வேலை நிறுத்தம் சட்டவிரோதம் என நீதிமன்றம் கண்டித்ததால் 3000 அரசு மருத்துவர்கள் பணி விலகல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 5, 2021

வேலை நிறுத்தம் சட்டவிரோதம் என நீதிமன்றம் கண்டித்ததால் 3000 அரசு மருத்துவர்கள் பணி விலகல்

போபால், ஜூன் 5 கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்திற்கு தள்ளப்பட்டதாக இளநிலை மருத்துவர்கள் சங்கத் தலைவர் மீனா கூறினார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் இளநிலை மருத்துவர்கள் தங்களுக்கு உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும், தங்களுக்கோ தங்களின் குடும்பத்தினருக்கோ கரோனா தொற்று ஏற்பட்டால் இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் போராட்டத்தை சட்டவிரோதம் என உயர் நீதிமன்றம் நேற்று கண்டித்தது. அத்துடன் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் 24 மணி நேரத்திற்குள் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த இளநிலை மருத்துவர்கள் சுமார் 3000 பேர் பணி விலகல் செய்தனர்.

மாநிலத்தின் ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் சுமார் 3,000 இளநிலை மருத்துவர்கள் தங்கள் பணிவிலகல் கடிதங்களை அந்தந்த கல்லூரிகளின் டீனுக்கு சமர்ப்பித்ததாக இளநிலை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அரவிந்த் மீனா தெரிவித்தார். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார்.

கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு அதிகாரிகள் உறுதி அளித்தனர், ஆனால் அதன்பின்னர் வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காததால் போராட்டத்திற்கு தள்ளப்பட்டதாகவும் சங்கத் தலைவர் மீனா கூறினார். உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment