தந்தை பெரியாரும், தத்துவவாதி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 29, 2021

தந்தை பெரியாரும், தத்துவவாதி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும்

முனைவர் ராஜன்குறை கிருஷ்ணன் - எழுத்தாளர், பேராசிரியர். அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். புதுதில்லியில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையில் பணியாற்றுகிறார். திரைப்பட-நாடக-இலக்கியத் திறனாய்வாளர். பெரியார்-திராவிட இயக்கம் பற்றி தொடர்ந்து எழுதிவருபவர்.

கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவிற்கு அறிமுகம் தேவையில்லை. தொடர்ந்து பார்ப்பனீய மனோ பாவத்திற்கும், ஜாதீய மனோபாவத்திற்கும், இந்துத்துவ அரசியலுக்கும் எதிராக குரல் கொடுத்து வரும் அபூர்வமான இசைக்கலைஞர்.

கர்நாடக சங்கீதம் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டிருப்பதை மாற்றுவதற்காக அதை மக்களிடையே கொண்டு செல்வதும், இசைப்பயிற்சியையும், ரசனையை யும் பரவலாக்குவதுமான செயல்பாடுகளுக்காக மக்ஸசே விருது பெற்றவர். பொதுவாக பார்ப்பன சமூகத்து எழுத் தாளர்கள், கலைஞர்களிடையே சுயவிமர்சனப் பார்வை அரிது என்ற குறையை போக்கும் விதமாக தீவிரமான சுய விமர்சன பார்வையை வெளிப்படுத்துவதுடன், தனது பாரம்பர்ய கர்நாடக சங்கீத திறனை பயன்படுத்தி சமூக அக்கறை சார்ந்த பாடல்களை பாடி வருபவர். எண்ணூரில் ஏற்பட்டுள்ள சூழலியல் பாதிப்பினை குறித்தபுறம்போக்குபாடலும், பெருமாள் முருகன் எழுதியுள்ள தமிழ் பாடல் களை தொடர்ந்து இசைத்து வருவதும், கிறிஸ்துவ, இஸ்லா மிய இறை வணக்க பாடல்களையும் கர்நாடக சங்கீதத்தில் பாடுவதுமான இசை மரபை புத்துயிர்க்கச் செய்யும் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுபவர். கர்நாடக சங்கீதம் குறித்த ஆய்வு நூல்களையும் எழுதுபவர்.

இவ்வகையான பொறுப்புமிக்க சிந்தனையாளரும், கலைஞருமான டி.எம்.கிருஷ்ணா ஒரு சில தினங்களுக்கு முன் "Silences of Jiddu Krishnamurthy" என்ற முக்கியமான விமர்சனக் கட்டுரையை எழுதியுள்ளார். அந்த கட்டுரை ஆழ்ந்த சுய பரிசீலனையே விடுதலைக்கு வழி என்று சிறப்புற எடுத்துரைத்த புகழ்பெற்ற தத்துவவாதி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஏன் தன்னுடைய சுய அறிதலில் தன்னுடைய உயர்குடிப்பிறப்பு வளர்ப்பினால் உருவான சுயத்திற்கும், பிற ஒடுக்கப்பட்ட மக்களின் சுய உருவாக்கத் திற்குமான வேறுபாடுகளை சிந்திக்கவில்லை என்ற மிக முக்கியமான கேள்வியை எழுப்புகிறார். டி.எம்.கிருஷ்ணா வின் நோக்கம் ஜே.கே. என்று பலரால் குறிப்பிடப்படும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் தத்துவார்த்த நோக்கை நிரா கரிப்பதல்ல; மாறாக அதன் போதாமைகளையும் அவரது சுயபரிசீலனை மரபின் மூலமாகவே சிந்திப்பது. அந்த போதாமைகளை ஜே.கே.வின் சிந்தனைகளை பாபா சாகேப் அம்பேத்கர், நாராயண குரு ஆகியோர் சிந்தனை களுடன் இணைத்து பார்ப்பதன் மூலம் கடந்து செல்ல முடியலாம் எனக் கூறுகிறார் டி.எம்.கிருஷ்ணா. இதைப் படித்தபோது என்னுடன் எண்பதுகளில் விவாதித்த மரபு, பண்பாட்டு தொடர்ச்சி ஆகியவற்றில் அக்கறை கொண்ட சிலர்ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி (ஜேகே) ஒரு இங்கிலீஷ் பெரியார்என்றுகுறைகூறியது நினைவுக்கு வந்தது. பெரியார் சிந்தனைகளுக்கும், ஜேகே சிந்தனைகளுக்கும் உள்ள சில தொடர்புகளை யோசித்துப் பார்த்தால் என்ன என்று தோன்றியது.

