ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பகுத்தறிவு ‘ஞானோதயம்!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 18, 2021

ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பகுத்தறிவு ‘ஞானோதயம்!'

 ஆர்.எஸ்.எஸின் தேசிய தலைவரான மோகன் பாகவத் டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது ஒரு கருத்தைக் கூறியுள்ளார்.

இந்தியாவில் இரண்டாவது கரோனா அலையின் தீவிர பாதிப்புக்குக் காரணம் - முதல் அலை முடிந்ததும் - மக்களும், அரசும் அலட்சியமாக இருந்ததே என்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை - மற்றொரு காரணத்தையும் கூறியுள்ளார். அதுதான் முக்கியமானது.

‘‘பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளைக் கூறுவதை அனைவரும் தவிர்க்கவேண்டும்'' என்று கூறியிருப்பதுதான் ஆச்சரியமானது - அதிசயமானது.

‘‘பகுத்தறிவு என்றாலே மதத்துக்கு எதிரானது - கடவுளுக்கு எதிரானது - சாஸ்திர சம்பிரதாய மூடநம்பிக்கைகளுக்கு எதிரானது'' என்பதைவிட ‘‘இது பெரியாரியவாதிகள் சொல்லக் கூடியது - திராவிடக் கட்சிக்காரர்கள் பேசக்கூடியது - இது நாத்திக சம்பந்தமானது'' என்றுமுத்திரையடியாக'ப் பேசிக் கொண்டிருந்தவர்களின் வட்டாரத்திலிருந்து பகுத்தறிவின் மாண்பின் அவசியம் குறித்து சிலாகித்திருப்பது - காலந்தாழ்ந்தாலும் இந்த முடிவுக்குத்தான் வந்து சேரவேண்டும் என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது.

இந்தப் பகுத்தறிவுப் பார்வையை நிரந்தரமாக்கிக் கொள்வார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லைதான்!

இப்பொழுது கரோனாவால் கடும் பாதிப்புக்கு மக்கள் ஆளாகியுள்ள தருணத்தில் உயிர்ச் சேதத்தை மேலும் மேலும் ஏற்படுத்தும் வகையில்மாட்டு மூத்திரத்தைக் குடியுங்கள் - மாட்டுச் சாணத்தை உடலில் பூசிக் கொள்ளுங்கள் - கோவிட்-19 வைரசும் ஓர் உயிர்தான் - அதனைத் தடுப்பூசிப் போட்டுத் தடுப்பது கடவுளுக்கு எதிரான செயல்' என்று எல்லாம் பா... மற்றும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார் வட்டாரப் பிரமுகர்களிடமிருந்து வார்த்தைகள் உதிர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வெகு மக்கள் முகம் சுளிக்கும் வகையில் இவை இருப்பதாலும், இத்தகையகருத்துகள்' ஆபத்தானவை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுவதாலும் தற்காப்பு நோக்கத்தோடுகூட ஆர்.எஸ்.எஸ். சொல்லியிருக்கலாம்.

இவர்களுக்கு உண்மையில் பகுத்தறிவுச் சிந்தனை இருந்திருந்தால், கரோனா கடும் சீற்றப் புயலாக வீசிக் கொண்டிருக்கும் தருணத்தில், கும்பமேளாவை அனுமதித்து இருப்பார்களா?

கும்பமேளா நடக்கவேண்டிய ஆண்டு 2022 தான். ஏன் ஓராண்டுக்கு முன் அறிவித்தார்கள்? உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் நெருங்கி வருவதால், மதவாதத்தையே முதலீடாகக் கொண்டு அரசியல் நடத்தும் பா... - ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் இந்த வேலையைச் செய்துள்ளார்கள்; கேட்டால், ஜோதிடர்கள் சொன்னார்களாம்!

விளைவு என்ன?

உத்தரகாண்டில் கரோனாவால் உயிர் இழந்தவர்களுள் 50 விழுக்காட்டுக்குமேல் மரணம் அடைந்தவர்கள் எல்லாம் கும்பமேளாவுக்குச் சென்று வந்தவர்கள். இப்பொழுது பகுத்தறிவுப் பேசும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் - கும்பமேளா விடயத்தில் தலையிட்டுத் தவிர்த்திருக்க வேண்டாமா?

கரோனா காலகட்டத்தில் ராமன் கோவில் கட்டத் துடிப்பதும், இந்தியத் துணைக் கண்டம் - முழுவதும் வசூல் வேட்டை நடத்துவதும் பகுத்தறிவைச் சார்ந்தது தானா?

கங்கையிலே கரோனாவால் மரணம் அடைந்தவர்களின் உடலைத் தூக்கி எறிவது குறித்து ஏதாவது பேசி இருக்கிறாரா?

கங்கைக்கரையில் உள்ள மயானங்களில் கொளுத்தப்படும் உடல்கள் அரையும் குறையுமாக எரிந்த நிலையில், அவற்றைக் கங்கையில் வீசினால் இறந்தவர்களுக்குநற்கெதி' கிடைக்கும் என்ற மூடநம்பிக்கைபற்றி எப்பொழுதாவது பேசி இருப்பார்களா?

கங்கை நதி மாசு படுவது குறித்து அக்கறை செலுத்தாமல், அதன் புனிதம் குறித்துப் புளகாங்கிதம் அடைபவர்கள்தானே இந்த ஹிந்துத்துவாவாதிகள்?

பகுத்தறிவு என்றால் பித்தலாட்டம் என்று எழுதிய திருவாளர் சோ.ராமசாமிதானே அவர்களின் வட்டாரத்து அறிவு ஜீவி!

ஒன்று மட்டும் உறுதியாகிவிட்டது. பகுத்தறிவைப் புறந்தள்ளி இனிமேல் இவர்கள் வண்டி ஓடாது! கிராமப் பகுதிகளில் பணமூட்டைகளை அவிழ்த்துக் கொட்டினாலும் இளைஞர்களைத் தங்கள் வசம் ஈர்க்க முடியாது என்பது அவர்களுக்கு உறுதியாகவே தெரிந்துவிட்டது.

எனவே, பகுத்தறிவு பற்றி எல்லாம் பேச ஆரம்பித்துள்ளனர். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் - ஹிந்து ராஜ்ஜியம் அமைப்போம் என்பதை எல்லாம் மூட்டை கட்டி கங்கையில் வீசி எறிந்துவிட்டோம் - அனைவரும் ஒரே ஜாதி - எல்லார்க்கும் எல்லாம் - சம நிறை என்று அறிவிப்பார்களா? அப்பொழுதுதான் பகுத்தறிவுப்பற்றிப் பேச இந்த வகையறாக்களுக்கு அருகதை உண்டு!

No comments:

Post a Comment