ஆம், இது பெரியார் மண்தான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 3, 2021

ஆம், இது பெரியார் மண்தான்!

 இது பெரியார் மண்ணா? யார் சொன்னது? இது ஆழ்வார்களும், நாயன்மார்களும் பிறந்த மண் என்பதைக் காட்டுவோம் என்று தோள் தட்டியவர்கள் உண்டு.

தந்தை பெரியார் சிலைகளைச் சிறுமைப்படுத்துவதன் மூலமும், தந்தை பெரியார் பற்றி அவதூறுப் பிரச்சாரம் செய்வதன் மூலமும், வேலினைத் தூக்கிக் கொண்டு வீதி வீதியாக யாத்திரை நடத்தியதன் மூலமும், மக்களிடத்திலே மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் - பக்தியைப் பகடைக் காயாக்கி மக்களை மயக்கி விடலாம், வாக்குகளை அறுவடை செய்து விடலாம் என்று மனப்பால் குடித்த பிற்போக்கு மதவாதச் சக்திகளுக்குத் தமிழ்நாட்டு மக்கள் மரண அடி கொடுத்துவிட்டனர்.

பா...வை நம்பி அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்த அதிமுகவுக்கும் பாடம் கற்பித்து விட்டனர் - தந்தை பெரியாரின் தமிழ்நாட்டு மக்கள்!

1971ஆம் ஆண்டில் மதவாத சக்திகள், பார்ப்பன சக்திகள் ஒரு பரீட்சையை நடத்திப் பார்த்தனர் தமிழ்நாட்டில்.

சேலத்தில் மாநாடு கூட்டி இராமனை அவமதித்து விட்டனர் என்று ஒரு சூறாவளிப் பிரச்சாரத்தைப் பெரிய அளவில் நடத்தினர்.

மக்களிடம் குடிகொண்டு இருக்கும் பக்தியைப் பயன்படுத்தி - திமுகவைத் தோற்கடித்து விடலாம் என்று ஒரு வியூகத்தை வகுத்துத் தேர்தல் களத்தை சூடுபடுத்தினர்.

ஏடுகள் எல்லாம் ஊடகங்கள் எல்லாம் தி..வின் சேலம் மாநாட்டால் தி.. ஆதரிக்கும் தி.மு.. தோல்வியைத் தழுவப் போகிறது என்று ஒரு கருத்தை உருவாக்கும் முயற்சியில் முழுமையாக ஈடுபட்டனர்.

'துக்ளக்', 'தினமணி' போன்ற ஏடுகள் சரியான ஆயுதம் கிடைத்து விட்டது, தி.மு..வை வீழ்த்துவதற்கு என்று நம்பினர்.

ஆனால் முடிவு என்ன? 1967 தேர்தலில் 138 இடங்களில் வென்ற தி.முக.. 1971 தேர்தலில் 184 இடங்களைப் பிடித்தது. பிற்போக்குப் பார்ப்பன சக்திகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது தந்தை பெரியாரின் தமிழ் மண்!

தேர்தல் என்பது கடவுள் நம்பிக்கையா - கடவுள் மறுப்பா? என்பதைப் பொறுத்து நடைபெறுவதில்லை.

பக்தியும், நம்பிக்கையும் தனி மனிதர்களின் நம்பிக்கையைப் பொறுத்தது - இன்னும் சொல்லப் போனால் வீட்டில் இருக்கும் பூஜையறைக்குள் மட்டும் இருக்க வேண்டியது.

அதனை பொது வெளியில் கொண்டு வருவது என்பது பொருத்தமற்றது.

அதுவும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலான மக்கள் ஆண்டாண்டுக் காலமாக மதத்தின் பெயரால் அடிமைப்படுத்தப்பட்டவர்களாக, கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்களாகப் பிறப்பின் அடிப்படையில் கீழ்த்தர மக்களாக, பஞ்சமர்களாக, சூத்திரர்களாக ஆக்கப்பட்டவர்கள்.

அவர்களுக்கான தொண்டு எதுவாக இருக்க முடியும் என்பதை ஆய்ந்து  அதற்கான அடிப்படை பணிகளைத் தம் வாழ்நாள் முழுவதும் செய்து மிகப் பெரியதோர் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டியவர் தந்தை பெரியார் - திராவிடர் இயக்கம்.

நமக்குக் கல்வி உரிமை கிடைத்தது மதத்தாலா - மதத்தை மறுக்கும் பெரியாராலா - திராவிட இயக்கத்தாலா? சரஸ்வதி பூஜை கொண்டாடியதாலா - சமூக நீதிக்காக நடத்தப்பட்ட பிரச்சாரம் மற்றும் போராட்டங்களாலா என்பதை உணர்ந்த மக்கள் அனுபவ ரீதியாக தந்தை பெரியார் பக்கம் நின்றனர்!

பட்டை போட்டவர்களும் கொட்டை கட்டியவர்களும் தந்தை பெரியார் என்று மதித்தனர் - அவர் தொண்டின் அருமை எத்தகையது என்பதை உணர்ந்தனர்.

இந்தியாவிலேயே தமிழ் மண் தனித் தன்மையுடன் மிளிர்கிறது என்றால் இதுதான் அடிப்படைக் காரணம். இதனைப் புரிந்து கொள்ளாமல் தமிழ் மண்ணில் காய்களை நகர்த்துவோர் மண்ணைத் தான் கவ்வுவார்கள் என்பதை 1971 தேர்தலும் நிரூபித்தது. 2019 மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணனை முன்னிலைப்படுத்தியபோதும் அதே நிலை தான் ஏற்பட்டது. இப்பொழுது நடைபெற்ற 2021 சட்டப் பேரவைத் தேர்தலும் நிரூபித்து விட்டது.

பெரியார் சிலை அவமதிப்பும் அவதூறும் உள் காயங்களாக இருந்த நிலையில், அதன் சீற்றத்தை வாக்குச் சீட்டுகள் மூலம் தமிழ்நாட்டு மக்கள் காட்டி விட்டார்கள்.

இதற்குப் பிறகும் மதவாத ஆதிக்க சக்திகள் பாடம் கற்றுக் கொள்ளவில்லையென்றால், கொஞ்ச நஞ்சம் எஞ்சியிருக்கும் அடையாளங்களும் சுனாமி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவை போலத் தான் ஆகும் என்பதை உணர்வார்களாக!

தந்தை பெரியார் தம் தத்துவங்களையும், திராவிட இயக்கச் சீலங்களையும் மேலும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லுவோம் - இளைஞர்கள் புதிய தலைமுறையினர் மத்தியில் கொண்டு செல்ல மேலும் திட்டமிடுவோம் - செயல்படுத்துவோம்!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

 

No comments:

Post a Comment