பாராட்டத்தக்க மூன்று நியமனங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 30, 2021

பாராட்டத்தக்க மூன்று நியமனங்கள்!

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் அவர்களை, முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் நியமித்திருப்பது மிகவும் சிறப்பான முடிவு, வரவேற்கத்தக்கதாகும்!

நண்பர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் முற்போக்குச் சிந்தனையாளர்; காங்கிரஸ் பேரியக்கத்தில் பல ஆண்டுகாலமாக பணியாற்றிவரும் இவர், சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றில் சிறந்த அனுபவம் பெற்ற, வாதத் திறமையும், ஆளுமையும் நிறைந்த நாடாளுமன்றவாதியாவார். சட்டம் பயின்ற வழக்குரைஞருமாவார்.

அதுபோலவே, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவராக நண்பர் பொன்.குமார் அவர்களை நியமனம் செய்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள்.

அப்பதவிக்கு மிகவும் பொருத்தமானவர், தகுதி வாய்ந்தவர் நண்பர் பொன்.குமார் அவர்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். கட்டுமானத் தொழிலாளர் நலனுக்குப் பல ஆண்டுகளாகப் போராடி, தற்காத்து வருபவர். இந்நியமனமும் பாராட்டத்தக்கதாகும்.

தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் - ஒழுங்கு துறை டி.ஜி.பி.யாக திரு.சைலேந்திரபாபு அய்.பி.எஸ். அவர்களை முதலமைச்சர் தேர்வு செய்து நியமித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகும்!

திரு.சைலேந்திரபாபு அவர்கள் சிறந்த கடமை வீரர் - முனைவர் பட்டம், மேலாண்மை மேற்பட்டம் (எம்.பி..,) போன்றவற்றைப் பெற்ற சமூக நலக் கண்ணோட்டம் மிக்கவர். பல்வேறு குற்றவாளிகளைப் பிடித்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் கடமையை மிகுந்த பொறுப்புணர்ச்சி யோடு செய்து, பலராலும் பாராட்டப்பட்டவர். நேர்மையான அதிகாரி.

கடலோரக் காவல் படைத் தலைமை, தீயணைப்புத் துறை ஆகிய துறைகளில் பணியாற்றியவர். ஏற்ற பொறுப்புகளை நேர்மையுடனும், ஆற்றல் குன்றாமல் மனிதநேயத்துடனும் செய்தவர் - தமிழர் என்பது பெருமைப்பட வேண்டிய ஒன்று.

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து - இவரைப் போன்றவரைப் தமிழ்நாடு காவல்துறை தலைவராக (சட்டம் - ஒழுங்கு பிரிவு) நியமனம் செய்துள்ள முதலமைச்சருக்கு நமது நன்றி!

பொறுப்பேற்பவர்களுக்கு நமது இதயங்கனிந்த வாழ்த்துகள்!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

30.6.2021

No comments:

Post a Comment