வேதங்கள் - பேதங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 10, 2021

வேதங்கள் - பேதங்கள்

சு.அறிவுக்கரசு

பாரதம் என்பதும் மகாபாரதம் என்பதும் இதிகாசம் எனப்படும் இரண்டில் ஒன்று. மற்றொன்று இராமாயணம். பாரதக்கதையை எழுதியது வியாசன் என்கிறார்கள். வேத வியாசன் என்றும் கூறுவார்கள். ஹிந்து மதத்தின் நான்கு வேதங்களைப் பிரித்த ஆள் என்பதால் இந்தப் பெயர். ஹிந்து மதத்தின்படி நான்கு யுகக்கணக்கு சொல்லப்படுகிறது. அவை:

1) க்ருதயுகம் அல்லது சத்யயுகம், 17,28,000 ஆண்டுகள்

2) த்ரேதாயுகம், 12,96,000 ஆண்டுகள்

3) த்வாபரயுகம், 8,64,000 ஆண்டுகள்

4) கலியுகம், 4,32,000 ஆண்டுகள்

கலியுகம் பிறந்து 18,000 ஆண்டுகள் ஆகின்றனவாம். கலியுகப் பிறப்புக்கு முன்னால் த்வாபர யுகத்தின் இறுதியில் வியாசன் வேதங்களை நான்காகப் பிரித் தானாம். அவை ரிக், யஜூர், ஸாம, அதர்வண எனப்பெயர். வேதங்கள் எழுத்து வடிவில் இல்லாதவை. காதால் கேட்டு, மனப்பாடம் (அத்யயனம்) பண்ணி, மற்றவர்க்குச் சொல்லி, அவர்கள் அத்யயனம் பண்ணி... இப்படிச் சங்கிலித் தொடர் போல காக்கப்பட்டு வருவது வேதங்கள். ஒருவனே, நான்கையும் மனப்பாடம் செய்வது இயலாது எனக்கருதியோ என்னவோ, அவை நான்கு ரிஷிகளிடத்தில் ஒப்படைக்கப்பட்டதாம். ஸீமந்து, பைலர், ஜைமினி, வைசம்பாயனன் என்பவர்கள் அந்நான்கு ரிஷிகள், ஸீமந்துவிடம் ரிக், வைசம் பாயனனிடம் யஜூர், ஜைமினியிடம் சாம, பைலரிடம் அதர்வன வேதமும் ஒப்படைக்கப்பட்டனவாம். அவர்களின் சிஷ்யப் பரம்பரையினர் அத்யயனம் செய்து காப்பாற்றி வருமாறு ஏற்பாடு, அதாவது பார்ப்பனர் மட்டுமே படித்துவருவதற்கான ஏற்பாடு.

பார்ப்பனர் தவிர மற்றையோர் படிப்பதற்காகச் செய்யப்பட்டதுதான் புராணங்கள். சூத்ரன் வேதம் படிக்கக்கூடாது. எனினும் ஹிந்துமதத்தில் நீடிக்க வேண்டுமானால் அதன் தத்துவங்கள் தெரிந்து இருக்க வேண்டும் என்பதற்காகப் புராணங்கள் எழுதப்பட்டன. மகாபாரதக் கதையும் அய்ந்தாம் வேதம் எனப்பட்டது. “பாரதம் பஞ்சமோ வேதஎன்று எழுதிக் கொண்டனர். ஸீத வம்சத்தில் பிறந்த ஸீத புராணிகர் என்பவருக்கு உபதேசம் செய்தார் வியாசர். பிறகு பிரம்ம சூத்திரம் நூலை வியாசன் எழுதியதால் பாதராயணர் எனவும் பெயர் பெற்றார். இதற்கு பிக்ஷீஸூத்ரம் என்றும் வியாச சூத்ரம் என்றும் பெயர்கள். வேதங்கள் எல்லாம் ஒரே பொருளைத்தான் பேசுகின்றனவாம். “பரே பும்ஸிஎன்று உபநிஷத்கள் கூறுகின்றன.

வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசராத்மஜே வேத: ப்ராசேதஸாஸீத் ஸாஷோத் ராமாயணாத்மநாஇதன் பொருள் இதுதான். வேதத்தினால் அறியப்பட வேண்டியவன் - பரேபும்ஸி - நாராயணனே! அவன் தான் இராமனாக அவதாரம் செய்தான். தசரதனின் புத்ரன். வால்மீகியின் (புத்ரன்) படைப்பாகிய இராமாயண மாக வேதம் பிறந்தது. கோபுரம் கட்டுவது, குளம் வெட்டுவது போன்றவை சித்தத்தைச் சுத்தம் செய்து, பரமாத்மாவை அடைவதற்குத் துணை புரிவதுதானாம். வேதத்தின் பொருள் இராகவனே. அவனை அடையத் தான் சாஸ்திரங்கள், யக்ஞங்கள், தபஸ், தியானம் எல்லாம். வேதங்கள் வால்மீகியின் குழந்தையாக, சாட்சாத் இராமாயணமாக அவதாரம் செய்துவிட்டதாம். அப்படி என்றால் வேதம் தான் இராமாயணம். இராமா யணம் படித்தால் வேதம் படித்ததாக ஆகிவிடும். எனவே சூத்ரர்கள்  இராமாயணம் படித்தால் போதும். வேதம் படிக்க நினைக்கக் கூடாது. மீறிப்படித்தால் நாக்கை அறு, மீறிப்படிப்பதைக் கேட்டால் காதில் காய்ச்சிய ஈயத்தை ஊற்று. படிப்பவன் பக்கத்தில் உட்கார்ந்தால், பிருஷ் டத்தை அறு. எனத்தண்டனைகளை மனுசாஸ்திரம் கூறும். ஆகவே சூத்ரன் வேதம் படிப்பதைத் தடுப்ப தற்கான பார்ப்பனச் சூழ்ச்சி.

ஆனால் காலக்கொடுமை, வேதத்தை சூத்ர பாஷையில் மொழி பெயர்த்து அச்சுப் போட்டுக் கூவிக்கூவி விற்கிறர்கள்.

இந்த வேதம் மனிதனால் உருவாக்கப்படவில்லையாம். அபவுரு ஷேயம் என்கிறார்கள். ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் அடுத்த யுகம் தொடங்கும் போதும் ஏற்கெனவே படைக்கப்பட்ட வேதங்கள் காற்று வெளியில் இருப்பவற்றை ரேடியோவின் ஒலி வாங்கியைப் போல, ரிஷிகள் கிரஹித்து, சுவடிகளில் பதிவு செய்து வைத்ததை வியாசன் நான்காகப் பிரித்தாராம்.

வேதகாலம் என்பது, பார்ப்பனர்க்குப் பிரியமான ஜெர்மானிய மாக்ஸ்முல்லர் கணக்குப்படி, கிறித்து பிறப்புக்கு 1200 ஆண்டுகளுக்கு முன் எனப்படுகிறது. மராத்திப் பார்ப்பனர் பால் கங்காதர் திலக்கின் கூற்றுப்படி எட்டாயிரம் ஆண்டுகள் என்கிறார். ஆதாரம் எதுவும் இல்லாமல் அவனவன் கற்பனைக்கு ஏற்ப காலத்தைக் கணக்கீடு செய்கிறார்கள்.

தொடக்கத்தில், மூன்று வேதங்கள் மட்டுமாம். பகவானிடமிருந்து கேட்கப்பட்டதால், ஸ்ருதியாம். கேட்டதை மனப்பாடம் அடிக்கடி செய்ததால் ஸ்மிருதி யாம் எழுத்தில், நூலாக இல்லாமல் வழிவழியாக வருவ தால் ஆம்னாயம் என்பதாம். வேதங்களில் மந்த்ரங்கள் சம்ஹிதைகள், பிராம்மணங்கள் என மூன்று பகுதிகள். வேதங்களைச் சரியான ஸ்வரத்தில் சொல்லவும் எழுத்துகளை கால அளவுப்படி (மாத்திரை) உச்சரிக்கவும் விளக்கங்கள் தருவதற்கும், சடங்கு களுக்குப் பொருத்த மான பகுதியைத் தேர்ந்தெடுக்கவும் வழிகாட்டிட வேதாந்தங்கள் தோன்றினவாம். இது தவிர, வேதாங்கம் என மூன்று உண்டாம்.

ஒவ்வொரு வேதத்திற்கும் தனித்தனியான உபநிஷத்கள் உண்டாம். நூற்றுக்கும் மேற்பட்ட உபநிஷத்கள் உள்ளன. 1400 ஆண்டுகட்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட அரபுச் சொல் அல்லா என்பது. முகலாயர் ஆட்சியில் வந்த சொல்.

அதன் பெயரிலேயே உபநிஷத் என்றால் எத்தகைய பித்தலாட்டம்? இந்தக் கேள்வி கேட்டால் பதில் கூறச் சங்கடப்பட வேண்டியதைத் தவிர்க்கும் வகையில் முக்கியமான உபநிஷத்கள் பத்து என்று நிறுத்திக் கொள்கிறார்கள்.

1) பிரச்னோப நிஷத் 2) .சோப நிஷத் 3) தேனோப நிஷத் 4) கடோப நிஷத் 5) அய்தரேய நிஷத் 6) தைத்ரிய நிஷத் 7) முண்டக நிஷத் 8) மாண்டூக்ய நிஷத் 9) பிருஹதாரண்ய நிஷத் 10) சாந்தோக்ய நிஷத்

என்பவையே எல்லோரும் ஏற்கும் உபநிஷத்களாம்.

இவை தவிர வேதங்களுக்குக் கிளைகள் உண்டாம். அவை சாகைகள் எனப்படுகின்றன. ரிக் வேதத்திற்கு 21 சாகைகள் இருந்தனவாம். இறந்தவை போக இருப்பவை ஆறு மட்டுமாம்.

1) சாகலம் 2) பாஷ்கலம் 3) ஆசுவலாயனம் 4) சாங்காயனம் 5) அய்தரேயம் 6) மாண்டூகாயனம் இவற்றுள் அதிகம் பின்பற்றப்படுவது ஆசுவலாயன சாகை மட்டுமே.                                                               (தொடரும்)

No comments:

Post a Comment