இவ்விதம் செய்வதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. பெரியார் சிந்தனைகளை அறிந்த பலருக்கு ஜேகே சிந்த னைகளைத் தெரியாது. அதேபோல ஜேகே சிந்தனைகளை அறிந்த பலருக்கு பெரியாரின் சிந்தனைகள் தெரியாது. பிரச்சினை அது மட்டுமல்ல. இரு தரப்புமே மேலோட்டமான மனப் பதிவுகள் காரணமாக மற்றவரை குறைத்து மதிப் பிடவோ, நிராகரிக்கவோ கூடியவர்கள். ஏனெனில் ஜேகே ஆங்கிலம் தெரிந்த மேட்டுக்குடி மக்களிடையே, செல் வாக்கு மிக்கவர்களிடையே உரையாற்றினார். பெரியாரோ பாமர மக்களிடையே பாமர மொழியில் ஓயாது பிரச்சாரம் செய்தவர். இருவர் இயங்கு தளமும், மொழி பயன்பாடும் முற்றிலும் வேறானவை. அதனால் இருவரையும் இணைத்து பேசுவது இருதரப்பிற்குமே உவப்பில்லாமல் போகலாம். ஆனாலும் சில முக்கியமான இணைப்புப் புள்ளிகளை கவனித்தால் ஏன் ஒரு சிலர் ஜேகே-வை இங்கிலீஷ் பெரியார் என்று அவர்கள் நோக்கில்இகழ்ந்துஉரைத்தார்கள் என்பதையும் புரிந்து கொள்ளலாம். முதலில் ஜே.கே-வை அறியாதவர்களுக்கு அவருடைய அபூர்வ மான வாழ்வைக் குறித்த சில அடிப்படை தகவல்களை கூறவேண்டும்.

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் வியத்தகு வாழ்க்கை

சென்னை அடையாறில் தியாசொபிகல் சொசைட்டி என்பதன் வளாகத்தை அறிந்திருப்பீர்கள். ஹெலனா பிளவாட்ஸ்கி, ஹென்றி ஆல்காட் தம்பதியினர் இந்த அமைப்பை 1875 ஆம் ஆண்டு நியூயார்க்கில் தோற்று வித்தார்கள். 1880-ஆம் ஆண்டு சென்னை அடையாறில் குடியேறினார்கள். சில ஆண்டுகள் ஹோம் ரூல் இயக் கத்தின் மூலம் இந்திய தேசிய இயக்கத்திலும் குறிப்பிடத்தக்க அன்னி பெசண்ட் இவர்களுடன் இணைந்தார் (பெசண்ட் நகர் என்பது இவர் பெயரால் வழங்கப்படுவது). பிளா வாட்ஸ்கி, ஆல்காட் மறைவுக்கு பின் அன்னி பெசண்ட் தியோசொபிகல் சொசைட்டியின் தலைவர் ஆனார்.

