நாம் வாழ்வது எந்த யுகத்தில்?

 உலகம் சிறகடித்துப் பறந்து கொண்டு இருக்கிறதுசந்திர மண்டலத்தில் குடியேறுவதற்கான ஆயத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படக் கூடிய கால கட்டம்.

சந்திரன் குரு பத்தினியைக் கற்பழித்த காரணத்தால் சாபத்திற்கு ஆளாகி மாதத்தில் பாதி நாட்கள் தேய்ந்து கொண்டு இருக்கிறான் என் பதைப் புராணத்தோடு நிறுத்திக் கொண்டால்கூட போய்த் தொலைகிறது என்று அலட்சியப்படுத்தி விடலாம்.

இன்றைக்கு மத்தியில் உள்ள பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி, மக்களை அசல் காட்டு விலங்காண்டி உலகத்திற்கே இழுத்துச் சென்று கொண்டுள்ளது.

'தமிழ் இந்து' ஏட்டில் (22.4.2021) 5 பத்தி தலைப்பிட்டு ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தலைப்பு - "திருமலை அஞ்சனாத்ரி மலைதான் அனுமன் பிறந்த திருத்தலம்" என்பதாகும். அதுபற்றிய செய்தி இதோ:

அனுமன் பிறந்த இடம் குறித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்குவர,  சிறீவெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழக துணைவேந்தர் சுதர்சன சர்மா தலைமையில், தேசிய சம்ஸ்கிருத பல்கலைக்கழக துணைவேந்தர் முரளிதர் சர்மா, பேராசிரியர் சதாசிவ மூர்த்தி, இஸ்ரோ விஞ்ஞானி ரேமள்ள மூர்த்தி, ராமகிருஷ்ணா, மாநில தொல்பொருள் ஆராய்ச்சி துறை இணை இயக்குநர் விஜய்குமார் ஆகியோர் தலைமையில் ஒரு கமிட்டியை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி நியமனம் செய்தார்.

அனுமன் எங்கு பிறந்தார் ? அவர் பிறந்ததற்கான ஆதாரங்கள் என்ன என்பது குறித்து புராண, இதிகாசங்கள், சாசனங்கள், கல்வெட்டுகள், மற்றும் ராமாயணத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களை மய்யமாக வைத்து, பூகோள ரீதியான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டார். அதன்படி, இக்குழுவினர் கடந்த 4 மாதங்களாக தகுந்த ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இறுதியில், அஞ்சனா தேவியின் மைந்தனான அனுமன் பிறந்த இடம் திரு மலைதான் என்பதை இக்குழுவினர் ஆதாரங்களாக சில ஆவணங்களுடன் தேவஸ்தான அதிகாரி ஜவஹர் ரெட்டியிடம் அறிக்கையை சமர்ப்பித்தனர்.

இந்த ஆதாரங்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டு சிறீராம நவமி தினமான நேற்று (21.4.2021) திருமலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டது. தேசிய சம்ஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தர் முரளிதர் சர்மா பேசு கையில், வெங்கடேஸ்வர மகாத்மியம், வராக புராணம், கம்ப ராமாயணம், வால்மீகி ராமாயணம் உள்ளிட்ட பல புராண, இதிகாசங்களில் அஞ்சனா தேவியின் மகனான அனுமன் அஞ்சனாத்ரியில் பிறந்தார் என குறிப் பிடப்பட்டுள்ளது.

