'விடுதலை'யின் 87ஆம் ஆண்டு - காணொலியில் கருத்து வீச்சு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 2, 2021

'விடுதலை'யின் 87ஆம் ஆண்டு - காணொலியில் கருத்து வீச்சு!

கவிஞர் கலி. பூங்குன்றன்

"இலட்சங்களுக்காக அல்ல - இலட்சியத்திற்காக உழைக்கும் ஏடு விடுதலை"

'விடுதலை'யின் 87ஆம் ஆண்டு பிறந்த நாளான நேற்று (1.6.1935) காணொலி மூலம் ஒரு சிறப்பான கருத்தரங்கம் 'விடுதலை'  ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமை யில்  நடைபெற்றது.

59 ஆண்டு காலம் 'விடுதலை'யின் ஆசிரியராக - விடுதலையையே தன் மூச்சும் பேச்சுமாகக் கொண்ட ஆசிரியர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து  நிறைவுரை புகன்றார்.

'விடுதலை' என்பது இதயம் போன்றது. மற்ற உறுப்புகள் பழுதுபட்டாலும் ஓய்வு எடுத்தாலும் இதயத்திற்கு மட்டும் ஓய்வு எடுக்க முடியாது. ஓய்வு எடுத்தால் ஓய்ந்தது கதை. அதே போல மூளை என்பதும் சதா இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதே வேலையைத் தான் 'விடுதலை' செய்து கொண்டிருக்கிறது.

அரசியலில் தோல்வி கண்டாலும் நம் இன எதிரிகள் சும்மா இருக்க மாட்டார்கள். தலை தூக்கி கொண்டுதான் இருப்பார்கள். அதிகார பலம், பண பலம், ஊடகப் பலம் இவை அவர்களிடம் குவிந்து கிடப்பதால் தலை தூக்கத்தான் பார்ப்பார்கள்.

மரம் சும்மா இருந்தாலும் காற்று சும்மா இருக்க விடாது என்பதுபோல, நம்மை சும்மா இருக்க விட மாட்டார்கள்.

எனவே  'விடுதலை'க்கு வேலை இருந்து கொண்டு தான் இருக்கும். 'ஜனசக்தி'யானாலும் 'தீக்கதிர்' ஆனாலும் 'நக்கீரன்' ஆனாலும், 'முரசொலி'யானாலும் நாம் இணைந்து கரம் கோத்து இந்தப் புள்ளியில் நின்று முறியடிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்ற முக்கிய கருத் தைப் பதிவு செய்தார் 'விடுதலை' ஆசிரியர்.

வருமான வரித்துறையினர்கூட 'விடு தலை'யை நிறுத்த முடியுமா என்று யோசியுங்கள் என்று சொன்னதை ஆசிரியர் நினைவுபடுத் தினார். நெருக்கடி நிலை காலத்தில் தணிக்கை என்ற பெயரில் 'விடுதலை'க்கு எந்த அளவு தொல்லை கொடுத்தனர் என்று குறிப்பிட்ட ஆசிரியர், நம் எதிரிகளின் கண்களை, கருத்து களை உறுத்துவது எது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் விஞ்ஞான சிந்தனையுடையவர்கள். இந்தக் கரோனா காலத்தில் இந்தச் சூழ் நிலையை வென்று நம் கருத்துகளை மக்களி டத்தில் கொண்டு சேர்க்கும் முறையில் காணொலி மூலம் கருத்துகளைப் பரப்பிக் கொண்டுள்ளோம். 'விடுதலை'யை இணையத் தின் மூலம் பரப்பிக் கொண்டு இருக்கிறோம்.

'விடுதலை'க் குழுமத்தைச் சேர்ந்த தோழர் களும் களப்பணிகளில் இருக்கும் தோழர்களும், கிட்டதட்ட மூன்று இலட்சம் வாசகர்களிடம் 'விடுதலை'யைக் கொண்டு செல்லுவது பாராட் டுக்குரியது என்று கூறிப் பெருமிதப்பட்டார் தமிழர் தலைவர்.