இந்த அமைப்பினர் மைத்ரேயன் என்ற பெயரில் ஒரு அவதார புருஷர், தீர்க்கதரிசி அல்லது ரட்சகர் தோன்றுவார், உலகை வழிநடத்துவார் என நம்பினார்கள். இந்த இயக் கத்தினரால் 1907-ஆம் ஆண்டு, பன்னிரெண்டு வயதான கிருஷ்ணமூர்த்தி கண்டெடுக்கப்பட்டார். ஆந்திர  மாநிலத் தில் சற்றே ஏழ்மையான பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தந்தை தியாசொபிகல் சொசைட்டி உறுப்பினர் என்பதால் சென்னையில் பணியில் அமர்த்தப் பட்டார். அங்கே கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனிடம் ஒரு தேஜஸ் இருப்பதாக தியாசொபிகல் சொசைட்டி உறுப்பினர் கண்டு சொல்ல, அந்த சிறுவன்தான் அவதார புருஷரான மைத்ரேயர் என்று முடிவு செய்தார் கள். ஜேகே அவர் சகோதரர் நித்யா ஆகிய இருவரையும் அன்னி பெசன்ட் தத்து எடுத்துக்கொண்டார்.

இந்த புதிய அவதார புருஷரை, லோக குருவை ஆத ரிக்க, பின்பற்ற ஒரு உலகளாவிய அமைப்பு, Order of the Star in the East  (OSE) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இரு சிறுவர்களும் இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் தனிப்பயிற்சியாளர்கள் மூலம் சிறப்பாக பயிற்றுவிக்கப் பட்டார்கள். துரதிர்ஷ்டவசமாக ஜே.கே-வின் சகோதரர் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். அதன் பின்னர் ஜே.கே தலைமையேற்பதற்காக OSE அமைப்பு கூட்டப் பட்ட போதுதான் மிகப்பெரிய அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் ஜே.கே. “உண்மை பாதைகளற்ற நிலம்என்ற அவருடைய புகழ்பெற்ற கூற்றினை உள்ளடக்கிய உரை யில் அவர் இது போன்ற நிறுவன அமைப்புகளால் எந்த பயனுமில்லை என்று கூறி அதனை கலைத்துவிட்டார். அதிலிருந்து ஒரு தனிப்பட்ட சிந்தனையாளராகவே வாழ்ந்து, உரையாற்றிவந்தார். மதங்கள், குருமார்கள், வழி பாடுகள், சடங்குகள் ஆகியவற் றையெல்லாம் தொடர்ந்து மறுதலித்து விமர்சித்து வந்தார். மனிதர்கள் தங்கள் உந்து தல்கள், சுயம் இயங்கும் விதம் குறித்தெல்லாம் ஆழ்ந்த விழிப்புணர்வை பெறுவதே விடு தலைக்கு வழி என்று போதித்துவந்தார் என சுருக்கமாகக் கூறலாம்.

பெரியாரும் (1879-1973); ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும் (1895-1984)

இருவரும் சமகாலத்தவர்கள். பெரியாரைவிட பதினாறு ஆண்டுகள் இளையவர் ஜே.கே. பெரியார் மறைந்து பதி னொரு ஆண்டுகள் கழித்து மறைந்தார். பெரியார் 94 ஆண்டுகள் வாழ்ந்தார்; ஜே.கே. 90 ஆண்டுகள் வாழ்ந்தார். இருவரும் ஒரு சில சிறிய நூல்களைத் தவிர தங்கள் சிந்தனைகளை நூலாக்கம் செய்யவில்லை. குறிப்பாக தத்துவ ஆசிரியர்கள் செய்வதுபோல ஒரு விரிவான தர்க்க ரீதியான நூலை தங்கள் தத்துவ பார்வையாக விரித்து எழுத வில்லை. ஆனாலும் மானுட வாழ்க்கை குறித்த முக்கிய மான சிந்தனைகளை நிகழ்த்தி வந்தார்கள். தொடர்ந்து உரை நிகழ்த்துவதையே தங்கள் முக்கிய செயல்பாடாக கொண்டிருந்தனர். தங்கள் செயல்பாட்டிற்கான ஆதரவு தளமாக ஒரு அமைப்பை கொண்டிருந்தனரே தவிர அதன்மூலம் வேறு எந்த பதவிகளையும், ஆதிகாரத்தையும் நாடவில்லை. பெரியார் அரசியலில் பல நிலைப்பாடுகள் எடுத்தார்; கிளர்ச்சிகள் செய்தார். போராட்டங்களை வழி நடத்தினார். ஜே.கே கல்வி நிறுவனங்களை, பள்ளிகளை துவங்கி நடத்தினார். பெரியார் 1925-ஆம் ஆண்டு காங்கிர ஸிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை தோற்று வித்து தன் தனித்த பயணத்தை தொடங்கினார். ஜே.கே 1929-ஆம் ஆண்டு ஆர்டர் அஃப் ஸ்டார் அமைப்பை கலைத்துவிட்டு வெளியேறி தன் தனித்த பயணத்தை தொடங்கினார். இவற்றையெல்லாம் விட முக்கியமானவை அவர்களது சிந்தனைகளின் அடிப்படைகளாக விளங்கிய சில அணுகுமுறைகள்.

