி உரையாற்றுகிறார் என்று சொல்லிக்கொண்டே தெருவில் நடந்து செல்கிறார். அன்று மாலை 6 மணிக்கு மேடையில் ஒருவர் பேசுகிறார், அவர் யாரென்றால் காலையில் தண்டோரா போட்ட அதே நபர்தான் - அழகிரிசாமிதான் பேசுகிறார். இப்படி எங்கு சென்றாலும் மிக எளிமையாக இருப்பவர் தான் அழகிரிசாமி. தான் சிறப்புரையாற்றும் பொதுக்கூட்ட நிகழ்வை காலையில் தானே விளம்பரப்படுத்தி மாலையில் பேசுகிறார் என்றால் அவருடைய கொள்கை உணர்வை எண்ணிப்பார்க்க வேண்டும்.

இன்றைக்கு நாம் எவ்வளவு வசதியோடு இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் நம்முடைய இயக்கத் தோழர்கள், நம்முடைய இயக்க முன்னோடிகள், நம்முடைய இயக்க தளபதிகள் எந்த அளவிற்கு மிகவும் சிரமப்பட்டு இயக்க உணர்வோடு மான அவமானம் பார்க்காமல் நடந்து கொண்டார்கள் என்பதற்கு பட்டுக்கோட்டை அழகிரி எடுத்துக்காட்டு என்பதை இந்த நேரத்திலே இயக்கக் பொறுப்பாளர்களும் குறிப்பாக இளை ஞர்களும் தெரிந்துகொள்ளவேண்டும்.

அழகிரிசாமியின் இறுதிப் பேச்சு

இறுதியாக அவர் டிபி நோய் வந்து உடல் நோய்வாய்ப்பட்டிருந்த போது 1948-இல் ஈரோட்டிலே ஒரு தனி மாநாடு திராவிட கழக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அழகிரி பேசுகிறார். அனேகமாக நான் உங்களை சந்தித்து உரையாடுவது இதுதான் கடைசி என்று நினைக் கிறேன், என்னுடைய தலைவனைப் பார்த்து, என்னுடைய வணக்கத்தையும் மரியாதையையும் தெரிவித்து, என்னுடைய தோழர்களைப் பார்த்து என்னுடைய வணக்கத்தை தெரிவித்து, பிரியாவிடை பெறுவதற்காக இந்த மாநாட்டில் நான் கலந்து கொண்டிருக்கிறேன் என்று அவர் சொன்னபோது மாநாட்டு திடலில் கூடியிருந்த அத்தனை மக்களும் அழுது இருக்கிறார்கள். நீங்கள் இறக்கமாட்டீர்கள் என்று குரல் கொடுத்திருக்கிறார்கள். அப்படியெல்லாம் சொல்லாதீர்கள், நான் பகுத்தறிவுவாதி எனக்கு தெரியும் என்ன நடக்கப் போகிறது என்பது - என்று பேசியுள்ளார். இப்படியெல்லாம் இருக்கும் ஒரு இயக்கத்தை, அதன் தொண்டனை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் இயக்கத்திற்கு பேச்சாளர்கள் கிடையாது. ஒன்று தந்தை பெரியார், இன்னொருத்தர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தான், பின்னாளில் தான் அண்ணா அவர்கள், அண்ணாவைப் போன்றவர்கள் எல்லாம் வந்து சேருகிறார்கள்.

இறுதி வரை எனக்குத் தலைவன் தந்தை பெரியார் தான் என்ற உறுதிப்பாட்டோடு இருந்து மறைந்தவர் அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்கள், அவருடைய பெயரிலேயே இன்றைக்கு இந்த காணொலி ஆரம்பிக்கப்படுகிறது. அது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை என்றால் பட்டுக்கோட்டை அழகிரி காணொலி என்ற முத்திரை பதிக்க வேண்டும். இவ்வாறு கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரையாற்றினார்.

இறுதியாக பட்டுக் கோட்டை கழக மாவட்ட அமைப்பாளர்  சோம.நீலகண்டன் அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகூறினார். இந்நிகழ்வில் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், பொதுமக்கள் என 60-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தொகுப்பு:  நூலகர் நெல்லுப்பட்டு வே.இராஜவேல்,  தஞ்சை


No comments:

Post a Comment