தீமையிலும் ஒரு நன்மை என்பார்கள். இந்தக் காணொலி கால கட்டத்தில் 'விடுதலை' எனும் இலட்சிய ஏடு இலட்சக்கணக்கானோரைச் சென்றடைந்ததை ஒப்பிட்டார்.

என் சொந்த முயற்சியல்ல; கவிஞர் உள்பட 'விடுதலை'க் கூட்டுத் தோழர்களின் உழைப்பே காரணம் என்றும் கூறினார்.

'விடுதலை'யை ஏகபோகமாக என்னிடம் ஒப்படைப்பதாக தந்தை பெரியார் கூறினார்.  அதற்கு உண்மையாக நாணயமாக என்னையே ஒப்படைத்துக் கொண்டு இருக்கிறேன் - என் இறுதி மூச்சு இருக்கும் வரை என் 'விடுதலை' பணி தொடரும் என்று நெகிழ்ச்சியோடு அவர் சொன்னது மட்டுமல்ல; காணொலியில் கலந்து கொண்டவர்களையும் நெகிழ வைத்தது.

எனக்குச் சொந்த புத்தி தேவையில்லை- பெரியார் தந்த புத்திதான் என்று சொல்லுவ தற்குக் காரணம், பெரியார் தந்த புத்தியில் சபலத்திற்கு இடமில்லை - இலட்சியத்திற்குத் தான் இடமுண்டு என்றும் விளக்கினார்.

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு." (குறள் - 350)

என்னும் குறளின்படி மனிதப் பற்றைத் தவிர வேறு பற்று என்ற ஆசா பாசங்களுக்கு இடம் அளிக்காத தலைவர் தந்தை  பெரியாரிடம் பற்றுக் கொண்டவன் நான் என்றார்.

இலட்சக்கணக்காகப் பெருகும் வாசகர் களின் கரங்களுக்கு முத்தம் கொடுத்து நாம் நம் பணியைத் தொடர்வோம். ஆயிரங் காலத்துப் பயிர் திராவிடர் இயக்கம் - வாளும் கேடய முமாக இருந்து திராவிட இயக்க அரசுக்குத் துணை நிற்போம் என்றார் கழகத் தலைவர். 'விடுதலை' இலட்சங்கள் ஈட்டுவதற்காக நடக்கும் ஏடல்ல - இலட்சியங்களுக்காக நடக்கும் ஏடு என்று நெஞ்சு நிமிர்த்தி முத்திரை பதித்தார் அதன் 59ஆண்டு ஆசிரியர் (முழு உரை நாளை)

'தீக்கதிர்' பொறுப்பாசிரியர் மதுக்கூர் இராமலிங்கம்

'தீக்கதிர்' பொறுப்பாசிரியர் மதுக்கூர் இராமலிங்கம், தான் 'விடுதலை'யின் தொடர் வாசகர் என்று அறிமுகம் செய்துகொண்டார் 'விடுதலை'யும் 'தீக்கதிர்' ஏடும் கொள்கை  அளவில் பெரும்பாலும் ஒத்துப் பயணிக்கும் ஏடுகளே.

கருத்து  மாறுபாடுகளும் ஏற்படுவதுண்டு.  அப்பொழுதுகூட அது ஆரோக்கியமான தாகவே இருந்திருக்கிறது.

பத்திரிகைகள் நடத்துவது குறித்து 'குமுதம்' இதழில், அரசு பதில்களில் ஒன்றை எடுத்துக் காட்டினார். கட்சி நடத்துவது கஷ்டமா? பத்திரிகை நடத்துவது கஷ்டமா? என்பது கேள்வி அதற்குக் குமுதம் அரசின் பதில் -  பத்திரிகை நடத்துவது தான் கஷ்டம் அதிலும் கட்சிப் பத்திரிகை நடத்துவது மிகவும் கஷ்டம் என்றார்.

உண்மைதான்.  'விடுதலை' ஓர் இலட்சிய ஏடு - சோதிடம் ராசி பலன் போன்ற மூடநம்பிக்கைகளுக்கு இடம் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் இவற்றை எல்லாம் எதிர்த்து நீச்சல் போடக் கூடியது 'விடுதலை'. அத்தகைய ஓர் ஏடு 87ஆம் ஆண்டில் வீறு நடை போடுகிறது என்றால், இது சாதாரண விஷயமல்ல என்றார்.

சமூகநீதி தொடர்பாக 'தீக்கதிர்' எழுதும் என்றால் அது தொடர்பாக 'விடுதலை'யில் என்ன எழுதப்பட் டுள்ளது, ஆசிரியர் அறிக்கையில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதைப் பயன்படுத்திக் கொள்வோம். துல்லிய மான தகவல்கள் 'விடுதலை'யில் கிடைக்கும். சமூகநீதி, இடஒதுக்கீடு என்று வரும்போது சூறாவளியாகச் சுழன்றடித்து ஆசிரியர் பணியாற்றுவார். 'விடுதலை' வெகு வேகத்தில் எழுந்து நிற்கும் ஆசிரியரும், 'விடுதலை'யும் இத்திசையில் ஆற்றிவரும் பணிக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறோம் என்றார்.

ஆசிரியர் பேசுகிறார் என்றால் ஆதாரங்கள் பேசுகின்றன என்று பொருள் அவதூறுகளையும் இழிவு களையும் தாங்கி நடைபோடும் பத்திரிகை 'விடுதலை'. அத்தகைய ஒரு சமூகப் புரட்சி ஏட்டுக்கு 59 ஆண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் என்றால், அவரின் 60ஆம் ஆண்டு ஆசிரியர் பணியைப் பாராட்டி நாம் அனைவரும் சேர்ந்து விழா எடுக்க வேண்டும் என்றார். தந்தை பெரியார் ஆசிரியர்மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றும் கடமையினை வழுவாது செய்து வருகிறார் என்றும் முத்தாய்ப் பாகக் குறிப்பிட்டார்.

'நக்கீரன்' கோவி. லெனின்

நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி. லெனின் அவர்கள் தன் உரையில், அரைக்கால் சட்டை போட்ட காலத்தி லிருந்து நான் 'விடுதலை' வாசகர், ஆசிரியர் அவர்களின் மாணவன் என்று தம்மை  அறிமுகப்படுத்திக் கொண்டார்.

"சித்தாளும் கொத்தாளும் நம்மாளு! அய்..எஸ். எல்லாம் அவாளு!" என்ற தி.. ஊர்வலத்தின் முழக்கங்களைக் கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள் என்றார்.

'முரசொலி' கலைஞரின் மூத்த பிள்ளை என்றால் 'விடுதலை' அவருக்கான போர்வாள்!

இங்கே இந்தக் காணொலியில் உரையாற்றுவோர் எல்லாம் சமூகநீதிப் புள்ளியில் ஒன்றிணையக் கூடியவர்கள் என்றார் தோழர் லெனின்.

இன்றைக்கு 69 சதவிகித இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றால் அதற்குக் காரணம் ஆசிரியரும், 'விடுதலை'யும்தான். முதல்  அமைச்ச ராகவிருந்த ஜெயலலிதாவைப் பயன் படுத்தி வென்றும் காட்டினார் ஆசிரியர்.

இன்றைக்கு சமூகநீதிக்கு அச்சுறுத் தல் ஏற்பட்டுள்ளது. சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் இடஒதுக்கீடு என்பது இனி பொருளாதார ரீதியாகவும் என மாற்றப்படும் போக்குக் காணப்படுகிறது.

இந்தக் கால கட்டத்தில் 'விடுதலை' யின் பணி மகத்தானதாக இருக்கும் என்றார்.

'கலைஞர் செய்தித் தொலைக்காட்சி ஆசிரியர் . திருமாவேலன்,

கெடுதலை  நீக்க வந்ததுதான் விடுதலை. அதன் 87 ஆண்டு வரலாற் றில் நமது ஆசிரியருக்கு 59 ஆண்டு வரலாறு என்பது சாதாரணமானதல்ல.

இது ஒரு வரலாற்றுப் பெருமை கொண்ட நிகழ்ச்சியேயாகும். இந்த 87 ஆண்டு வரலாற்றில் எத்தனை எத் தனைத் தலைமுறைகளைச் சேர்ந்த வர்கள் பயன் பெற்று இருப்பார்கள்!

'விடுதலை'யின் சாதனையோடு வேறு எந்தப் பத்திரிகையையும் ஒப்பிட முடியாது.

'விடுதலை'யைத் தோற்றுவித்த தந்தை பெரியார் இன்று இல்லை. ஆனால் 'விடுதலை'ப் பத்திரிகை வாழ்ந்துகொண்டு இருக்கிறது.

'விடுதலை' இலட்சியப் பத்திரிகை - நானே எழுதி, நானே அச்சிட்டு  நான் ஒருவனே படிப்பவனாக இருந்தாலும் இந்த ஏட்டை நடத்துவேன் என்ற கொள்கை உறுதி தந்தை பெரியாரு டையது. (பெட்டிச் செய்தி காண்க).

ஒரு காலம் வரும், இன்று நான் எழுதியதை எதிர் காலத்தில் வரும் இளைஞர்கள் படிப்பார்கள். கருத்து வயப்படுவார்கள் என்ற நம்பிக்கை தந்தை பெரியாருக்கு இருந்தது.

நட்டத்தில் நடக்கும் பத்திரிகைதான். அதற்காகக் கொள்கைக்கு மாறான விளம்பரங்களை வெளியிட, பெரியார் தயாராக இல்லை என்றார் தோழர் திருமாவேலன்.

('திராவிடன்' இதழையும், 'குடி அரசை'யும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டிய அவசியம் தந்தை பெரி யாருக்கு ஏற்பட்டபோது - பெரியார் என்ன செய்தார்? (தனியே பெட்டிச் செய்தி).

நான் இறந்தாலும் எனக்குப் பின்னால்வரும் திராவிட தோழர்கள் ஏமாந்து விட மாட்டார்கள் என்று தந்தை பெரியார் கணித்ததையும் எடுத்துக் காட்டினார் (தூத்துக்குடி மாகாண மாநாட்டில் தந்தை பெரியார் பேசியது என்ன? தனியே காண்க)

மாபெரும் புரட்சி ஏடான 'விடுதலை' யின் ஆசிரியராகப் பொறுப்பேற்று இந்த 88 வயதிலும் 59 ஆண்டு சாதனைக் குரியவர் ஆசிரியர்.

ஒரு தனியார்  பள்ளியில் நடந்த ஒரு நிகழ்ச்சி - அதன் மீதான சட்ட ரீதியான நடவடிக்கைகளை மய்யப்படுத்தி ஆட்சியைக் கவிழ்ப்பேன் என்கிறார்கள் என்றால் இதன் பொருள் என்ன?

'விடுதலை'யின் பணி, ஆசிரியரின் பணி மேலும் தேவை, தேவை என்ப தைத்தான் இது  காட்டுகிறது என்றார்.

'ஜனசக்தி' வெளியீட்டாளர் தோழர் இரா. முத்தரசன்

'விடுதலை'யின் தம்பி 'ஜனசக்தி'யின் சார்பாக அண்ணனை வாழ்த்துகிறேன் என்று தன் உரையைத் தொடங்கினர். 'ஜனசக்தி' விடுதலைக்கு 2 ஆண்டுகள் இளையது.

'விடுதலை' - 87 ஆண்டு, 'முரசொலி' - 79 ஆண்டு, 'தீக்கதிர்' - 59 ஆண்டு.

நமது ஏடுகளுக்கெல்லாம் விளம் பரங்கள் கிடைக்காது. இருந்தும் இலட்சிய நோக்குக்காக பொருளாதார நட்டத்தில் ஏடுகளை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

'விடுதலை' என்றால் விஞ்ஞானம் என்று பொருள் -  நூற்றுக்கு நூறு உண் மையைப் பேசுகிறது என்று பொருள் - ஆதாரமாகப் பேசுகிறது என்று பொருள்.

'கடவுள்' இல்லை என்பது விஞ்ஞான உண்மை. அப்படி சொன்னால் கல்லால் அடிப்பார்கள். 'கடவுள்' உண்டு உண்டு என்று பொய்யைச் சொன்னால் கன்னத்தில் அடித்துக் கொள்வார்கள்  - போட்டுக் கொள்வார்கள்.

நாடு விடுதலை பெற்றது என்றாலும் மனித மூளை விடுதலை பெற வில்லையே என்பதுதான் 'விடுதலை' யின் கவலை.

1952 முதல் பொதுத் தேர்தலில் அய்க்கிய முன்னணி சென்னையில் உரு வாக்கப்பட்டது. தந்தை பெரியார் முழு மூச்சுடன் பெரும்பாடுபட்டார். கம்யூ னிஸ்ட் கட்சி பெரும் வெற்றி பெற்றது.

ஆனால், குறுக்கு வழியில், கொல் லைப்புறமாக ஆச்சாரியார் (ராஜாஜி) தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்ட வரலாற்றை நினைவூட்டினார் தோழர் முத்தரசன்.

தற்போதைய நாட்டு நடப்பையும் சுட்டிக் காட்டினார். பத்மாசேஷாத்திரி என்னும் தனியார்  பள்ளியில் நடந்த பாலியல் தொடர்பான குற்றச்சாட்டு - சட்டம் தன் கடமையைச் செய்யும்போது, சு.சாமி என்பவர் அரசை மிரட்டுகிறார்.

அவர்களை எல்லாம் நாம் சந்திப்போம். முதல் அமைச்சர் கவச உடை அணிந்து உயிரைப் பணயம் வைத்து கரோனா நோயாளி பகுதிக்குச் செல்கிறார் என்றால், அதன் பொருள் என்ன? மருத்துவர்களையும், மருத்து வத்துறைப் பணியாளர்களையும் உற்சாகப்படுத்தத் தானே!

மத்திய அரசோ சாவில்கூட அர சியல் பார்க்கிறது. நீதிமன்றமே சுட்டிக் காட்டுகிறது. ஆசிரியர் 'விடுதலை'யில் அறிக்கை விடுத்தார்.

மற்ற மற்ற ஏடுகள் எல்லாம் செய்தி களைத் தரும். ஆனால் 'விடுதலை'யோ அந்தச் செய்திகளில் ஒளிந்திருக்கும் மர்மங்களையும், உண்மைகளையும் வெளிப்படுத்தும் போராயுதமாகும் ..

87 ஆம் ஆண்டில் வெற்றி நடை போடும் 'விடுதலை' பல நூறாண்டுகள் வாழ வேண்டும்.

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான செயல் பாட்டைக் குறித்து ஆசிரியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நமது ஆசிரியர் அவர்கள் தந்தை பெரியாரால் உருவாக்கபட்ட அற்புத மான சீடர்.

தந்தைபெரியாரின் அருந்தொண் டால் அய்..எஸ்., அய்.பி.எஸ். போன்ற பெரும் பதவிகளைப் பெற்றவர்கள் தந்தை பெரியாருக்கு நன்றிக் கடன் பட்டவர்கள் ஆவார்கள்.

1952களில் ஆச்சாரியாரால் கொண்டு வரப்பட்ட குலக்கல்வி இப்பொழுது புதிய கல்வி என்ற முகமூடி அணிந்து உள்ளே நுழைகிறது.

அதனை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர் நமது ஆசிரியர்.

நான் ஆசிரியர் அவர்களை தந்தை என்றுதான் கூறுவது வழக்கம். மகன் என்ற முறையில் நீங்கள் ஆரோக்கி யமாக நீண்ட நெருங்காலம் வாழ வேண் டும். கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும், 'ஜனசக்தி' சார்பாகவும் வாழ்த்துகிறோம்.

கரோனா முடிந்து 'விடுதலை'யின் 87ஆம் ஆண்டை பெரிய மாநாடாக நடத்துவோம் என்றார் தோழர் இரா. முத்தரசன்.

நிகழ்ச்சி முடிவில் பெரியார் பன் னாட்டு அமைப்பின் இயக்குநர் (அமெ ரிக்கா) டாக்டர் சோம இளங்கோவன் அவர்கள் 'விடுதலை' என்று குரல் கொடுத்தார்; "வாழ்க!"  என்று அனை வரும் முழங்கினர். "ஆசிரியர்" என்றார்; "வாழ்க!" என்று வாழ்த்தொலி எழுப்பினர்.

No comments:

Post a Comment