உங்கள் சிந்தனையே உங்களை வழிநடத்தும்

பெரியாரும் சரி, ஜேகே-வும் சரி தங்கள் பேச்சைக் கேட் பவர்களை தானாக சிந்திக்கச் சொல்லியே வலியுறுத்தினார் கள். அவர்கள் பல கேள்விகளை எழுப்பினார்கள். அந்த கேள்விகளை குறித்து சிந்திக்கச் சொன்னார்கள். கேள்வி கேட்காமல், சிந்தித்துப் பார்க்காமல் எதையும் ஏற்பது தவ றென்றார்கள். அதாவது ஒரு கருத்தை ஏற்கலாமே தவிர அதை நம்பக்கூடாது. அதனால் நம்பிக்கையை வலியுறுத் தும் மத நிறுவனங்கள், கோயில்கள், தெய்வங்கள், துறவி கள், தீர்க்கதரிசிகள் ஆகிய அனைவரையும் ஏற்க மறுத் தார்கள். பிறர் கருத்துக்களை போதிய விசாரணையின்றி ஏற்று நடப்பதை அடிமைத்தனம் என்றார்கள்.

எல்லா மாற்றங்களுக்கும், விடுதலைக்கும் அடிப் படையாக ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கும் சிந்திக்கும் ஆற்றலையே கருதினார்கள். மதங்களையும், தெய்வ நம்பிக்கையையும் நிராகரித்து, மனிதர்களின் சிந்திக்கும் ஆற்றலையே ஆதார விசையாக கொண்டதில் பெரியா ரும், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும் ஒரு புள்ளியில் சந்திக் கிறார்கள். அது மட்டுமல்லாமல் எல்லாவிதமான சடங்கு கள், மரபு சார்ந்த பழக்க வழக்கங்கள் எதுவுமே கேள்விக்கு உட்பட்டது என்பதையும் வலியுறுத்தினார்கள். பெரியார் இந்த சிந்திக்கும் ஆற்றலை பகுத்தறிவு என்றும், அதன் முக்கியமான விளைபொருள் சுயமரியாதை என்றும் கூறினார். கிருஷ்ணமூர்த்தி அதையே விழிப்புணர்வு என்றும், அதன் விளைபொருள் கருணை, அன்பு (compassion and love) ஆகியவை என்றும் கூறினார்.

இருவருக்கும் இடையிலான முக்கிய வேறுபாடாக தோன்றுவது பெரியார் தனிமனித மனமாற்றத்தையும், சமூக மாற்றத்தையும் பிரித்துப் பார்க்கவில்லை என்பது தான். உதாரணமாக, எல்லா மனிதர்களும் ஜாதி ஏற்றத் தாழ்வை தவறென்று உணரும் வரை சமூகமும், அரசும் அதை அனுமதிக்க வேண்டும் என்று பெரியார் நினைக்க வில்லை. அதனால் அனைத்து மக்களிடமும் பிரசாரம் செய்யும் அதே நேரத்தில் அரசியல் ரீதியாகவும் கருத்தை வலியுறுத்தி சட்ட திட்டங்களை மாற்றுவதும் அவசியம் என்று நினைத்தார். சுயமரியாதை என்ற இயந்திரம் எல்லா மனிதர்கள் சிந்தனை யிலும் குடியேறுவது அவசியம் என்று நினைத்தாலும், அதை குறித்து போதிப்பதை மட்டுமே பணியாகக் கொள்ளாமல், அந்த சுயமரியாதையின் வெளிப்பாடுகளை உணரும் வித மாக பல கிளர்ச்சிகளையும், போராட்டங்களையும் நிகழ்த்தினார்.

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி தனக்குள் உணர்ந்த உண் மையை, விடுதலையுணர்வை, வாழ்வு குறித்த முழுமை யான விழிப்புணர்வை குறித்து தொடர்ந்து பேசுவதை மட்டுமே செயல்பாடாகக் கொண்டார். அதை யார் கேட்கிறார்கள், பின்பற்றுகிறார்கள், அதனால் சமூக மாற்றம் நிகழ்கிறதா என்பதையெல்லாம் குறித்து அவர் அதிகம் கவலைப்பட வில்லை. ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி உள்ளிட்ட தலைவர்களையும், ஆல்டஸ் ஹக்ஸ்லி உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் கலைஞர் களையும் சந்தித்து உரையாடும் வாய்ப்பினை கிருஷ்ண மூர்த்தி பெற்றிருந்தார். அவருடைய ஆங்கில உரை களைக் கேட்க இந்தியாவில் உயர்வகுப்பினர் மட்டுமே கூட முடியும் என்பது இயல்பு. ஓரளவு கல்விகற்க முடிந்த மத்தியதர வர்க்கத்தினருக்கும் அவர் எழுதியதை வாசிக்கும் வாய்ப்பு இருந்தது எனலாம். ஆனால் ஜேகே பரிந்துரைக்கும் உள்ளத்தெளிவு எப்படி ஒருவரிடம் செயல்படும், அவரது சமூக உறவுகளை எப்படி திட்ட வட்டமாக மாற்றியமைக்கும் என்பதற்கு தெளிவான வரையறை இல்லை. அதற்கு மாறாக பெரியார் சுயமரி யாதை என்பதன் இன்றியமையாமையை உணர்ந்த பின் போராடச் சொன்னார். சமூக அமைப்பை மாற்றுவது சாத்தியம் என்றும், அதற்காக தன்னலமற்று போராட வேண்டும் என்று சொன்னார். இதன் காரணமாக பெரி யாரையும், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியையும் வேறுபடுத்திக் காண்பது எளிது.

அந்த வேறுபாடுகளைக் கடந்து மானுட சுயத்தின் சிந்திக்கும், பரிசீலிக்கும் ஆற்றலை ஆதார விசையாக கண்டதிலும், அந்த மானுட ஆற்றலின் முக்கியத்துவத்தை மறுதலிக்கும் மத அமைப்புகளையும், கடவுள் நம்பிக்கை யையும் நிராகரித்ததிலும் பெரியாருக்கும், ஜேகே விற்கும் உள்ள சில முக்கியமான ஒற்றுமைகளையும் நாம் கருத்தில் கொள்வது அவசியம் என்றே தோன்றுகிறது. அதற்காக இருவரையுமே வெறும் நாத்திகவாதிகளாக சுருக்க முடியாது. மானுட பிரச்சினையின் வேர்கள் மானுட சுய உருவாக்கத்திலேயே புதைந்திருக்கிறது என்ற புரிதல்தான் முக்கியமானது. மானுட சுய உருவாக்கத்தின் அங்கம் தானே கடவுள்.

நன்றி: மின்னம்பலம்

No comments:

Post a Comment