கரோனா பரவல் அதிகரிப்பு: பிரான்சில் மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிப்பு

பாரீஸ், ஏப்.2பிரான்சில் மூன்றாவது முறையாக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அய்ரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கரோனா வைரசின் 3ஆவது அலை பரவியுள்ளது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 42 ஆயிரம் பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்று மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரான்,  நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தார். 

பிரான்சில் மூன்றாவது முறையாக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களும் 3 வாரங்களுக்கு மூடப்படுவதாக அறிவித்த இமானுவேல் மேக்ரான்,  தற்போது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் கட்டுப்பாட்டை இழந்து விடுவோம்.  தடுப்பூசி போடுவதே சிறந்த தீர்வாக இருக்கும் என்றார்.  மேலும், மே மாதம் நடுப்பகுதியில் நாட்டில் இயல்பு நிலை திரும்பும் என நம்புவதாகவும் இமானுவேல் மேக்ரான் தெரிவித்தார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் படி, பகல் நேரத்தில் மக்கள் 10 கி.மீட்டர் சுற்றளவுக்கு மட்டுமே செல்ல முடியும். அதற்கு மேல் செல்ல வேண்டும் என்றால் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூயஸ் கால்வாயில் கப்பல் தரை தட்டியது எப்படி

எகிப்து விசாரணையை தொடங்கியது

கெய்ரோ, ஏப்.2 சூயஸ் கால்வாயில் எவர் கிரீன் சரக்கு கப்பல் தரை தட்டியது எப்படி என்பது குறித்து எகிப்து அரசு விசாரணையை தொடங்கியுள்ளது.

ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான, உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான "எவர் கிரீன்" என்ற சரக்கு கப்பல், கடந்த 23ஆம் தேதி உலகின் முக்கிய நீர் வழித் தடங்களில் ஒன்றான எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக சென்றபோது கால்வாயின் குறுக்கே திரும்பி பக்கவாட்டில் தரை தட்டி நின்றது. புழுதி புயல் காரணமாக கப்பல் கால்வாயின் குறுக்கே திரும்பி தரைதட்டி நின்றதாக கப்பல் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தீவிர மீட்பு பணியின் காரணமாக கடந்த திங்கட்கிழமை எவர்கிரீன் சரக்கு கப்பல் கரையிலிருந்து நகர்த்தப் பட்டு மீண்டும் மிதக்கத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மாலையில் அந்த கப்பல் அங்கிருந்து அகற்றப்பட்ட பின்னர் சூயஸ் கால்வாயில் முற்றிலும் இயல்பு நிலை திரும்பியது. இதையடுத்து, சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.  இந்நிலையில், சூயஸ் கால்வாயில் எவர் கிரீன் கப்பல் எப்படி தரை தட்டியது என்பது குறித்த விசாரணைக்கு எகிப்து அரசு உத்தர விட்டுள்ளது. கப்பல் தரைதட்டியது தொடர்பான தகவல் களை சூயஸ் கால்வாய் அமைப்பின் அதிகாரிகள் திரட்டி வரு கின்றனர். இதற்காக, எவர் கிரீன் கப்பலை 31.3.2021 அன்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். புழுதிப்புயல் காரணமாக கப்பல் தரை தட்டியதாக கூறப்படும் நிலையில், கப்பலின் மிதக்கும் திறன், கப்பல் குழுவினரின் நடவடிக்கைகள், கப்பலில் தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் ஏற்பட்டதா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Comments