இந்த அஞ்சனாத்ரி மலை திருமலையில் உள்ளது. சப்த மலைகளில் அஞ்சனாத்ரியும் ஒன்றாகும். இதனால்தான் மூலவர்ஏழுமலையான் என்றழைக்கப்படுகிறார். திரேதா யுகத்தில் மாதங்கிமகரிஷியின் அறிவுரையின்படி, அஞ்சனா தேவி, வெங்கடாசலத்திற்கு வருகிறார். பின்னர், இங்குள்ள புஷ்கரணியில் குளித்து, வராக சுவாமியை தரிசித்து விட்டு, ஆகாச கங்கை அருகே பிள்ளை வரம் வேண்டி கடும் தவம் புரிகிறார். பல ஆண்டுகள் தவத்தின் பலனாக வாயுபகவானின் அருளோடு அனுமன் அவதரிக்கிறார். அவர் பிறந்த இடம் திருமலையில் உள்ளஜபாலி தீர்த்தமாகும். அங்குதான் அனுமன் பிறக்கிறார். இதனால்தான் இது அஞ்சனாத்ரி மலை என பெயர் பெற்றது. கம்பர், வால்மீகி, வேதாந்த தேசிகர் என பலர் அஞ்சனாத்ரி மலையில்தான் அனுமன் பிறந்தார் என குறிப்பிட்டுள்ளனர். மேலும், 1800-ஆம் ஆண்டு, திருமலை கோயில் குறித்து வட ஆற்காடு மாவட்டத்தின் முதல் ஆட்சியர் ஸ்டாடன் என்பவர் கூட, அஞ்சனாத்ரி மலை என்றே குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று திருமலையில் 1491-ஆம் ஆண்டு மற்றும் 1545-ஆம் ஆண்டு எழுதப்பட்ட கல்வெட்டுகளிலும் அனுமன் இங்குதான் பிறந்தார் என குறிப்பிட்டுள்ளது.  சிறீரங்கத்தில் உள்ள ஒரு கல்வெட்டும் இதனையே குறிப்பிட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள கோயிலில் 20 செப்பேடுகளிலும் அனுமன் பிறந்த ஊர் அஞ்சனாத்ரி என்றே குறிப்பிடப்படுகிறது என்றார்.

தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி பேசுகையில், அனுமன் பிறந்த இடம் திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் உள்ள ஜபாலி பகுதியில்தான் என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது. விரைவில், அங்குஅனுமனுக்கு கோயில் எழுப்பப்படும். இதற்கு தேவஸ்தான அறங்காவலர் குழுவில் விவாதித்து, ஆந்திர அரசின் அனுமதியோடு ஜபாலி தீர்த்தம் விரிவாக்கம் செய்யப்படும் என கூறினார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று (21.4.2021) காலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகள் செய்ததோடு, ரங்கநாயக மண்டபத்தில், தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.

இதுதான் தமிழ் இந்து நாளேடு வெளியிட்டுள்ள விலாவாரியான குப்பைக் கூளமாகும்.

அனுமன் பிறந்த இடம் குறித்து ஆராய திருப்பதி தேவஸ்தானம் ஒரு குழுவை நியமித்தது. அதில் யார் யார் எல்லாம் உறுப்பினர்கள் என்பதுதான் முக்கியம். பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள், இஸ்ரோ விஞ்ஞானி ரேமள்ளமூர்த்தி, மாநில தொல் பொருள் ஆராய்ச்சித்துறை இணை இயக்குநர் விஜய்குமார் முதலியோர் இடம் பெற்று அனுமான் பிறந்த இடம் திருமலையில் உள்ள அஞ்சானத்ரி மலைப் பகுதியில் உள்ள ஜபாலி பகுதி தானாம்.  இஸ்ரோ விஞ்ஞானிகள் தரமும் யோக்கியதையும் எவ்வளவுத் தரம் தாழ்ந்து கிடக்கிறதுஎன்பதை நினைத்தால் வெட்கமும், வேதனையும் புரட்டிப் புரட்டித் தாக்குகிறது.

அனுமன் யார் என்று கேட்டால் வாயு பகவானுக்கும் அஞ்சனா தேவிக்கும் பிறந்தவனாம். வாயு என்றால் காற்றுதானே - காற்றுக்கு மனைவி உண்டா? இருவருக்கும் பிள்ளை பிறக்கிறது என்று சொன்னால் வாயால் சிரிக்க முடியுமா?

ஒரு காலம் இருந்தது, தன்னைச் சுற்றி இயற்கையில் நடக்கும் நிகழ்வு களுக்குக் காரணக் காரியம் அறியாமல் அஞ்சி நடுங்கினான் மனிதன். கடும் புயலால் பாதிக்கப்பட்டபோது காற்றைக் 'கடவுள்' என்று நினைத்தான். மரங்கள் உரசுவதால் ஏற்பட்ட நெருப்பைக் கண்டு அக்னி 'பகவான்' என்றான். இந்தியா அந்தக் காலத்தில்தான் சஞ்சரிக்கிறதா? இவ்வளவுக்கும் இந்திய அரசமைப்புச் சட்டம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது (51Ah)ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று வலியுறுத்துகிறதுபோகிற போக்கைப் பார்த்தால் அந்த சரத்தை மத்திய பா... ஆட்சி நீக்கினாலும் - ஆச்சரியப்படுவதற்கில்லை.

அய்.சி.எச்.ஆர் (ICHR - Indian Council of Historical Research)எனப் படும் இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழ கத்தின் தலைவரான சுதர்சன் ராவ் "மேற் கத்திய ஆய்வாளர்கள் வரலாற்றாய்வில் சான்றாதாரங்களை முதன்மையாக வைத்தே முடிவுக்கு வருகிறார்கள்".'இந்தியா போன்ற தொன்மையான நாகரீகமும், கலாச்சாரமும் கொண்ட பகுதியில் வாய்வழிக்கதைகளையும் தகவல்களையும் சான்றுகளாக கொள்வது தவிர்க்க இயலாதது", "சனாதன வருணாசிரம தருமங்கள் இந்திய சமூகத்தில் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டியது, அவரவர் கடமையை அவரவர் செய்வதே வருணாசிரம தருமமாகும், இது மதங்கள் தோன்று வதற்கு முன்பே இந்தியாவில் இருந்துவருகிறது" என்றார். 2015ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற இந்திய அறிவியல் பேராயத்தில் இந்திய பல்கலைக்கழகங்களின் சமஸ்கிருதத் துறை பேராசிரியர்களைக் கொண்ட ''சமஸ்கிருதத்தின் வழி வேத அறிவியல்" என்ற அமர்வு நடை பெற்றது. அந்த அமர்வில் ''வேத காலத்திலேயே விமானத் தொழில்நுட்பம் (வைமானிக சாஸ்திரம்), உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, குவாண்டம் இயற்பியல், அணு இயற்பியல் நம்மிடையே இருந்தது.அதை அறிந்து கொள்ள நாம் அனைவரும் சமஸ்கிருத மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும். மேற்கண்ட அறிவியல் அனைத்தும் இசுலாமிய படையெடுப் பினாலும், காலனி ஆட்சியாளர் களாலும் அழிக்கப்பட்டது" என்று கூறினார்.

மோடி குஜராத் முதல்வராக இருந்த போது குஜராத் பள்ளிப் பாடத் திட்டத்தில் இவரது நூலில் உள்ள பல கதைகள் அறிவியல் பாடத்தில் சேர்க்கப்பட்டது. இவர் அரியானாவில் உள்ள சமஸ்கிருதப் பல்கலைக் கழகத்துடன் சேர்ந்து ராமனின் வயதைக் கண்டுபிடித்து வெளியிட்டார். இதற்காக இவருக்கு முனைவர் பட்டத்திற்கு இணையான சிறப்புப் பட்டமும் கிடைத்தது.  சுதர்சன் ராவ் பலமுறை மத்திய அரசின் ஆய்வுக்கழகம் மற்றும் தொல்லியல் துறையில் முக்கிய பதவி கேட்டு விண்ணப்பித் திருந்தார். ஆனால் இவருக்கு தொடர்ந்து பதவிகள் மறுக்கப்பட்டு வந்த நிலையில் மோடி ஆட்சிப்பொறுப்பு ஏற்ற சில நாட்களில் இவருக்கு இந்திய வரலாற்று ஆராய்ச் சிக் கழகத்தின் தலைவர் பதவி வழங்கப்பட்டது அதன் பிறகு அவர் 28.6.2014-ஆம் ஆண்டு இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.

பா... சங்பரிவார்களின் சிந்தனை ஒட்டம் இத்தகு சீழ்ப்பிடித்த சிந்தனைக்குச் சொந்தமானவை. இவர்களின் கட்டுப்பாட்டில்தானே மத்திய அரசு இருக்கிறது - அதன் விளைவுதான் இந்த வெட்கக் கேடு! இளைஞர்கள் மத்தியில் தேவை விழிப்புணர்வும் விஞ்ஞான மனப்பான்மையுமாம்.

Comments