போலிச்சான்றிதழ் கொடுத்த வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அபராதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 11, 2021

போலிச்சான்றிதழ் கொடுத்த வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அபராதம்

 மும்பை, ஜூன் 11- மக்களவைத் தேர்தலில் தனித் தொகுதியில் போட்டியிட வேட்புமனுவில் போலி ஜாதி சான்றிதழ் கொடுத்த வழக்கில் தெலுங்கு நடிகையும், சுயேச்சை எம்.பி.,யுமான நவ்னீத் கவுர் ராணாவுக்கு, மும்பை உயர்நீதிமன்றம் 2 லட்சம் ரூபாய் தண்டம் விதித்தது.

2019 மக்களவைத் தேர்தலில் அமராவதி லோக்சபா தனித் தொகுதியில் சுயேச்சை எம்.பி.,யாக போட்டி யிட்டு வெற்றி பெற்று மக்களவை எம்.பி. ஆனார்.

இந்நிலையில்,தோல்வியுற்ற சிவசேனா கட்சி வேட்பாளர் ஆனந்த ராவ் , மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நவ்னீத் கவுர் ராணா தன்னை தாழ்த்தப்பட்டவர் என போலியான ஜாதி சான்றிதழ் கொடுத்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்று வழக்கு தொடர்ந்தார் .

இதில், நவ்னீத் கவுர் ராணாவின் ஜாதிச் சான்றிதழை ஆய்வு செய்ததில், அது போலியானது என நிரூபண மானது. இதையடுத்து அவரது ஜாதிச் சான்றிதழை ரத்து செய்த உயர்நீதிமன்றம், 2 லட்சம் ரூபாய் தண்டம்  விதித்தும், ஆறு வாரங்களுக்குள் நவ்னீத் கவுர் ராணாவின் அனைத்து ஆவணங்களையும், நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. பிரபல தெலுங்கு நடிகை நவ்னீத் கவுர் ராணா, 35, தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 16,813 பேருக்கு கரோனா:  358 பேர் உயிரிழப்பு 

சென்னை, ஜூன் 11 தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 16,813 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 358 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நேற்றைய (10.6.2021) கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்ப தாவது:-

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1 லட்சத்து 71 ஆயிரத்து 237 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 9,278 ஆண்கள், 7,535 பெண்கள் என மொத்தம் 16 ஆயிரத்து 813 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 2 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 682 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 2,529 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

358 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக கோவையில் 2,236 பேரும், சென்னையில் 1,223 பேரும், ஈரோட்டில் 1,390 பேரும், திருப்பூரில் 837 பேரும், சேலத்தில் 945 பேரும், குறைந்தபட்சமாக சிவகங்கையில் 102 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 86 லட்சத்து 90 ஆயிரத்து 398 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 13 லட்சத்து 53 ஆயிரத்து 435 ஆண்களும், 9 லட்சத்து 55 ஆயிரத்து 365 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் உள்பட 23 லட்சத்து 8 ஆயிரத்து 838 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் 12 வயதுக்கு உட்பட்ட 83 ஆயிரத்து 318 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 31 ஆயிரத்து 389 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். கரோனாவுக்கு அரசு மருத்துவமனைகளில் 223 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 135 பேரும் என 358 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 79 பேர் இணை நோய் அல்லாத வர்கள் ஆவர். அந்தவகையில் தமிழ்நாட்டில் இதுவரை 28 ஆயிரத்து 528 பேர் கரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கரோனா பாதிப்பில் இருந்து நேற்று 32,049 பேர் டிஸ்சார்ஜ்செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 20 லட்சத்து 91 ஆயிரத்து 646 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 664 பேர் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment