கோலி (கலர்) சோடாவும் - நினைவில் வரும் நிகழ்வுகளும்! (2)

மன்னார்குடியில் உள்ளிக்கோட்டை சு.பக்கிரிசாமி சோடா பேக்டரிதான் எங்களது - பேச்சாளர்களது தங்குமிடம் - ஓய்வு இல்லம் - சு.. அவர்களுடன் சைக்கிளில், ஹேண்ட் பாரில் முன்னே அமர்ந்து, அவரதுபீடிப் புகை'யின் நெடிய வாடையை எப்படியோ சகித்துப் பிரச்சாரத்திற்குச் சென்றுள்ளேன்.

சோடா எப்படி தயாரிக்கிறார்கள் என்பது அங்கெல்லாம் பார்த்து பலவற்றைத் தெரிந்து கொண்டோம்!

பழனியில் திராவிடர் கழகத் தோழர் சோடா பேக்டரி முத்துச்சாமி அவர்கள்தான் இயக்கம் வளர்த்தத் தோழர்; தமிழரசனை மிகவும் ஊக்கப்படுத்தி, துணை நின்றவர்!

இப்படி ஒரு நீண்ட பட்டியலே உண்டு!

அந்தக் காலத்திலேயே இந்த கோலி சோடாவுக்குப் பெருத்த போட்டி (பெரும் கார்ப்பரேட் முதலாளித்துவ போட்டி). ஸ்பென்சர் சோடா - சென்னையில் தயாரித்து ரயிலில் பல ஊர்களுக்குப் போகும்போது - ரயில் நிலையங்களுக்குச் சென்று சில்லறை வியாபாரிகளான வெற்றிலைப் பாக்குக் கடைக்காரர்கள் பணம் கொடுத்து வாங்கி வருவர்! அக்காலத்தில் ‘‘அந்தஸ்தின் சின்னம்'' (Status Symbol)  அது!

அதற்குப் போட்டியாக திருச்சி வின்சென்ட் சோடாவும் வணிகத்தில் வந்து நின்றது.

ரயிலில் ஸ்பென்சருக்குப் பதிலாக ஷி.ஷி. சார் (Char)என்ற சோடாவும் வந்தது!

பிறகு விருதுநகர் காளிமார்க் போன்றவை எல்லாம் வந்தன!

கோலி சோடா தாகத்திற்குப் பேச்சாளர்களுக்கு உதவுவதை, நம் நாட்டில் போர் ஆயுதமாகவும்கூடக் கையாண்ட கதையை சொல்லாமல் விட்டால் நியாயமல்ல.

சோடா புட்டியை வீசி எறிந்து கூட்டத்தில் கலவரம் செய்தல், சோடா பாட்டில் வீச்சு, கல் வீச்சு என்றெல்லாம் செய்திகள் வேகமாக வரும்.

பெரும் கூட்டத்தைக் கலைத்து கலவரம் உண்டாக்க இந்த கோலி சோடா பாட்டில்கள் பெரிதும் கலவரக் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டதும் உண்டு!

(பிறகுதான் சைக்கிள் செயின் அது இணைத்துக் கொண்டது போலும்!)

கோலி சோடா பாட்டிலில் உள்ள குண்டு உள்ளே போக - உடைக்க ஒரு தனி மரக் கருவி உண்டு. ஆனால், பலர் தங்களது கட்டை விரலைக் கொண்டே உடைத்துவீர'த்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் உண்டு!

இந்த சோடாவை உடைத்துக் கொண்டு வரச் சொல்லும் சொலவடையை நகைச்சுவைக் காட்சிக்கே .வி.மெய்யப்பச் செட்டியார் தேவக்கோட்டை ரஸ்தாவில் அந்நாளில் தயாரித்து வெகு ஜோராக ஓடியசபாபதி' சினிமாவில் பயன்படுத்திக் கொண்டார்!

பணியாளரான, அக்கால பிரபல நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்தினத்திடம் சோடாவை உடைத்துக் கொண்டு வரச் சொன்னதை, அப்படியே அட்சரம் பிசகாமல் செய்து, ‘‘சுக்கு நூறாக உடைத்தே'' கொண்டு வந்து சிரிக்க வைப்பார்!

செரிமானத்திற்குஜிஞ்சர் பீர்' என்ற இஞ்சிச் சாறு கலந்த சோடா மிகவும் பயன் தரும். முக்காலணா, ஒரு அணா சோடா விலை எனக்குத் தெரியும் - அக்காலத்தில்!

உவமைகளுக்குக்கூட சோடா பயன்பட்டது!

பொங்கிய சிலரின் ஆர்வம் உடனே குறைந்து விடுவதைப்பற்றி ஒப்பிட்டுக் கூற, அவர் செயலில் தொடக்கத்தில் வேகம் இருக்கும் - அப்புறம் மறைந்துவிடும் - ‘உடைத்த சோடா புட்டி கேஸ் மாதிரி' என்று கூறுவதுண்டு!

பேச்சாளர்களுக்கு சோடா உடைத்துத் தரும் பழக்கம் இப்போது குறைந்தே போய்விட்டது! அவர்களும்அது வேண்டாங்க, கேஸ்  (Gas) அதிகமாகுங்க' என்று சொல்லி அவரவர் பருகுவதற்குக் கையோடு காபி, தேநீர், வெந்நீர், தண்ணீர் கொண்டுவந்து விடுகிறார்கள். இப்போதுதான் பாட்டில் தண்ணீரும் வந்துவிட்டதால்,  Carbonated Aerated Water என்பதைத் தவிர்க்கவும் செய்கிறார்கள்!

என்றாலும், கிராமத் திருவிழாக்களில் இன்னமும் கதாநாயகன் கலர் சோடாதான்! பலரை வாழ வைத்த, தொண்டை வறளாது காப்பாற்றிய சோடா வாழ்க!

இப்பொழுது மீண்டும் கோலி சோடா புழக்கத்திற்கு வருகிறது!

Comments